சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: ராட்சசி

ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிகா

சீரழிந்து கிடக்கும் அரசுப்பள்ளியை சிகரத்தில் ஏற்றிவைக்கப் போராடும் சூப்பர்வுமனின் கதையே ‘ராட்சசி.’

புதூர் என்ற கடைநிலை கிராமத்தின் சிதிலமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக வருகிறார் ஜோதிகா. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், மாணவர்களிடையே நிலவும் சாதிய மனநிலை, உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு என அந்தப் பள்ளியில் மூலைக்கொன்றாக ஏகப்பட்ட பிரச்னைகள். அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சரி செய்ய முயல்கிறார் ஜோதிகா. இதனால் கடுப்பாகும் தனியார் பள்ளி உரிமையாளர், உள்ளூர் அரசியல்வாதிகள், சக டீச்சர்கள் ஜோதிகாவை வீழ்த்த நேரம் குறித்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் கரும்பலகை உதிர்க்கும் சாக்பீஸ் துகள்போல எல்லாவற்றையும் தூள்தூளாக்கி வெற்றிநடை போடுகிறார். இதற்கிடையே ஜோ ஒரு ராணுவ அதிகாரி என எல்லாருக்கும் தெரிய வருகிறது. ஒரு ராணுவ அதிகாரி ஏன் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திற்குத் தலைமையாசிரியையாக வரவேண்டும் என்பதற்கான காரணத்தைச் சொல்லி நெகிழ்ச்சியாக முடிகிறது படம்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என புல்லட்டில் ஏறி வலம்வந்த ஜோதிகாவை கமர்ஷியல் ராக்கெட்டில் ஏற்றிப் பறக்க விட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ். குழந்தைகளிடம் குலாவி மகிழ்வது, கடமை செய்யாத ஆசிரியர்களிடம் கண்டித்துக் கொதிப்பது, வில்லனிடம் கெத்து காட்டுவது, ஃப்ளாஷ்பேக்கை நினைத்து மருகுவது என இதற்கு முன்னால் வந்த படங்களில் தனித்தனியாகச் செய்ததை இதில் மொத்தமாகக் கொட்டி ‘சூப்பர்’ சொல்ல வைக்கிறார் ஜோதிகா. கதாநாயகியை மையமாக வைத்துப் படங்கள் வருவதே அபூர்வம். அதிலும் ஹீரோயினிசம் பேசும் படங்கள் ரொம்பவே குறைவு. அந்த ஏரியாவில் டீசன்ட்டாக விளையாடி ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர்.

சினிமா விமர்சனம்: ராட்சசி

பூர்ணிமா பாக்யராஜ் ஒருசில காட்சிகளே வந்தாலும் அவரின் கேரக்டர் நமக்குள் கனத்தைக் கடத்துகிறது. சத்யனின் ஒன்லைன் காமெடிகள் பெரும்பாலான இடங்களில் சிரிக்கவைக்கின்றன. ஒருசில இடங்களில் ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’ சொல்ல வைக்கின்றன. இதற்கு முன்னால் வந்த படங்களில் ஹரீஷ் பெராடியைப் பார்த்தாலே மிரட்டலாக இருக்கும். ஆனால் ராட்சசியில் வரும் ஹரீஷிடம் அது மிஸ்ஸிங். வழக்கமாக இப்படியான படங்களில் மையக் கதாபாத்திரத்தைப் பார்த்து இயலாமையில் பொங்கும் காமெடி கேரக்டர் ஒன்று வருமே... அது கவிதாபாரதி!

