Published:Updated:

புதிய பாதை: புது ரூட்டுப் போட்டுக்கொடுத்த படம்; தீயவனை ஹீரோவாக்கியும் வெற்றி பெற்ற பார்த்திபன்!

புதிய பாதை

படம் வெளிவந்த வருடத்தில், ‘சிறந்த திரைப்படத்திற்கான’ தேசிய விருதை ‘புதிய பாதை’ பெற்றது. ‘சிறந்த துணைநடிகை'க்கான விருதை மனோரமா பெற்றார். இது தவிர மாநில அரசின் விருதுகளையும் இந்தப் படம் வென்றது.

Published:Updated:

புதிய பாதை: புது ரூட்டுப் போட்டுக்கொடுத்த படம்; தீயவனை ஹீரோவாக்கியும் வெற்றி பெற்ற பார்த்திபன்!

படம் வெளிவந்த வருடத்தில், ‘சிறந்த திரைப்படத்திற்கான’ தேசிய விருதை ‘புதிய பாதை’ பெற்றது. ‘சிறந்த துணைநடிகை'க்கான விருதை மனோரமா பெற்றார். இது தவிர மாநில அரசின் விருதுகளையும் இந்தப் படம் வென்றது.

புதிய பாதை
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘ புதிய பாதை’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

சினிமாவை நேசிக்கும், சுவாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் இயக்குநர் பார்த்திபன். புதுமையின் சிந்தனையை தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் வித்தியாசமாக நிகழ்த்திக் காட்டத் துடிப்பவர். சமயங்களில் இது ‘ஓவர்டோஸாகி’ விடுகிறதோ என்று எண்ணுபவர்களும் உண்டு. ஒரேயொரு பாத்திரம் படம் முழுக்க நடிப்பது, சிங்கிள் ஷாட்டில் - அதுவும் நான்-லீனியர் பாணியில் - கதை சொல்லுவது என்று பல ‘வித்தியாசமான’ முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் பார்த்திபன். அடுத்ததாக விலங்குகளை மட்டுமே வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.

புதிய பாதை செல்லும் பார்த்திபன்
புதிய பாதை செல்லும் பார்த்திபன்

இது போன்ற புதிய முயற்சிகளை வரவேற்று வாழ்த்தி மகிழ்பவர்களும் உண்டு. மாறாக ‘ஒரு உத்தியை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கேற்ப ‘பரிசோதனை’ படம் எடுத்து பார்வையாளர்களாகிய எங்களைச் சோதனைக்கு ஆளாக்கலாமா?’ என்று கதறுபவர்களும் உண்டு. ஆனால் பார்த்திபனின் திறமையை எல்லாத் தரப்பினருமே ஏகமனதாக ஒப்புக் கொள்ளும் ஒரு திரைப்படம் ஒன்றுண்டு. அது அவரின் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த ‘புதிய பாதை’. யெஸ்... “அந்த பார்த்திபன் எங்களுக்குத் திரும்ப வேணும் சார்” என்று வேண்டுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

பார்த்திபனின் ‘புதிய பாதைக்கான’ ரூட் எப்படி அமைந்தது?

திரைப்படத்துறைக்குச் சம்பந்தமேயில்லாத சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்தான் பார்த்திபனுடையது. பார்த்திபனின் உறவினர் ஒரு சினிமா கம்பெனியில் டிரைவராகப் பணியாற்றினார். அதன் மூலம் படப்பிடிப்புகளை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு சிறுவன் பார்த்திபனுக்குக் கிடைத்தது. நடிகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கண்டு தானும் ஒரு நடிகனாகி விடும் ஆசை இளம் வயதிலேயே துளிர்த்துவிட்டது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு நடிகர் ராமதாஸ் நடத்திய நாடகக்குழுவில் இணைந்து சில மேடை நாடகங்களில் நடித்தார். ஆனால் அது சினிமாவிற்கான வாய்ப்பைத் தரவில்லை. ஆனால் வசன உச்சரிப்பில் பலமான அஸ்திவாரத்தைத் தந்தது. பிறகு பானுச்சந்தர் உள்ளிட்ட நடிகர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பணியாற்றினார், பார்த்திபன். என்றாலும் நடிகனாகும் ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது.

