Published:Updated:

புது வசந்தம்: ஃபீல் குட் கதைகளின் கிங் விக்ரமன்; ஆண் - பெண் நட்பின் உன்னதத்தை அழுத்தமாய் பேசிய படம்!

புது வசந்தம்

ஒரு ஆணும் பெண்ணும் ஆரோக்கியமான நட்புடன் ஒரே வீட்டில் இருக்க முடியும் என்பதை எந்த தமிழ் சினிமாவும் அதற்கு முன்பு அழுத்தமாகப் பேசியதில்லை.

Published:Updated:

புது வசந்தம்: ஃபீல் குட் கதைகளின் கிங் விக்ரமன்; ஆண் - பெண் நட்பின் உன்னதத்தை அழுத்தமாய் பேசிய படம்!

ஒரு ஆணும் பெண்ணும் ஆரோக்கியமான நட்புடன் ஒரே வீட்டில் இருக்க முடியும் என்பதை எந்த தமிழ் சினிமாவும் அதற்கு முன்பு அழுத்தமாகப் பேசியதில்லை.

புது வசந்தம்
"தமிழ் சினிமால பழம் தின்னு கொட்டை போட்ட டைரக்டர்கள் கூட இந்த மாதிரி படம் எடுக்கலை!" – இப்படியாக இயக்குநர் கே.பாலசந்தர், ஓர் இளம் படைப்பாளியை மனமாரப் பாராட்டியதாக ஒரு தகவல் உண்டு.

அதிலும் பாராட்டப்பட்டவர் எடுத்த முதல் திரைப்படம் அது. ஒரு சீனியர் இயக்குநர், அறிமுக இயக்குநரைத் திறந்த மனதுடன் பாராட்டுவதற்குப் பெரிய மனது வேண்டும். மேலும் அந்தப் படமும் அப்படிப்பட்ட பிரத்யேக சிறப்புடையதாக இருக்க வேண்டும். அந்தத் திரைப்படம் ‘புது வசந்தம்’. அந்த அறிமுக இயக்குநர் விக்ரமன்.

விக்ரமன்
விக்ரமன்

பாலசந்தர் அப்படிப் பாராட்டியதற்குக் காரணம் என்னவாக இருக்கக்கூடும்? அதுவரையான தமிழ் சினிமாவில் ஆண் – பெண் நட்பு என்பது அடிக்கோடிட்டு அழுத்தமாகக் காட்டப்படாத அம்சம். ஹீரோ என்று ஒருவர் இருந்தால், ஹீரோயினுடன் காதல் ஏற்பட்டாக வேண்டும் என்பதுதான் ஆதார விதி. இல்லையென்றால் பிழியப் பிழிய அழும் பாசக் காட்சிகளுடன் அண்ணன் – தங்கை பாசமாக வேண்டும். ஒரு ஆணும் பெண்ணும் ஆரோக்கியமான நட்புடன் ஒரே வீட்டில் இருக்க முடியும் என்பதை எந்த தமிழ்ச் சினிமாவும் அதற்கு முன்பு அழுத்தமாகப் பேசியதில்லை.  

விக்ரமன் - ஃபீல் குட் திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்

‘நான்கு ஆண்கள், ஒரு பெண்’ என்கிற டெம்ப்ளேட் திரைக்கதை  ‘பாலைவனச் சோலை’ படத்திலிருந்து தொடங்கியது. அதில் கூட நான்கு ஆண்களில் ஒருவருக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்வது போலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதே பாணியில் அமைந்த ‘புது வசந்தத்தில்’ காதல் என்கிற பேச்சே இருக்காது. நான்கு ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் இருப்பது களங்கமில்லாத நட்பும், நேசமும் மட்டுமே. படம் பூராவும் மலர்ந்த இந்த உறவை க்ளைமாக்ஸில் இன்னமும் அழுத்தமாக ஆணி அடித்தது போல் சொன்னதுதான் ‘புது வசந்தத்தின்’ வெற்றிக்குக் காரணமாக இருந்தது. இதில் வரும் பெண் பாத்திரம், கூட இருக்கும் எந்தவொரு ஆணையும் ‘அண்ணா’வென்று அழைத்து பாசாங்கு செய்யவில்லை. இறுதி வரைக்கும் அவர்களை நல்ல நண்பர்களாகவே மட்டுமே பார்த்தது. மறுமலர்ச்சியுடன் கூடிய இந்த ட்ரீட்மெண்ட்தான் கே.பாலசந்தரைக் கவர்ந்திருக்க வேண்டும்.

