Published:Updated:

மிஸ்டர் பாரத்: ‘என்னம்மா கண்ணு... சௌக்கியமா’ - பழைமைவாதம்தான்; ஆனாலும், இது ஒரு பக்கா வணிக சினிமா!

மிஸ்டர் பாரத்

சத்யராஜின் வணிக சாம்ராஜ்யத்தைப் பல்வேறு வழிகளில் உடைத்து நெருக்கடியை ஏற்படுத்துவார் ரஜினி. இருவருக்குமான மோதல் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படத்தின் முதல் பாதி இந்தப் போக்கில் விறுவிறுப்பாக நகரும். ஆனால்...

Published:Updated:

மிஸ்டர் பாரத்: ‘என்னம்மா கண்ணு... சௌக்கியமா’ - பழைமைவாதம்தான்; ஆனாலும், இது ஒரு பக்கா வணிக சினிமா!

சத்யராஜின் வணிக சாம்ராஜ்யத்தைப் பல்வேறு வழிகளில் உடைத்து நெருக்கடியை ஏற்படுத்துவார் ரஜினி. இருவருக்குமான மோதல் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படத்தின் முதல் பாதி இந்தப் போக்கில் விறுவிறுப்பாக நகரும். ஆனால்...

மிஸ்டர் பாரத்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘மிஸ்டர் பாரத்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

அமிதாப் பச்சனின் பல இந்தித் திரைப்படங்கள், ரஜினிகாந்த்திற்கு என்று தைக்கப்பட்ட ரெடிமேட் சட்டை போலவே அத்தனைக் கச்சிதமாக இருக்கும். அப்படியொரு வெற்றிகரமான சட்டைதான் மிஸ்டர் பாரத். ‘ஆங்க்ரி யங் மேன்’ என்கிற அமிதாப்பின் இந்திப் பிம்பத்திற்குப் பொருத்தமான தமிழ் வடிவமாக இருந்தார் ரஜினி.
மிஸ்டர் பாரத்
மிஸ்டர் பாரத்

சாகாவரம் பெற்ற ‘அம்மா சென்டிமென்ட்’

இந்தியில் பல அற்புதமான வெகுசன திரைப்படங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்த சலீம்-ஜாவேத் என்கிற இரட்டையர் கூட்டணி எழுதிய கதையை, பல சூப்பர் ஹிட் வெற்றித் திரைப்படங்களைத் தந்த யாஷ் சோப்ரா இயக்கினார். 1978-ல் ‘திரிசூல்’ என்கிற தலைப்பில் வெளியான இந்த இந்தித் திரைப்படம் ‘பாக்ஸ் ஆபிஸில்’ பட்டையைக் கிளப்பியது. இதன் தமிழ் வடிவம்தான் ‘மிஸ்டர் பாரத்’. ஆனால் இது தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வணிகமாகவில்லை என்கிறார்கள். இதை மறுத்து, ‘வெற்றிகரமான வசூலை எட்டிய படம்தான்’ என்று ஆவேசப்படுபவர்களும் உண்டு. நமக்கு அதுவா முக்கியம்? படம் எப்படியிருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

ஒரு இந்தியச் சினிமாவின் ஆதாரமான வெற்றிக்கு அடிப்படையான பல காரணிகள் இருக்கின்றன. அதில் ஒன்று ‘அம்மா சென்டிமென்ட்’. இன்றைக்கும் செல்லுபடியாகக்கூடிய சாகாவரம் பெற்ற விஷயம் இது. சமீபத்தில் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் ஆதாரமான மையப்புள்ளி எதுவென்று பார்த்தால் ‘அம்மா சென்டிமென்ட்’ என்னும் சமாச்சாரம்தான். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியம்தான் ‘ராக்கி பாயை’ இறுதிவரை செலுத்திக் கொண்டு போகிறது.