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்
இந்தச் சூழலில் பார்த்திபனுக்கு முன்னுதாரணமாக அவரது மனக்கண்ணில் பிரமாண்டமாக வந்து நின்றவர் பாக்யராஜ். பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த பாக்யராஜ் பிறகு ஹீரோவாகி சக்ஸஸ் அடைந்த அதே ரூட்டைத் தானும் பின்பற்ற விரும்பினார். பாக்யராஜிடம் உதவியாளராக இணைந்தார். உதவியாளராகப் பார்த்திபன் பணியாற்றிய முதல் திரைப்படம் ‘தாவணிக் கனவுகள்’. அதில் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

முதல் படத்திலேயே குருநாதர் பாக்யராஜின் நன்மதிப்பைப் பெற்றார் பார்த்திபன். நடிப்பதை விடவும் நடிகர்களிடம் வேலை வாங்கும் மதிப்பான ‘டைரக்ஷன் வேலை’யின் மீது பார்த்திபனின் ஆவல் அதிகமானது. ஒரு திரைப்படம் பணியாற்றி முடிந்த நிலையிலேயே பார்த்திபனுக்கு டைரக்ஷன் வாய்ப்பு சட்டென்று கிடைத்தது. ஆம், பாக்யராஜின் தயாரிப்பில் பார்த்திபன் திரைப்படம் இயக்கும் வாய்ப்பை ஒரு படத்தைக் கடந்தவுடனேயே பெற்று விட்டார். எனில் எந்த அளவிற்கு தன் திறமையின் மூலம் பாக்யராஜை பார்த்திபன் கவர்ந்திருப்பார் என்பதை நாம் யூகிக்கலாம்.

பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம் வந்து படப் பூஜையும் தடபுடலாக நடந்தது. ஆனால் படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் பார்த்திபனின் அத்தியாவசியமான தேவைகள் தயாரிப்பு நிர்வாகத்தால் மறுக்கப்பட்டன. ‘புது இயக்குநர்தானே?’ என்கிற அலட்சியத்தை பாக்யராஜை சுற்றியிருந்த நபர்கள் காட்டினார்கள். தனது குருநாதரிடம் சென்று புகார் சொல்லவும் இயலாத சூழல். இதனால் மனம் நொந்துபோன பார்த்திபன், ஒரு விலகல் கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்று விட்டார். பிறகு பார்த்திபனை அழைத்து வரச் சொன்ன பாக்யராஜ் மீண்டும் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். சில படங்கள் முடிந்த பிறகு, பாக்யராஜின் பட்டறையில் நன்கு தயாரான பார்த்திபன், அங்கிருந்து வெளியேறி முதல் திரைப்படத்திற்கான வாய்ப்பைத் தேடத் தொடங்கினார். அதுதான் ‘புதிய பாதை’.

புதிய பாதை
புதிய பாதை

ஒரு தயாரிப்பாளரின் வழியாக ‘கேள்விக்குறி’ என்கிற தலைப்புடன் இந்தப் படம் தொடங்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ மூன்றே நாள்களில் படப்பிடிப்பு நின்று விட்டது. பிறகு இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்தவர் தயாரிப்பாளர் சுந்தரம். இந்தக் கதையின் மீதும் பார்த்திபன் மீதும் அவருக்கு அப்படியொரு நம்பிக்கை. ‘தான் ஹீரோவாக நடிப்பதால்தான் இந்தப் படம் பிரச்சினைக்கு உள்ளாகிறதோ?’ என்று நினைத்தார் பார்த்திபன். எனவே அர்ஜுன், சத்யராஜ் போன்ற ஹீரோக்களிடம் இந்தக் கதையைச் சொல்லலாம் என்று உத்தேசித்தார். ஆனால் ‘பார்த்திபன் நடித்தால்தான் இந்தப் படத்தைத் தயாரிப்பேன்’ என்று உறுதியாகக் கூறினார் தயாரிப்பாளர். அவரது உறுதியான தீர்மானம் எத்தனை சிறந்த யூகம் என்பதைக் காலம் மெய்ப்பித்தது. ‘புதிய பாதை’ வெளியாகி அதன் சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்காகவே சூப்பர் ஹிட் அந்தஸ்தை அடைந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் பார்த்திபனை விட்டால் வேறு எவரையும் யோசிக்கவே முடியவில்லை.

