Published:Updated:

கோபுர வாசலிலே: நவரச நாயகன், பிரியதர்ஷன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா - அப்பறம் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்!

கோபுர வாசலிலே

தமிழ் சினிமாவின் ‘க்யூட்டான’ ஹீரோக்களைப் பட்டியலிட்டால் கார்த்திக் அதில் நிச்சயம் இடம்பிடித்து விடுவார். இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளில் மிக அழகாகத் தோற்றமளிப்பார். இதைப் போலவே கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

Published:Updated:

கோபுர வாசலிலே: நவரச நாயகன், பிரியதர்ஷன், பி.சி.ஸ்ரீராம், இளையராஜா - அப்பறம் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்!

தமிழ் சினிமாவின் ‘க்யூட்டான’ ஹீரோக்களைப் பட்டியலிட்டால் கார்த்திக் அதில் நிச்சயம் இடம்பிடித்து விடுவார். இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளில் மிக அழகாகத் தோற்றமளிப்பார். இதைப் போலவே கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

கோபுர வாசலிலே
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘கோபுர வாசலிலே’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

கோபுர வாசலிலே – சமகால தலைமுறையினர்களில் சிலர், இந்தத் திரைப்படத்தைப் பற்றி இதன் அருமையான பாடல்களின் வழியாகக் கேள்விப்பட்டிருக்கக் கூடும். மற்றபடி 2கே கிட்ஸில் பெரும்பாலோனோர் இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பதில் நிச்சயமில்லை. இந்தப் படத்தில் அப்படியென்ன விசேஷம்? ஆம், இந்தப் படமே விசேஷமானதுதான்.
கோபுர வாசலிலே
கோபுர வாசலிலே

மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இடையேயான நகைச்சுவைப் பாணி என்பது கணிசமாக மாறுபட்டது. பொதுவாக மலையாளத்தில் நகைச்சுவைக் காட்சிகள் என்பது இனிமையான நறுமண வாசனை போல மென்மையானதாக, மெல்லியதாக இருக்கும். பார்ப்பவனை அழுத்தமாகப் புன்னகைக்க வைக்கும். வரிகளின் இடைவெளியில் புரிந்து கொண்டு சிரிக்க வைக்கும் நுட்பம் இருக்கும். தமிழ்த் திரைப்படங்களைப் போல் உரத்த குரலில் அலறாது. இன்னொருவனை பின்னால் உதைத்து வலுக்கட்டாயமாகச் சிரிப்பு மூட்ட முயற்சி செய்யாது.

இந்தத் திரைப்படமும் அப்படியொரு விநோதமான நகைச்சுவையைக் கொண்டதுதான். இதன் மேற்பரப்பில் நகைச்சுவை நுரைத்துக் கொண்டிருந்தாலும் அடிப்பரப்பில் இனம் தெரியாத சோகம் இயங்கிக் கொண்டிருக்கும். மூன்று நபர்கள் இணைந்து தங்களின் நண்பனைக் காதல் என்கிற பெயரில் அப்படி ஏமாற்றித் தள்ளுவார்கள். ஹீரோவை நினைத்து ‘அடப்பாவமே’ என்று நாம் அநியாயத்திற்குப் பரிதாபப்படும் அளவிற்குப் பல காட்சிகள் உண்டு.

‘நம்ம ஹீரோ ரொம்ப பாவம்’

கேரளத்தில் மெகா ஹிட் ஆன, `பாவம் பாவம் ராஜகுமாரன்’ என்கிற மலையாளத் திரைப்படம் மற்றும் `Chashme Buddoor' என்கிற இந்தித் திரைப்படம் ஆகிய இரு திரைப்படங்களின் துணைக் கதைகளைக் கொண்டு உருவான தமிழ் வடிவம்தான் ‘கோபுர வாசலிலே’. மலையாள எழுத்தாளர் பொற்றேக்காட்‌ எழுதிய சிறுகதைதான் இதன் அடிப்படை. இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்களுள் ஒருவரான ஸ்ரீனிவாசன் எழுத்தில், இயக்குநர் கமல் மலையாளத்தில் இயக்கிய திரைப்படம் அது.