1986-ல் வெளியான ‘மிஸ்டர்.பாரத்’ திரைப்படத்தின் ஆதாரமும் அம்மா சென்ட்டிமென்ட்டின் மீதுதான் வலுவாக நிற்கிறது. தன்னுடைய தாயை ஏமாற்றி, அவரைத் திருமணம் செய்து கொள்ளாமல் மலினமாகப் பேசி விட்டுச் சென்ற தகப்பனை, ‘தேடிச் சென்று பழிவாங்குவேன், அவரின் வாயாலேயே ‘இவன்தான் என் மகன்’ என்று சொல்ல வைப்பேன்’ என்று இறக்கும் தறுவாயில் இருக்கும் தன் அம்மாவிற்குச் சத்தியம் செய்து தருகிறான் ஒரு மகன். 'அவனால் அதைச் செய்ய முடிந்ததா, எப்படி முடிந்தது?' என்பதுதான் ‘மிஸ்டர் பாரத்’.

மிஸ்டர் பாரத்
மிஸ்டர் பாரத்

தன் தாய்க்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றத் துடிக்கும் மகனாக ரஜினியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. தன் தாயை ஏமாற்றிய அயோக்கியன் என்கிற கோபம் ஒருபுறம், என்ன இருந்தாலும் தன் தகப்பன் என்கிற பாசம் இன்னொரு புறம்... என்று இந்தத் தத்தளிப்பை நன்கு வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி.

ரஜினியின் ஸ்டைலும் சத்யராஜின் நையாண்டியும்

ரஜினிகாந்த் கட்டுடலைக் கொண்டவரல்ல. ஆனால் தன் தோற்றத்தை நேர்த்தியாகப் பராமரிப்பதில் தொடர்ந்து கவனமாக இருந்தார். இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ஸ்டைலான உடையில் வருவார். பாறைகள் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டில் ஒரு குழந்தை மாட்டிக் கொள்ளும். அதைக் காப்பாற்றுவார். (ஹீரோ என்ட்ரி சீன் இருந்தாதானே மதிப்பு!). தன் தாய்க்கு நிகழ்ந்த கொடுமையையும் அவருக்குத் தந்த வாக்கையும் எண்ணி எண்ணிக் கலங்கும் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு உணர்ச்சிகரமாக இருக்கும்.

தன் தந்தையான சத்யராஜை நக்கலாகவும் ஆவேசமாகவும் ரஜினி எதிர்க்கும் காட்சிகள் பட்டாசாக இருக்கும். அதே சமயத்தில் ‘தந்தை’ என்கிற பணிவையும் உள்ளுக்குள் வைத்திருப்பார். அம்பிகாவிடம் இவர் காட்டும் கண்ணியம் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

ரஜினிகாந்த் - சத்யரஜ் - மிஸ்டர் பாரத்
ரஜினிகாந்த் - சத்யரஜ் - மிஸ்டர் பாரத்

ரஜினியின் தந்தையாக நடித்தவர் சத்யராஜ். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சத்யராஜ், வில்லன் பாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் என்ன வேடிக்கை என்றால், ரஜினியை விடவும் வயதில் நாலைந்து வருடங்கள் இளையவர் சத்யராஜ். “உன் அப்பன் வயசுடா எனக்கு” என்று ஒரு காட்சியில் வசனம் பேசுவார். இயல்பிலேயே நக்கல் உணர்வு இருக்கும் சத்யராஜின் மைண்ட் வாய்ஸ் அப்போது எப்படியிருந்திருக்கும் என்பதை யூகிக்கச் சுவாரஸ்யமாக இருக்கிறது.

