Published:Updated:

`விபரீத முடிவு... படத்தைக் கெடுத்துட்டே!'- பாண்டியராஜனும் `ஆண் பாவம்'மும் ஜெயித்த கதை தெரியுமா?

ஆண் பாவம்

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘ஆண் பாவம்’.

Published:Updated:

`விபரீத முடிவு... படத்தைக் கெடுத்துட்டே!'- பாண்டியராஜனும் `ஆண் பாவம்'மும் ஜெயித்த கதை தெரியுமா?

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘ஆண் பாவம்’.

ஆண் பாவம்
ஒரு சாதாரண சினிமா எப்படி பார்வையாளர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்று ‘சூப்பர் ஹிட்’ படைப்பாக மாறுகிறது என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. அந்த மாயத்தை திறமையான திரைக்கதை, இயக்குநர், நடிகர் முதற்கொண்டு பல தற்செயல் காரணிகளும் இணைந்து கூட்டாக தீர்மானிக்கின்றன.

ஒரு நல்ல வெகுசன சினிமா வெற்றி பெறுவதற்கு எத்தனை காரணங்கள் இருக்கின்றனவோ அதேயளவு காரணங்கள் தோற்றுப் போவதற்கும் உண்டு.

"‘இந்த சினிமா உறுதியாக வெற்றி பெறும்’ என்று ஒருவர் கணித்துச் சொல்லி அது தொடர்ச்சியாக உண்மையானால் அந்த ஆசாமிக்கு மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்து தமிழ் சினிமா வைத்துக் கொள்ளும்" என்று ஒருமுறை கூறினார் கமல்ஹாசன். ஒரு சினிமா வெற்றி பெறுவதை யூகிப்பது அத்தனை சிரமமானது என்கிற நோக்கில் கூறப்பட்ட இந்தக் கருத்து பெரும்பாலும் உண்மை.

ஆண் பாவம்
ஆண் பாவம்

‘ஆண் பாவம்’ திரைப்படத்தின் வெற்றி இப்படிப்பட்டது என்றுதான் கூற வேண்டும். இது காலப்போக்கில் இன்று ‘கிளாசிக்’ அந்தஸ்தைப் பெற்று விட்டது. படம் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும் இன்றும்கூட ‘என்னா படங்க அது’ என்று இளையராஜாவின் பின்னணி இசை முதற்கொண்டு அந்தத் திரைப்படத்தின் பல சிறப்பம்சங்களை நினைவுகூர்பவர்கள் உண்டு.

எந்தவொரு தமிழ் இயக்குநருக்கும் இரண்டாவது படத்தை ‘கண்டம்’ என்பார்கள். ஏனெனில் அந்த இயக்குநர் முதல் படத்தில் தனது அத்தனை திறமையையும் கொட்டியிருப்பார். அந்தப் படத்தின் பல அம்சங்களை நிறைய காலம் யோசித்து துளித் துளியாக சேகரித்து வைத்திருப்பார். எனவே அது உறுதியாக ‘ஹிட்’ ஆவதற்கு வாய்ப்புண்டு. அந்த வெற்றி அவருக்குப் பல தயாரிப்பாளர்களை தேடி வரச் செய்யும். அந்த மிதப்பில் அவசரம் அவசரமாக படத்தை ஒப்புக் கொண்டு பிறகு தடுமாறி விடுவார். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து பெரும்பாலான இயக்குநர்களுக்கு இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் தனது இரண்டாவது திரைப்படத்திலும் தடுமாறாமல் இருந்தது பாண்டியராஜின் சாதனை. உண்மையில் ‘ஆண் பாவம்’ திரைப்படத்தில் வலுவான கதையம்சம் என்று எதுவும் கிடையாது.