புது வசந்தம்
புது வசந்தம்

வணிக நோக்கத்திற்காக வன்முறையையும் ஆபாசத்தையும் இறைத்து மசாலாப் படங்களை உருவாக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், நல்ல கதையம்சமுள்ள குடும்பத் திரைப்படங்களை மட்டுமே உருவாக்குவேன் என்கிற ஆரோக்கியமான பிடிவாதமுள்ள இயக்குநர்களில் ஒருவர் விக்ரமன். அவருடைய அனைத்துத் திரைப்படங்களிலும் நேர்மறையான பாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே நிறைந்திருக்கும். இது ஒருவகையில் தேய்வழக்கு பாணி என்றாலும் எதிர்மறைகளே பெரும்பாலும் நிறைந்திருக்கும் சினிமாவில் விக்ரமன் போன்றோர் இயக்கும் ஃபீல் குட் திரைப்படங்களும் அவசியம் தேவை.

‘புது வசந்தம்’ திரைப்படம் பிரமாண்டமான வெற்றியை அடைந்ததற்கு சில காரணங்களை யூகிக்கலாம் என்று தோன்றுகிறது. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைக்கதையைப் பிரதானமாகச் சொல்லலாம். இந்தப் படம் ஒரு இடத்தில் கூட சலிப்பை ஏற்படுத்தாமல் நகர்ந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக, ஒரு திரைப்படத்திற்கு இனிமையான பாடல்கள் மிக அவசியம். அதுதான் படத்திற்கு விளம்பரமாகவும் அமைந்து பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். அந்த நோக்கில் தனது திரைக்கதையை இசைப் பின்னணியில் அமைத்த விக்ரமனின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கது. மூன்றாவது காரணம், பாத்திரங்கள் அடையும் உணர்ச்சியைப் பார்வையாளர்களும் அடைவது.
புது வசந்தம்
புது வசந்தம்

இப்படியான எமோஷனல் கனெக்ட்டைத் திறமையாக ஏற்படுத்துவது முக்கியம். இந்த விஷயம் படம் முழுக்க இருந்தது. இது தவிர கூடுதல் சிறப்புக் காரணம் ஒன்று இருக்கிறது. அது படத்தின் க்ளைமாக்ஸ். வித்தியாசமான க்ளைமாக்ஸ் அமைந்த காரணத்திற்காகவே ஓடிய திரைப்படங்கள் சிலது உண்டு. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை உதாரணமாகச் சொல்லலாம். புது வசந்தம் திரைப்படம் இன்றளவும் நினைவுகூரப்படுவதற்குக் காரணம், அதன் புத்துணர்ச்சியான கிளைமாக்ஸ்தான்.

ஆண் – பெண் நட்பை முதன் முதலாகப் பேசிய படம்

இசையில் திறமையுள்ள நான்கு இளைஞர்கள், தகுந்த வாய்ப்பு கிடைக்காமல் சாலையோரங்களில் பாடி பிழைப்பு நடத்துகிறார்கள். தனது காதலனைத் தேடி நகரத்திற்கு வருகிறாள், ஓர் இளம்பெண். அவளுடைய சொத்துக்களை ஏமாற்றிப் பிடுங்க நினைக்கும் ஒரு முதியவனிடமிருந்து தப்பி இன்னொரு நகரத்திற்கு வரும் அவள், தன் காதலனைச் சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாள். ஆனால் காதலன் வெளிநாடு சென்றிருப்பதால் எங்குச் செல்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறாள். இவளுடைய பரிதாப நிலைமையைப் பார்க்கும் நான்கு இளைஞர்களும் தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் தருகிறார்கள். அவர்களின் கண்ணியமான நடத்தையைப் பார்க்கும் இளம்பெண் அங்கேயே தங்குகிறாள். இளைஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறாள்.

விக்ரமன்
விக்ரமன்

சில மாதங்கள் கழிந்ததும் வெளிநாட்டிலிருந்து காதலன் வருகிறான். திருமணக் கனவோடு அவனைச் சென்று சந்திக்கிறாள். ஆனால் அவனோ ‘நான்கு இளைஞர்களோடு தங்கியவள், கற்போடு இருப்பாளா?’ என்று சந்தேகப்படுகிறான். ‘இனிமேல் இவளைப் பார்க்க வராதீர்கள்’ என்று அந்த இளைஞர்களை அவமதித்துத் துரத்தியடிக்கிறான்.