வி.கே.ராமசாமி போன்ற நடிகர்கள், சிறு வயதிலேயே நரைத்த தலையுடன் தந்தை வேடங்களில் பொருந்திப் போனவர்கள். சத்யராஜும் அப்படியே! ‘ரஜினிக்குத் தந்தை’ என்கிற கதாபாத்திரத்தில் எவ்வித நெருடலும் இல்லாமல் பொருந்திப் போனார். ஒரு பக்கம் ஆவேசமும் ஸ்டைலுமாக ரஜினிகாந்த் வெடித்துக் கொண்டிருக்கும் போது தனது பிரத்யேக ஸ்டைலில் நக்கலும் நையாண்டியுமாக அவரை எதிர்கொள்வார் சத்யராஜ். படம் முழுவதும் இவர்களின் மோதல் சுவாரஸ்யமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

கட்டுமான வணிகத்தில் சத்யராஜிற்கு இருக்கும் ஒரு பிரச்னையை வைத்து அதையே முதலீடாகக் கொண்டு எதிர்க்கடை போடும் காட்சியில் ரஜினிகாந்த்தின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பில்டிங் கான்டிராக்ட்டுகளைக் கைப்பற்றுவதற்காக இரு தரப்பிற்கும் நிகழும் மோதல்களும் தந்திரங்களும் படத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்துபவையாக இருந்தன. டெண்டர் தொகையை கார்பன் தாளின் மூலமாக அறிந்து கொள்வதெல்லாம் சற்று அமெச்சூராக இருந்தாலும் காட்சிகளின் போக்கில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது நிஜம்.

ரஜினியும் சத்யராஜும் தங்களின் பயணத்தை வில்லனாக ஆரம்பித்து பிறகு ஹீரோவாக மாறியவர்கள். ஆனால் ரகுவரனின் பயணம் இதற்கு நேரெதிர். தனது ஸ்டைலான தோற்றம் காரணமாக ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தவர், பிறகு வில்லன் பாத்திரங்களுக்கு மாறினார். இந்தத் திரைப்படத்தில் ‘மைக்கேல்’ என்கிற வில்லனாக, வித்தியாசமான உடல்மொழியுடன் ரஜினியுடன் மோதுவார். ரஜினியின் தாயாக ‘பிளாஷ்பேக்’ காட்சிகளில் நடித்தவர் ‘ஊர்வசி’ சாரதா. சத்யராஜிற்கு இவர் ஜோடியா என்கிற நெருடலான கேள்வி தோன்றினாலும், குறைந்த காட்சிகளில் வந்து தன்னுடைய பாத்திரத்தை உணர்ச்சிகரமாகக் கையாண்டிருப்பார் சாரதா. “என் மகன் சிங்கக்குட்டியா வளர்ந்து உன்னைக் கேள்வி கேட்பான்” என்று சத்யராஜிடம் வெடிக்கும் காட்சியில் இவரின் ஆவேசம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

கவுண்டமணி, ரஜினிகாந்த், சத்யராஜ் - மிஸ்டர் பாரத்
கவுண்டமணி, ரஜினிகாந்த், சத்யராஜ் - மிஸ்டர் பாரத்

டீக்கடை சஞ்சீவியாக வந்து நகைச்சுவையின் மூலம் காட்சிகளைக் கலகலப்பாக்கினார் கவுண்டமணி. ‘டெண்டர்’ என்றால் என்ன என்று இவர் விசாரிப்பதும், பிறகு அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். சத்யராஜின் மகனாக எஸ்.வி.சேகரும், கவுண்டமணியின் தங்கையாக விஜியும் வந்து போனார்கள். பொதுவாக வடிவுக்கரசி, ரஜினிக்கு எதிர்த்தரப்பு பாத்திரமாக வந்து ரசிகர்களின் வசையை வாங்கிக் கொள்வார். ஆனால் இதில் “என்னை உங்க அம்மாவா நெனச்சுக்கப்பா” என்று ரஜினியிடம் அவர் பேசும் காட்சி நெகிழ்ச்சியான ஒன்று.

