``ஸ்ரீவில்லிபுத்தூர்ல தொடங்கிய பயணம் சினிமாவுக்கான பயணம் அல்ல. என் நண்பர்கள் பலர் அந்தக் கனவுல சென்னைக்கு வந்திருக்காங்க; வென்றிருக்கிறாங்க. ஆனால், நான் ஒரு பத்திரிகையாளனாக வரணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் என்னுடைய சிந்தனைகள், வேலைகள் எல்லாமே இருந்துச்சு. அப்படி ஓடிக்கிட்டு இருந்த நாள்களுக்கு இடையில வந்த வாய்ப்புதான் இது. கரும்பும் சாப்பிட கொடுத்து அதுக்குக் கூலியும் கொடுத்தா யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா?” என 'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துக்கு எதிராக வாதாடிய கதையைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார், ரங்கராஜ் பாண்டே.
உங்களுடைய இந்த வெள்ளித்திரை என்ட்ரியை உங்க குடும்பத்தினர், நண்பர்கள் எப்படிப் பார்க்குறாங்க?
”ஒரு கையில போன், ஒரு கையில நியூஸ் பேப்பர், முன்னாடி டிவினு உட்கார்ந்திருப்பேன். நிறைய நேரங்கள்ல அவங்க கேட்குற கேள்விக்கு ரொம்ப நேரம் கழிச்சுதான் என்கிட்ட இருந்து பதில் வரும். வேலையைப் பத்தி எதாவது யோசிச்சுக்கிட்டே இருப்பேன். இப்போ சினிமாவுல நடிக்கிறேன்னா, குழப்பமும் அக்கறை கலந்த பயமும் என் குடும்பத்தாருக்கு இருந்தது. ஆனா, நண்பர்கள், `மாப்ள சினிமாவுல நடிக்கிறான். அஜித்துக்கு எதிர்ல நிற்குறான். அஜித்கிட்ட பேசுனியா? உனக்கு நடிக்க வந்துச்சா?’னு ஜாலியா பேசி கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க. அவங்க எல்லோரும் செம ஹாப்பி.”
பள்ளிக் காலங்கள்ல நீங்க நடிச்ச நாடகத்துல ’சார் போஸ்ட்’ங்கிற வசனம்தான் முதல்ல பேசினேன்னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்க. ஆனா, இதுல பக்கம் பக்கமா வசனம் இருக்கு. அதை எப்படி சமாளிச்சீங்க?
``அது நான் முதல்ல பேசின வசனமல்ல; மொத்தமா பேசின வசனமே அது மட்டும்தான். அந்த நாடகத்துல போஸ்ட் மேன் கேரக்டர் கொடுத்தாங்க. இந்தப் படத்துல என் முதல் வசனமே ரொம்ப பெரிசு. நான் புதுப்பையன்னு டைரக்டர் கொஞ்சம்கூட இரக்கம் காட்டலை. சினிமாவோட அவுட்புட்டை மட்டும்தான் நம்ம பார்க்கிறோம். ஆனா, அதுக்கு அவங்கபடுற கஷ்டம் ரொம்ப ரொம்ப அதிகம். வசனத்தை மொத்தமா சொல்லணும், இப்படிதான் சொல்லணும், இப்போவே சொல்லணும்னு சொன்னாங்க. 'ஷோவுக்கு வரவங்களை கேள்வி கேட்டுட்டு ராஜா மாதிரி இருந்தோம். நம்மளை இப்படி கஷ்டப்படுத்துறாங்களே'னு நினைச்சேன். முதல்நாள் பட்ட அடி அடுத்தடுத்த நாள் தெளிவை கொடுத்துச்சு. வசனம் பேசி முடிச்சவுடனே கைத்தட்டல்லாம் கூட வாங்கினேன்.”
சத்தியமூர்த்திங்கிற கேரக்டருக்கு உங்களைத் தவிர யார் மிகச்சரியா இருந்திருப்பாங்கனு நினைக்கிறீங்க?
