Published:Updated:

மூன்று முகம்: `எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!' ரஜினியை டாப் ஹீரோவாக்கிய அலெக்ஸ் பாண்டியன்!

மூன்று முகம்

"தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாதான் தீப்பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!" எத்தனையோ படங்களில் ரஜினி போலீஸ் ஆபிசராக நடித்திருந்தாலும், ஆரம்பக் காலத்தில் தோன்றிய ‘அலெக்ஸ் பாண்டியன்’ எப்போதுமே ஸ்பெஷல்தான்.

Published:Updated:

மூன்று முகம்: `எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!' ரஜினியை டாப் ஹீரோவாக்கிய அலெக்ஸ் பாண்டியன்!

"தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாதான் தீப்பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்!" எத்தனையோ படங்களில் ரஜினி போலீஸ் ஆபிசராக நடித்திருந்தாலும், ஆரம்பக் காலத்தில் தோன்றிய ‘அலெக்ஸ் பாண்டியன்’ எப்போதுமே ஸ்பெஷல்தான்.

மூன்று முகம்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `மூன்று முகம்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

ரஜினியை ‘முன்னணி ஹீரோ’ என்கிற அந்தஸ்திற்கு உயர்த்திய முக்கியமான படங்களுள் ஒன்று ‘மூன்று முகம்’. யெஸ். ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்கிற காவல்துறை அதிகாரி பாத்திரத்தில், கம்பீரமும் ஸ்டைலும் கலந்து ரஜினி நடித்த இந்த அட்டகாசமான கேரக்டரை எவராலும் மறக்க முடியாது. இதுதான் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். இயக்குநர் ஏ.ஜெகந்நாதனும் ரஜினியும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுவே. 1982-ல் வெளியான இந்தத் திரைப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றதோடு, இந்தியிலும் ரஜினியை வைத்து ரீமேக் செய்யப்பட்டது.
மூன்று முகம் இந்தி ரீமேக் - John Jani Janardhan
மூன்று முகம் இந்தி ரீமேக் - John Jani Janardhan

இதுவொரு பக்கா கமர்ஷியல் படம் என்றாலும் இரண்டு முக்கியமான காரணங்களுக்காக இதை நினைவுகூரலாம். ஒன்று, ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்கிற ரகளையான பாத்திரம். உடலைச் சற்று குறுக்கி, கண்களை மேலே சுழற்றி, தெனாவெட்டான நடையுடன் இந்தப் பாத்திரம் அறிமுகமாகும் போது, ரசிகர்களுக்கு நிச்சயம் அதுவொரு புல்லரிப்புத் தருணமாக அமைந்திருக்கும். வெளிவந்த காலத்தில் திரையரங்கம் ஆரவாரத்தில் நிறைந்திருக்கும் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இந்தப் பாத்திரத்திற்காக ஸ்பெஷல் விக் வைத்த ரஜினி, சிறப்பு பல்செட் பொருத்தி தன் முக அமைப்பை நீள் வாக்கில் மாற்றிக் கொண்டார்.

இரண்டாவது காரணம், மூன்று ரஜினி பாத்திரங்களையும் திரைக்கதையில் இயக்குநர் பொருத்திய விதம். கச்சிதமான இடங்களில், வெவ்வேறு இடைவெளிகளில் அந்தந்த பாத்திரங்கள் தோன்றினார்கள். உருவ ஒற்றுமையை வைத்து பாத்திரங்கள் ஆள்மாறாட்டம் செய்வதும் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருந்தது. மூன்று ரஜினிகள் இருந்தாலும் துளி குழப்பம் கூட வராத அளவுக்கு நேர்த்தியாகவும் எளிமையாகவும் திரைக்கதையை எழுதியிருந்தார் ஜெகந்நாதன். இதைப் போலவே மூன்று கேரக்டர்களுக்கும் வெவ்வேறு உடல்மொழியைப் பயன்படுத்தி, நடிப்பில் கணிசமான வித்தியாசம் காட்டியிருந்தார் ரஜினி. மறுபடியும் அதேதான். அலெக்ஸ் பாண்டியன்தான் இதில் டாப்.