அண்ணனும் தம்பியும் தனித்தனியாக பெண்பார்க்கச் சென்ற இடத்தில் நிகழ்ந்த குழப்பமும் சிக்கலும்தான் ‘படித்தால் மட்டும் போதுமா’ (1962) திரைப்படத்தின் கதை. அதன் சாயல் ‘ஆண் பாவத்தில்’ உள்ளது. அது மட்டுமல்ல, பாண்டியராஜனின் குருநாதரான பாக்யராஜ் இயக்கிய ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் சாயலும் அதில் உள்ளது. முன்னணி நடிகர்கள் என்று பெரிதாக எவரும் இதில் இல்லை.

என்றாலும் இந்தப் படம் மகத்தான வெற்றி பெற்றதற்கு இதில் இருந்த வசீகரமான கலவைதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏன்... பாண்டியராஜனுக்கே இந்தத் திரைப்படத்தின் வெற்றி குறித்து துவக்கத்தில் கவலையும் குழப்பமும் இருந்திருக்கிறது. விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப் பார்த்து விட்டு முதலில் வெளியே வந்தவர், “நீயெல்லாம் ஏம்ப்பா நடிச்சு படத்தைக் கெடுத்திருக்கே” என்று பாண்டியராஜனிடம் சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்.

ஆண் பாவம்
ஆண் பாவம்

படம் வெளியான நாளில், பல்லாவரத்தில் இருந்த ஒரு அரங்கில் முதற்காட்சிக்கு பாண்டியராஜன் சென்ற போது அங்கும் இங்குமாக இருபது பேர்களே இருந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து மனம் நொந்த பாண்டியராஜன், வீட்டிற்குச் சென்று தன் அம்மாவின் மடியில் படுத்து, "நான் தோத்துப் போயிட்டம்மா” என்று வாய் விட்டு கதறி அழுதிருக்கிறார். ஆனால் மெல்ல மெல்ல இந்தப் படத்தின் வெற்றி விவரங்கள் இவருக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதே நாளில், அதே பல்லாவரம் அரங்கில், இரவுக்காட்சிக்கு படம் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆகியிருக்கிறது.

இதுதான் சினிமாவுலகம். ஒரே நாளில் ஒரு நபரை ஹீரோவாக்கவோ... அல்லது ஜீரோவாக்கவோ அதனால் முடியும். ஒரு சினிமாவின் வெற்றியை புரிந்து கொள்ளவோ, துல்லியமாக யூகிக்கவோ முடியாது என்பதற்கு ‘ஆண் பாவம்’ ஒரு நல்ல உதாரணம்.

வலுவான கதையோ, முன்னணி நடிகர்களோ இல்லையென்றாலும் இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு பிரதான காரணங்கள் இரண்டு என்று தோன்றுகிறது. ஒன்று, பாண்டியராஜன் திரைக்கதையை மிக இயல்பான நகைச்சுவையுடன் கையாண்ட விதம். ஏறத்தாழ குருநாதர் பாக்யராஜின் பாணியைப் பின்பற்றினாலும் பாண்டியராஜனின் தனித்தன்மையும் அதில் இருந்தது.

ஒரு காட்சியை உதாரணத்திற்குச் சொல்கிறேன். இந்தத் திரைப்படத்தில் வரும் காட்சியின்படி ரேவதிக்கு தலையில் அடிபட்டு பேசும் திறன் இழந்து ஊமையாகி விடுவார். மருத்துவமனையில் இவரைக் காண வி.கே.ராமசாமியும் அவரது அம்மாவான கொல்லங்குடி கருப்பாயியும் வருவார்கள். இருவரும் ரேவதியிடம் உருக்கமாக உடல்நலன் குறித்து விசாரிப்பார்கள்.

அப்போது ஒரு நர்ஸ் ரேவதிக்கு ஊசி போட வருவார். ஊசி என்றால் பாட்டிக்கு பயம். பெரும்பாலான கிராமத்து மனிதர்களுக்கு உள்ள பயம்தான் இது. ரேவதிக்கு ஊசி போடப்படுவதைக் காணச் சகிக்காமல் பாரதிராஜாவின் நாயகி போல கைகளால் முகத்தை மூடிக் கொள்வார் பாட்டி. என்றாலும் விரலிடுக்கில் என்ன நடக்கிறது என்பதை பதட்டத்துடன் பார்ப்பார். பார்ப்பதற்கு சிரிப்பை வரவழைக்கும் காட்சி இது. கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தித்தனத்தை பதிவு செய்த காட்சி.