காதல் ஒரு பக்கம். நட்பு ஒரு பக்கம். அந்த இளம் பெண் என்ன செய்தாள்? உணர்ச்சிகரமான காட்சிகளுடன் படம் நிறையும் போது ஒவ்வொரு பார்வையாளர்களுக்குள்ளும் நெகிழ்ச்சியும் பரவசமும் நிறைந்திருக்கும். அப்படியொரு க்ளைமாக்ஸ்!

புதுவசந்தம் கதையைக் கேட்டவுடனே ‘ஓகே’ சொன்ன தயாரிப்பாளர்

பாரதிராஜாவின் திரைப்படங்களைப் பார்த்து சினிமா டைரக்டராக வேண்டும் என்கிற உத்வேகம் கொண்ட விக்ரமன், ஆரம்பத்தில் இயக்குநர் மணிவண்ணனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தார். பிறகு பார்த்திபனிடம் இணைந்து ‘புதிய பாதை’ படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். அந்தப் படம் முடியும் முன்னரே பார்த்திபனுடன் மனஸ்தாபம் ஏற்பட்டது. "'புதிய பாதை' வெளியாவதற்குள் என் முதல் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்து விடுவேன்" என்று மனதிற்குள் சபதம் பூண்ட விக்ரமன், நினைத்தபடியே சாதித்தார்.

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சௌத்ரியிடம் ‘புது வசந்தத்தின்’ முழுக்கதையையும் உணர்ச்சிகரமாக விவரித்த அடுத்த நிமிடமே தயாரிப்பதற்கான ஒப்புதலைத் தந்தார் சௌத்ரி. பிறகு நிகழ்ந்தது வரலாறு. ‘தனது திரைப்படம் உறுதியாக வெற்றி பெறும்’ என்கிற அசாதாரணமான நம்பிக்கை விக்ரமனுக்குள் இருந்தது. மக்களின் ரசனை மீது அவர் வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை. 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி அந்த ஆண்டின் ‘பிளாக் பஸ்டர்’ திரைப்படங்களுள் ஒன்றாக ஆனது.
புது வசந்தம்
புது வசந்தம்

‘புது வசந்தம்’ படத்தின் வெற்றிக்கு நடிகர்கள் தேர்வையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். முரளி, ஆனந்த்பாபு, சார்லி, ராஜா ஆகிய நால்வரும் நண்பர்களாக நடித்தார்கள். ஒரு நண்பர்கள் குழுவில் எப்போதுமே ‘லீடர்’ மாதிரியான ஒரு கேரக்ட்டர் தன்னாலேயே அமைந்து விடும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் முரளி கச்சிதமாகப் பொருந்தினார். நடிகர் மோகனிடமிருந்த ‘மைக்’ முரளியின் கைக்கும் சென்றது. பாடகர் பாத்திரத்தில் நிறையப் படங்களில் நடித்த முரளிக்குப் பெயர்ச் சொல்லும் படியாக அமைந்த படங்களில் ஒன்று ‘புது வசந்தம்’. தனது மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை இதில் வழங்கியிருந்தார். இயக்குநர் சம்பிரதாயமான திசையில் யோசித்திருந்தால் முரளிக்கும் ஹீரோயினுக்கும்தான் காதல் உருவாகியிருக்கும். நல்லவேளையாக அந்த விபத்து நிகழவில்லை.

ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பிறகு சில சறுக்கல்களைச் சந்தித்து பிரதான பாத்திரங்களில் நடித்தவர் ஆனந்த்பாபு. இந்தப் படம் அவருக்கு ஒரு முக்கியமான அடையாளத்தைத் தேடித் தந்தது. ‘மைக்கேல்’ என்னும் கேரக்ட்டரில் முன்கோபமும் பாசமும் கலந்த நடிப்பைத் தந்தார். படத்தின் சுவாரஸ்யத்திற்கு சார்லியின் பங்களிப்பைத் தனியாகச் சொல்லியாக வேண்டும். சில இடங்களில் அசட்டுத்தனமான நகைச்சுவை என்றாலும் படம் முழுக்க இவர் அடித்த ‘ஒன்லைனர்கள்’ தொடர்ந்து சிரிக்க வைத்தன. சராசரியாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் சிரித்ததற்கு சார்லியின் காமெடி ஒரு முக்கிய காரணமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிலர் பார்க்க ஸ்மார்ட்டாக இருந்தாலும் மக்களின் மனங்களில் பதியாமல் பின்தங்கி விடுவார்கள். இந்த வரிசையில் ராஜாவைச் சொல்லலாம். நிறையத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று தனி அடையாளம் எதுவும் அமையவில்லை. ‘எலீட்’ தோற்றத்தில் இருக்கும் ராஜா, இந்த நண்பர்கள் குழுவில் துண்டாகத் தனியாகத் தெரிவார். கிட்டாரைப் பிடித்துக் கொண்டு சீரியசாக வாசிப்பது போல் இவர் தரும் முகபாவங்கள் காமெடியாக இருக்கும்.

