Published:Updated:

இணைந்த கைகள்: ஆபாவாணனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் சினிமா - அதிலும் அந்த `மாஸ்' இன்டர்வெல் பிளாக்!

இணைந்த கைகள்

'இணைந்த கைகள்' இன்டர்வெல் காட்சி வருகிற போது பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளைத் தட்டி ஆர்ப்பரிப்பார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ‘இடைவேளை’க் காட்சிகளைக் கணக்கில் எடுத்தால் அதில் ‘இணைந்த கைகள்’ நிச்சயம் இடம்பெறும்.

Published:Updated:

இணைந்த கைகள்: ஆபாவாணனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் சினிமா - அதிலும் அந்த `மாஸ்' இன்டர்வெல் பிளாக்!

'இணைந்த கைகள்' இன்டர்வெல் காட்சி வருகிற போது பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளைத் தட்டி ஆர்ப்பரிப்பார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த ‘இடைவேளை’க் காட்சிகளைக் கணக்கில் எடுத்தால் அதில் ‘இணைந்த கைகள்’ நிச்சயம் இடம்பெறும்.

இணைந்த கைகள்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘இணைந்த கைகள்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

தற்போது பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் தமிழ்ப் படங்களின் முன்னோடி 1948-ல் வெளியான ‘சந்திரலேகா’. அதன் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், சிவந்த மண் என்று பல ‘மெகா பட்ஜெட்’ திரைப்படங்கள் வந்தன. இவற்றில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடியை நாட்டிய படங்களும் உண்டு. எதிர்பார்த்த அளவிற்கான உயரத்தை எட்டாத படங்களும் உண்டு.

ஆபாவாணன் - பிரமாண்ட திரைப்படங்களின் முன்னோடி

பிறகுச் சற்று ஓய்ந்து போன இந்த டிரெண்டை, தொண்ணூறுகளில் மீண்டும் வெற்றிகரமாக உருவாக்கியவர் என்று ஆபாவாணனைச் சொல்லலாம். பின்னால் வந்த ஷங்கர், ராஜமௌலி போன்றோருக்கு முன்னோடி இவரே. ‘புலன் விசாரணை’ திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையில் இவரைப் பற்றி விரிவாகப் பார்த்திருக்கிறோம். சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களாலும் வெற்றிகரமான வணிகத் திரைப்படங்களை உருவாக்கிக் காட்ட முடியும் என்பதை நிரூபித்தவர் ஆபாவாணன். ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே என்று வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர். 70 MM என்கிற ‘அகன்ற திரைக்கு’ மறுவாழ்வு கொடுத்தவர், தமிழ் சினிமாவின் வணிகத்தை ‘இன்டர்நேஷனல் ஏரியா’விற்கு விஸ்தரித்தவர் என்கிற பல பெருமைகள் இவருக்கு உண்டு.

ஆபாவாணன்
ஆபாவாணன்

‘ஆர்ட் படங்களை மட்டும்தான் பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களால் எடுக்க முடியும்’ என்று தமிழ் சினிமாத்துறை அலட்சியமாகக் கருதிக் கொண்டிருந்த காரணத்தினாலேயே கமர்ஷியல் படங்களைத் தயாரிக்க முன்வந்தார் ஆபாவாணன். அதில் ஜெயித்தும் காட்டினார். ஆனால் அவர் தயாரிப்பில் வெளிவந்த மூன்று திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணம் ‘விஜயகாந்த்’ மட்டுமே என்பது மாதிரியான பேச்சு உலவியது. ‘ஓகே... இதையும் தாண்டி வருவோம்’ என்று முடிவெடுத்த ஆபாவாணன், அப்போது வளர்ந்து கொண்டிருந்த இளம் ஹீரோக்களான ராம்கி, அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் வைத்து உருவாக்கிய மெகா பட்ஜெட் படம்தான் ‘இணைந்த கைகள்’. இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

படத்தின் ‘ஒன்லைன்’ ரொம்ப முக்கியம் குமாரு!