‘கோபுர வாசலிலே’ திரைப்படத்தைச் சமகால தலைமுறையினர் கட்டாயம் பார்ப்பதற்கு சில பல காரணங்கள் உள்ளன. இவற்றில் பிரதான காரணம் இளையராஜா. ‘நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை’ என்கிற பாடல்வரியைப் போல இந்தத் திரைப்படத்தை இளையராஜாவைப் பிரித்துவிட்டு கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அனைத்துப் பாடல்களுமே தேன் சொட்டு... மன்னிக்க... தேனடை என்று சொல்லலாம். பாடல்களை எத்தனை முறை கேட்டாலும், ஆண்டுகள் கடந்தாலும் சலிக்கவே சலிக்காது. இதைப் போலவே பின்னணி இசையும். டைட்டில் கார்டில் இருந்தே ராஜாவின் ராஜாங்கம் துவங்கி விடும்.

கோபுர வாசலிலே
கோபுர வாசலிலே

இந்த ஆல்பத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. இதில் டாப் வரிசையில் எதை வைக்கலாம் என்று யோசித்தால் ‘தாலாட்டும் பூங்காற்று’ பாடலுக்கும் ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடலுக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிகழும். இரண்டுமே அப்படியான முத்தான பாடல்கள்.

குறிப்பாக ‘காதல் கவிதைகள்’ பாடலின் துவக்க இசையைக் கேட்ட அடுத்த கணமே உங்கள் மூளைக்குள் யாரோ ஏசி ஸ்விட்ச்சை ஆன் செய்தது போல ஜில்லென்று மாறும் மாயம் நிகழும். எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் சித்ராவும் இணைந்து இந்தப் பாடலை உன்னதமான அனுபவமாக மாற்றியிருப்பார்கள். எத்தனை போ் கவனித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இதன் கடைசி பல்லவியில், ‘இதயம் இடம் மாறும்’ என்கிற வரியின் முடிவில் ‘ம்...’ என்று பாலுவும் சித்ராவும் அடுத்தடுத்து சொல்வதைக் கேட்பதற்கு அத்தனை இனிமையாக இருக்கும். அதற்கு முன்பான பல்லவிகளில் இந்த ‘ம்' வராது. இதில் கூடுதலாக ஒரு தகவல் என்றால் ஆல்பத்தில் மட்டும்தான் இதைக் கேட்க முடியும். படத்தின் காட்சியில் வராது.

இளையராஜாவின் இசை ராஜாங்கம்

‘தாலாட்டும் பூங்காற்று’ என்கிற பாடலைக் கேட்கும் போது, நாம் குழந்தையாக மாறி கருவறைக்குள் சென்று விட்ட உணர்வு ஏற்படும். தனது குரலில் வெளிப்படும் அற்புதமான பாவத்தின் மூலம் கண்ணீரை வரவழைப்பார் எஸ்.ஜானகி. பாடல் முழுக்க குழலோசையின் இனிமையை வசீகரமாகப் புதைத்து வைத்திருப்பார் இளையராஜா. ‘எப்பொழுதும் உன் சொப்பனங்கள் / முப்பொழுதும் உன் கற்பனைகள் / சிந்தனையில் நம் சங்கமங்கள் / ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்...’ என்று வரிகளில் பின்னியிருப்பார் கவிஞர் வாலி. ‘தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது தம்பி’ என்கிற இன்னொரு பாடல் கேட்பதற்கே அத்தனை இனிமையாக இருக்கும். இந்தப் பாடலையும் வாலி எழுதியிருந்தார். இதர பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். எஸ்.ஜானகி மற்றும் ஜேசுதாஸ் பாடிய ‘நாதம் எழுந்ததடி’ என்பது செமி கிளாஸிக்கல் பாணியில் உருவான அருமையான பாடல்.

கோபுர வாசலிலே
கோபுர வாசலிலே

‘கேளடி என் பாவையே’ என்பது எஸ்.பி.பி. பாடிய இன்னொரு அற்புதமான பாடல். இதன் பாடல் காட்சியில் அக்கார்டியனை இசைத்துக் கொண்டே வந்து போவார் மோகன்லால். (இயக்குநரின் நட்பு கருதி). மனோவும் ஜானகியும் இணைந்து பாடிய ‘பிரியசகி’ காதல் பிரிவையும் துயரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல பாடல். ஆக மொத்தம், ஒரு வகையில் இந்தப் படத்தின் ஹீரோக்களில் இளையராஜா முக்கியமானவர் என்று சொல்லலாம்.

இதன் அடுத்த ஹீரோ சந்தேகமேயின்றி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இன்று பார்த்தாலும் கூட இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் புத்துணர்வுடனும் அழகியலுடனும் இருக்கும். அத்தனை அற்புதமான லைட்டிங்கில் வித்தியாசமான கோணங்களில் காட்சிகளைப் படமாக்கியிருப்பார் ஸ்ரீராம். கார்த்திக் ஷேவ் செய்யும் ஒரு டைட் க்ளோசப், கிணற்று ராட்டினம், சைக்கிள் சக்கரம், மும்பை கட்டடங்கள் என்று பல காட்சிகள் ஓவியம் போலவே இருக்கும். ஒரு விபத்துக் காட்சியும் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டிருக்கும்.