கொல்லங்குடி கருப்பாயி
கொல்லங்குடி கருப்பாயி

உண்மையில் இந்தக் காட்சியை சென்டிமென்ட் உருக்கத்தோடு விட்டிருக்கலாம். ஆனால் அதற்கு இடையிலும் ஒரு நகைச்சுவை அம்சத்தைப் புகுத்தினார் பாண்டியராஜன். அதைத்தான் ஓர் இயக்குநரின் பிரத்யேக பாணி என்கிறேன். இந்த அம்சம் படம் முழுவதிலும் இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.

பல திரைப்படங்களில் பாண்டியராஜனின் தோற்றத்தையும் உடல்மொழியையும் பார்த்தால் ஒரு வீட்டின் கடைக்குட்டிச் சிறுவனின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். என்னதான் குறும்பு செய்தாலும் வீட்டின் கடைக்குட்டி மீது பொதுவாக எவரும் கோபம் கொள்ள மாட்டார்கள். வெளியே கோபமிருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளூற அந்தக் குறும்பை ரசிக்கவே செய்வார்கள். தமிழக மக்கள் பாண்டியராஜனை ஏற்றுக் கொண்டதற்கு இந்த அம்சம் ஒரு வலுவான காரணமாக இருக்கலாம்.

ஆண் பாவம் திரைப்படத்தில் பெரிய பாண்டியனாகவும் சின்ன பாண்டியனாகவும் நடித்திருக்கும் பாண்டியனும் பாண்டியராஜனும் எலி – பூனை போல சண்டை போட்டுக் கொண்டாலும் ஒரு பிரச்னை என்று வந்தால் ஒன்றாக நின்று கொள்வார்கள். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள்.

இப்படியாக அவர்களின் பாத்திர வடிவமைப்பை உருவாக்கிக் கொண்டதோடு பாண்டியராஜன் நிறுத்திக் கொள்ளவில்லை. இது அவர்களின் குடும்ப வழக்கம் என்பதையும் கூடவே நிறுவியிருப்பார். பாண்டியராஜனின் தந்தையான வி.கே.ராமசாமியும் ஜனகராஜூம் சகோதரர்கள். இவர்களுக்குள்ளும் மறைமுக சகோதரச் சண்டை இருக்கும். அண்ணன் சினிமா தியேட்டர் கட்டி ஊராரின் வரவேற்பைப் பெற்ற காரணத்தினால் தம்பி ஜனகராஜூம் ஹோட்டல் ஒன்றைத் திறந்து விட்டு வித விதமான காரணங்களால் படாத பாடு படுவார். இறுதியில் தன் மகனின் திருமணத்திற்கு ஜனகராஜை உரிமையோடு அழைக்க வி.கே.ஆர் வந்திருப்பார். ஆக... இந்த அண்ணன் – தம்பியின் செல்லச் சண்டைகள் அவர்களின் குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு என்பது திரைக்கதையின் போக்கில் வரும்.

ஆண் பாவம்
ஆண் பாவம்

‘அண்ணன் போட்ட கோடு... சாமி போட்ட கோடு... அதை மீற மாட்டேன்’ என்று கையைக் கட்டிக் கொண்டு தம்பிகள் பின்னால் நிற்பதை மிகையான சென்டிமென்ட்டோடு சித்திரித்த கே.எஸ்.ரவிக்குமார் டிராமாக்களை விடவும் இப்படியான இயல்பான டிராமாக்களில்தான் சுவாரஸ்யம் அதிகம்.

இப்படி திரைக்கதையின் பல்வேறு அம்சங்களை கவனமாக வடிவமைத்த காரணமும் ‘ஆண் பாவம்’ வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.

