கட்டுரைகள்
Published:Updated:

“நான் பி.ஜே.பி ஆள் இல்லை!”

ரங்கராஜ் பாண்டே
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்கராஜ் பாண்டே

பாதியில கட் சொல்லிட்டுப் போன புதுச்சேரி முன்னாள் ஆளுநர் விரேந்திர கட்டாரியா. நம்மூர்ல பழ.கருப்பையா.

ரசியல்வாதிகளிடம் கேள்விகள் கேட்டு நெறியாளராகப் பிரபலமான ரங்கராஜ் பாண்டே இப்போது நடிகர் அவதாரம் எடுத்து மும்முரமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.பேட்டியின்போது எதிரில் அமர்ந்திருப்பவருக்குக் கிடுக்கிப்பிடி கேள்வி ரெடியானதும், சீட்டின் நுனிக்கு வரும் அதே உற்சாகத்துடன் ஆயத்தமான ரங்கராஜ் பாண்டேவிடம் சில கேள்விகளை முன்வைத்து உரையாடினேன்.

“முதல் படமே அஜித்துடன். அடுத்து முன்னணி ஹீரோ விஜய் சேதுபதியுடன். பாலிவுட் சான்ஸ் வேற வந்திருக்கு. ‘நடிகர்’ பாண்டேவின் சினிமா கிராப் வேகமெடுக்கிறதா?”

``சினிமா என்னுடைய கனவா இருந்ததில்லை. சினிமாவுல இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்கப் போறேன்னும் தெரியலை. இந்திப்படம் நம்மூர் சுசீந்திரன் டைரக்ட் செய்யற படம். வக்கீல், கலெக்டர் கேரக்டர்கள் மாதிரி அதுல ஏதாச்சும் ஒரு ரோல் இருக்கும். அதுக்குள்ள ‘நடிகர்’, `சினிமா கிராப்’னு பேசினா, காலங்காலமா நடிச்சிட்டிருக்கிறவங்கெல்லாம் ‘இதப் பார்றா’ன்னு பேசப் போறாங்க. அதனால நமக்குப் பரிச்சயமான சப்ஜெக்டுக்குப் போயிடலாமே?’’

“டிவியில இருக்கிற வரைக்கும் இருந்த பாண்டே முகம் இப்ப மாறிடுச்சுங்கிற பேச்சு மக்கள் மத்தியில கேட்குதே?”

‘` `இந்தக் கட்சி சரியில்லை, இந்தப்படம் சரியில்லை, இந்தப் பாலிசி சரியில்லை’ன்னு நாம விமர்சனம் செய்றோமே, அதுபோலத்தான் நம்மைப் பத்தி ஒரு முடிவுக்கு வர்ற உரிமையும் மக்களுக்கு இருக்கு. அதை நான் தப்பு சொல்ல மாட்டேன். அதேநேரம் ஒரு நிறுவனத்துல இருந்தவரைக்கும் பேசற வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டியிருந்தது. இப்ப தனியாளா இருக்கிறதால கொஞ்சம் உடைச்சுப் பேசறேன். அப்படிப் பேசறதால முகம் மாறிட்டதா நினைக்கிறாங்களோ என்னவோ?”

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே

“ஓப்பனாகவே பேசலாம். உங்களுக்குன்னு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கில்லையா?”

‘‘நீங்க பி.ஜே.பி ஆள்தானே’ன்னே கேளுங்க. எனக்குப் பிரச்னை இல்லை. முந்தாநாள் பி.ஜே.பி-யின் ஒரு நிலைப்பாட்டை விமர்சனம் செய்து பேசினேன். துக்ளக் ஆண்டு விழாவுல குருமூர்த்தி முன்னிலையிலேயே ‘மகாராஷ்டிராவுல ஆட்சியமைக்க பாரதிய ஜனதா செஞ்ச முயற்சிகளை விமர்சிச்சேன். என்னுடைய பாயின்ட் ஆப் வியூங்கிறது பிரச்னைகளின் அடிப்படையில மட்டுமே.’’

