சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

‘ஜெயிலர்’ - ரஜினி காம்பினேஷன்... ஜாக்கி ஷெராப் ஃபீலிங்!

ரஜினி - தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - தமன்னா

அமைதியை விரும்பும் ஜெயிலர் ரஜினியின் வாழ்க்கையில் வில்லன் ஜாக்கி ஷெராப் அண்ட் டீம் புயலை வீச வைக்கிறது. அதன்பின், நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை என்கிறார்கள்.

ரஜினியின் ‘ஜெயிலர்' அப்டேட்டை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். ‘அண்ணாத்த' படத்திற்குப் பின் ரஜினியும், ‘பீஸ்ட்' படத்திற்குப் பின் நெல்சனும் இணையும் ‘ஜெயிலர்' படப்பிடிப்பு சென்னையில் டாப் கியரில் நடந்துவருகிறது. இந்தப் படத்திற்காக கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார், இந்தியிலிருந்து ஜாக்கி ஷெராப், மலையாளத்திலிருந்து மோகன்லால் மற்றும் விநாயகன், தெலுங்கிலிருந்து சுனில் எனப் பல மொழிகளிலிருந்து நட்சத்திரங்களின் கூட்டணி எதிர்பார்ப்பை எகிற வைத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப் பெருமைகளைக் குவிக்கும் படத்தின் அப்டேட் குறித்து ரஜினியின் வட்டாரத்தில் விசாரித்தேன்.

ரஜினி
ரஜினி

சின்ன ப்ளாஷ்பேக்

* ஆரம்பத்தில் ‘ஜெயிலர்’ டேக் ஆஃப் ஆகும் போது, ரஜினியிடம் நெல்சன் சொன்ன ஸ்டோரி லைன் ரொம்பவே சிம்பிளானது. ‘ஒரு ஜெயிலரின் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை' என்பதால் அதற்கான நடிகர்களாக சிவராஜ்குமார், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் என குறிப்பிட்ட சிலரே ஒப்பந்தமாகியிருந்தனர். சென்னை, கடலூர், மாமல்லபுரம் என படப்பிடிப்பும் நடந்துவந்தது. இந்தச் சூழலில்தான் மல்டி ஸ்டார்கள் கொண்ட கமலின் ‘விக்ரம்', மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் மாபெரும் வசூலும், ஓ.டி.டி வரவேற்பும் ரஜினியை பிரமிக்க வைத்திருக்கிறது. அதன்பிறகே நெல்சனிடம் கதையில் மாற்றங்கள் செய்யச் சொல்லியிருக்கிறார் ரஜினி. நெல்சனும் பக்காவாக அதைச் செய்தபின் கதையின் மாறுதலுக்கு ஏற்ப மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் என மல்டி ஸ்டார்கள் இணைந்தனர்.

* அமைதியை விரும்பும் ஜெயிலர் ரஜினியின் வாழ்க்கையில் வில்லன் ஜாக்கி ஷெராப் அண்ட் டீம் புயலை வீச வைக்கிறது. அதன்பின், நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை என்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிமுகப்படுத்திய முத்துவேல் பாண்டியன் தோற்றத்தில்தான் படம் முழுவதும் ரஜினி வருகிறார். இதுவரை படமாக்கப்பட்ட போர்ஷன்களில் அந்தத் தோற்றத்தில்தான் நடித்துள்ளார். படத்தில் ரஜினியின் ப்ளாஷ்பேக் காட்சி வருகிறது. அதில் ரஜினியின் தோற்றத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம். மற்றபடி, ஒரே லுக்கில்தான் நடித்துள்ளார் என்கிறார்கள்.

* முன்பு ரஜினியிடம் ஒரு பாலிசி உண்டு. ஒரு படத்திற்கு 50 நாள்கள் கால்ஷீட் கொடுத்தார் என்றால் அவரது போர்ஷன் முழுவதும் முடிந்த பின், அந்த கெட்டப்பிலிருந்து வெளியே வந்துவிடுவார். ‘‘நீங்க கேட்ட கால்ஷீட் கொடுத்துட்டேன். நடிச்சிட்டேன். இதற்குப் பின் பேட்ச் ஒர்க்னு சொல்லி எக்ஸ்ட்ரா நாள்கள் கேட்கக் கூடாது’' என்று கறாராகச் சொல்வதுடன், அடுத்த பட லுக்கிற்குள்ளும் சென்றுவிடுவார். ஆனால், ‘ஜெயிலர்’ பேன் இந்தியா படமாக பெரிய அளவில் உருவாகிவருவதால், நெல்சன் கேட்ட தேதிகளில் எல்லாம் ரஜினி வந்து நடித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது போர்ஷன் இதுவரை 80 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்டது. மார்ச் மாதம் முழுவதும் நடித்துக் கொடுப்பார் என்றும், ஏப்ரலிலிருந்து ‘லால் சலாம்' படப்பிடிப்பில் பங்கேற்கிறார் என்றும் தகவல்.