முதல் படத்திலேயே சொல்லி அடித்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக வரிசையில் மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கருத்துடனும் உருவாக்கப்பட்ட சிறந்த திரைக்கதைகளை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் ‘புதிய பாதை’ இடம்பெறும். அந்த அளவிற்குக் காட்சிகள், சம்பவங்கள், பாத்திரங்கள், அவற்றிற்கு இடையான இணைப்புகள் என்று கட்டுக்கோப்பான கச்சிதமான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் பார்த்திபன். எந்தவொரு சிறந்த இயக்குநரும் தன்னுடைய முதல் திரைப்படத்தின் கதையை நீண்ட காலமாக மனதில் ஊறப்போட்டு அதன் ஒவ்வொரு பகுதியையும் திருத்தி, மாற்றி எழுதிக் கொண்டேயிருப்பார்கள். ஒரு பட்டுப்புடவையை நெய்வது போன்ற செய்நேர்த்தியான விஷயம் இது. அதிலும் பார்த்திபன் உருவாக்கியது, தாராளமான ஜரிகை போட்ட அசல் காஞ்சிபுர பட்டுப்புடவை.

"எந்தவொரு சூழலிலும் குழந்தைகள் அநாதைகளாகச் சாலையில் விடப்படக்கூடாது. அப்படி விடப்படும் குழந்தைகள் பசியில் கதறி, அல்லல்பட்டு பொறுக்கிகளாகவும் ரவுடிகளாகவும் மாறக்கூடும். அநாதை என்கிற சொல்லே அநாதையாகப் போக வேண்டும்!" என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். இந்தச் செய்தியை மிக வலுவாகவும் அழுத்தமாகவும் தன் திரைப்படத்தில் கடத்தியிருப்பார் பார்த்திபன்.
புதிய பாதை
புதிய பாதை

எத்தனை பெரிய ஆலமரமாக இருந்தாலும் அதன் விதை என்பது சிறியதாகத்தான் இருக்க வேண்டும். அது போல எத்தனை சிறந்த கதை, திரைக்கதையாக இருந்தாலும் அதன் ‘ஒன்லைன்’ என்பது முக்கியம். புதிய பாதை படத்தின் விதைக்கு ஒரு பழமொழிதான் காரணம் எனலாம். ‘எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்’ என்றொரு பழமொழி இருக்கிறது. சற்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்கிறவன் எத்தனை கொடூரமான மனதைக் கொண்டவனாக இருப்பான்?!

பார்த்திபனின் கேரக்டர் இந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது. படத்தின் துவக்கக் காட்சியிலேயே தன்னுடைய பாத்திரத்தை விதம் விதமான வழிகளில் வலிமையாக நிறுவிவிடுவார். சிகரெட்டிற்கு நெருப்பு கேட்டுப் பல மனிதர்களை இம்சை செய்யும் பார்த்திபன், கடைசியில் குடிசைகள் நெருப்பு பற்றி எரியும் இடத்தில் அதைப் பற்ற வைத்துக் கொள்வார். இப்படிப்பட்டவன் எப்படியிருப்பான்? காசுக்காக எதையும் செய்வான்... ஏன் அப்படிச் செய்கிறான்? அவனுடைய இளமையின் கசப்பான அனுபவங்கள். பசி, பட்டினி என்று ஆதரிக்க எவருமே இல்லாத நிலை. ஏன் அவன் அநாதையானான்? காசுக்காக அவன் செய்த ஒரு துர்விஷயம்தான் அவனுடைய வாழ்க்கையையே மாற்றுகிறது. அந்த ‘புதிய பாதை’ உருவாவதற்குக் காரணமாக இருக்கிறாள் ஒரு பெண்.

ஆக... குடிசை நெருப்பில் சிகரெட் பற்ற வைத்த சம்பவத்தை அப்படியே கோர்வையாக யோசித்துக் கொண்டு போனால் அதுவொரு சிறந்த கதையாக மாறும் மாயத்தைக் கவனியுங்கள். இந்தக் கதை சொல்லும் திறமைதான் பார்த்திபனுக்கு முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதைப் பெற்றுத் தந்த அடையாளமாக மாறியது.