புது வசந்தம்
புது வசந்தம்

ரேவதி நடிக்கவிருந்த பாத்திரத்தில் சித்தாரா

நடிகை சித்தாரா நடித்த ஆரம்பக் காலத் திரைப்படங்களில் ஒன்று ‘புது வசந்தம்’. சித்தாராவின் பாத்திரத்தில் ரேவதியைத்தான் முதலில் நடிக்க வைக்க முயன்றாராம் விக்ரமன். ஆனால் அது சாத்தியப்படவில்லை. ஆனால் ஒருவகையில் இந்தப் பாத்திரத்திற்கு சித்தாரா புத்துணர்ச்சியான வடிவத்தைத் தந்தார் எனலாம். கவர்ச்சியின் தடயம் துளி கூட இல்லாத கண்ணியமான தோற்றம் இருப்பதுதான், இந்தப் பாத்திரத்திற்கு முக்கியமானது. சித்தாரா ஏறத்தாழ நூறு சதவிகிதம் பொருந்தியிருந்ததோடு இயக்குநரின் வழிகாட்டுதலில் சிறந்த நடிப்பையும் தந்திருந்தார். நான்கு பேர்களிடமும் அனுதாபத்தைச் சம்பாதிப்பதற்காக முதலில் வாய் பேச முடியாத பாவனையிலும் பிறகு ‘எழுந்திருங்கடா முண்டங்களா’ என்று அவர்களை நட்பு கலந்த உரிமையுடன் கடிந்து கொள்ளும் வகையிலும் அசத்தியிருந்தார். நட்புதான் முக்கியம் என்று க்ளைமாக்ஸில் உணர்ச்சிகரமாகச் சொல்வது வரை பல காட்சிகளில் சித்தாராவின் தோற்றமும் நடிப்பும் அருமையாக இருந்தன.

சித்தாராவின் காதலனாக ‘பாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை’ வேடத்தை சுரேஷ் ஏற்றிருந்தார். வேறு வழியில்லை. இவர் வில்லத்தனத்தைக் காட்டித்தான் ஆக வேண்டும். அப்போதுதான் க்ளைமாக்ஸிற்கு நியாயம் கூடும். அதைச் சரியாகவே செய்திருந்தார் சுரேஷ். சித்தாராவிடமிருந்து சொத்துக்களை அபகரிக்கும் நயவஞ்சகப் பாத்திரத்தைச் சுவாரஸ்யமாகக் கையாண்டிருந்தார் ஆர்.பி.விஸ்வம். இவர் விரிக்கும் வலையில் இவரே பிறகு வீழ்வதில் ஒரு கவித்துவ நியாயம் இருந்தது. சுரேஷ் வீட்டு வாட்ச்மேனாக சில காட்சிகளில் வந்து போனவர் யார் தெரியுமா? படத்தின் இணை இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமார்.

புது வசந்தம் - கே.எஸ்.ரவிக்குமார்
புது வசந்தம் - கே.எஸ்.ரவிக்குமார்

எஸ்.ஏ.ராஜ்குமாரின் இனிமையான பாடல்கள்

‘புது வசந்தம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு எஸ்.ஏ.ராஜ்குமாரின் இனிமையான பாடல்கள் உறுதுணையாக அமைந்தன. மூன்று பாடல்களை அவரே எழுதியிருந்தார். ‘இதுவரைக்கும் உங்கள் காலமாக இருந்தது, இனி எங்களுக்குமான காலமாகவும் அமையும்’ என்று சொல்லப்படுவது போன்ற கருத்து, பாடல் வரிகளில் அழுத்தமாக இருந்தது. ஒவ்வொரு பாடலையும் ரசனையுடன் உருவாக்கியிருந்தார் ராஜ்குமார். தாளக்கட்டுகள் வெவ்வேறு பாணியில் மாறும் வகையில் பாடல்கள் ரகளையாக இருந்தன. ‘பாட்டு ஒண்ணு பாடட்டுமா’ என்கிற பாடலுக்கு இரண்டு வகையான வடிவங்களை உருவாக்கியிருந்தார்.