“தமிழகமே எதிர்க்கிற ’நீட்’டை நீங்க ஆதரிக்கிறீங்களே?”

“வரி கட்டறதுல இருந்த பல வழிகளை மாத்தி ஜி.எஸ்.டி-னு கொண்டு வந்த மாதிரிதான் `நீட்’டும். இது வர்றதுக்கு முன்னாடி இங்க எக்கச்சக்கமான நுழைவுத் தேர்வுகளை எழுதிட்டிருந்தோமே! `அது வேண்டாம்; ஒரே தேர்வை எழுதுங்க’ன்னு சொல்றாங்க. சில பசங்க தங்களை மாய்ச்சுக்கிட்டதுல எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்தது. சமூக அழுத்தமே அந்த மாணவர்களுடைய முடிவுக்குக் காரணம்னு சொல்வேன். சிலபஸ் பிரச்னைன்னா அதை மாத்தறதுக்குத்தான் முயற்சி செய்யணும். அதை விட்டுட்டுத் தற்கொலைதான் முடிவுன்னு போகக் கூடாது, விவசாயி தற்கொலை செய்தா ’விவசாயமே கூடாது’ன்னு சொல்ல முடியுமா, அதுபோலத்தான் இது.

இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கு. மருத்துவ இடம் கிடைக்கலைன்னு தற்கொலை செய்த அனிதாங்கிற மாணவியின் சீட் யாருக்குப் போயிருக்கு? அவங்களைவிட அதிக மார்க் எடுத்த அவங்க சமூகத்தைச் சார்ந்த இன்னொரு மாணவிக்குத்தான் போகுது. ‘நீட்’டினால் 69% இட ஒதுக்கீடு மாறலையே!’’

“அஜித்கூட நடிச்சிருக்கீங்க. மீடியாவை ஏன் அவாய்டு பண்றீங்கன்னு அவர்கிட்ட கேட்டீங்களா?”

“கேட்டேன். ‘நான் அவாய்டு பண்ணலை. நான்தான் மீடியாவை மதிக்கிறேன்’னு சொன்னார். அவருக்கு சோஷியல் மீடியா அக்கவுண்ட் இல்லைங்கிறார். `அறிக்கையாக மட்டுமே தர்றதால அஜித்தின் கருத்தை நீங்க பேப்பர், டிவி மூலமா மட்டுமே தெரிஞ்சுக்க முடியும்கிறதைத்தான் இப்படிச் சொல்றார்.”

“பேட்டியில் கோபித்துக்கொண்டு, இப்ப வரைக்கும் சமாதானம் ஆகாத தலைவர்?”

“பாதியில கட் சொல்லிட்டுப் போன புதுச்சேரி முன்னாள் ஆளுநர் விரேந்திர கட்டாரியா. நம்மூர்ல பழ.கருப்பையா.”

“சோனியா, ராகுலை யெல்லாம் பேட்டி எடுக்க மாட்டீங்களா?”

“பேட்டிங்கிறது தர்றவங்க முடிவு செய்றது. அவங்களுக்கு அரசியல், நேரமின்மைன்னு நூறு காரணங்கள் இருக்கும். கருணாநிதியைப் பேட்டிக்குக் கேட்டப்ப, ‘குரல் சரியாகட்டும்’னு சொன்னாங்க. ஜெயலலிதாவிடம் தொடர்ந்து இரண்டு முறை கேட்டப்ப ‘நாட் நவ்’னு சொல்லப்பட்டது.”

“வரும் சட்டசபைத் தேர்தல்ல ரஜினி கட்சி போட்டியிடும்னு நினைக்கிறீங்களா?”

“கட்சி தொடங்கப் பட்டா போட்டியிடும். நவம்பர்ல ஒரு தெளிவான முடிவு வரலாம்.”

“மோடியைப் பிடிக்குமா? எடப்பாடி பழனிசாமியைப் பிடிக்குமா?”

“ஸ்டாலின், நல்லகண்ணுவையும் பிடிக்கும்.”