சீதாராமனை உருவாக்கிய சீதா

பணத்திற்காக எதையும் செய்யும் தீயவன்தான் இந்தப் படத்தின் நாயகன். ‘அநாதை இல்லம்’ என்கிற பெயரில் இளம் பெண்களின் மானத்தை விற்பனை செய்யும் ஒரு பெண்ணைக் காவல்துறையில் பிடித்துக் கொடுக்கிறாள் நாயகி. சிறைக்குச் சென்றவள், நாயகியைப் பழிவாங்கும் உத்தேசத்துடன் ஹீரோவிற்குப் பணம் கொடுத்து அனுப்புகிறாள். நாயகியின் திருமண நாளன்று, தாலி கட்டும் சடங்கிற்கு முன்பாக அவளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறான் ஹீரோ. தன்னைக் கெடுத்தவனைத் தேடிச் சென்று அவனைத் திருத்தி அவனையே மணந்து கொள்கிறாள் நாயகி. ஆனால் அந்தப் பயணம் வேறு வழியில் திசை மாறுகிறது. பிறகு என்னவானது என்பதை விறுவிறுப்பும் சுவாரஸ்யமுமான திரைமொழியில் சொல்லியிருந்தார் பார்த்திபன். ‘இந்த உலகத்தில் அநாதையாக யாரும் அவதிப்படக்கூடாது’ என்கிற செய்திப் படம் பூராவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

பார்த்திபன், சீதா
பார்த்திபன், சீதா

பெண்களை மரியாதையாகவும் கண்ணியமாகவும் பேசுவதுதான் அதுவரையான ஹீரோக்களின் பொதுவான வழக்கம். ஆனால் இந்தத் திரைப்படத்தில் நாயகியை மட்டுமன்றி, அந்த ஏரியாவிலுள்ள அனைவரையுமே “இன்னாங்கடி, இன்னா... ரவுசு காட்றீங்களா..?” என்று துவங்கி ஏக வசனத்தில் பேசுவதுதான் ‘புதிய பாதை’ ஹீரோவின் ஸ்டைல். சில இடங்களில் இந்த வசனங்கள் முகஞ்சுளிக்க வைக்கும் வகையில் கூட இருந்தன. ஆனால் இந்தத் திரைப்படத்தை வெளிவந்த முதல் நாளன்று அரங்கில் பார்க்க நேர்ந்த போது பெண் பார்வையாளர்களிடமிருந்தும் கூட உற்சாகமான வரவேற்பு இருந்தது. ‘ஸ்வீட் ராஸ்கல்’ என்கிற மாதிரியான பிரியத்தைப் பார்த்திபனின் கதாபாத்திரம் சொல்ல வைத்துவிட்டது. படத்தின் முற்பகுதியில் பொறுக்கியாகப் பயங்கர அராஜகம் செய்தாலும் அதை ஈடுசெய்வது போல் பிற்பகுதியில் சமர்த்தான கணவன் ‘சீதாராமனாக’ உருமாற்றம் ஆகி பார்வையாளர்களின் பிரியத்தைச் சம்பாதித்துவிட்டார் பார்த்திபன்.

இந்தப் படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, சில கதாபாத்திரங்களுக்குப் பெயரே இருக்காது. அதுவரை பெயரே இல்லாமல் அடையாளமற்றுத் திரியும் நாயகனுக்கு ‘சீதாராமன்’ என்கிற பெயரை நாயகிதான் பிறகு சூட்டுவார். இதைப் போலவே நாசரின் கதாபாத்திரம் ‘தொகுதி’ எனவும், மனோரமாவின் பாத்திரம் ‘ஆயா’ என்றும்தான் படம் முழுவதும் அழைக்கப்படும்.

