
‘எனக்கும் நாடு கடந்து போய் தீவிரவாதிகளைக் கொல்லணும்னு ஆசைதான். துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு பறந்து பறந்து சண்டை போடலாம்னா விடமாட்டேங்கிறாங்க பாஸ்
நான் போனதுமே பரபரப்பாகிவிட்டார் பிரேம்ஜி. “சார், நான் ஹீரோவா நடிச்சு ‘தமிழ் ராக்கர்ஸ்’னு படம் வருது. ‘மதில்மேல் பூனை’ன்னு படம் எடுத்தாரே பரணி... அவர்தான் இந்தப் படத்தையும் எடுக்கிறார். எடுத்து முடிச்சிட்டார். ஓ.டி.டி-யில் வெளியிட ஏற்பாடு நடக்குது. தியேட்டர் திறக்கிற நாள் என் கண்ணுக்கு எட்டின வரையிலும் தெரியலை. தியேட்டரில் வந்திருந்தா பல ஹீரோக்கள் திணறியிருப்பாங்க. தப்பிச்சிட்டாங்க” சந்தோஷமாகப் பேசுகிறார் பிரேம்ஜி.
``என்ன சார், ‘தமிழ் ராக்கர்ஸ்’னு தலைப்பே அதிரடியா இருக்கு...’’
‘‘எனக்கும் நாடு கடந்து போய் தீவிரவாதிகளைக் கொல்லணும்னு ஆசைதான். துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டு பறந்து பறந்து சண்டை போடலாம்னா விடமாட்டேங்கிறாங்க பாஸ். இதில என்னோட ஹீரோயின் மீனாட்சி தீட்சித். காமெடியில் பின்னியிருக்கோம். கடத்தல்... ‘மங்காத்தா’ ஸ்டைலில் வந்திருக்கு. பெரிய தொகையை எப்படிக் கொள்ளையடிக்கிறதுன்னு திட்டம் போடுறோம். பல கைக்குப் பணம் மாறிட்டே போகுது. இதில கார் ரேஸரா வர்றேன். அந்தக் காட்சியெல்லாம் மலேசியாவில் படமாக்கினோம். மியூசிக்கும் ஹீரோவும் நான் தான். இந்தப் படத்தில் வருகிற யாரும் நல்லவங்களே இல்லை. ‘மங்காத்தா’ மாதிரி தலயோடு சேர்ந்து பணத்தை அள்ளிக்கிட்டு டேக்கா குடுக்குற கதைதான். எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ் எல்லாம் சேர்ந்தால் அதகளம்தான். என்னை நானே பலவிதங்களில் இந்தப் படத்துக்காக அர்ப்பணிச்சிருக்கேன். இந்தப் படத்தில் என் கேரக்டர் பேசப்பட்டதுன்னா, அந்தப் பெருமையெல்லாமே எனக்கு மட்டும்தான்.’’