போலீஸ் யூனிபார்ம் அணியாத முன்னணி ஹீரோக்களே இருக்க முடியாது. ஆனால் விஜயகாந்த் போன்று சிலருக்குத்தான் போலீஸ் வேடம் கச்சிதமாகப் பொருந்தும். இதுவரையான தமிழ் சினிமாவில் பல போலீஸ் ஹீரோக்கள் வந்திருந்தாலும் சில கேரக்டர்கள் மட்டுமே இன்றளவும் மக்களின் மனதில் நிற்கின்றன. ‘தங்கப் பதக்கம்’ சிவாஜி கணேசன் மாதிரி. இந்த வரிசையில் ரஜினிக்கு ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஒரு முக்கியமான கேரக்டர். பிற்காலத்தில் வந்த ஆறுச்சாமி, சிங்கம் போன்றவர்களுக்கு எல்லாம் அப்பன் இந்த அலெக்ஸ் பாண்டியன் என்றால் கூட மிகையாகாது.
மூன்று முகம்
மூன்று முகம்

அருண் – அலெக்ஸ் பாண்டியன் – ஜான் (மூன்று முகங்கள்)

அமெரிக்காவிலிருந்து திரும்பும் தன் மகனை வரவேற்க ஆவலாகக் காத்திருக்கிறார் தேங்காய் ஸ்ரீனிவாசன். ஆனால் அவனோ சாமியார் கோலத்தில் வருவதைப் பார்த்து திகைத்துப் போகிறார். அடம் பிடித்து ஆன்மிகப் பாதையில் செல்லும் அவனை நல்வழிப்படுத்தி சராசரி மனிதனாக்குவதற்காக ராதிகாவின் உதவியை நாடுகிறார். சில கிளுகிளுப்பு காட்சிகளுக்குப் பிறகு சாமியார் மனம் மாறி இயல்பான ஆசாமியாக மாறுகிறார். அதுதான் முதல் ரஜினியான அருண்.

அலுவலகத்திற்கு வந்து பொறுப்புகளை ஏற்கத் துவங்கும் அருண், சகாய மேரி என்னும் பெண்மணிக்குப் பல வருடங்களாக நிதியுதவி செல்வதைப் பார்க்கிறார். அதைத் தொடர்ந்து போகும் அருணுக்கு, தான் யார் என்கிற பின்னணி ரகசியம் தெரிகிறது. இதைத் தொடர்ந்து போலீஸ் ஆபிசர் அலெக்ஸ் பாண்டியனின் அறிமுகமும், பல நீண்ட காட்சிகளுக்குப் பிறகு ஜான் என்கிற இன்னொரு ரஜினியின் அறிமுகமும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.

அருணின் அந்தத் தேடல் பயணத்தில் என்னவெல்லாம் நடந்தது, மற்ற இரண்டு ரஜினிகள் யார் என்பதை கமர்சியல் மசாலா படங்களுக்கே உரியக் காட்சிகளுடன் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் ஜெகந்நாதன்.

சாமியாராக மாறிய ரஜினியைச் சம்சாரியாக்கும் ராதிகா

தந்தையின் மரணத்திற்கு மகன்(கள்) பழிவாங்கும் அதே மசாலா கதைதான் என்றாலும் மறுபிறவி, இறந்து போனவர் நீதிமன்றத்திற்குச் சாட்சி சொல்ல வரும் ட்விஸ்ட் போன்ற அம்சங்களை வைத்து காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தியிருந்தார் இயக்குநர்.
மூன்று முகம்
மூன்று முகம்

முதலில் வரும் ரஜினி, இயல்பான தோற்றத்திற்குப் பிறகு மாறினாலும் முதலில் சாமியார் தோற்றத்தில்தான் நமக்கு அறிமுகமாகிறார். ‘செக்ஸ் சாமியார்’ என்று சராசரி மக்களால் சொல்லப்பட்ட ரஜினீஷ்ஷின் (ஓஷோ) பாலியல் வாசனையுடன் கூடிய ஆன்மிக உபதேசங்கள் பொதுவெளியில் கிளுகிளுப்பாக உலவிக் கொண்டிருந்த நேரம் அது. அது மட்டுமில்லாமல் ‘நடிப்பிலிருந்து விலகி, சாமியாராகப் போகிறேன்’ என்று ரஜினியும் ஒரு சமயத்தில் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த அம்சங்களையெல்லாம் திரைக்கதையில் இயக்குநர் பொருத்தியிருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது. ரஜினீஷ்ஷின் சாயலில் உள்ள சாமியாராக சாருஹாசன் ஒரு காட்சியில் வந்து போனார்.