நடிகை சிநேகாவின் முந்தைய பதிப்பு போல லட்சணமான முகத்துடனும் நேர்த்தியாகக் கட்டப்பட்ட புடவையுடனும் நடித்திருந்தார் சீதா. ‘எதிர் வீட்டு ஜன்னல்’ என்கிற பெயரில் பார்த்திபனுக்குக் காதல் கடிதங்கள் எழுதி விட்டு ஓடி மறைவதும், அது வெளிப்பட்டவுடன் “நீதானே என்னைக் கெடுத்தே... அப்ப உன்னைத்தானே புருஷன்னுதானே சொல்ல முடியும்?!” என்று லாஜிக் சொல்லி மடக்குவதும் பிறகுத் தன் கணவனை தன் வழிக்குக் கொண்டு வருவதற்காகத் திட்டங்கள் தீட்டி, பின்னர் பிரியம் காட்டுவதும் எனத் தனது கதாபாத்திரத்திற்குச் சிறந்த நியாயம் செய்திருந்தார் சீதா.

புதிய பாதை
புதிய பாதை

சீதாவிற்கு ஆதரவாக நிற்கும் ‘ஆயா’வாகக் குணச்சித்திர பாத்திரத்தில் அசத்தியிருந்தார் மனோரமா. அரசியல்வாதி வில்லனாக நாசரும் அவரின் துணையாளாக வி.கே.ராமசாமியும் நன்றாக நடித்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண் என்பதை அறிந்தும் அவருக்கு வாழ்க்கைத் தரத் தயாராக இருக்கும் கண்ணியவான் டாக்டராக ஸ்ரீதர் நடித்திருந்தார். சில காட்சிகளே வந்திருந்தாலும் இவரது நடிப்பு இதமானது. சாவுப்படுக்கையில் இருக்கும் ஒரு முன்னாள் ரவுடியை பார்த்திபனுக்குச் சுட்டிக் காட்டி “இவரும் உன்னைப் போலத்தான் இருந்தாரு. இப்ப பார்த்துக்கறதுக்கு யாருமே இல்ல” என்று ஸ்ரீதர் அறிவுறுத்தும் காட்சி முக்கியமானது. சீதாவின் அன்பு மட்டுமல்லாமல், இந்தக் காட்சியும் பார்த்திபன் மனம் மாறுவதற்கு முக்கியமானதாக அமைந்திருந்தது.

‘அநாதை இல்லம்’ நடத்தும் அன்னபூரணியாக சத்யப்ரியா நடித்திருக்க, வெண்ணிற ஆடை மூர்த்தியும் ஜூனியர் பாலையாவும் சில காட்சிகளில் வந்து காமெடி செய்தார்கள். சீதாவிற்குத் துரோகம் செய்துவிட்டு பிறகு மனம் திருந்தும் சிறிய பாத்திரத்தில் இடிச்சபுளி செல்வராஜ் நடித்திருந்தார். ‘மகளுக்கு அம்மா வேண்டுமே’ என்கிற கரிசனத்தில் நான்காவது திருமணம் செய்து கொள்ளும் பாத்திரத்தில் சீதாவின் ஒரிஜினல் தந்தை மோகன்பாபுவே நடித்திருந்தார்.

‘புதிய பாதைக்கு’ இசையமைக்க மறுத்த இளையராஜா

தனது முதல் படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்கிற ஆசை பார்த்திபனுக்குள் இருந்தது. பார்த்திபன் என்றல்ல, இந்தக் காலகட்டத்தில் படம் இயக்கிய அனைத்து இளம் இயக்குநர்களுக்கும் ராஜாவின் இசையைப் பயன்படுத்துவதுதான் லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. பாக்யராஜிற்கும் இளையராஜாவிற்கும் இடையே சிறிய உரசல் இருந்த காலகட்டம் அது. எனவே அவரது சீடர்களுக்கும் படம் செய்ய உறுதியாக மறுத்துவிட்டார் இளையராஜா. எனவே வேறு வழியின்றி சந்திரபோஸின் இசையில் படத்தை உருவாக்கினார் பார்த்திபன். படம் வெற்றி பெற்ற பிறகு அடுத்த படத்திற்காக இளையராஜாவிடம் சென்றார் பார்த்திபன். “பாத்தியா... நான் இல்லைன்னாலும் உன்னால ஹிட் படம் கொடுக்க முடிஞ்சது. உன் மேல நம்பிக்கை வை” என்று சொன்னாராம் இளையராஜா.