பாண்டியராஜனின் முதல் படமான ‘கன்னிராசி’தான் அவரின் இரண்டாவது படத்திற்கான விசிட்டிங் கார்டாக அமைந்திருக்கிறது. என்றாலும் அது பெரிய அதிர்ஷ்டமாக அமைந்து விடவில்லை. பாண்டியராஜனின் எளிமையான உருவமே அவருக்கு பல சமயங்களில் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இவர் தேடிக் கண்டுபிடித்த நாயகியான ‘சீதா’, பாண்டியராஜனின் உருவத்தைக் கண்டு ‘இவரா டைரக்டர்?” என்று சந்தேகப்பட்டிருக்கிறார். இதில் நடிக்க அவர் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ஒருவழியாக சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். முதிராத குணம் காரணமாக படப்பிடிப்பிலும் நிறைய உரசல்கள் நடந்திருக்கின்றன. ஆனால் படத்தின் இறுதி வடிவத்தை பார்த்தவுடன் “சார்... என்னை எவ்ளோ அழகா காண்பிச்சிருக்கீங்க... நடிக்க வெச்சிருக்கீங்க... அதுக்காக ரொம்ப போராடியிருக்கீங்க... இதையெல்லாம் புரிஞ்சுக்காம நான் உங்களுக்கு நிறைய தொந்தரவு தந்துட்டேன்” என்று நெகிழ்ந்திருக்கிறார் சீதா.

‘தன்னுடைய வேலையை அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஒழுங்காகவும் செய்தால் வெற்றி உத்தரவாதமாக தேடி வரும்’ என்பது பாண்டியராஜனின் அசைக்க முடியாத ஃபிலாசபி. இந்தப் படத்தில் இவர் துணை நாயகனாக நடிக்க வந்ததும் ஒரு தற்செயல் விபத்துதான். ‘தம்பி’ வேடத்தில் நடிக்க பல பேரை முயன்றும் பொருந்தாதால் படப்பிடிப்பிற்கான நாள் நெருங்கிய சமயத்தில் தானே நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

ஆண் பாவம்
ஆண் பாவம்
இவரது உதவியாளர்களே இந்த விபரீதமான முடிவை ஒப்புக் கொள்ளவில்லை. என்றாலும் படத்தின் முதற்கட்ட ரஷ்ஷை பார்த்த எடிட்டர், “உங்க நடிப்பு சின்ன பாக்யராஜ் போல சுவாரஸ்யமா இருக்கு. நல்லா டெவலப் பண்ணுங்க” என்று தொலைபேசியில் சொல்லியிருக்கிறார். பாண்டியராஜனுக்கு முதலில் கேட்ட நல்ல ‘அருள்வாக்கு’ அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

அண்ணனான பாண்டியன் தவறான முகவரியில் பெண் பார்க்கச் சென்றது ‘சீதா’வை. எனில் சரியான முகவரியில் ஒரு பெண் இருந்தாக வேண்டும் அல்லவா? அவரும் கதைக்குள் வந்தாக வேண்டும் இல்லையா? அந்தப் பாத்திரத்தை இடைவேளையில் அறிமுகப்படுத்துகிறார் பாண்டியராஜன். அதுதான் ரேவதியின் துள்ளலான பாத்திரம். அந்தச் சமயத்தில் மிகவும் ‘பிஸி’யாக இருந்த ரேவதி, இந்தப் படத்திற்காக ஐந்து நாள்களை மட்டுமே ஒதுக்க முடிந்தது.

அதை வைத்தே படத்தின் பிற்பாதி முழுவதும் ரேவதியின் பாத்திரம் வருவது போல் நிரவியிருக்கிறார் பாண்டியராஜன். இது அவரின் திரைக்கதை திறமைக்கும் சமயோசித அறிவிற்குமான சான்று. ஒரு கட்டத்தில் ரேவதி கிணற்றில் இருந்து விழும் காட்சி முடிந்ததும் அவர் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்படுவது முதல் அறுவைச் சிகிச்சை முடிவது வரையான காட்சிகளை ரேவதி இல்லாத சூழலிலேயே காண்பித்து சமாளித்திருக்கிறார் பாண்டியராஜன். ஆனால் படம் பார்க்கும் போது நம்மால் இதை பெரிதும் உணர முடியாது. இதுவும் சினிமா என்கிற மாயத்தின் ஒரு பகுதியே.