"அந்தப் பொண்ணு உன்னைத்தாம்ப்பா லவ் பண்ணுது..."

‘கோபுர வாசலிலே’ திரைப்படத்தின் கதை என்னவென்பதை – ஸ்பாய்லர் இல்லாமல் – சுருக்கமாகப் பார்த்து விடுவோம். ஒரு பள்ளியில் வயலின் இசை கற்றுத்தரும் ஆசிரியராக பணிபுரிபவர் கார்த்திக். அவருடைய வீட்டில் தங்கியிருக்கும் மூன்று நண்பர்கள் உண்டு. (நாசர், சார்லி, ஜூனியர் பாலையா). இவர்கள் கார்த்திக்கின் தயவில் வாழ்பவர்கள். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டு பெண்களிடம் வம்பிழுப்பவர்கள். இவர்களின் போக்கு பிடிக்காமல் அவ்வப்போது இவர்களை வீட்டை வெளியேறச் சொல்வது கார்த்திக்கின் வழக்கம்.

அந்த மூன்று நண்பர்களும் தாங்கள் விரும்பிய ஒரு பெண்ணிடம் (பானுப்ரியா) வலுக்கட்டாயமாகக் காதலைச் சொல்ல முற்பட, பெண்ணின் தந்தை (வி.கே.ராமசாமி) அவர்களை காவல்துறையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் நன்றாக உதை வாங்கி திரும்புபவர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார் கார்த்திக். கெஞ்சிக் கூத்தாடி அங்கேயே தங்கும் அவர்கள் கார்த்திக்கை விநோதமாகப் பழிவாங்கத் தீர்மானிக்கிறார்கள். அதற்குத் தோதாக ஒரு கலைநிகழ்ச்சியில் பானுப்ரியாவின் நடனத்தைப் பார்க்கும் கார்த்திக், அவர் மீது ஈர்ப்பு கொண்டு விட அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘பானுப்ரியா உன்னைக் காதலிக்கிறார்’ என்று பொய் சொல்லி, இருவரையும் சந்திக்க விடாமல் கடிதங்களின் மூலம் தூது போவது போல ஏமாற்றுகிறார்கள். இந்தச் சதிக்கு உடந்தையாக பிறகு வந்து சேருபவர் ஜனகராஜ்.

கோபுர வாசலிலே
கோபுர வாசலிலே
விளையாட்டும் வினையும் கலந்த இந்தத் தொடர் விளையாட்டால் கார்த்திக்கின் வாழ்க்கையே தலைகீழாகிறது. பிறகு என்னவானது என்பதைத் திகில் கலந்த க்ளைமாக்ஸின் மூலம் முடித்திருக்கிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.

ஒரு சஸ்பென்ஸ் கொக்கியுடன்தான் படம் துவங்கும். ஊட்டியில் இருக்கும் பானுப்ரியா, சென்னையில் இருக்கும் மூன்று நண்பர்களுக்கும் கடிதம் அனுப்பி வரச் சொல்வார். “கார்த்திக்தான் செத்துப் போயிட்டானே... இவ ஏன் வரச் சொல்றா?” என்று ஆவலும் திகைப்புமாகக் கிளம்புவார்கள். ரயில் பயணத்தின் வழியே பிளாஷ்பேக் காட்சிகள் ஆரம்பிக்கும். இறுதியில் ரயில் நிலையத்தில் இவர்களைத் துப்பாக்கியுடன் வரவேற்பவர் கார்த்திக்தான். ஏன்? அதற்கு நீங்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும்.

கார்த்திக் vs பானுப்பிரியா - சந்திக்காமல் ஒரு காதல்

தமிழ் சினிமாவின் ‘க்யூட்டான’ ஹீரோக்களைப் பட்டியலிட்டால் கார்த்திக் அதில் நிச்சயம் இடம்பிடித்து விடுவார். இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளில் மிக அழகாகத் தோற்றமளிப்பார். இதைப் போலவே கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. உண்மையும் பொய்யுமான கோபத்துடன் தன் நண்பர்களைக் கடிந்து கொள்வதாகட்டும், பானுப்ரியாவை முதன் முதலில் கண்டு தன்னிச்சையான ஈர்ப்பு கொள்வதாகட்டும், அவர் தன்னைக் காதலிக்கிறார் (?!) என்பதை நண்பர்களின் மூலம் அறிந்து பரவசம் அடைவதாகட்டும், நண்பர்களிடம் விதம் விதமாக ஏமாறுவதாகட்டும், பழைய காதலின் இழப்பை எண்ணி நெகிழ்வதாகட்டும், நண்பர்களின் துரோகத்தை அறியும் போது கதறுவதாகட்டும், அவர்களைப் பழிவாங்கும் காட்சியில் அசாதாரணமான கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும்... எனப் பல காட்சிகளில் கார்த்திக்கின் நடிப்பு சிறப்பாகப் பிரகாசிக்கும்.

