சட்டத்துக்குப் புறம்பாக ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்ற `நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகம்’ (The department of town and country planning) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி அப்பகுதியில் மூன்று பண்ணை வீடுகள் சட்டத்துக்குப் புறம்பாக உள்ளதைக் கண்டறிந்த அதிகாரிகள், அவற்றுக்கு சீல் வைக்க மற்றும் இடிக்கத் திட்டமிட்டனர்.

இந்த மூன்று பண்ணை வீடுகளின் பட்டியலில், பஞ்சாபி பாடகரான தாலேர் மெகந்தியின் (Daler Mehndi) வீடும் ஒன்று உள்ளது என்பதை மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இவரின் பண்ணை வீடு ஹரியானாவின் சோஹனாவுக்கு அடுத்துள்ள தம்தாமா ஏரிப்பகுதியில் (Damdama lake) அமைந்துள்ளது.
சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் இந்த வீடு எவ்வித அறிவிப்புமின்றி சட்டத்துக்கு விரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மூன்று வீடுகளுக்கும் அப்பகுதி காவல்துறையினரின் உதவியுடன் நவம்பர் 29-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து அலுவலர் அமித் மதோலியா கூறுகையில், ``ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள ஏரிப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக 3 பண்ணை வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த மூன்று பண்ணை வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை இடிக்கும் பணிகள் கூடிய விரைவில் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.