ரேவதிக்கும் குழந்தைகளுக்குமான கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக பதிவாகியிருக்கும். ‘என்னைப் பாடச் சொல்லாதே.. நான் கண்டபடி பாடிப்புடுவேன்’ என்கிற பாடலில் பிள்ளைகளின் பல்வேறு சுவாரஸ்யமான எகஸ்பிரஷன்களை கோத்து அந்தப் பாடலை சுவாரஸ்யமாக்கியிருப்பார்கள்.

ஆண் பாவம்
ஆண் பாவம்

அப்பா வீட்டில் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒழுங்குப் பெண்ணாக நடித்திருப்பார் ரேவதி. அப்பாவின் தலை மறைந்தவுடன் பிள்ளைகளுடன் இணைந்து சினிமா விஷயங்களைப் பற்றிப் பேசி கூத்தடிப்பார். ஒரு நிலையில் டான்ஸ் ஆடும் மும்முரத்தில் அப்பா வருவதை எவரும் கவனிக்க மாட்டார்கள். ரேவதி மாட்டிக் கொள்வார். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்கிற பழிமொழிகளை பிள்ளைகள் படிக்க.. பதற்றத்தில் அதை மாணவி போல திருப்பிச் சொல்வார் ரேவதி. ஆசிரியை சொல்லித் தந்து மாணவிகள் படிக்கும் விஷயம் இங்கு தலைகீழாகி விடும். ரேவதியின் குறும்புத்தனத்தால் வீடே தலைகீழாகி விட்டது என்பதை குறிப்பால் உணர்த்தும் காட்சி இது. இப்படி சின்ன சின்ன விஷயங்களில் அசத்தியிருப்பார் இயக்குநர் பாண்டியராஜன்.

தமிழக மக்களும் சினிமாவும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் காட்சிகள் ‘ஆண் பாவத்தில்’ உண்டு. படத்தின் ஆரம்பமே அப்படித்தான் அமைந்திருக்கும். ஒட்டுமொத்த ஊரே எதற்காகவோ பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். இதற்கான பில்டப் காட்சிகளை நன்றாக அமைத்திருப்பார் பாண்டியராஜன். பிறகுதான் தெரியும், அந்த ஊரில் திறக்கவிருக்கும் திரையரங்கிற்கான துவக்க விழா அது என்று. “நான் கோயில் கட்டினேன்... யாரும் கும்பிட வரலை. பள்ளிக்கூடம் கட்டினேன்... யாரும் படிக்க வரலை. ஆனா, சினிமா தியேட்டர் கட்டினேன்... என்னைக் கொண்டாடறீங்க” என்று வசனம் பேசுவார் விகே.ராமசாமி.

“அதுல பாருங்க.. “ என்று ஆரம்பித்து தன் வழக்கமான பாணியில் இழுத்து விகேஆர் பேசுவதே அத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். தன்னுடைய இரு மகன்களும் திருமணத்திற்காக ஆவலாதியாக பறக்கும் போது ‘அலையாறுனுவ’ என்று இவர் செல்லமாக கண்டிப்பது நகைச்சுவையான காட்சி. நகைச்சுவைக்கு ஈடாக உருக்கமான காட்சிகளிலும் நம்மை மெலிதாக கலங்க வைத்து விடுவார் விகேஆர்.