நட்புத் தருணங்களைக் கொண்டாடும் வகையிலிருந்த ‘ஆயிரம் திருநாள்’ என்பது இனிமையான பாடல். ‘நட்சத்திர ஓட்டலில் டப்பாங்குத்தா?’ என்று லாஜிக் இடித்தாலும், எஸ்.பி.பி. பாடிய ‘போடு.. தாளம் போடு...' என்பது வேகமான தாளயிசையைக் கொண்ட விறுவிறுப்பான பாடல். ‘கௌரிக்குத் திருமணம் நிச்சயமாச்சு’ என்பது இன்னொரு ரகளையான பாடல்.  ‘இது முதன் முதலா வரும் பாட்டு’ என்கிற பாடல் இளம் இசையமைப்பாளர்களுக்கு உத்வேகத்தைத் தரக்கூடியது. சித்தாரா – சுரேஷ் காதலைச் சொல்லும் ‘வாருங்கள்... வாருங்கள்’ பாடலும் கேட்பதற்கு இனிமையானது.

ஆனால் பின்னணி இசை தொடர்பாக விக்ரமன் திரைப்படங்களில் உள்ள பெரிய பிரச்னை என்னவென்றால், நகைச்சுவைக் காட்சிகளின் போது ஒவ்வொரு வசனத்திற்குப் பின்னாலும் வரும் செயற்கையான சத்தங்கள்தான். இதை மட்டும் ராஜ்குமார் சற்று கட்டுப்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

சுவாரஸ்யமான திரைக்கதையைத் தாண்டி முக்கியமான காட்சிகளில் வெளிப்பட்ட திறமையான வசனங்களும் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் எனலாம். சித்தாராவைச் சந்தேகப்பட்டுக் கேள்வியெழுப்பும் போது ‘அந்த ராமனே சீதையைச் சந்தேகப்பட்டான்’ என்று சுரேஷ் சொல்ல, ‘சந்தேகப்படறவன் எல்லாம் ராமனாகி விட முடியாது’ என்று அந்தப் பந்தை ஆவேசமாகத் திருப்பியடிப்பார் சித்தாரா. நான்கு இளைஞர்களுடன் ஒரே வீட்டில் வாழும் சித்தாராவைப் பற்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அவதூறாக வம்பு பேசுவார்கள். ஆனால் அப்படிப் பேசிய ஒரு பெண்மணியின் வீட்டுத் திருமணத்தில் தடை ஏற்படாமல் பழியைத் தான் ஏற்றுக் கொள்வார் சித்தாரா. வம்பு பேசிய பெண்மணி கண்கலங்கி மன்னிப்பு கேட்கும் போது “பரவாயில்ல... நான் நாலு பேரை வெச்சிருந்ததா ஏற்கெனவே சொன்னீங்க. இது அஞ்சாவதா இருந்துட்டுப் போட்டுமே" என்று சித்தாரா சொல்லும் வசனத்தில் குண்டூசியின் வெப்பம் கலந்திருந்தது.

புது வசந்தம்
புது வசந்தம்

‘ரேடியோவில் பாட வாய்ப்பு கிடைச்சிருக்கு’ என்று ஊர் பூராவும் பெருமையுடன் சொல்லி விட்டு நான்கு இளைஞர்கள் கிளம்புவதும், பாட்டைக் கேட்பதற்காக சித்தாரா ரேடியோ முன்பு ஆவலாகக் காத்திருப்பதும் உணர்ச்சிகரமான காட்சி. இந்த எதிர்பார்ப்பு சோப்பு விளம்பரமாக ஏமாற்றத்துடன் முடியும். ஆனால் விளம்பரப் பாடலைப் பாடுவதில் என்ன கௌரவக் குறைச்சல் என்று தெரியவில்லை. அப்படி ஆரம்பித்தவர்கள்தான் இன்று முன்னணி இசையமைப்பாளர்களாக உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை ‘கிருஷ்ண ஜெயந்தி’ மாதிரி சித்தாரா கொண்டாடுவதும் பிறகு வரும் ஆனந்த்பாபுவின் கற்பனைக் காட்சியும் ‘கிளிஷே’வானது என்றாலும் மதநல்லிக்கணத்தை வலியுறுத்தும் வகையிலிருந்தது.

விக்ரமனின் ஃபீல் குட் திரைக்கதை, முரளி, சித்தாரா உள்ளிட்டோரின் நடிப்பு, சார்லியின் காமெடி, எஸ்.ஏ.ராஜ்குமாரின் இனிமையான பாடல்கள், ஆண் - பெண் நட்பின் உன்னதத்தை அழுத்தமாகக் கொண்டாடும் வகையிலான க்ளைமாக்ஸ் ஆகிய காரணங்களுக்காக இன்றும் கூட ரசித்துப் பார்க்கும் வகையில் இருக்கிறது ‘புது வசந்தம்’.