ஜோதிகாவை இண்டு இடுக்குகளில் இருந்து எட்டிப்பார்த்து மழலைக் காதல் செய்யும் குட்டிப்பையன் கொள்ளை அழகு. நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் டீச்சர் க்ரஷ்ஷை வெளிக்கொண்டுவரும் அழகான நொடிகள் அவை. பாரதிதம்பி-கௌதம்ராஜ் கூட்டணியின் பளிச் வசனங்கள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. ரைமிங் பன்ச்லைன்களாக இருந்தாலும் அந்தந்த கேரக்டரோடு பொருந்திப் போவதுதான் இதில் ஸ்பெஷல். ‘மூன்று கேள்விகள் கேட்டுக்கலாமா?’ என்று ஒவ்வொருமுறையும் ஜோதிகா கேட்பது அசத்தல்.

ஜோதிகா
ஜோதிகா

ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஓரிடத்தில் லூப்பில் வருகிறது. ஓரிடத்தில் ‘கத்தி’ தீம் மியூசிக்கை நினைவு படுத்துகிறது. பாடல்களும் ஏமாற்றுகின்றன. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு குறைசொல்ல முடியாதபடி பளீரென இருக்கிறது. படத்தின் பெரிய பலம் அது பேச நினைக்கும் விஷயங்கள்தான். கைகளில் மின்னும் ஜாதிக்கயிறு, இரட்டைச் சம்பளத்திற்காக வேலைபார்க்கும் அரசு அதிகாரிகள், சென்டம் ரிசல்ட்டுக்காக பலிகொடுக்கப்படும் அப்பாவிகள் என ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது.

குட்டிப்பையன் - டீச்சரம்மா பப்பி லவ் உட்பட சில காட்சிகள் புதுசு. வில்லன் அனுப்பும் பூங்கொத்தில் விபரீதம் இருக்குமோ என இத்தனை ஆண்டுக்கால சினிமா பார்த்த தாக்கத்தில் நாம் அனைவருமே பதறிக் கொண்டிருக்க, ‘குழந்தைங்க படிக்கிற இடத்துல என்னை அப்படி வேற பண்ணச் சொல்றீயா?’ என வில்லனே தன் அடிப்பொடியிடம் எகிறுவது ஆறுதல். ஜோதிகாவை அழைத்துவரும் அந்த ஆட்டோக்காரர் கேரக்டர் ஆரம்பத்தில் சுவாரஸ்யம் சேர்த்தாலும், போகப்போக ‘இத்துனூண்டு ஊர்ல இது தெரியாமலா இருப்பாரு?’ என்று எண்ணவைக்கிறது. அதேபோல், இந்தியா முழுக்க இன்னமும் ஆணவக்கொலைகளும் ஆதிக்க மனப்பான்மையுமாகத் தலைவிரித்தாடும் சாதிப்பிரச்னையை வெறுமனே சில நிமிடங்கள் வசனங்கள் பேசி ஜோதிகா தீர்த்துவைப்பதெல்லாம்... தர்க்கத்திற்குள் வரவில்லை.

சினிமா விமர்சனம்: ராட்சசி

அத்தனை ஆண்டுகளாகச் செயல்படாத அரசு இயந்திரத்தை ஒற்றையாளால் இவ்வளவு வேகமாகச் சுழலவைக்க முடியுமா என்பனபோன்ற லாஜிக் கேள்விகளும் படம் பார்க்கும்போதே எழுகின்றன. சட்சட்டென ஒரு பிரச்னையிலிருந்து இன்னொன்று எனத் தாவிக்கொண்டே இருப்பது படத்துக்கு விறுவிறுப்பு கூட்டினாலும், எந்த ஒரு பிரச்னையையும் ஆழமாக அலசாமல் போயிருக்கிறார்களோ என்று தோன்றவைக்கிறது.

அதிகம் விமர்சிக்கப்படாத ஆசிரியர்களை, அதிகம் பேசப்படாத அதேசமயம் இன்றைய தேதியில் பேசியே ஆகவேண்டிய பள்ளிக்கல்வி முறையைப் பற்றிப் பேச நினைத்ததற்காக இயக்குநருக்கும் ஜோவுக்கும் ஸ்பெஷல் பூங்கொத்துகள்.