அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

புதுப்பேட்டை! #VikatanReview

புதுப்பேட்டை!
பிரீமியம் ஸ்டோரி
News
புதுப்பேட்டை!

ப்ச்.... மார்க் கொஞ்சம் அதிகமா போட்ருக்கலாமோ?!

சினிமா விமர்சனம்

புதுப்பேட்டை!
புதுப்பேட்டை!

றுமை, அதிர்ச்சி, துரோகம், சுயநலம், குரூரம், ஆசை, பொறாமை எல்லாம் ஒருசேர ஒரு மனிதனைத் தாக்கினால் அவன் என்ன(வாக) ஆவான்? அதுதான் ஆகிறார் கொக்கி குமார் என்கிற தனுஷ்!

புதுப்பேட்டை!
புதுப்பேட்டை!

குடும்பத் தகராறில் தன் அன்பு அம்மாவைப் போட்டுத் தள்ளிவிட்டு, சாவதானமாக வந்து கதவைத் திறக்கிற முரட்டு அப்பாவைப் பார்த்து ரத்தம் உறைகிறார், செகண்ட் ஷோ பார்த்து விட்டு வீடு திரும்பும் தனுஷ் கண் எதிரில் அம்மாவின் சடலம் கடலுக்குள் வீசப்படுவதை மவுன சாட்சியாகப் பார்த்து நடுங்குகிறார். கொலைக்கு ஒரே சாட்சியான தனக்கு எதிராகக் கத்தியைத் தீட்டும் அப்பாவிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். பசி, பிச்சை, ஃப்ராடு என்று அலைந்து திரிகிறவர், தவறுதலாக போதை விற்பனைக் கும்பலோடு சேர்ந்து லாக்-அப்பில் தள்ளப்படுகிறார். வெளியில் வந்தபிறகு அந்தக் கும்பலின் தலைவனான தாதா முன் நிறுத்தப்பட, அடிதடி, வெட்டுக்குத்து என்று சட்ட விரோத காரியங்கள் ஒரு ஆக்ரோஷ சுழலாக அவரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள, தடதடவென தாதாயிஸம் பயில்கிறார் தனுஷ்.உலகின் எந்த ஒழுக்க நெறிகளுக்கும் நியாய தர்மத்துக்கும் அடங்காத ஒரு உலகத்தைப் படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொளேரென்று புரிய வைத்துவிடுகிறார் இயக்குநர் செல்வராகவன். திரையில் நடப்பவை எல்லாமே நிஜ வாழ்க்கைப் பதிவு போல் நீள்கின்றன!அப்பா மீதான வன்மத்தை மனசின் ஒரு மூலைக்குள்ளேயே மறைத்து வைத்திருந்து, அவர் நிர்க்கதியாகத் தன்னிடம் வந்ததும் இனிக்க இனிக்கப் பேசி, தன் ஆட்களுடன் அனுப்பி, காஷூவலாக அவரை உயிரோடு குழிக்குள் புதைக்கிற காட்சியில் நம் இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாக தடதடத்துப் போகிறது. ஏற்கெனவே ஒருத்தியோடு வாழ்ந்துகொண்டு, நண்பனின் தங்கை கல்யாணத்தில் தாலி எடுத்துக் கொடுக்கிற 'தலைவராக'ப் போய்... தடாலடியாக அந்தத் தாலியை மணமகளின் கழுத்தில் கட்டி தன் மனைவியாக்கிக்கொள்வது அதைவிடப் பெரிய தடதடா! தொடர்கிற முதலிரவில் தனுஷூக்குள் தாண்டவமாடுகிற மிருகத்தை, விஷக் கத்தி போன்ற கூர் வசனங்களில் வெளிப்படுத்தி அலறவிட்டிருக்கிறார்கள் செல்வ ராகவனும் பாலகுமாரனும்.பாலியல் தொழிலாளியாக வரும் சினேகாவுக்கும் தனுஷூக்குமான நெருக்கத்தைப் பார்வைகளாலேயே காட்டியிருப்பதும் மிக நுணுக்கமான பதிவு. அதேசமயம், என்னதான் தாதாவின் வாழ்க்கையில் நடப்பவற்றைச் சொல்கிற யதார்த்த கதையாக இருந்தாலும் நீள நெடுக இத்தனை ரத்தச் சிதறல் தேவைதானா? பிள்ளைகளோடு போகிறவர்களை நெளிய வைக்கிற அளவுக்கு வருகிற சில காட்சிகளும் வசனங்களும் தவிர்க்கப்பட்டிருக்கலாமே!'ஒல்லிப் பிச்சான்' தேகத்துடன் ஊரையே ஆட்டிப்படைக்கிற ரவுடிகள் நிஜத்தில் உண்டுதான்! ஆனால், அதுவே திரையில் தனுஷைப் பார்க்கையில், அவர் பிடித்திருக்கிற பட்டாக் கத்தியின் கைப்பிடி மாதிரி தெரிவது கொஞ்சம் பலவீனம்தான்!

புதுப்பேட்டை! #VikatanReview

மற்றபடி, பொத்துக்கொண்டு வடிகிற கண்ணீரும், மில்லி செகண்ட் நேரத்தில் மாறுகிற முகபாவங்களும், மனதில் ஓடுகிற வக்கிரத்தையெல்லாம் விழிகளில் வெளிப்படுத்துகிற லாகவமுமாக... சந்தேகமில்லாமல் தன்னை சூப்பர் ஆக்டர் என நிரூபித்திருக்கிறார் தனுஷ். சினேகா, குள்ளநரி அரசியல்வாதியாக வரும் அழகம்பெருமாள், பாலாசிங் மூவருக்கும் அபார நடிப்பில் அடுத்தடுத்த மார்க்குகள்!படத்தின் பயங்கர பரிமாணத்தைக் கணிசமாகக் கூட்டியிருக்கிறது யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை. பொருத்தமான இடங்களில் மௌனம் காக்கவும் செய்கிறது. அந்த இருட்டு உலகின் அபாயப் பதிவுகளை இதுவரை பார்த்திராத புதிய கோணங்களில் பிரமாதப்படுத்துகிறது அர்விந்த் கிருஷ்ணாவின் கேமரா. கதைக்களத்தின் வீரியத்துக்கேற்ற பாடல்களைப் படைத்ததன் மூலம், புதியதொரு முரட்டு இலக்கியத்தைக் காட்டியிருக்கிறது நா.முத்துக்குமாரின் பேனா.கதை சொல்கிற விதத்திலும், தரத்திலும் தனக்கென்று இருக்கிற தனிபாணியில் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார் செல்வராகவன். அதேநேரம், காட்ட வந்த யதார்த்த உலகத்துக்குள் கதையம்சத்தை இன்னும் சற்று கோவையாகச் செதுக்கியிருந்தால்... அந்த உலகத்தின் பயங்கரத்தை நிஜ வாழ்க்கையில் கடந்து வராதவர்களும் கூட முழுசாக ரசித்திருக்க முடியும்.தமிழ் சினிமாவில் இது புது... பேட்டைதான்!

- விகடன் விமர்சனக் குழு

(11.06.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)