”என்னைத் தவிர யார் பண்ணியிருந்தாலும் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். தமிழ் சினிமாவுலேயே க்ளாஸான நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதுவும் இல்லைனா, கேரளா, ஆந்திரா, பாலிவுட்னு இறக்குமதி பண்ணியிருக்கலாம். ஆனா, இயக்குநர் இந்த விஷயத்துல பெரிய ரிஸ்க் எடுத்தார்னுதான் சொல்லணும். நான் 'நோ' சொல்லியிருந்தால் அந்த கேரக்டர்ல நடிக்க நூறு சாய்ஸ் இருக்கு. ஆனா, அவங்க எனக்கு ஏன் `யெஸ்' சொன்னாங்கன்னுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. எப்படியும் பெரிய ஆலோசனைக்குப் பிறகுதான் என்னை தேர்ந்தெடுத்து இருப்பாங்கனு நினைக்கிறேன். நான் எடுத்த ஒரு சில பேட்டிகளை போனி கபூர் பார்த்தார்னு வினோத் சொன்னார். அரசியல் சாயம் வந்திடுமோனு அஜித்தும் தீவிரமா யோசிச்சிருப்பார். அவங்க என் மேல வெச்சிருக்க நம்பிக்கை கெட்டுப்போகாத அளவுக்கு நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.”
அஜித்துக்கும் உங்களுக்குமான முதல் உரையாடல் என்ன?
”படத்துல கமிட்டாகி மூணு மாசமாகியும் அஜித்தை நேர்ல காட்டாமலே வெச்சிருந்தாங்க. ஒருவழியா அவரைப் பார்த்தவுடனே, ‘தல இப்போவாவது உங்களை கண்ணுல காட்டுனாங்களே! கடைசி வரைக்கும் உங்களை மறைச்சே வெச்சிருவாங்களோனு நினைச்சேன்’னு சொன்னேன். அதுக்கு சிரிச்சவர், 'நீங்க இந்தப் படத்துல நடிக்கிறது எங்களுக்கு சந்தோசம்’னு சொன்னார். அவர்கூட இருந்த இருபது நாள்கள் ரெண்டு பேரும் நிறைய பேசினோம். அவருடைய வேலையில ரொம்ப தெளிவா இருக்கார். சினிமா, அரசியல், ஊடகம்னு எல்லாத்தைப் பத்தியும் தெளிவான பார்வை இருக்கு.”
அந்தப் பொண்ணுங்ககிட்ட நேரடியாகவும் வெளிப்படையாகவும் கேள்விகளை கேட்கும்போது உங்களுக்கு தயக்கமா இருந்ததா?
``அவங்க முன்னாடி நடிக்கிறதுதான் தயக்கமா சிரமமா இருந்தது. மத்தபடி அந்த வசனங்கள் எல்லாம் சினிமாவுக்காகனு தெளிவா இருந்தேன். மொழியே தெரியாமல் பயங்கரமா நடிக்கிறாங்க, ஆண்ட்ரியா. எத்தனை முறை அழுற சீன் வந்தாலும் எத்தனை டேக் போனாலும் எல்லா முறையும் க்ளிசரின் இல்லாமல் அபிராமி அழுதது ஆச்சர்யமா இருந்தது. இதுக்கு முன்னாடி ஒருசில படங்கள்ல நடிச்சிருந்தாலும் ஷ்ரத்தாவுக்கு இந்தப் படம் பெரிய ப்ரேக் கொடுக்கும். அதே மாதிரி அந்த நாலு பசங்களும் பின்னியிருப்பாங்க. டிவியில என் பேட்டிகள் எல்லாம் பார்த்துட்டு நான் ரொம்ப சீரியஸான ஆள்னு நினைச்சிட்டாங்க. அதைப் புரிஞ்சுகிட்டு நான் அவங்களோட ரொம்ப நெருங்கிப் பழக ஆரம்பிச்சுட்டேன். என் வசனத்தை அவங்ககிட்ட பேசி சரியா இருக்கானு கேட்டுக்குவேன்.”