சாமியாரை ‘குடும்பஸ்தராக்க’ ராதிகா செய்யும் கிளுகிளுப்பான குறும்புகள் சற்று எல்லை மீறினாலும் ரசிக்க வைப்பதாக இருந்தன. ஆனாலும் அருணின் பெற்றோர்க்கு எதிரேயே ஜலக்கீரிடை நடப்பதெல்லாம் சற்று ஓவர்தான்.

‘இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்’

இதுவரை நகைச்சுவையாக நகர்கிற படம் ‘அலெக்ஸ் பாண்டியனின்’ என்டரிக்குப் பிறகு தீப்பிடித்தது போல் மாறுகிறது. யெஸ். அதேதான். ‘தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினாதான் தீப்பிடிக்கும். இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும்’ என்பது போன்ற அனல் பறக்கிற பன்ச் வசனங்களை எழுதியிருந்தார் பீட்டர் செல்வகுமார். கதையை எழுதியவரும் இவரே.

நேர்மையான மற்றும் வீரமான காவல் அதிகாரியாகவும் இன்னொரு பக்கம் தன் அன்பு மனைவியை நேசிக்கிற கணவனாகவும் அலெக்ஸ் பாண்டியனின் நடிப்பும் உடல்மொழியும் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தின் மிகக் கவர்ச்சிகரமான அம்சமே, இந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’தான். வலுவான வில்லன் இருந்தால்தான் ஹீரோயிஸம் எடுபடும். பலவீனமான வில்லனை வைத்துக் கொண்டு ஹீரோ என்ன பன்ச் பேசினாலும் அது வீண்தான். அந்த வகையில் அலெக்ஸ் பாண்டியனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பாக வில்லத்தனம் செய்திருந்தார் செந்தாமரை. ‘என் பேரு ஏகாம்பரங்க’ என்று இளித்துக் கொண்டே இவர் அறிமுகமாகும் காட்சி முதல் ‘ஆம்பர்நாத்’ ஆக மாறி கோட், சூட் போடும் செல்வந்தராகக் காட்சியளிப்பது வரைக்கும் இவரது பங்களிப்பு நன்றாக இருந்தது.

மூன்று முகம்
மூன்று முகம்

செந்தாமரையின் மெயின் அடியாளாக சங்கிலி முருகன் விறைத்த கண்களுடன் வந்து புரூஸ்லி படங்களை நினைவுபடுத்துவது போல கைகளில் கத்தியைச் செருகிக் கொண்டு சண்டைக்காட்சிகளில் நடித்தார். ஆரம்பக்கால சத்யராஜையும் இதில் பார்க்க முடிந்தது. பின்வரிசை அடியாளாக ஓரமாக வந்து போனார். அலெக்ஸ் பாண்டியனின் மனைவியாக ராஜலட்சுமியின் நடிப்பும் தேவைக்கேற்ப அமைந்திருந்தது.

ஜான் என்கிற மூன்றாவது ரஜினி

படத்தின் பிற்பகுதியில் அறிமுகமாகிற மூன்றாவது ரஜினிதான் ‘ஜான்’. சற்று நளினம் கலந்த ரவுடி பாத்திரம். காந்திமதி நடத்தும் சாராயக்கடையில் இவர் செய்யும் அலப்பறையுடன் நமக்கு அறிமுகமாவார். பிறகு செந்தாமரையே பார்த்து வியக்குமளவிற்கு அவருடன் கூட்டணி அமைத்து வில்லத்தனம் செய்வார். நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி சொல்ல ‘அலெக்ஸ் பாண்டியனின்’ ஒப்பனையுடன் இவர் நுழையும் காட்சி அதகளமாக இருக்கும். (ஆனால் இந்த கேரக்டர் எப்படி அத்தனை ஸ்டைலாக ஆங்கிலம் பேசுகிறது என்றெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாது!). இதே போல் அருண் கேரக்டர், ஜானாக மாறிச் செல்லும் காட்சியும் சுவாரஸ்யம்.