அது எத்தனை பிரமாண்டமான படமாக இருந்தாலும், அதில் நிறையக் கிளைக்கதைகள், பாடல்கள், ஆக்ஷன் காட்சிகள், காமெடி இருந்தாலும் அதன் ஒன்லைன் என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். ஒரு பிரதான குறிக்கோள், இலக்கு இருந்தாக வேண்டும். அந்த ஆதாரப்புள்ளிதான் கதையை நகர்த்திச் சென்றாக வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்களால் கதையுடன் ஒன்ற முடியும். சமீபத்தில் வெளிவந்த ராஜமௌலியின் 'RRR' படத்தில் நிறைய லேயர்கள் இருந்தாலும் அதன் ஆதார மையம் என்பது ஒரு பழங்குடிச் சிறுமியை வெள்ளையர்களிடமிருந்து மீட்பது.

இதைப் போல `இணைந்த கைகள்' திரைப்படத்தின் ஆதாரப்புள்ளியும் ஆரம்பத்திலேயே தெளிவாக நிறுவப்பட்டு விடுகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குத் தெரியாமல் சென்றுவிட்டதால் அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறான் `குணசேகரன்' என்கிற இளைஞன். அந்த இளைஞனை மீட்டு வருவதற்காக இரு ஆசாமிகள் கிளம்புகிறார்கள். ஒரு தரப்பின் நோக்கம் தீயது. அவனிடமிருக்கும் ரகசியத்தைக் கைப்பற்றிய பின்பு அவனைச் சாகடிப்பது.
இணைந்த கைகள்
இணைந்த கைகள்
avdigital.in
இன்னொரு தரப்பின் நோக்கம் நியாயமானது. குணசேகரனின் தாய் ஒரு மிலிட்டரி டாக்டர். ஒரு மருத்துவ ஊழலில் அநியாயமாக வீண் பழி சுமத்தப்பட்டு வீட்டுச் சிறையில் இருக்கிறார். எதிரி நாட்டுப் படையிடம் சிக்கியிருக்கும் தன் மகன் குணசேகரனைப் பார்ப்பதற்காகப் பாசத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

குணசேகரனைக் கொண்டு வருவதற்காக ஒரு பக்கம், ஒரு தேர்ந்த கிரிமினலை வில்லன் அனுப்புகிறான். இன்னொரு பக்கம், தன் மகனை மீட்பதற்காக ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவமுள்ள மேஜரின் உதவியைத் தாய் கோருகிறார். தேர்ந்த கிரிமினலான பிரதாப் என்கிற பாத்திரத்தில் ராம்கி. நல்ல நோக்கத்துடன் கிளம்பும் மேஜர் டேவிட்குமார் என்கிற பாத்திரத்தில் அருண்பாண்டியன். இருவரில் வெற்றி பெற்றது யார் என்பதைப் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடனும் கமர்ஷியல் அம்சங்களுடனும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது, ‘இணைந்த கைகள்’.

அருண் பாண்டியன், ராம்கி, நிரோஷா, சிந்து

விசு இயக்கிய ‘சிதம்பர ரகசியம்’ என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் அருண் பாண்டியன். என்றாலும் ‘ஊமை விழிகள்’ திரைப்படம்தான் அவருக்குப் பரவலான அறிமுகத்தைத் தந்தது. ஆறடி உயரம், அதற்கேற்ற கட்டுமஸ்தான உடல் என்று தோற்றம்தான் இவருடைய முக்கியமான பலம். நடிப்பு சுமாராக வந்தாலும் இந்தத் திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். ‘தான் தந்தையாகப் போகிறோம்’ என்பதை ஒரு தொலைபேசி அழைப்பில் தற்செயலாக அறியும் போது அந்த உருக்கத்தை நன்றாக வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் ஜூடோ ராமு. கூடைப்பந்து மைதானத்தில் நடக்கும் சண்டைக்காட்சி, நதிப்பாலத்தின் குறுகிய இடைவெளியில் நடக்கும் சண்டைக்காட்சி போன்றவற்றில் அருண் பாண்டியனின் ஆக்ஷன் நன்றாக அமைந்திருந்தது.

1987-ல் ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் ராம்கி. வசீகரமான தோற்றம், இயல்பான நடிப்பு போன்றவற்றின் காரணமாகக் குறுகிய காலத்திலேயே இவரின் வளர்ச்சி சீராக அமைந்தது. ‘செந்தூரப் பூவே’ படத்தின் மூலம் பரவலான கவனத்திற்கு வந்தார். இவரின் அடர்த்தியான முடியும் அதன் ஸ்டைலும் அக்காலத்திய இளைஞர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும். போலிச் சாமியார், காரைக்குடி செட்டியார் என்று விதம் விதமான வேடங்களில் ஏமாற்றுபவராக இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தார் ராம்கி. அருண்பாண்டியன், ராம்கி ஆகிய இருவருக்குமே ‘இணைந்த கைகள்’ திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றுத் தந்தது.