கோர்ட் சீன்கள்ல நீங்க ரெண்டு மாடுலேஷன்ல பேசுவீங்க. அதை எப்படி வினோத் கேட்டு வாங்கினார்?
``யார்கிட்டேயும் வினோத் இப்படி நடிங்கனு சொல்லவே இல்லை. பேசும்போது கரெக்ஷன்கள் சொல்லுவார்; அவ்ளோதான். எல்லோர்கிட்டேயும் படத்துடைய ஸ்கிரிப்ட் இருக்கும். அந்த ஸ்கிரிப்டை படிக்கும்போதே அந்த கேரக்டருடைய மனநிலையைப் புரிஞ்சுக்க முடியும். அப்போ அந்த மாடுலேஷன் தானாகவே வந்திடும். அஜித் பேசுற ’நிறைய நிறைய நிறைய’ வசனத்தை சத்தமா சொல்லுங்கனு வினோத் சொல்லவே இல்லை. அந்த ஸ்கிரிப்ட்லயே மாடுலேஷனும் நடிப்பும் கலந்து இருந்தது ரொம்ப உதவியா இருந்தது.”
சினிமா மட்டுமல்லாது பைக், கார், பிரியாணினு நிறைய விஷயங்கள்ல கவனம் செலுத்துறார். இது தொடர்பா உங்களுக்கும் அவருக்குமான உரையாடல் நடந்ததா?
``எல்லாரும் அஜித்தை ஒரு பிரியாணி மாஸ்டர் ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டு இருக்காங்க. அஜித் ஒரு நல்ல ரசிகர். சமையலை ரசிச்சு பண்ணக்கூடியவர். ஆளில்லா விமானம், ரைஃபில் ஷூட்டிங், போட்டோகிராஃபி இந்த மாதிரி தன்னை பிஸியாக வெச்சுக்கற விஷயத்துல சமையலும் ஒண்ணு. பிரியாணி மட்டுமல்ல நிறைய விஷயங்கள் பண்றார். அந்த சந்தோசத்தை நண்பர்களுடன் பகிர்ந்துக்கிறார், அவ்ளோதான். அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி உருவாக்கி வாய்ப்புத் தேடி கஷ்டப்படுறவங்களை வழிப்படுத்தணும்னு உறுதியா இருக்கார்.”
தொடர்ந்து சினிமாக்களில் உங்களைப் பார்க்கலாமா ?
” சில வருடங்களுக்கு முன்னாடி படத்துல நடிப்பீங்களானு கேட்டிருந்தால் இல்லைனு சொல்லியிருப்பேன். 'இன்னும் எத்தனை நாளுக்குதான் சினிமாக்காரர்களுக்கு விசில் அடிச்சுக்கிட்டே இருக்கப்போறீங்க'னு பல கல்லூரிகள்ல பேசியிருக்கேன். சினிமாவை என்னுடைய எதிர்காலமா எப்போவும் நான் நினைச்சதில்லை. இந்தப் பட வாய்ப்பு வந்தபோது தயங்கவுமில்லை. ஆறு போகிற போக்கில் போகிறவன் நான். ஆறு படங்களுக்கான வாய்ப்பு வந்தது. ஆனா, 'இந்தப் படம் வெளியான பிறகு உங்களை என்ன பண்ணலாம்னு மத்தவங்களுக்கும் உங்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும். அதுவரை எதுவும் கமிட் பண்ணாதிங்க'னு சொல்லி அட்வைஸ் பண்ணார், வினோத். நானும் இது என்னனு கத்துக்கிட்டு பொறுமையா போகலாம்னு நினைக்கிறேன்.”