
தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வரலாறு குறித்துத் திரைப்படமெடுக்க அறிமுக இயக்குநர் ரபீக் இஸ்மாயில் மேற்கொண்டிருப்பது நல்ல முயற்சி.
வர்க்க பேதங்களை ஒழிக்க ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்த அப்பு என்னும் நக்சல்பாரி இளைஞரையும் அவரை வேட்டையாடத் துடிக்கும் காவல்துறையையும் பற்றிய கதையே ‘ரத்தசாட்சி.'
தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற ஆயுதம் எடுக்கும் நக்சல்பாரி இளைஞரான அப்பு, கரும்புத்தோட்ட முதலாளி, சாராய வியாபாரி, கந்துவட்டிக்காரருக்கு எதிராகப் போராட்டங்களை மேற்கொள்கிறார். நக்சல்பாரிகளை ஒழிக்க அரசு தனிப்படை அமைத்துத் தேடுகிறது. தன்னால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று காவல்துறையிடம் சரணடைய முடிவெடுக்கும் அப்புவைக் காவல்துறை என்ன செய்தது என்பதை அரசியல் பிழைகளுடனும் அழுத்தமற்ற காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறது படம்.

அப்புவாக வரும் கண்ணாரவி, காவல்துறையைச் சேர்ந்த முருகேசனாக வரும் இளங்கோ குமரவேல் ஆகிய இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாக ஏற்று நடித்திருக்கின்றனர். மற்றவர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் இல்லை. ஜெகதீஷ் - ரவிச்சந்திரனின் கேமரா தர்மபுரி வறண்ட நிலப்பரப்பையும் ஆந்திரக் காட்டு எல்லையையும் அதனதன் இயல்புடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஜாவீத் ரியாஷின் இசை, போலீஸ் தேடல் மற்றும் மோதல் காட்சிகளுக்குத் துணைநின்றிருக்கிறது.
தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வரலாறு குறித்துத் திரைப்படமெடுக்க அறிமுக இயக்குநர் ரபீக் இஸ்மாயில் மேற்கொண்டிருப்பது நல்ல முயற்சி. ஆனால், நக்சல்பாரிகள் இயக்கம் குறித்த அடிப்படை அறிதலோ கள ஆய்வோ இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நம்பகத்தன்மையை இழந்துநிற்கின்றன. இழப்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியுடன் அரசியல் பணிபுரியும் நக்சல்பாரிகளை யானை வைத்திருப்பவர்களாகக் காட்டுவது, விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பால் விளைந்த கரும்புத்தோட்டத்தை நக்சல்பாரிகளே தீயிடுவது, மத்தியக் கமிட்டியின் தலைவர் பரம்பரை பணக்காரர், எல்லாக் கட்சிக்காரர்களுடனும் நெருக்கமுள்ள அரசியல் செல்வாக்கு உடையவர் என்று எதார்த்தத்துக்கு மாறான சித்திரிப்புகள் படம் முழுவதும்.

வெல்லப்பாகில் ஒரு பெண்ணை அமிழ்த்திக் கொல்லும் காட்சி, முதல்வர் காவல்துறை அதிகாரிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தை என்று ஒரு சில காட்சிகள் மனதில் பதிந்தாலும் செயற்கையான காட்சிகளே படத்தில் அதிகம். போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்க முடியாது என்று சொல்லும் இளங்கோ குமரவேல் ஏன் கடினமான கேம்ப் வேலையைத் தேர்வு செய்கிறார், எளிய மக்களையும் போராளிகளையும் வேட்டையாடுவதற்கு என்றே உள்ள கேம்ப் காவலரிடம் ‘‘காட்டுல ரொம்ப கஷ்டப்படறீங்கில்ல?’’ என்று சாவதற்கு முன் அப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன என்று ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.
முக்கியமான அரசியல் சினிமாவாக வந்திருக்க வேண்டிய படைப்பு, நம்பகமற்ற கதை, நாடகியக் காட்சிகள், எதார்த்தத்தை நழுவ விடும் வசனங்கள், நேர்த்தியற்ற திரைக்கதை ஆகியவற்றால் அரைவேக்காட்டு முயற்சியாய் மாறியிருக்கும் துயரத்தின் சாட்சியாகி இருக்கிறது.