புதிய பாதை இசை
புதிய பாதை இசை

ஒருவேளை இளையராஜாவின் இசையில் ‘புதிய பாதை’ உருவாகியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்தான். அதற்காக சந்திரபோஸின் இசையைk குறைத்து மதிப்பிட முடியாது. கதைக்குப் பொருத்தமான பாடல்களையும் இசையையும் உணர்வுபூர்வமாக உருவாக்கியிருந்தார் சந்திரபோஸ். ‘யாரைப் பத்தியும் இவனுக்குக் கவலையில்லே’ என்று டைட்டிலில் வரும் பாடலில் ஹீரோவைப் பற்றிய சித்திரம் அப்போதே நமக்குத் துல்லியமாகக் கிடைத்து விடும். தன்னுடைய பின்னணியை சுயபச்சாதாபத்துடன் ஹீரோ பாடும் ‘அப்பன் யாரு... அம்மா யாரு... நானும் பார்க்கல...” என்கிற பாடலை ஜேசுதாஸ் உருக்கத்துடன் பாடியிருக்க, குழந்தை குப்பைத்தொட்டியில் இருக்கும் கறுப்பு – வெள்ளைக் காட்சிகளை இணைத்துச் சிறப்பாக எடிட் செய்திருந்தார்கள். பார்வையாளர்களை நெகிழ வைக்கும் பாடல் இது. பார்த்திபனின் பாத்திரத்திற்கு அனுதாபத்தைச் சேர்க்கும் பாடல்.

‘கண்ணடிச்சா கல்லெடுப்பேன்’ என்கிற குத்துப்பாடலில் குயிலியோடு இணைந்து ஆடியிருப்பார் பார்த்திபன். இது வணிகக் காரணத்திற்காக என்பது அப்பட்டமாகவே தெரியும். தன் கணவனைக் குழந்தையாகப் பாவித்து ‘பச்சப்புள்ள அழுதிச்சின்னா’ என்று சீதா பாடும் பாடல் உருக்கமாக இருக்கும். இதை வாணி ஜெயராமும் எஸ்.பி.பியும் அருமையாகப் பாடியிருந்தார்கள். படத்தின் அனைத்து பாடல்களையும் உணர்ச்சிகரமான வரிகளுடன் பொருத்தமாக எழுதிக் கலங்கடித்திருந்தார் வைரமுத்து.

பார்த்திபன் - குருவை மிஞ்சிய சீடன்

'திரைக்கதை மன்னர்' என்கிற பட்டப்பெயர் பாக்யராஜிற்கு உண்டு. அவருடைய பாதையில் பயணித்து இந்தப் படம் முழுக்க விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து குருவிற்குப் பெருமை சேர்த்திருந்தார் பார்த்திபன். குழந்தைக்குப் பில்லை கட்டுவது போன்ற பாக்யராஜ் பாணி நகைச்சுவைக் காட்சிகள் சில இருந்தாலும் தன்னுடைய தனித்தன்மையைப் படம் முழுவதும் தடம் பதித்திருந்தார் பார்த்திபன். கதையின் மையத்திற்குப் பொருத்தமான வசனங்கள் பல இடங்களில் பளிச்சிட்டன. ‘இன்டர்வெல் பிளாக்’ அத்தனை ரகளையாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கும்.

புதிய பாதை
புதிய பாதை

பார்த்திபன் ஒதுங்கியிருக்கும் இடிந்து போன பாழடைந்த வீடே அந்தக் கேரக்டரின் தன்மையை விளக்குவதாக இருக்கும். அங்குக் காந்தியின் படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கும். “கோட்ஸே வீட்ல காந்தி எப்படி?” என்று கேட்பார் சீதா. “அது யாருன்னுல்லாம் நமக்குத் தெரியாது. சில அரசியல்வாதிங்க வந்து விழா கொண்டாடினாங்க. அப்புறம் படத்தை ‘அம்போ’ன்னு விட்டுட்டுப் போயிட்டாங்க. யாருன்னு விசாரிச்சா... 'காந்தி தாத்தா’ன்னு சொன்னாங்க. நமக்குத்தான் அப்பன் இல்லையே. தாத்தாவாவது இருக்கட்டுமேன்னு மாட்டிவிட்டேன்” என்பது போன்று பல இடங்களில் குறும்பும் ஆழமும் கொண்ட வசனங்களால் பிரமிப்பூட்டியிருந்தார் பார்த்திபன்.