'அண்ணனுக்கு மட்டும் பெண் பார்க்கிறார்களே’ என்கிற காண்டில் தன் பாட்டியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று விளையாட்டாகச் சொல்வார் தம்பி பாண்டியராஜன். இதை அவரது அப்பா விகேஆர் கண்டிக்க, “எங்க அம்மாவை மட்டும் நீங்க கட்டிக்கலாம்... உங்க அம்மாவை நான் கட்டிக்கக் கூடாதா?” என்று கோக்குமாக்காக கேட்பார். இதுவொரு அபத்தமான கேள்வியாக தெரிந்தாலும் செயற்கையான திணிப்பாக இருந்தாலும் இந்த வசனத்தில் இருந்த ரைமிங் காரணமாகவும் படத்தில் இடம்பெற்ற டைமிங் காரணமாகவும் இன்றளவும் நினைவில் நிற்கக்கூடிய வசனமாக அமைந்து விட்டது.

ஆண் பாவம்
ஆண் பாவம்

ஓர் அற்புதமான சிறுகதைக்கு நிகரான விஷயமும் இந்தப் படத்தின் பின்னணியில் நிகழ்ந்திருக்கிறது. “உங்க பொண்ணுக்கு தலையில அடிபட்டு பேச்சு போயிடுச்சு" என்கிற தகவலை ஒரு மருத்துவர், ரேவதியின் அப்பாவான பூர்ணம் விஸ்வநாதனிடம் சொல்ல வேண்டும். இந்த சிறு வேடத்தில் தனது உதவியாளர்களில் ஒருவரான ‘தயாளன்’ என்பவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பாண்டியராஜன். தயாளனுக்கு காது கேட்காது.. வாய் பேசவும் வராது. பாண்டியராஜனின் உதட்டசைவுகளை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப வாய் அசைத்திருக்கிறார் தயாளன். பிறகு டப்பிங்கில் இன்னொருவரை பேச வைத்திருக்கிறார்கள்.

இதைப் படமாக பார்க்கும் போது தயாளனின் குடும்பத்தார் ஆனந்தத்தில் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். வாழ்நாள் முழுக்க வாய் பேச முடியாத ஒருவர். திரையில் ‘பேசியதைக்’ கண்ட மகிழ்ச்சி அது. இதுவும் சினிமாவின் மேஜிக்கில் ஒன்றே. இதை சமயோசிதமாக பயன்படுத்திய பாண்டியராஜனின் திறமையையும் நுண்ணுணர்வையும் பாராட்டியாக வேண்டும்.

எண்பதுகளில் படங்களை இயக்கிய பெரும்பாலான இயக்குநர்கள், தாங்கள் உருவாக்கிய காட்சிகள் மேம்படுவதற்கு ஒரு முக்கியமான கலைஞரையே பெரிதும் நம்பியிருந்தார்கள். அவரின் கால்ஷீட்டிற்காக தவம் கிடந்தார்கள். அவர் இளையராஜா. ஒரு சாதாரணக் காட்சியைக் கூட தனது அற்புதமான பின்னணி இசையின் மூலம் உயிர்ப்பித்து அதன் தரத்தை அதிகமாக உயர்த்தி விடுவார். ‘ஆண் பாவமும்’ இதற்கு விதிவிலக்கல்ல. இந்தத் திரைப்படத்தின் பல காட்சிகளின் வசீகரத்திற்கு காரணம் இளையராஜா.

குறிப்பாக பாண்டியன் – சீதா தொடர்பான காதல் காட்சிகளில் வரும் பல அபாரமான இசைத் துணுக்குகள் கேட்பதற்கு இன்றளவும் ரசிக்கக்கூடியது. பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளை, தன்னை உயரம் குறைவானவர் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காக காலை உயர்த்தி நிற்பார் சீதா. இந்தக் காட்சித் துண்டில் இளையராஜாவின் இசை அற்புதமாக அமைந்திருக்கும்.