எஸ்.பி.முத்துராமன் + விசு = வெற்றிக் கூட்டணி

சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி, டூயட் என்று ஒரு வெகுஜன மசாலா திரைப்படத்திற்குரிய அத்தனை அம்சங்களும் கொண்டது இந்தத் திரைப்படம். ரஜினியை ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்திற்கு உயர்த்தியதில் இயக்குநர் எஸ்.பி,முத்துராமனுக்கு முக்கியப் பங்குண்டு. ரஜினியை எப்படிக் காட்டினால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசிப்பார்கள் என்பது முத்துராமனுக்கு அத்துப்படி. இந்தி ரீமேக்தான் என்றாலும் தமிழ்ப் படத்திற்கென்று பல சுவாரஸ்யங்களைச் சேர்த்தார் விசு. இவர்தான் தமிழ் வடிவத்திற்கான திரைக்கதையை எழுதியவர். பொதுவாகவே எஸ்.பி.முத்துராமன் + விசு காம்பினேஷன் என்றால் அந்தக் கலவை சுவாரஸ்யமாக அமையும். எஸ்.பி.முத்துராமனின் கமர்ஷியல் விஷயங்களையும் மீறி, ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் விசுவின் ஆதிக்கமும் அவருடைய பிரத்யேக வாசனையும் அதிகமாக இருந்தன.

மிஸ்டர் பாரத்
மிஸ்டர் பாரத்

இந்தத் திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்கு விசு ஒரு முக்கியமான காரணமாக இருந்தார். ஒரு நீண்ட வசனத்தின் இடையே குறிப்பிட்ட பகுதியை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லுவது விசுவின் பாணி. அதை இந்தப் படத்தில் நிறைய இடங்களில் காணலாம். ‘பாரத்’ என்கிற வார்த்தையை வைத்துப் பல இடங்களில் விளையாடியிருந்தார். ‘இந்த ஆலமரத்தை அசைக்க முடியாது’ என்று ஒரு காட்சியில் சத்யராஜ் ரஜினிக்குச் சவால் விடுவார். ஆனால் பிசினஸில் அவரை ஓவர்டேக் செய்யும் ரஜினி “ஒரு சின்ன பாரத் பிளேடால ஆலமரத்தை வெட்டிட்டேன்” என்று பிறகு நக்கலடிப்பார். இன்னொரு காட்சியில், மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் சத்யராஜ் “அந்த ‘பாரத்’தையும் என்னால டீல் செய்ய முடியும். இந்த குடும்பப் ‘பாரத்’தையும் என்னால பார்த்துக்க முடியும்” என்று பேசும் வசனத்தில் விசுவின் திறமை பளிச்சிடும்.

இது தவிர ‘குமரேச கவுண்டர்’ என்கிற சிறிய பாத்திரத்திலும் நடித்திருந்தார் விசு. இவருடைய அனுமதியுடன் ‘குமரேச கவுண்டர்’ ஒப்பனையில் வரும் ரஜினி, சத்யராஜை வசனங்களால் பொறித்து எடுக்கும் போது ‘சதக் சதக்’ என்று விசு மறைவில் நின்று ஜாலியாக பின்னணி இசை தரும் காட்சி சுவாரஸ்யமானது.

‘என்னம்மா கண்ணு... சௌக்கியமா’ – மறக்க முடியாத பாடல்

“சாமி... என்னை விடவும் கமல்ஹாசன் படங்களுக்குத்தான் நிறைய நல்ல பாடல்கள் போட்டிருக்கீங்க..." என்று ஒரு மேடையில் இளையராஜாவை வம்பிற்கு இழுத்தார் ரஜினி. அதுவொரு ஜாலியான குறும்பு. பதிலுக்கு “அவ்வாறெல்லாம் நான் பார்ப்பதில்லை. அனைத்து நடிகர்களும் சமம்தான்” என்று பதிலளித்தார் ராஜா. அது உண்மைதான். மிகச் சாதாரண திரைப்படங்களுக்குக் கூட அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் அள்ளி வழங்கியிருக்கிறார் இளையராஜா.
அம்பிகா - மிஸ்டர் பாரத்
அம்பிகா - மிஸ்டர் பாரத்

