Published:Updated:

``என்னைப்பற்றி போலியான தகவல்களைப் பரப்புவோர் மீது எந்தக் கோபமும் இல்லை"-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

'லவ் டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் பழைய சமூக வலைதளப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. இதற்கு பிரதீப் விளக்கமளித்துள்ளார்.

``என்னைப்பற்றி போலியான தகவல்களைப் பரப்புவோர் மீது எந்தக் கோபமும் இல்லை"-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்

'லவ் டுடே' இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் பழைய சமூக வலைதளப் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. இதற்கு பிரதீப் விளக்கமளித்துள்ளார்.

Published:Updated:
பிரதீப் ரங்கநாதன்
சமீபத்தில், 'கோமாளி' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்திருந்த திரைப்படமான 'லவ் டுடே' திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் சமூக வலைதளங்களில் டாக் அஃப் தி டவுனாக மாறியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பிரதீப்பின் பழைய சமூக வலைதளப் பதிவுகளை தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதில், பிரதீப் 2014-ம் ஆண்டில் தான் எடுத்த குறும்படத்தை கோலிவுட் திரையுலகில் இருக்கும் பல இயக்குநர்கள் நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம் என பலருக்கு அனுப்பி வாய்ப்புக் கேட்கும் பிரதீப்பின் ட்வீட்டுகள் சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.

இதைக் கண்ட நடிகர் பிரேம் ஜி, 2014-ல் பிரதீப் தனக்கு அனுப்பியிருந்த ட்வீட்டை தற்போது ரீ ட்வீட் செய்து, "சார், உங்களின் அடுத்தப் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்புக்கொடுங்க சார்" என்று நெகிழ்ச்சியுடன் பிரதீப்க்குப் பதிலளித்துள்ளார். இதற்கு பிரதீப், "ரொம்பவும் நன்றி சார்... நிறைய அன்பு இருந்தால் தான் இதைப் பதிவிடுவதற்கு மனம் வரும். இருப்பினும் நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், 'என்ன கொடும சார் இது" என்று ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்றொருபுறம், பிரதீப் ரங்கநாதன் சில நட்சத்திரங்களைக் கேலி செய்த நெகட்டிவான பதிவுகளும் இதோடு சேர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. மேலும், சிலர் பிரதீப்பின் இந்த நெகட்டிவான பதிவுகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்துள்ள பிரதீப், "நான் பதிவிட்டதாகக் கூறி நிறைய போட்டோஷாப் செய்யப்பட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு வார்த்தையை மாற்றினால்கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் என்னுடைய முகநூல் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. என்னைப்பற்றி போலியான தகவல்களைப் பரப்புவோர் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. இந்த சர்ச்சையால், மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி. மேலும், இதில் இருக்கும் சில பதிவுகள் மட்டும் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நானும் தவறுகள் செய்திருக்கிறேன், ஆனால் வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம். அதேபோல எனது தவறுகளை சரிசெய்யவும் முயற்சித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்" என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.