‘தாலாட்டும் பூங்காற்று’ பாடலின் ஓரிடத்தில் காதலின் தவிப்புடன் கார்த்திக் பானுப்ரியாவைப் பார்க்கும் காட்சி ஒன்றுண்டு. தாயிடம் தன்னை தூக்கச் சொல்லி குழந்தை வெளிப்படுத்துவது மாதிரியான அற்புத முகபாவத்தைத் தந்திருப்பார். பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கார்த்திக்கின் துள்ளல் வேறு மாதிரியாக இருக்கும். அதற்கு எதிர்முனையில் க்ளைமாக்ஸில் இன்னொரு உக்கிரமான கார்த்திக்கைப் பார்க்க முடியும். கல்லூரி பிரின்ஸிபாலான நாகேஷூம் கார்த்திக்கும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்கத்தக்கவை. காதலி சொன்னாள் என்பதற்காக மீசையை எடுத்து விட்டு வந்து பஸ் ஸ்டாப்பில் கார்த்திக் அழகு காட்டும் காட்சி வேடிக்கையானது.

பானுப்பிரியா - கோபுர வாசலிலே
பானுப்பிரியா - கோபுர வாசலிலே

இந்தியச் சினிமாவின் பேரழகிகளுள் ஒருவர் பானுப்ரியா என்பதில் சந்தேகமில்லை. ஒரு காலத்தில் அவர் இல்லாமல் துணிக்கடை போஸ்டர்களோ, காலண்டர்களோ இருக்காது. அவற்றில் பரிபூரண லட்சணத்துடன் ஜொலிப்பார். அவருடைய கண்கள் மட்டுமே அத்தனை அழகு. ஆனால் அவர் தனது அழகைக் கூட்டிக் கொள்வதற்காகச் செய்து கொண்ட மூக்கு ஆபரேஷன், அவரது இயல்பான தோற்றத்தைக் குலைத்து விட்டதாகத் தோன்றுகிறது. பானுப்ரியா அழகி மட்டுமல்ல, நடிப்பிலும் சிறந்தவர் என்பதற்கு ‘அழகன்’ முதற்கொண்டு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

இந்தத் திரைப்படத்தில் பானுப்ரியாவிற்கு அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும் தனது பங்களிப்பைச் சிறப்பாகவே தந்திருப்பார். குறிப்பாகப் பாடல் காட்சிகளில் பிரமாதமாகத் தோற்றமளிப்பார். ‘தாலாட்டும் பூங்காற்று’ பாடலில் நம்மைத் தாலாட்டும் தேவதையாகவே உணர வைப்பார்.

நாசர் – சார்லி – ஜூனியர் பாலையா - ஜனகராஜ்

கார்த்திக்கின் மூன்று நண்பர்களாக நாசர், சார்லி, ஜூனியர் பாலையா ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள். ஒரு கேங் இருக்கிறதென்றால் அதில் லீடர் என்று ஒருவர் இருப்பார் அல்லவா? அப்படி இதில் நாசர்தான் லீடர். கார்த்திக், பானுப்ரியா, வி.கே.ராமசாமி ஆகிய மூவரையும் ஒன்றாகப் பழிவாங்குவதற்காகப் போடப்படும் பிளான்தான் ‘காதல்’ நாடகம். இயல்புத்தன்மையும் மெலிதான வில்லத்தனமும் கலந்த கலவையில் நாசர் பிரமாதமாக நடித்திருப்பார். சார்லியும் ஜூனியர் பாலையாவும் நகைச்சுவையைத் தாண்டி கார்த்திக்கின் மீது உள்ளார்ந்த வெறுப்பைக் காட்டுவார்கள். அவ்வப்போது இவர்களின் மனசாட்சி கேள்வி எழுப்பும் போது அதைத் தட்டி உள்ளே அனுப்புவதில் நாசர் ஜெயிப்பார்.