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இதன் டாப் வரிசையில் எவராலும் மறக்க முடியாத ‘என்னம்மா கண்ணு’ பாடலைத்தான் சொல்ல முடியும். அப்படியொரு அட்டகாசமான இசையை அளித்திருப்பார் ராஜா. இந்தப் பாடலின் ஆரம்ப வரி என்பது சத்யராஜின் டிரேட்மார்க் வசனங்களில் ஒன்று. மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலில், ரஜினியும் சத்யராஜும் வெள்ளை நிற ஆடையில் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டு, நையாண்டி செய்து நடித்திருப்பார்கள். ரஜினிக்கு எஸ்.பி.பியும் சத்யராஜுக்கு மலேசியா வாசுதேவனும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். இதற்காகக் கலக்கலான வரிகளை எழுதியிருந்தார் வாலி. ‘பாயும் புலி நான்தான்... நம்ம கிட்ட போடுறியே தப்புத்தாளம்தான்’ என்று படங்களின் தலைப்புகளையும் பொருத்தமாக இணைத்திருப்பார்.

இரண்டாவது சிறந்த பாடலாக, ‘காத்திருக்கேன்... கதவைத் திறந்து’ பாடலைச் சொல்லலாம். ரஜினியுடன் டூயட் பாடுவது போலப் பகற்கனவு காண்பார் அம்பிகா. (இது எம்.ஜி.ஆரின் ஸ்டைல். நாயகிதான் நாயகனைத் தேடிச் செல்வார்). வாலி எழுதிய பாடலை எஸ்.பி.பியும் ஜானகியும் இனிமையாகப் பாடியிருப்பார்கள். இந்தப் பாடல் வித்தியாசமாகப் படமாக்கப்பட்டது. ஒரு குளிர்பதனப் பெட்டிக்குள் ஹீரோவும் ஹீரோயினும் சிறிய உருவங்களாகச் சென்று டூயட் பாடுவது போன்றதொரு கற்பனை. பெரிய அளவு ஆரஞ்சு பழங்கள், ஐஸ்கிரீம் டப்பாக்கள் போன்றவற்றிற்கு இடையே இவர்கள் டூயட் பாடுவது தொடர்பான தந்திரக்காட்சிகளைச் சிறப்பாக உருவாக்கியிருந்தார் ரவிகாந்த் நகாயச்.

புலமைப்பித்தன் எழுதியிருந்த ‘எந்தன் உயிரின் நிழலே...' பாடலில் உணர்ச்சிகரமான வரிகள் நிரம்பியிருக்கும்.

'...சாவுக்கு அஞ்சிடும் பிள்ளை அல்ல

கோழைக்கு நான் இங்கு அன்னை அல்ல

பிறப்பதும் இறப்பதும் நூறு முறை அல்ல…'

என்று வரிகளில் ஆவேசத்தைக் கொட்டியிருப்பார் கவிஞர். சாரதா, தன் மகன் ரஜினியை மிகவும் சிரமப்பட்டு வளர்க்கும் காட்சிகள் இதன் பின்னணியில் வரும். பொருத்தமான பாவத்தோடு பாடியிருப்பார் எஸ்.ஜானகி.

மிஸ்டர் பாரத்
மிஸ்டர் பாரத்

‘என் தாயின் மீது ஆணை’ என்பதும் இன்னொரு உணர்ச்சிகரமான பாடல். க்ளைமாக்ஸில் வரும் இந்தப் பாடலின் வரிகளை அருமையாக எழுதியிருப்பார் வைரமுத்து. இந்தப் பாடலில் ரஜினியின் நடிப்பு ஆத்மார்த்தமாக அமைந்திருக்கும். தன் தந்தையை பொதுவில் அடையாளப்படுத்தத் துடிக்கும் மகனின் ஆவேசத்தைத் தன்னுடைய குரலில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் மலேசியா வாசுதேவன். ‘பச்சை மொளகா அது காரமில்லை’ என்கிற குத்துப்பாடல் கங்கை அமரன் எழுதியது. ‘மந்தவெளி மன்னாரு’ என்கிற வேடத்தில் கவுண்டமணியோடு இணைந்து கொண்டு சத்யராஜை ரஜினி வெறுப்பேற்றும் பாடல்.

