சினிமா
தொடர்கள்
Published:Updated:

“வில்லனா நடிக்க மாட்டேன்!”

ராமராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமராஜன்

என் படங்களின் டைட்டில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்த மாட்டேன். ‘சாமானியன்' டைட்டிலும் கலோக்கியலா இருக்கு.

ராமராஜன் ஒருகாலத்தில் கிராமராஜனாகக் கோலோச்சியவர். 2012-ல் ‘மேதை' படத்திற்குப் பின், 10 ஆண்டுகள் கழித்து ‘சாமானியன்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். 45 வருட சினிமாப் பயணத்தில் இது அவருக்கு 45வது படம். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றால், ஷோகேஸ் உயரத்தில் எம்.ஜி.ஆரோடு புன்னகைக்கிறார். இன்னொரு புகைப்படத்தில் ஜெயலலிதாவின் காதில் ரகசியம் சொல்லிக்கொண்டிருக்கிறார். கையடக்க கறுப்பு வெள்ளைப் புகைப்படம் ஒன்றில் ‘கரகாட்டக்காரன்' வெற்றியின் நினைவாக அவரோடு இளையராஜாவும், கங்கை அமரனும் புன்னகைக்கிறார்கள். டேபிளில், வெள்ளியில் வடித்த பசு ஒன்று தன் கன்றுக்குட்டியைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் சிலை... அதற்குப் பூ வைத்துப் பூஜிக்கிறார். நமது போட்டோகிராபர் காளிமுத்து, ‘‘போட்டோ எடுக்க வேண்டியிருக்கு. பசுவைக் கீழே எடுத்து வச்சிடவா?'' என அப்பாவியாகக் கேட்க, பதறிவிட்டார் ராமராஜன். ‘‘எனக்குச் சோறு போட்டதே இந்தப் பசுதான்'' என்று பரவசத்துடன் கண்களில் ஒற்றிக்கொண்டு பேசத் தயாராகிறார்.

“வில்லனா நடிக்க மாட்டேன்!”

``ஒரு காலத்துல பரபரப்பா இருந்தீங்க. பிறகு நீண்ட இடைவெளி?’’

‘‘ஒரு சர்வராகவோ, போஸ்ட்மேனாகவோ, நாலே நாலு சீன்களாவது நடிச்சிடணும்ங்கற ஆசையிலதான் சினிமாவுக்கு வந்தேன். ஹீரோ ஆகணும்னு கனவே கிடையாது. இராமநாராயணன் சார்கிட்ட உதவியாளர் ஆனேன். 36 படங்கள் ஒர்க் பண்ணினேன். ஒரே சமயத்துல நாலு படங்கள் நாலு மொழியில அவர் ஒர்க் பண்ணுவார். அந்த அனுபவம் கைகொடுக்க, நானும் இயக்குநரானேன். அதுல அஞ்சு படங்கள் சொந்தப்படம். நான் இயக்கிய முதல் படம் ‘மண்ணுக்கேத்த பொண்ணு' வெளியான அன்னிக்கு பாரதிராஜா சார் படம் பார்க்க வந்திருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அவர் தயாரிப்பில் நான் இயக்கினதுதான் ‘மருதாணி.' இப்படி எல்லாமே அதுவா அமைஞ்சது. ‘நம்ம ஊரு நல்ல ஊரு'வில் ஹீரோவானேன். அப்படியே இப்ப 45 படங்கள் ஆகிடுச்சு. ஐம்பது படங்கள் வரை ஹீரோவா நடிப்பேன்னு நினைச்சிருந்தேன்.

