பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“வரலட்சுமி பேசுறது எங்களுக்கே புரியாது!”

ராதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
ராதிகா

“காமெடி, சண்டைகள், கருத்து முரண்கள், கோபங்கள்னு எல்லாமே கலந்திருக்கும் எங்க வீட்ல. அதுதானே வாழ்க்கை.

23 ஆண்டுகள் கழித்து, திரையில் கணவன் மனைவியாக மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும். மணிரத்னம் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள `வானம் கொட்டட்டும்’ படத்தில்தான் இந்தக் கூட்டணியின் கம்-பேக்.

“ `சூர்யவம்சம்’ படத்துக்கு அப்புறம், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கணவன் மனைவியா நடிக்கிற படம், ‘வானம் கொட்டட்டும்” என்று மகிழ்ச்சிபொங்கப் பேசும் சரத்குமார், சினிமாவில் 30 வருடங்களையும், ராதிகா 40 வருடங்களையும் நிறைவு செய்திருக்கிறார்கள்.

“இதை ஒரு சாதனையாதான் பார்க்கிறேன். இன்னைக்கு இருக்கிறவங்க இவ்ளோ வருஷம் சினிமாவுல இருப்பாங்களான்னு தெரியாது. இன்னும் நல்ல கதை, நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்த்து இருக்கோம். இன்றைய ஆடியன்ஸ் எதிர்பார்ப்போடு இருக்கிற படைப்புகள்ல நாங்களும் இருக்கோம்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு” என்கிறார் ராதிகா. “அரசியல் ஈடுபாடு அதிகமான பிறகு, சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்னே சொல்லலாம். இருந்தாலும் தமிழ்ல ஒரு கம்பேக் பிலிம் கொடுக்கணும்னு பயணிச்சுக்கிட்டு இருக்கேன். இப்போ ‘பிறந்தாள் பராசக்தி’, ‘பாம்பன்’, ‘நாநா’, ‘வானம் கொட்டட்டும்’, ‘பொன்னியின் செல்வன்’னு நிறைய படங்கள் கைவசம் இருக்கு. அதுல ‘பிறந்தாள் பராசக்தி’ படத்துல நான், ராதிகா, வரலட்சுமி மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறோம். சினிமாவுல பழைய நடிகன், இன்றைய நடிகன், நாளைய நடிகன்னு எல்லாம் இல்லை. நடிகன் எப்பவுமே நடிகன்தான். இந்தப் படங்கள் எல்லாமே என் நடிப்புக்குத் தீனி போடுற படமாகவும் கதாபாத்திரமாகவும் அமைஞ்சிருக்குன்னு நினைக்கிறேன்” என்று நம்பிக்கையுடன் பேச்சைத் தொடர்ந்தார் சரத்குமார்.

“வித்தியாசமான கதைகள்ல வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு ஆசை எனக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கு. நாலு ஃபைட், நாலு பாட்டுன்னு ஒரு ஜானரை வெச்சுக்கிட்டு அதுலயே ட்ராவலாகிட்டோம். ஒரு கதாபாத்திரத்தை எடுத்து அதை வெற்றிபெறச் செய்யணும். உதாரணத்துக்கு, ‘அசுரன்.’ ஒரு நடிகரிடம் எதைக் கொடுத்தாலும் சிறப்பா செஞ்சு அந்தக் கதையை வெற்றிபெறச் செய்றதுதான் சிறந்ததுன்னு நினைக்கிறேன். அப்படிப்பட்ட கதைகள் எனக்கு வந்திருக்கான்னு கேட்டா, இல்லை.

சரத்குமார், ராதிகா
சரத்குமார், ராதிகா

‘சூர்யவம்சம்’, ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’, ‘ஐயா’ன்னு நிறைய படங்கள் நடிச்சிருக்கலாம். இதையும் தாண்டி, இதுபோன்ற படங்கள், வித்தியாசமான திரைக்கதைகள்ல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வரலைன்னுதான் சொல்லணும். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயோபிக்கை இயக்கி அவர் கேரக்டர்ல நடிக்கணும்ங்கிற ஆசை பல வருடங்களா இருக்கு. அவர் வாழ்க்கை வரலாற்றை சினிமாவுக்குத் தகுந்த மாதிரி ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அதுக்கான காலம் எப்போ அமையுதுன்னு பார்ப்போம்” என்றார்.

“எனக்கு அந்த மாதிரி எந்த ட்ரீம் ரோலும் இல்லை. எல்லா முக்கியமான இயக்குநர்களுடைய இயக்கத்துலயும் நடிச்சிட்டேன். ஆனா, கே.பாலசந்தர் சார் இயக்கத்துல நடிக்க முடியலையேன்னு பெரிய வருத்தம் எனக்குள்ள இப்பவும் இருக்கு. ஒருமுறை அவரைச் சந்திச்சபோது அவர் இயக்கத்துல நடிக்கணும் சொன்னேன். ‘உன்னை மாதிரி ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஒரு கேரக்டர் கொடுத்தா பிரமாதமானதா இருக்கணும். அந்த மாதிரி ரோல் எனக்கு இன்னும் மைண்டுக்கு வரலை. அப்படி வந்தா நீதான் நடிப்ப’ன்னு சொன்னார். இன்னொரு முறை சந்திக்கும்போது, ‘சார், உங்க டிவி சீரியல்லயாவது நடிக்கிறேன்’னு சொன்னேன். அதுவும் கடைசி வரை நடக்காமலே போயிடுச்சு” என்கிறார் வருத்தத்துடன் ராதிகா.