‘கல்லானாலும் கணவன்’ என்கிற பழைமைவாத கருத்து

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் அடிப்படையான கருத்தாக்கத்தில் உறைந்துள்ள பழைமைவாதத்தைப் பற்றியும் பேசியாக வேண்டும். ‘தன்னைக் கெடுத்தவனைத் தேடிச் சென்று திருமணம் செய்து அவனைத் திருத்துவதுதான் ஒரு பெண்ணின் சிறந்த பண்பாடு’ என்பது போல் பல திரைப்படங்கள் ஏற்கெனவே வந்துள்ளன. ‘கல்லானாலும் கணவன்’ என்கிற அரதப்பழசான கருத்தைத்தான், இந்தத் திரைப்படங்கள் பல்வேறு விதமாக வலியுறுத்துகின்றன.

இந்தத் திரைப்படத்திலும் இதே மாதிரியான விபத்துதான் நிகழ்கிறது. ‘தன்னை ஏமாற்றியவனை பொதுவில் அம்பலப்படுத்த வேண்டும்’ என்று ஒரு தாய் ஆவேசப்பட்டு மகனிடம் வாக்குறுதி வாங்குவது சிறந்த விஷயம்தான். மகனும் அந்த வாக்குறுதியைத் தந்துவிட்டு ஆவேசமாக தன் எதிரிக்குப் பல்வேறு வகைகளில் நெருக்கடி தருகிறான். என்றாலும் ‘அவர்தான் தன் தந்தை’ என்கிற சென்டிமென்ட்டும் பாசமும் அவனுக்குள் இருக்கிறது. அதுவரை எலியும் பூனையுமாக மோதிக் கொண்டிருந்த தந்தையும் மகனும் இறுதிக்காட்சியில் சட்டென்று இணைந்து விடுவது நாடகத்தன்மையுடன் இருக்கும். ‘இவன்தான் என் மகன்’ என்று பொதுவில் அறிவிப்பார் சத்யராஜ். க்ளைமாக்ஸில் ‘திடீரென்று’ திருந்திவிடும் வில்லன் பாத்திரத்தின் கிளிஷேதான் இது.

மிஸ்டர் பாரத்
மிஸ்டர் பாரத்

சத்யராஜின் வணிக சாம்ராஜ்யத்தைப் பல்வேறு வழிகளில் உடைத்து நெருக்கடியை ஏற்படுத்துவார் ரஜினி. இருவருக்குமான மோதல் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படத்தின் முதல் பாதி இந்தப் போக்கில் விறுவிறுப்பாக நகரும். ஆனால் இரண்டாம் பாதியில் குடும்ப உறவுகளின் மூலம் தன்னுடைய காய் நகர்த்தலை ரஜினி செய்வது அத்தனை ரசிக்கத்தக்கதாக இருக்காது. வெவ்வேறு ஒப்பனைகளில் வரும் ரஜினி, சத்யராஜை ஏமாற்றும் காட்சிகளில் நம்பகத்தன்மை இருக்காது. இது போன்ற குறைகள் இருந்தாலும், இன்றைக்குப் பார்த்தாலும் ஒரு சிறந்த வணிக சினிமாவைப் பார்த்த திருப்தி ஏற்படும்.

ரஜினியின் ஸ்டைலான நடிப்பு, சத்யராஜின் நக்கலான ரியாக்ஷன்கள், விசுவின் திறமையான திரைக்கதை, இளையராஜாவின் அற்புதமான பாடல்கள், எஸ்.பி.முத்துராமனின் அனுபவமுள்ள டைரக்ஷன், ஏவிஎம் தயாரிப்பு போன்ற காரணங்களால், ரஜினியின் திரைப்பட வரிசையில் ‘மிஸ்டர் பாரத்’ கவனத்துக்கு உரிய, தவிர்க்க முடியாத ஒரு படைப்பு.