1998-ல எம்.பி ஆனதும் படங்களைக் குறைச்சுக்கிட்டேன். எம்.பி ஆன பிறகு சாதாரண கேரக்டர்களை நடிச்சா, என்னைக் குறைச்சுச் சொல்வாங்கன்னு தோணுச்சு. ‘மேதை'க்குப் பிறகு சில வாய்ப்புகள் வந்தன. டி.வி-யில்கூட கூப்பிட்டாங்க. ஆனா, வீட்டுல உள்ள பெண்கள் டி.வி-யில என்னைப் பார்க்கறப்ப, ‘இந்தத் தம்பி எப்படியெல்லாம் இருந்துச்சு. இப்ப இப்படி பண்றதுக்கு வீட்லயே சும்மா உட்கார்ந் திருக்கலாம்'னு சொல்லிடக்கூடாதுன்னு பயந்தேன். அத்தனை வருஷம் சம்பாதிச்ச பெயரும் போயிடக்கூடாதுன்னு நல்ல படங்களுக்காக வெயிட் பண்ணினேன். ஐசரி கணேஷ் எனக்கு ரொம்பப் பழக்கம். அவர் ‘எல்.கே.ஜி.' தயாரிக்கறப்ப ‘ஒரு ரோல் இருக்கு... நடிக்கறீங்களா?'ன்னு கேட்டார். ஆர்.ஜே.பாலாஜியும் கதை சொன்னார். அதுவும் பிரமாதமா இருந்துச்சு. அரசியல் கேரக்டருக்குக் கேட்டிருந்தாங்க. அப்புறம் யோசனை பண்ணிப் பார்த்தேன். அது இங்கிலீஷ் டைட்டில், அரசியல் படம் வேற... ‘இவரு டிகிரி வரைக்கும் போயிட்டு, எல்.கே.ஜி-க்கு வந்துட்டாரு'ன்னு கிண்டல் பண்ற மாதிரி ஆகிடும்னு மறுத்துட்டேன்.

“வில்லனா நடிக்க மாட்டேன்!”

விஜய் மில்டன் 'கோலிசோடா 2'-க்காகக் கேட்டார். இப்படி நிறைய படங்கள் தேடி வந்தது. கதை சொன்னாங்க. ஆனா, எனக்கு எதுவும் செட் ஆகாமல் இருந்தது. ‘மாரி 2'-ன் அசோசியேட் இயக்குநர் பிரவீன் ஒரு கதை சொன்னார். ஸ்கிரிப்ட்டும் புதுசா இருந்துச்சு. ஓகே சொல்லி, அட்வான்ஸ் வாங்குற சமயத்துல கொரோனா வந்துடுச்சு. நான் என்ன பண்ண முடியும்! இந்தச் சூழல்லதான் என் உதவியாளர் ராஜேஷ், ‘சாமானியன்' கதையைக் கேட்கச் சொன்னார். இயக்குநர் ராகேஷ் ஏற்கெனவே ‘தம்பிக் கோட்டை' பண்ணினவர். தயாரிப்பாளர் மதியழகனும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' பண்ணினவர். நல்ல கதை, நல்ல டீமாக இருந்ததால சம்மதிச்சிட்டேன். ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும், சாமானியன் கையில துப்பாக்கி வச்சிருக்காரேன்னு ஆச்சரியமா கேட்டாங்க. அதான் கதை. இதுவரை 44 படங்கள் பண்ணிட்டேன். முதல்முறையா தாடி வளர்த்திருக்கறது இதுலதான்.

என் படங்களின் டைட்டில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்த மாட்டேன். ‘சாமானியன்' டைட்டிலும் கலோக்கியலா இருக்கு. ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர்னு நல்ல நடிகர்கள் இருக்காங்க. இன்னிக்கு வர்ற படங்களின் டைட்டில்களை யாரும் கிரியேட்டிவ்வா, மனசுல நிற்கறது மாதிரி யோசிக்கறதில்ல. இப்ப வர்ற மீம்ஸ் ‘எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க பாருங்க'ன்னு ஆச்சரியப்படுத்துது. ஆனா, படங்களுக்கு டைட்டில் வைக்கறதுல கோட்டை விட்டுடறாங்க.''

“வில்லனா நடிக்க மாட்டேன்!”

``இனி ஹீரோவா நடிப்பேன்னு சொன்னதாலதான் இடைவெளி ஆச்சா?’’

‘‘நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன்னு எங்கேயும் சொன்னதில்ல. ஹீரோவா நடிக்கறது சாதாரண வேலை இல்ல. ரொம்ப சிரமமானது. ஒண்ணாவது ரீல்ல இருந்து 14வது ரீல் வரை ஹீரோ இருந்தாகணும். ஓப்பனிங் ஸாங் பாடியாகணும், ஃபைட் பண்ணியாகணும். குடும்பத்தைக் காட்டியாகணும்... லவ்வுக்கு சண்டை வரும். டூயட் பாடணும். இப்படி 14 ரீல்லேயும் ஹீரோ வருவான். என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே அமையும்போது அமையும். ‘கரகாட்டக்காரன்' கொஞ்சமும் டென்ஷன் இல்லாமல் எடுத்த படம். ஆனா, அதை பார்ட் 2 எடுக்கறது பத்திப் பேச்சு வந்ததும், வேணாம்னு சொல்லிட்டேன். எந்தப் படத்தையும் பார்ட் 2 பண்றதுல விருப்பம் இல்ல. நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது முதல் குழந்தைதான். மறுபடியும் பத்து வருஷம் கழிச்சு, அந்தக் குழந்தைக்கு பார்ட் 2-ன்னு பெயர் வைப்போமா?!''