அருணை மயக்கும் கவர்ச்சியான பாத்திரத்தில் ‘சில்க்’ ஸ்மிதா நடித்திருந்தார். இந்த நோக்கில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் காட்சிகளைத் தவிர, ராதிகாவிற்கும் சில்க்-க்கிற்கும் இடையில் சண்டைக்காட்சிகளையும் வைத்து கலவரப்படுத்தியிருந்தார் இயக்குநர். அருணின் தந்தையாக நடித்திருந்த தேங்காய் ஸ்ரீனிவாசன், தன்னுடைய பிரத்யேகமான மாடுலேஷன் வசனத்தால் ஆங்காங்கே சிரிப்பூட்ட முயன்றார். வி.கோபாலகிருஷ்ணன் எத்தனை படங்களில் கமிஷனராக வந்திருக்கிறார் என்று ஒரு போட்டியே வைத்து விடலாம்.

மூன்று முகம்
மூன்று முகம்

‘தேவாமிர்தம் ஜீவாமிர்தம் பெண்தான்’

இந்தப் படத்திற்கு சங்கர் – கணேஷ் இசையமைத்திருந்தார்கள். எம்.எஸ்.வி – ராமமூர்த்தியிடம் உதவியாளர்களாக இருந்த இவர்கள், ஏராளமான படங்களில் பணிபுரிந்துள்ளார்கள். திரையிசைத் துறையில் நல்ல அனுபவமுள்ள இந்தக் கூட்டணி, அருமையான பல பாடல்களைத் தந்துள்ளது. இதர மொழிகளில் உள்ள சிறந்த பாடல்களிலிருந்து தூண்டுதல் பெற்றும் உருவாக்கினார்கள். போலவே நல்ல மெட்டுக்களை அப்படியே நகலெடுக்கவும் இவர்கள் தயங்கியதில்லை.

இந்திய அளவில் சிறந்த பாடகிகளைக் கணக்கில் எடுத்தால் அதில் வாணி ஜெயராம் நிச்சயம் இடம்பெறுவார். பல மொழிகள் அறிந்தவர். துல்லியமான உச்சரிப்பில் பாடக்கூடியவர். வாணி ஜெயராமை அதிகம் பயன்படுத்திய இசையமைப்பாளர்களுள் சங்கர் – கணேஷ் முக்கியமானவர்கள். ‘மூன்று முகம்’ திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இருக்கின்றன.

‘தேவாமிர்தம் ஜீவாமிர்தம்’ என்கிற அட்டகாசமான பாடலில் ஆர்.டி.பர்மனின் பாணியை உணர முடியும். எஸ்.பி.பியும் வாணி ஜெயராமும் இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருந்தார்கள். ‘இகம் பரம் சுகமாகலாம், இதழ் தரும் இனிய மதுவில்’ என்று வாலி எழுதிய வரிகளைக் கேட்டால் நிஜ சாமியார்களுக்கே சற்று சலனம் வரலாம். ‘ஆசையுள்ள ரோசக்கார மாமா’ என்கிற வாணி ஜெயராம் பாடிய பாடலை எழுதியவர் முத்துராமலிங்கம். ‘நான் செய்த குறும்பு’ பாடலில் தந்தையாகப் போகும் ஒருவனின் குதூகலத்தைத் திறமையான வரிகளின் மூலம் பதிவு செய்திருந்தார் வைரமுத்து. இந்தப் பாடலின் தாளக்கட்டு மாறி மாறி பயணிக்கும் விதமும், எஸ்.பி.பி அதைப் பாடிய விதமும் அட்டகாசமாக இருக்கும். ‘எத்தனையோ பொட்டப்புள்ள’ என்கிற குத்துப்பாடலை மலேசியா வாசுதேவனும் எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள்.

மூன்று முகம்
மூன்று முகம்
இந்தப் படத்திற்காக, தமிழக அரசின் ‘சிறந்த நடிகர்’ என்னும் சிறப்பு விருதை ரஜினி பெற்றார். பிறகு எத்தனையோ படங்களில் ரஜினி போலீஸ் ஆபிசராக நடித்திருந்தாலும், ஆரம்பக் காலத்தில் தோன்றிய ‘அலெக்ஸ் பாண்டியன்’ எப்போதுமே ஸ்பெஷல்தான். ரஜினியின் நடிப்பு, சுவாரஸ்யமான திரைக்கதை போன்ற காரணங்களுக்காக ஜனரஞ்சகமான அம்சங்கள் நிறைந்த இந்தப்படத்தை இன்றும் கூட கண்டுகளிக்கலாம்.