சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்

இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்

இரு சாதிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காட்டுகிறேன் என்று களமிறங்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன், அதற்கு மாறாக சாதியத்துக்கு ஆதரவாகவே இராவண கோட்டத்தை உருவாக்கியிருக்கிறார்

சாதிக் கலவரங்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலையும் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலையும் தன் புரிதலின் அடிப்படையில் பேசும் படம் ‘இராவண கோட்டம்.’

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு பிரபுவும் கீழத்தெரு இளவரசும் உயிர் நண்பர்கள். அறிவிக்கப்படாத ஊர்த் தலைவர் பிரபுவின் பேச்சுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் ஊருக்குள் பிரபு-இளவரசுவைப் போலவே ஒற்றுமையாய் இருக்கிறார்கள் மேலத்தெரு சாந்தனுவும் கீழத்தெரு இளவரசுவின் மகன் சஞ்சய் சரவணனும். கனிம வளங்களை அபகரிக்க வரும் கார்ப்பரேட் நிறுவனம், அதற்குத் துணைபோகும் அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தால் சாதிக் கலவரம் வருகிறது. ஊர் ஒன்றுபட்டதா, ‘பங்காளி'யாக சொந்தம் கொண்டாடிய நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பதே மீதிக் கதை.

இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்

கிராமத்து இளந்தாரியாய் நக்கல் நையாண்டி, ஆட்டம் பாட்டம், சண்டைக்காட்சிகளில் மிளிரும் சாந்தனு, சென்டிமென்ட் ஏரியாவில் தடுமாறுகிறார். கயல் ஆனந்திக்கு வழக்கமான கிராமத்துக் காதலி ரோல். உயிர் நண்பர்களுக்குள் பகை வளர மட்டும் திரைக்கதையில் உதவியிருக்கிறார். ஒற்றுமையாய் இருக்கும் இரு சமூகத்துக்குள் விஷத்தை விதைக்கும் முருகன் என்பவர் மட்டும் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். பிரபு, இளவரசு, தீபா சங்கர், அருள்தாஸ், தேனப்பன், சுஜாதா சிவக்குமார் போன்றோர் கொடுத்த பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு ராமநாதபுர மாவட்ட கிராமத்தின் வெயிலையும், வறட்சியையும் ஒப்பனைகளின்றிக் காட்டியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஓ.கே. பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கருவேல மரங்களுக்கு இடையேயான ஊர் அமைப்பை யதார்த்தமாகக் காட்டி கலை இயக்குநர்கள் நர்மதா வேணியும் ராஜுவும் கவனம் ஈர்க்கிறார்கள்.

இரு சாதிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் காட்டுகிறேன் என்று களமிறங்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன், அதற்கு மாறாக சாதியத்துக்கு ஆதரவாகவே இராவண கோட்டத்தை உருவாக்கியிருக்கிறார். மேலத்தெரு, கீழத்தெரு என்று பிரிப்பதே சாதி அடையாளங்களை உறுதிசெய்து விடுகிறது. மேலத்தெருவினர் பெருந்தன்மையானவர்கள், கருணை நிறைந்தவர்கள், ஒற்றுமையை விரும்புபவர்கள்; கீழத்தெருக்காரர்கள் குடிகாரர்கள், எளிதில் விலைபோகிறவர்கள், ஒற்றுமையைக் குலைப்பவர்கள் என்ற சித்திரிப்புகளே படம் முழுக்க. ‘அவுக கொடுத்ததாலதான்டா நீங்க எல்லாம் வாழ்றீங்க. அவுக இல்லனா நீங்களெல்லாம் இல்லடா' போன்ற வசனங்களைக் கீழத்தெரு சித்திரைவேலு(இளவரசு)வை வைத்தே பேச வைத்திருப்பது இன்னும் விஷமத்தனமானது.

இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்
இராவண கோட்டம் - சினிமா விமர்சனம்

சாதிக்கலவரங்களைத் தூண்டுவதில் அரசியல் கட்சிகளின் பங்கிருக்கலாம்; கார்ப்பரேட் சதியும் பேசப்பட வேண்டியதுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் அவர்களே காரணம் என்று திசைதிருப்புவது நேர்மையற்றது. சொல்லும் கருத்திலும் பட உருவாக்கத்திலும் பெரிதாய் ஓட்டை விழுந்திருக்கிறது இந்தக் கோட்டத்தில்.