இணைந்த கைகள்
இணைந்த கைகள்

அருண் பாண்டியனின் ஜோடியாக நிரோஷா நடித்திருந்தார். இவர் ராம்கியுடன் அதிக முறை ஜோடியாக நடித்து பிறகு அவரையே காதலித்து மணந்து கொண்டார். அந்தக் காலகட்டத்தில் மிக ஸ்டைலான ஹீரோயின்களில் ஒருவராக நிரோஷாவை சொல்லலாம். நிரோஷா அறிமுகமான ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் அவரின் வசீகரமான தோற்றத்தைப் பார்த்து வாய் பிளந்த இளைஞர்கள் அப்போது ஏராளம். காதலியாக வரும் காட்சிகளில் கவர்ச்சியாகவும், பிறகு கர்ப்பிணி தோற்றத்தில் வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் பரிதாபக் காட்சிகளில் போராடும் பெண்ணாகவும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருந்தார்.

ராம்கியின் ஜோடியாக நடித்திருந்தவர் சிந்து. இவர் மஞ்சுளா விஜயகுமாரின் சகோதரியின் மகள். ஆரம்பக்கட்டத்தில் நாயகியாக வந்தவர், பிறகு குணச்சித்திரப் பாத்திரங்களுக்குத் தாவி, அதன் பிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். 2015-ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக இறந்து போனார். நடிகர் சஞ்சீவ் இவரது சகோதரர். இந்தத் திரைப்படத்தில் ராம்கியுடன் தோன்றும் காட்சிகளில் இயல்பாக நடித்திருந்தார்.

முதலில் வில்லன், பிறகு காமெடியன்... ஏன்?

மெயின் வில்லனாக நாசர். மருந்து ஊழலிலிருந்து தப்பிக்க இவர் போடும் திட்டங்களும் செயல்களும் கொடூரமானதாக இருக்கும். ஹெலிகாப்டரில் டைம்பாம் வைத்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க தன் காலையே வெட்டிக் கொள்வார். கிளைமாக்ஸில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே இரு ஹீரோக்களையும் கடைசிவரை ஓட வைப்பார். ராம்கி இவரைப் பழிவாங்கும் காட்சி வித்தியாசமாகப் படமாக்கப்பட்டிருக்கும். மகனைப் பார்க்கத் துடிக்கும் ராணுவ டாக்டர் சந்திரலேகாவாக நடித்தவர் ஸ்ரீவித்யா.

ராம்கியை போலீஸில் பிடித்துக் கொடுத்து பரிசுப்பணம் வாங்கத் துடிக்கும் நகைச்சுவையைச் செந்தில் கையாண்டிருந்தார். பெரும்பாலும் நடிகர் குள்ளமணியை உதிரி நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் கொடூரமான அடியாளாகக் காட்டி மிரட்டியிருந்தார்கள்.

இணைந்த கைகள்
இணைந்த கைகள்

வில்லனாகவும் அடியாளாகவும் முதலில் நடித்தவர்கள் பின்னாட்களில் நகைச்சுவைக்கு நகர்ந்து விடுவதில் ஏதோவொரு தற்செயல் பரிணாம வளர்ச்சி இருக்கிறது போல. சத்யராஜ் முதல் ஆனந்தராஜ் வரை பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. இதில் நாசரின் அடியாட்களில் ஒருவராக வருபவரை ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே...' என்று யோசித்தால் அவர் இப்போது வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் வரும் விஜய் கணேஷ். (வக்கீல் வண்டு முருகன் கோர்ட் சீன் காமெடியில் பொத்தலான தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் நிற்பாரே?! அவரேதான் இதில் அடியாளாக வருவது... பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரிவார்.)

இன்றும் கூட நம்மைத் தாலாட்டும் ‘அந்தி நேரத் தென்றல் காற்று...'