``அண்ணன் வெங்கட் பிரபு படத்தில் மட்டும் நடிச்சா போதுமா?’’
‘‘அவர் மட்டும்தான் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார். வேற யாரும் தரமாட்டேங்கிறாங்க சார். முன்னாடியெல்லாம் ஹீரோ ஃபரெண்ட், இல்லாட்டி ஒரு ஓரமா நிக்கிற மாதிரி வேஷம் கொடுத்தாங்க. இப்ப அதையும் தர மாட்டேங்குறாங்க. நானும் யார்கிட்டயும் போய் சான்ஸ் கேட்கிறதில்லை. அண்ணன் படத்தில் ஒண்ணு, நடிக்க சான்ஸ் கொடுப்பார், அல்லது, மியூசிக் பண்ண வாய்ப்பு கொடுப்பார். முன்னாடி ‘மாங்கா’ன்னு நான் ஹீரோவா நடிச்ச படம் வந்தது. அந்த புரொடியூசர் படத்தை டி.வி-க்குக் கூட கொடுக்காம எங்கேயோ போயிட்டார். அப்படி ஒரு அழகுல புரமோஷன் பண்ணிட்டுப் போயிட்டார். நாம நல்லபடியா நடிச்சா அதுக்கு அடையாளமே தெரியாமப்போகுது.’’
``நல்ல காமெடி நடிகராக வரணும்னு உங்ககிட்ட உழைப்பு தெரியலையே!’’
“நடிப்பு எனக்கு ஜாலிதாங்க. நமக்கு உயிர் மியூசிக்தான். எதையாவது வாசிச்சிக்கிட்டு, முயற்சி பண்ணிக்கிட்டு அப்பா, பெரியப்பா, யுவன், கார்த்தி பின்னாடி திரிஞ்சவனைக் கூப்பிட்டு அண்ணன் ‘சென்னை-28’ல நடிக்கிறியா’ன்னு கேட்டார். சரின்னு நடிச்சேன். கடவுள் ஆசீர்வாதத்தால் அந்தப் படம் வெற்றி. அதற்கு நான் காரணமில்லை. தெரியாமல் நடிகனாகிவிட்டேன். இன்னிக்கும் ரெகார்டிங் ரூமுக்குள் போயிட்டா நான் நடிகன்கிறதே மறந்துபோயிரும்.’’
``நீங்க இரவுப்பறவை. லாக்டௌனில் தவிச்சுப் போயிருப்பீங்களே..?’’
‘‘என்ன பண்றது... லாக்டௌன் எப்படா முடியும்ன்னு காத்துக்கிட்டு இருக்கோம். நீங்க பொறுமையாய் இருந்தால் நீங்கள் நினைத்ததைவிட அதிகமாகவே கிடைக்கும். ஒரு கேக்கிற்கு ஆசைப்பட்டவருக்கு ஒரு பேக்கரியே கிடைக்கலாம். கட்டிங் ஆசைப்பட்டவருக்கு ஃபுல் பாட்டிலே கிடைக்கலாம். எப்பவும் எங்க கேங்கோடு நல்லா சுத்துவோம். மந்தையில் ஏதாவது ஒரு ஆடு விலகித் தனியாகப் போனாலும் ‘எங்கே உங்க கேங்க்’னுதான் கேட்கிறாங்க. ஊர்ல எங்கே பார்ட்டி நடந்தாலும் எங்களுக்குத்தான் சார் முதல் போன் வருது. எங்களை என்ன பண்ணச் சொல்றீங்க? தனியாப் போனா ‘மொத்தப் பட்டாளமும் எங்கே’ன்னு கேட்டுத் தொந்தரவு. இப்ப பாருங்க, நடுவுல ஒயின்ஷாப் அடைச்சுட்டாங்க. உலகமே வெறுத்துப்போச்சு. இப்பதான் திறந்துவிட்டிருக்காங்க. போன லாக்டௌனைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. இ-பாஸ் வாங்கிட்டு அங்க இங்க சுத்தினோம். இப்ப அண்ணன் ஈ.ஸி.ஆரில் அடுத்த படத்துக்கு டிஸ்கஷன் நடத்துறாரு. அங்க போனா பொழுது போயிடும். இப்ப டிவி, சினிமா போட்டுப் பார்த்து நல்லா தூங்கி ட்ரெயின் ஆகிட்டோம். லாக்டௌன் முடிச்சால் ரொம்ப உழைக்க வேண்டியிருக்கும். கஷ்டம்தான்!’’

``அப்பா - பெரியப்பா மனத்தாங்கலைத் தீர்த்து வைக்கலையா பிரதர்?’’
‘‘அவங்கதான் சேரணும். அவங்களே உணரணும். நம்ம கையில ஒண்ணும் இல்லை. அவர்கள் அனுபவம் உழைப்புக்கு இதெல்லாம் அவங்களுக்குத் தெரியாம இருக்குமா! அவங்க சின்னப்பிள்ளைங்க இல்லையே. நீரடித்து நீர் விலகாதுன்னு சொல்லுவாங்க. காலப்போக்கில் எல்லாம் சரியாகும்.’’
``அம்மாவின் மறைவு பெரிய பாதிப்பு. மீண்டு விட்டீர்களா?’’
‘‘என்ன பண்றது... அவங்க விடைபெறுகிற நாள் வந்துதான் போயிருக்காங்க. இங்கே இந்த பூமியில் நாம விருந்தாளிங்கதானே! ஒரு நாளைக்கு புறப்பட வேண்டியதுதானே! அப்படித்தான் அம்மா இறந்ததை எடுத்துக்கிட்டேன். இந்தப் பையன் தனியா இருக்கானேன்னு என்கிட்ட அம்மாவுக்கு ரொம்பவும் பிரியம். சமயங்களில் அவங்க நினைவு வந்து தலையணை நனையுது. Ofcourse இழப்புணர்ச்சி பதுங்கிக்கிட்டுத்தான் நிக்கும்.’’

``உங்களுக்கான துணையை எப்ப தேடிக்கப் போறீங்க?’’
‘‘பத்து வருஷத்துக்கு முன்னாடின்னாகூட ‘சரி’ன்னு சொல்லியிருப்பேன். கல்யாணம், குழந்தை, பிறகு அவங்களுக்கான பொறுப்புன்னு நிறைய இருக்கே. எனக்கு அந்த அட்டவணைக்குள்ளே போக இப்ப இஷ்டமில்ல. ஆரம்பத்தில் காலண்டரில் இருக்கிற சாமி மாதிரி இருக்கிற பொண்ணுங்களை நினைச்சுப் பார்ப்பேன். இப்ப கடவுள், ஆன்மிகம்னு சிவனின் கைகளுக்குள் போயிட்டேன். கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணி வீட்ல சொல்லிட்டேன். சினிமா, பார்ட்டி எல்லாம் ஜாலி. ஷூட்டிங்குக்காக வெய்ட் பண்றதுதான் இப்போ ஜோலி.”
அட்டகாசமாகச் சிரிக்கிறார் பிரேம்ஜி!