``உங்க ‘கரகாட்டக்காரன்' மதுரையில ரெண்டு வருஷம் தொடர்ந்து ஓடுச்சு. பல சில்வர் ஜூப்ளி கொடுத்திருக்கீங்க. ஆனா, இப்ப ஒரு படம் ரிலீஸ் ஆனதும் ‘வெற்றிகரமான 2-வது நாள்'னு விளம்பரம் கொடுக்கறாங்க. எப்படி இருக்குது சினிமா?’’

‘‘நான் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்'ல நடிச்ச பிறகு எல்லாரும் என்னை ‘டவுசர்'ன்னு கிண்டல் பண்ணினாங்க. ஆனா, இப்ப காலையில நான் பார்க்ல வாக்கிங் போறப்ப பார்த்தால், எல்லாருமே டவுசரோடதான் சுத்திட்டிருக்காங்க. பெயர்தான் பெர்முடாஸ், ஷாட்ஸ்னு வச்சிருக்காங்க. அந்த வகையில அப்பவே நான் டிரெண்ட் செட்டர்தான். சினிமா பிலிம்ல இருந்து டிஜிட்டலுக்கு மாறிடுச்சு. டெக்னாலஜியும் புதுசா இருக்குதுன்னு சொல்றாங்க. வளர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனா, உலகம் பூராவும் அழுகையும் கண்ணீரும் மகிழ்ச்சியும் சிரிப்பும் ஒண்ணுதான்.

நான் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கற வேலையில இருந்தப்ப, ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆனா, பெரிய டவுன்லதான் அது வெளியாகும். அந்தப் படத்தைப் பார்க்க சைக்கிளை எடுத்துட்டுப் பல கி.மீ தூரம் போவேன். இப்ப ஓ.டி.டி-ல வர்றதால செல்போன்லகூட அந்தப் படத்தைப் பார்த்திடுறாங்க. மால்கள்ல சாதாரண மக்கள் படம் பார்க்க முடியறதில்ல.''

“வில்லனா நடிக்க மாட்டேன்!”

``இத்தனை வருஷ சினிமா வாழ்க்கை கத்துக்கொடுத்தது என்ன?’’

‘‘சினிமா ஒரு பவர்ஃபுல் மீடியா. அதுல நானும் இருக்கேன் என்பதே சாதனைதான். வருத்தம் என்னான்னா, ஆரம்பத்துல இருந்து எனக்கு பெரிய பேனர், பெரிய இயக்குநர், பெரிய செட்டப்னு அமையல. நம்பர் ஒன் புரொட்யூசர், நம்பர் ஒன் டைரக்டர்னு போகாமல் இருந்துட்டேன். ராஜா அண்ணே மியூசிக், கவுண்டமணியண்ணே - செந்தில் காமெடி நமக்கு ப்ளஸ்ஸா இருந்தது. ஆனா, புரொடக்‌ஷன் வலுவில்லாமப்போனதால, சரிவாகிடுச்சு.''

``ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு அரசியல்ல இருந்து ஒதுங்கிட்டீங்களா?’’

‘‘அதைப் பத்திப் பேசினா வேற ரூட்ல போயிடும். எனக்கு ஆக்ஸிடென்ட் ஆன பிறகும் தேறி, மறுபடியும் தயாராகிட்டேன். நடிக்கறேன். எனக்குத் தெரிஞ்ச தொழில், வந்துட்டேன். ஆனா, அரசியல் எனக்குத் தெரியாது.''

``இனி தொடர்ந்து நடிக்கற ஐடியா இருக்குதா?’’

‘‘இப்ப ‘சாமானியன்' படத்தைத் தொடர்ந்து படங்கள் பண்ற ஐடியா இருக்கு. ஹீரோவாகத்தான் பண்ணுவேன்னு சொல்ல மாட்டேன். ஹீரோவா யார் நடிச்சாலும் நான் பண்ண ரெடி. ஆனா, என் கதாபாத்திரம் கதை நாயகனா இருக்கணும். தாய்க்குலங்களுக்கும் அந்தக் கதாபாத்திரம் பிடிச்சிருக்கணும். அதே சமயம், வில்லனா நடிக்க மாட்டேன்.''