ஒரு திரைப்படம் ஏறத்தாழ முழுதாக உருவாக்கப்பட்டு விட்ட பிறகு அதற்கான பாடல்களும், பின்னணி இசையும் பிறகு தயாரான படம் ‘ஆண் பாவம்’. இளையராஜாதான் தன் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கனவுடனும் லட்சியத்துடனும் இருந்த இயக்குநர்களில் ஒருவர் பாண்டியராஜன். ராஜா அப்போது மிகவும் பிஸியாக இருந்த காரணத்தினால் “நீ சூட்டிங் ஆரம்பிச்சுடு... பார்த்துக்கலாம்... நீ டப்பிங் போயிட்டு வந்துடு பார்த்துக்கலாம்" என்று தள்ளிப் போட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு மேல் தள்ளிப் போட முடியாத சூழலில் உருவானதுதான் இதன் பாடல்களும் பின்னணி இசையும். பணி சார்ந்த நெருக்கடிகளுக்கு இடையிலும் குறுகிய அவகாசத்திலும் காவியம் படைக்க முடியும் என்பதற்கான உதாரணம் இளையராஜாவின் இசை.

'இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்... இந்த சினிமாதான்', ‘காதல் கசக்குதய்யா', 'என்னைப் பாடச் சொல்லாதே'... ஆகிய துள்ளலிசைப் பாடல்களுக்கு இடையே ‘குயிலே... குயிலே... பூங்குயிலே’ என்கிற அற்புதமான மெலடியையும் தந்திருப்பார் ராஜா. வழக்கம் போல் இந்தப் பாடலின் இடையிசைகள் அற்புதமாக அமைந்திருக்கும்.

“பேராண்டி.. பேராண்டி.. “ என்று ஆரம்பித்து பிரத்யேக இழுவையுடன் நாட்டுப்புறப்பாடல்களை பாடும் கொல்லங்குடி கருப்பாயி இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களுள் முக்கியமானவர். தன் கணவரின் பெயரை நேரடியாக சொல்லாமல் பாட்டிலேயே மறைமுகமாக இவர் சொல்லும் அழகே அத்தனை சுவாரஸ்யம்.

சற்று கறாரான நோக்கில் பார்த்தால் ‘ஆண் பாவம்’ என்பது மிகச் சாதாரண கதையையும் உருவாக்கத்தையும் கொண்டது. ஆனால் இந்தத் திரைப்படத்தை இன்றளவும் மறக்க முடியாமல் ஆக்கியதற்கு இளையராஜாவின் இசையையும் பாண்டியராஜனின் இயல்பான நகைச்சுவைத் திறமையையும் முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் எடுத்த சமயத்தில் எழுந்த இடர்களை தனது சமயோசிதத்தால் பாண்டியராஜன் சமாளித்த கதைகளைக் கேட்டால் அதில் அத்தனை சுவாரஸ்யமான அனுபவங்களும் பாடங்களும் இருக்கின்றன.

ஆண் பாவம்
ஆண் பாவம்

பாண்டியராஜன் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர். “எலெக்ட்ரிக் டிரையின்ல வந்தா சைதாப்பேட்டைக்கும் கோடம்பாக்கத்துக்கும் இடையில ஒரு ஸ்டேஷன்தான் இருக்கு. ஆனா இந்த ஒரு ஸ்டேஷனைக் கடக்கறதுக்கே எனக்கு பத்து வருஷம் ஆயிடுச்சு” என்று சினிமாவில் தான் சேர்ந்த கதையை தன் பாணியில் சுவாரஸ்யமாகச் சொல்கிறார் பாண்டியராஜன்.

அவருடைய உழைப்பும் திறமையும் நன்கு பளிச்சிடும் படங்களில் ஒன்றாக ‘ஆண் பாவத்தை’ சொல்லலாம். ஒரு இயல்பான நகைச்சுவைப்படத்தை எப்படி உருவாக்குவது என்பதற்காக இளம் இயக்குநர்கள் கற்க வேண்டிய பாடம் இது. அந்தக் காலக்கட்டத்தின் பார்வையாளர்களால் இன்றளவும் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கிற ‘ஆண் பாவத்தை’ இளைய தலைமுறையினர் தவற விடவே கூடாது.

`ஆண் பாவம்' படம் குறித்த உங்களின் `நச்' விமர்சனத்தையும் அந்தப் படம் பார்த்த உங்களின் அனுபவத்தையும் கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.