‘இணைந்த கைகள்’ திரைப்படத்தின் பாடல்கள் என்றாலே பெரும்பாலோனோர்க்கு ‘அந்தி நேரத் தென்றல் காற்று’ பாடல்தான் சட்டென்று உடனே நினைவிற்கு வரும். தனக்குப் பிறக்கப் போகும் மகனை எண்ணி அருண்பாண்டியன் உருக்கத்தோடு பாடும் பாடல். ரயில் ஓடும் ‘தடக்... தடக்’ ஓசை, அதன் கூவல் போன்றவற்றைப் பின்னணியாக வைத்து அருமையாக இசையமைக்கப்பட்டிருக்கும். எஸ்.பி.பியும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடிய பாடல்கள் மிகக் குறைவு. இது அப்படிப்பட்டதொரு அரிதான பாடல். ஆனால் ‘அந்தி நேரத் தென்றல் காற்றை’ தாண்டி இதில் வரும் பாடல்கள் அனைத்துமே கேட்க இனிமையானவை. காலத்தில் மங்கிவிட்டவை.

இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கியான் வர்மா. ‘எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதா?’ ‘ஊமை விழிகள்’ திரைப்படத்தின் பாடல்களின் மூலம் புகழ் பெற்ற ‘மனோஜ் – கியான்’ என்கிற இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் ‘கியான் வர்மா’. ஆபாவாணன்தான் இவர்களை அறிமுகப்படுத்தினார். ஊமை விழிகளைத் தொடர்ந்து உழவன் மகன், செந்தூரப்பூவே, உரிமை கீதம் என்று திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கும் படங்களுக்கு இவர்களே தொடர்ந்து இசையமைத்தார்கள். 1989-ல் இந்த ஜோடி பிரிந்தது. கியான் வர்மா தனியாக இசையமைக்க ஆரம்பித்தார். சில வருடங்களில் மறைந்துவிட்டார். இன்னொருவர், ‘மனோஜ் பட்நாகர்’ என்று பெயரை மாற்றிக் கொண்டு இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. என்றாலும் சில ஆண்டுகள் கடந்து, என்றென்றும் காதல், குட்லக் போன்ற திரைப்படங்களை இயக்கி இசையமைக்கவும் செய்தார்.

இணைந்த கைகள்
இணைந்த கைகள்

ஆபாவாணன் இசை ஞானம் கொண்டவர். ‘இணைந்த கைகள்’ திரைப்படத்தில் கதை, திரைக்கதை, பாடல்கள், தயாரிப்பு ஆகியவற்றைத் தாண்டி இணை இசையமைப்பாளராகவும் இருந்தார். கியான் வர்மா இசையமைத்த மெலடியான பாடல்கள், சற்று இந்தி வாசனையுடன் இருக்கும். ஆனால் ஆபாவாணனின் இசைப் பாணி வித்தியாசமானது. நம்ம ஊர் நாட்டுப்புறப்பாணியின் வாசனையை அழுத்தமாகக் கொண்டு குத்துப் பாடல்களை அமைப்பதில் வல்லவர். இந்தத் திரைப்படத்தில், கங்கை அமரன் பாடிய ‘ஆடி மாசம்’, மற்றும் ஆபாவாணன் பாடிய ‘உரச்ச மஞ்சள’ ஆகிய இரண்டு துள்ளலிசைப் பாடல்களும் கேட்கவே ரகளையாக இருக்கும்.

நாயகி சிந்துவின் அறிமுகப்பாடலான ‘மெல்ல... மெல்ல...' கேட்க மிக இனிமையாக இருக்கும். பி.சி. ஸ்ரீராம் பாணியில் வித்தியாசமான ஒளியமைப்பில் படமாக்கப்பட்டிருக்கும். எஸ்.பி.பி., சசிரேகாவுடன் இணைந்து பாடிய ‘இதுவென்ன முதலிரவா?’ பாடல் காட்சியில் பாலின சமத்துவத்துடன் நாயகிக்கு இணையாகக் கவர்ச்சி காட்டியிருப்பார் ராம்கி. ‘மலையோரம் குயில்’ என்கிற பாடல் காட்சியில் டேங்க்கர் லாரியினுள் ஒளிந்திருக்கும் ராம்கியும் சிந்துவும் ரொமான்ஸில் ஈடுபடுவார்கள். தீபன் சக்கரவர்த்தி, சசிரேகா, வித்யா போன்ற தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்தாத பாடகர்களை ஆபாவாணன் பாட வைத்திருப்பார்.