திருமணமான பிறகுச் சற்று நெருக்கம் மிகுந்தவுடன் “நான் உன்னை ‘வாடா... போடா’ன்னு எத்தனையோ தடவை கூப்பிட்டிருக்கேன். நீ அப்படி என்னை ‘வாடி... போடி’ன்னு கூப்பிடலாமில்ல” என்று சீதா கேட்க “வாடின்னு வேணா கூப்பிடறேன்... ஆனா ‘போடி’ன்னு சொல்ல மாட்டேன்” என்று உருக்கத்துடன் பார்த்திபன் சொல்லும் வசனம் சிறப்பானது. “எதிர்த்த வீட்டு அம்மாவை டெய்லர் பொண்டாட்டின்னு சொல்வாங்க... பக்கத்து வீட்டு அம்மாவை போஸ்ட்மேன் பொண்டாட்டின்னு சொல்வாங்க... ஆனா என்னை மட்டும் ‘அடியாள் பொண்டாட்டின்னு சொல்றாங்க’ என்று பார்த்திபனின் தொழிலைச் சுட்டிக் காட்டி சீதா திருத்தும் இடம் அருமையானது. முன்பு பார்த்திபனைப் பார்த்தாலே சபித்து விட்டுப் போகும் அண்டை வீட்டுப் பெண்கள், பிறகு ஒரு விழாவிற்கு அவரை “அண்ணே" என்று அழைத்துக் கூப்பிடும் இடம் சிறப்பு. இப்படிப் பல காட்சிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

படத்தின் வில்லங்கமான விஷயம்

‘புதிய பாதையில்’ பல சிறப்பான அம்சங்கள் இருந்தாலும், படத்தின் மையப் புள்ளிகளில் ஒன்று வில்லங்கமாக இருக்கும். ‘ஒரு பெண்ணைக் கெடுத்தவனுக்கே அவளைத் திருமணம் செய்து வைப்பது, தன்னைச் சிதைத்தவனையே தேடிச் சென்று திருமணம் செய்து திருத்துவது போன்றவையெல்லாம் பழைமைவாத சிந்தனைகள். பெண்ணின் கற்பு அவளது உடலில் இருப்பதாகக் கருதும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவனைத் திருத்துவதுதான் பெண்களின் வேலையா?
புதிய பாதை
புதிய பாதை

எதிலும் புதுமையான சிந்தனையை விரும்பும் பார்த்திபன் எப்படி இதை யோசிக்காமல் விட்டார்? ஆனால் படத்தின் போக்கிலேயே இதற்கான பதிலையும் வசனத்தில் பார்த்திபன் சொல்லியிருந்தாலும் இந்த ஆட்சேபகரமான விஷயத்தைத் தாண்டிச் செல்ல இயலவில்லை.

படம் வெளிவந்த வருடத்தில், ‘சிறந்த திரைப்படத்திற்கான’ தேசிய விருதை ‘புதிய பாதை’ பெற்றது. ‘சிறந்த துணைநடிகை'க்கான விருதை மனோரமா பெற்றார். இது தவிர மாநில அரசின் விருதுகளையும் இந்தப் படம் வென்றது. அதையும் விட மக்களின் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பையும் இந்தப் படம் வென்றதற்குப் பார்த்திபனின் திறமைதான் ஆதாரமான காரணம் என்பதை மறுக்க முடியாது.

பார்த்திபன் பல புதுமையான திரைப்படங்களை உருவாக்கிக் கொள்ளட்டும். அவை வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் ‘புதிய பாதை’ போன்று ஒரு அழுத்தமான ஜனரஞ்சக திரைப்படத்தைப் பார்த்திபனிடமிருந்து மக்கள் மீண்டும் எதிர்பார்க்கிறார்கள் என்கிற விஷயத்தை அவர் புரிந்து கொண்டால் போதும்.