* படத்தில் ரஜினிக்கு டூயட் கிடையாது. அதிரடி ஆக்‌ஷனும் நெல்சன் டைப் காமெடி ஜானரும் கலந்து ஃபேமிலி என்டர்டெயினராக ரெடியாகிக் கொண்டிருக்கிறது. மோகன்லால் இதில் ஜெயிலரின் நண்பராக கெஸ்ட் ரோலில்தான் வருகிறார்.

* ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் ரஜினி, ஜாக்கி ஷெராப், தமன்னா ஆகியோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் இவர்களின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. மங்களூரில் ரஜினி - சிவராஜ் குமார் காம்பினேஷனின் பரபர சண்டைக்காட்சிகளையும், ஒரு சேஸிங்கையும் படமாக்கியுள்ளனர்.

* ஸ்பாட்டில் ஜாக்கி ஷெராப் மகிழ்ந்து நெகிழ்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தியில் 1987-ல் வெளியான ‘உத்தர் தக்‌ஷின்' படத்தில் ரஜினியுடன் அவர் இணைந்து நடித்திருந்தார். ‘‘35 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைவேன் என நினைத்துப்பார்க்கவே இல்லை. சந்தோஷமாக இருக்கிறது. அந்தப் பழைய நினைவுகள் மீண்டும் கிளர்கின்றன'' எனச் சொல்லிவருகிறார் ஜாக்கி.

* ‘டாக்டர்' கூட்டணியான யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட நெல்சனின் காமெடி டீம் கூட்டணியினர் அத்தனை பேரும் இதிலும் இருக்கிறார்கள். அதைப் போல அனிருத், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் என ‘டாக்டர்' தொழில்நுட்பக் கூட்டணியும் இருப்பதால், வழக்கம்போல் ஸ்பாட் கலகலப்பாக இருக்கிறது.

* இப்போது சென்னை ஆதித்யராம் அரங்கத்தில் நடந்துவரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து மீண்டும் ஹைதராபாத், நேபாளம் எனப் பறக்கவிருக்கிறது படக்குழு. அதில் ரஜினி பங்கேற்பார் என்றும் அதன்பிறகு ஏப்ரலிலிருந்து மற்ற நடிகர்களின் படப்பிடிப்பு இருக்கும் என்கிறார்கள். இப்போதைய தகவலின் படி ஆகஸ்ட் மாதம் படத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.

தமன்னா
தமன்னா

* ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்' என ‘வாரிசு' தயாரிப்பாளர் தில்ராஜு கொளுத்திப் போட்டபின் ரஜினி டென்ஷன் ஆகிவிட்டார் என்றும், அவர்தான் என்றும் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி மீண்டும் நிரூபிக்க நினைக்கிறார் என்றும் ஒரு பக்கம் தகவல்கள்... ‘விக்ரம்' வசூலை ‘ஜெயிலர்' முறியடிக்க வேண்டும் என்றும் ரஜினிக்கு பிரஷர் இருப்பதாக யூகங்கள்... அதைப் போல, நெல்சனுக்கு ‘பீஸ்ட்' வசூல் ரீதியாக வெற்றியைக் கொடுத்தாலும், எதிர்பார்த்த வரவேற்பு அமையவில்லை என்பதால், பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்றும் தகவல்கள் ஜல்லியடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ‘ஜெயிலர்' ஸ்பாட்டில் இருவருமே செம கூல் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ரஜினியும், நெல்சனும் அவ்வளவு நட்பாக, எனர்ஜியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் நெல்சன் திட்டமிட்டு எடுப்பதை ரஜினி ரசித்து வரவேற்கிறார் என்றும், நெல்சனுக்குத் துளியும் பிரஷர் ஏறாமல் அன்பும் அக்கறையுமாக ரஜினி பார்த்துக்கொள்கிறார் என்றும் யூனிட்டினர் மகிழ்ந்து சொல்கிறார்கள். இந்த பாசிட்டிவ் எனர்ஜியே, படத்தையும் பாசிட்டிவ் ஆக மாற்றிவருகிறது.