‘அந்த இன்டர்வெல் பிளாக் சீன் – சான்ஸே இல்லை’…

‘இணைந்த கைகள்’ திரைப்படத்தை இயக்கியவர் என்.கே.விஸ்வநாதன். இவர் அடிப்படையில் ஓர் ஒளிப்பதிவாளர். இராமநாராயணன் இயக்கிய பல திரைப்படங்களுக்கு இவர்தான் கேமராமேன். VFX நுட்பத்தைக் கற்றுக் கொண்ட இவர், தொண்ணூறுகளில் நாடோடி பாட்டுக்காரன், பெரிய மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கினார். இந்த ‘ஆக்ஷன் அட்வென்ச்சர்’ திரைப்படத்தை ஜனரஞ்சகமான முறையில் சுவாரஸ்யம் குறையாமல் இயக்கியிருந்தார் விஸ்வநாதன்.
இணைந்த கைகள்
இணைந்த கைகள்

ஒகேனக்கலில் படமாக்கப்பட்ட காட்சியொன்று இருக்கிறது. ஒரு பெரிய பாலத்தைக் கடக்கும் முயற்சியில் கயிறு அறுந்து ராம்கி நதியில் விழப்போகும் சமயத்தில் அருண்பாண்டியன் ஓடோடி வந்து கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக் காப்பாற்றுவார். இந்த இன்டர்வெல் காட்சி வருகிற போது பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகளைத் தட்டி ஆர்ப்பரிப்பார்கள். அத்தனை விறுவிறுப்பான முறையில் இது படமாக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த ‘இடைவேளை’க் காட்சிகளைக் கணக்கில் எடுத்தால் அதில் ‘இணைந்த கைகள்’ நிச்சயம் இடம்பெறும்.

பனி படர்ந்த இயற்கைப் பிரதேசங்கள், மலை ஏறும் சாகசக் காட்சிகள், ஹெலிகாப்டர் விழும் காட்சி போன்றவற்றைச் சிறப்பாகப் படமாக்கியிருப்பார் விஸ்வநாதன். நாட்டின் எல்லையைத் தாண்டி சிறையை ஊடுருவி குணசேகரனை மீட்டெடுக்கும் காட்சிகள், இப்போது வேண்டுமானால் பார்ப்பதற்கு அமெச்சூராகத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் சிறப்பாக ரசிக்கப்பட்டவை. கிளைமாக்ஸ் காட்சியில் நிகழும் இழுவையான சென்டிமென்ட் காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றும். இது போன்ற சில குறைகளைத் தவிர இன்று பார்த்தாலும் ரசிக்க வைக்கக்கூடிய பிரமாண்டத்தை இந்தத் திரைப்படம் இன்னமும் தக்க வைத்திருக்கிறது.

‘உலகமெங்கும் வெளியாகிறது' – புதிய டிரென்ட்

‘இணைந்த கைகள்’ ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில்தான் தமிழகத்தைத் தாண்டி அவர்களின் படங்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் நேரடியாக வெளியாகும். அதற்குப் பிறகு இந்தப் போக்கு மறைந்து வீடியோ கேசட் மட்டும்தான் வெளியானது. ஆபாவாணன் இதிலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ‘உலகமெங்கும் வெளியாகிறது’ என்கிற தலைப்புடன் ‘இணைந்த கைகள்’ திரைப்படத்தின் முழுப்பக்க விளம்பரம் நாளிதழ்களில் வெளிவந்தன. அதில் வெளிநாட்டுத் திரையரங்குகளின் பெயர்களும் இருந்தன. படம் வெளியான தினத்திலிருந்தே ரசிகர்களின் ஆவலும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தன. மும்பை ‘டிரைவ்-இன்’ தியேட்டரில் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால் ரசிகர்கள் அரங்கத்தை அடித்துத் தகர்த்த சம்பவமெல்லாம் நடந்தது.

இணைந்த கைகள்
இணைந்த கைகள்
இன்றைய தேதியில் நூறு கோடி பட்ஜெட்டுக்கும் மேலான செலவில் உருவாகும் திரைப்படங்கள் வெளியாகிற போக்கு என்பது மிக இயல்பாகிவிட்டது. ஆனால் இதற்கான முன்னோடிகளில் ஒருவராக ஆபாவாணனும் அவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களும் இருந்தன என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வரிசையில் ‘இணைந்த கைகள்’ மறக்க முடியாத ஒரு சிறந்த படைப்பு.