சினிமா பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்களை டிவி பக்கம் அழைத்து வந்தோம். “ராதிகாவை ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சித் தொகுப்பாளரா பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. நான் ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி தொகுத்து வழங்கின காலம் வேற. ஆனா, இப்போ அப்படி இல்லை. இந்த நிகழ்ச்சியை நிறைய மொழிகள்ல நிறைய நட்சத்திரங்கள் தொகுத்து வழங்கியிருக்காங்க. எதுவும் தெரியாமல், முறைப்படி தயாராகாமல் அங்கே போய் உட்கார முடியாது. வரும் போட்டியாளர் நம்மளைவிட புத்திசாலியா இருக்கலாம். நிறைய விஷயங்கள் தெரிஞ்சி ருக்கணும். தெரியலைனா தெரிஞ்சுக்கத் தயாரா இருக்கணும். பெரிய ஹோம் வொர்க் அவசியம். தவிர, டைமிங் சென்ஸுடன் ஹியூமர் சென்ஸும் தேவை. வர்றவங்களுடைய மனநிலையைப் புரிஞ்சுக்கணும். அவங்க சோகத்தை மனசார உணரத் தெரிஞ்சிருக்கணும். அந்த விதத்துல இவங்க அந்த நிகழ்ச்சி பண்றது நல்லாருக்கு” என்றார் சரத்குமார்.

வரலட்சுமியைப் பற்றிப் பேச்சு வர, “வரலட்சுமியை ஒரு நடிகையா ராதிகா பாராட்டுறது எனக்கு சந்தோஷமா இருக்கும். வெறும் ஹீரோயினா மட்டும் இல்லாமல் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்கிறாங்க. நிறைய படங்கள் பார்த்துட்டு, எங்களுக்குப் படங்களைப் பரிந்துரைக்கிறது வருதான்” என்ற சரத்குமாரைத் தொடர்ந்தார், ராதிகா.

ராதிகா, சரத்குமார்
ராதிகா, சரத்குமார்

“வரு நல்ல நடிகை. தன்னை ரொம்பவே வளர்த்துகிட்டு வர்றாங்க. வீட்ல நிறைய சினிமா பேசுறது வருதான். நாங்க சில டிப்ஸ் கொடுப்போம். அதை ரொம்ப ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அடுத்தமுறை அதை மாத்திக்குவாங்க. என்ன, எக்ஸ்பிரஸ் டிரெயின் மாதிரி வரு பேசுறது எங்களுக்கே புரியாது. இப்போ என்ன சொன்ன, திருப்பிச் சொல்லுன்னு சொல்லிக் கேட்போம்.

பூஜா ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியில வொர்க் பண்றாங்க. ரேயானும் ராகுலும் எலியும் பூனையுமா இருப்பாங்க. ஆனா, உள்ளுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் அவ்ளோ பாசம் வெச்சிருக்காங்க” என்று தன் மகள்கள், மகன் பற்றிப் பேசியவர்கள் தங்கள் மருமகன் மிதுன் பற்றியும் பேசத் தொடங்கினர்.

“மிதுன் வீட்ல அதிகம் பேசவேமாட்டார். எப்போவுமே கிரிக்கெட் பத்தி யோசிக்கிற நபர். இப்போ நல்லா விளையாடிக்கிட்டு இருக்கார். சீக்கிரமே இந்திய கிரிக்கெட் டீம்ல மிதுனைப் பார்க்கலாம். ஆல் ரவுண்டரா இருந்தா இன்னும் நல்லதுன்னு பேட்டிங்லேயும் கவனம் செலுத்திட்டு வர்றார். இந்தியன் டீம்ல பர்ஃபாம் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுதுன்னா தூள் கிளப்பிடுவார்னு நம்பிக்கை இருக்கு. அதே சமயம், தங்கமான மருமகன்” என்றனர்.

“காமெடி, சண்டைகள், கருத்து முரண்கள், கோபங்கள்னு எல்லாமே கலந்திருக்கும் எங்க வீட்ல. அதுதானே வாழ்க்கை. எனக்குக் கோபம் வந்தா வேகமா காரை எடுத்துக்கிட்டு வெளியே போயிடுவேன். அப்புறம், ரொம்ப தூரம் வந்துட்டோமோன்னு நினைச்சு, திரும்பி வீட்டுக்கு வந்திடுவேன். அதே மாதிரி, என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டா, ராதிகா என் மேல கோவமா இருக்காங்கன்னு அர்த்தம். சரத்னு குரல் வந்தா அன்னிக்கு ஏதோ சம்பவம் இருக்குன்னு கண்டுபிடிச்சிடலாம்” என்று சிரிக்கிறார் சரத்குமார்.

“சரத்” என்று ராதிகா அழைக்க, டக்கென்று திரும்பிப்பார்க்கிறார் சரத்குமார்.

“ச்சும்மா, கூப்பிட்டுப் பார்த்தேன்” என்று ராதிகா சொல்லவும், செல்லமாய் முறைக்கிறார் சரத். இருவரும் மனம் விட்டுச் சிரிக்க, அந்த வசீகரச் சிரிப்பில் வானம் கொட்டுகிறது.