இந்தக் கூட்டுச்சதியில் கடைசியாக வந்து இணைபவர் ஜனகராஜ். பானுப்ரியா பணிபுரியும் அதே வங்கியில் இவரும் பணிபுரிபவர் என்பதால் கூட்டுச் சதியில் அவரைச் சேர்த்துக் கொள்வார்கள். இவர் முதன்முறையாக கார்த்திக்கைச் சந்திக்கும் போது செல்லம் கொஞ்சும் காட்சி இருக்கிறதே..?! ரகளையாக இருக்கும். காதலின் பெயரால் விஸ்கி பாட்டில், பேண்ட் சட்டை என்று பல பொருள்களை கார்த்திக்கிடமிருந்து லவட்டிக் கொள்வார்.

கோபுர வாசலிலே
கோபுர வாசலிலே

கல்லூரி முதல்வராகவும், மறதிக் குறைபாடு உள்ளவராகவும் நடித்திருக்கும் நாகேஷின் நகைச்சுவைக் கலாட்டா சிறப்பாக இருக்கும். “இங்க ரவுடித்தனம்லாம் பண்ணக்கூடாது...” என்று மாணவர்களை நோக்கிக் கத்தி விட்டு, அது கவனிக்கப்படாமல் போகும் போது வாயில் விரலை விட்டு அவர்களை விசிலடித்துக் கூப்பிடும் அந்த டைமிங் அட்டகாசம். வயதானவராக இருந்தாலும் பெண்களை ஈர்ப்பதில் வல்லவரான ‘கர்னல்’ வி.கே.ராமசாமியின் நகைச்சுவையும் சிறப்பு. நகைச்சுவையைப் போலவே உணர்ச்சிகரமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருப்பார் வி.கே.ராமசாமி. கார்த்திக்கின் ‘பிளாஷ்பேக்’ காதலியாக சுசித்ரா கஸ்தூரி என்கிற மலையாள நடிகை நடித்திருந்தார். ஒரு சிறிய காட்சியில் வங்கிக் கொள்ளையனாக வரும் ஹனீபா ‘கைப்புள்ள’ பாணியில் சில நிமிடங்களுக்குச் சிரிப்பு மூட்டுவார்.

பிரியதர்ஷனும் நகைச்சுவைத் திரைப்படங்களும்

இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்ட பிரியதர்ஷன் மலையாளத்திலும் இந்தியிலும் ஏராளமான நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்கள் ‘ஹிட்’ ஆகியுள்ளன. இவரது நகைச்சுவைப் பாணி தனித்துவமானது. மலையாளத்தில் மோகன்லாலுடன் அமைந்த இவரது கூட்டணி பெரும்பாலும் வெற்றி பெற்றது. நகைச்சுவையைத் தாண்டி ‘காலாபாணி’, ‘காஞ்சிவரம்’ போன்ற பீரியட் திரைப்படங்களையும் தீவிரமான தொனியில் இயக்கியுள்ளார்.

பிரியதர்ஷன்
பிரியதர்ஷன்
Andrew H. Walker

தமிழில் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘சின்னமணிக்குயிலே’. அது வெளிவராமல் போன காரணத்தினால் ‘கோபுர வாசலிலே’தான் இவரது முதல் தமிழ்த் திரைப்படமாகக் கருதப்படுகிறது. மலையாளம் மற்றும் இந்தியிலிருந்து இருந்து எடுத்தாண்ட துணைக்கதைகளை வைத்துக் கொண்டு ஓர் அருமையான தமிழ்ப்படத்தை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். சில பிசிறுகள் ஆங்காங்கே இருந்தாலும் தமிழின் திரைக்கதை அருமையாக எழுதப்பட்டிருக்கும். அதுவரையான அப்பாவி முகம் மாறி க்ளைமாக்ஸில் சீரியஸான கார்த்திக்கின் முகம் வெளிப்படுவது சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். உக்கிரமான க்ளைமாக்ஸின் இறுதியில் நிகழும் அந்த ‘டிவிஸ்ட்’ சுவாரசியமானது. கோகுல கிருஷ்ணாவின் வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் பலங்களில் ஒன்று.

இளையராஜாவின் அற்புதமான இசை, பி.சி.ஸ்ரீராமின் நேர்த்தியான ஒளிப்பதிவு, பிரியதர்ஷனின் இயல்பான இயக்கம், கார்த்திக்கின் பாந்தமான நடிப்பு, விநோதமான நகைச்சுவை போன்ற காரணங்களுக்காக இன்றளவும் மறக்க முடியாத, மறக்கக்கூடாத தமிழ்த் திரைப்படங்களுள் ஒன்று ‘கோபுர வாசலிலே’.