Published:Updated:

சீவலப்பேரி பாண்டி: கிராமத்து ராபின்ஹூட்டின் கதை; அதிகம் கவனிக்கப்படாத திறமைசாலிகள் நிறைந்த படம்!

சீவலப்பேரி பாண்டி

‘சீவலப்பேரி பாண்டி’ படத்திலும் ஆதித்யனின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சித்ரா பாடிய, ‘ஒயிலா பாடும் பாட்டில’ என்னும் பாடலை ‘சின்னச் சின்ன ஆசைக்கு’ நிகரான பாடல் என்று சொல்லலாம்.

Published:Updated:

சீவலப்பேரி பாண்டி: கிராமத்து ராபின்ஹூட்டின் கதை; அதிகம் கவனிக்கப்படாத திறமைசாலிகள் நிறைந்த படம்!

‘சீவலப்பேரி பாண்டி’ படத்திலும் ஆதித்யனின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சித்ரா பாடிய, ‘ஒயிலா பாடும் பாட்டில’ என்னும் பாடலை ‘சின்னச் சின்ன ஆசைக்கு’ நிகரான பாடல் என்று சொல்லலாம்.

சீவலப்பேரி பாண்டி
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'சீவலப்பேரி பாண்டி’.

இதே டென்ட் கொட்டாய் சீரிஸில் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தைப் பற்றி முன்பு பார்த்திருக்கிறோம். அது நகரத்து ‘ராபின்ஹூட்’ பற்றியது. இது கிராமத்து ‘ராபின்ஹூட்’ பற்றிய படம். அது முற்றிலும் புனைவு. இது பெரும்பாலும் நிஜம். ஆம், திருநெல்வேலி மாவட்டத்தில் ‘சீவலப்பேரி’ என்னும் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பாண்டி என்கிற ஒரு உண்மையான நபரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழகக் காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட ஆரம்பக்கால என்கவுன்ட்டர்களில் ஒன்று ‘பாண்டி’யுடையது என்கிறார்கள்.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான செளபா, ஜூனியர் விகடன் ‘கிராமத்துப் பக்கங்களில்’ சீவலப்பேரி பாண்டியைப் பற்றிய ஒரு தொடரை எழுதினார். இது பரவலான கவனத்திற்கும் வரவேற்பிற்கும் உள்ளாயிற்று. உண்மையான நபர் தொடர்பானது என்பதால் மிகவும் கவனத்துடன் எழுதினார் செளபா. இது சினிமாவாக மாறும்போது சில புனைவுகள் அவசியப்பட்டன. கே.ராஜேஷ்வர் இந்தப் படத்திற்காக சில காலம் கள ஆய்வு செய்த பின்பு திரைக்கதையை எழுதினார்.

சினிமாவில் சித்திரிக்கப்பட்ட ‘பாண்டி’யின் கதை

பாண்டி ஓர் எளிமையான சம்சாரி. வயதான தாய், அண்ணன் மாயாண்டி, மனைவி வேலம்மாள் என்று சிறிய குடும்பம். சுற்றியுள்ள எட்டுப்பட்டியும் வணங்கி மரியாதை தரும் நீதிமானாக விளங்குபவர் கிராம்ஸ். பாண்டியின் வீரத்தைக் கண்டு வியந்து அவனை தன்னுடைய மெய்க்காப்பாளனாக வைத்துக் கொள்கிறார். அவருக்கு விசுவாசமாக வேலை செய்கிறான் பாண்டி.

பாண்டியின் அதே சமூகத்தைச் சேர்ந்த சில பணக்காரர்களுக்கு கிராம்ஸின் செல்வாக்கு பிடிக்கவில்லை. அவரை ஒழித்துக் கட்டி விட்டால் அந்த இடத்திற்கு இவர்கள் செல்ல முடியும். அதற்கேற்ப வியூகங்களை வகுக்கின்றனர். கிராம்ஸின் மீது பாண்டிக்கு விரோதம் ஏற்படுமாறு திட்டம் போடுகிறார்கள். அது நிகழ்கிறது. “நம்ம சமூகத்திற்காக நீ ஒரு நல்லது பண்ணு. அந்த கிராம்ஸைக் கொன்னுடு. நீ ஜெயிலுக்குப் போனா கூட உன் குடும்பத்தை நாங்க பார்த்துக்கறோம். நில, புலன் தந்துடறோம்” என்று ஆசை வார்த்தை சொல்லி மனதை மாற்றுகிறார்கள். அரைமனதுடன் பாண்டியும் அதற்குச் சம்மதிக்கிறான்.

பாண்டியின் உதவியால் கிராம்ஸ் கொல்லப்படுகிறார். அவன் ஜெயிலுக்குப் போகிறான். தன் குடும்பமாவது பசியின்றி இருக்கட்டும் என்று நினைக்கிறான். ஆனால் அவனைச் சிறைக்கு அனுப்பியவர்கள் ஏமாற்றியதை அறிந்து மனம் கொதிக்கிறான். சிறையிலிருந்து தப்பிக்கிறான். பெரிய கொள்ளைக்காரனாக மாறுகிறான். எளிய மக்களுக்கு உதவுகிறான். ஊர் அவனைக் கும்பிடுகிறது. போலீஸ் அவனை வலைவீசி தேடுகிறது. பாண்டியின் தலைக்கு விலை வைக்கிறது.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி
தன்னை ஏமாற்றியவர்களை பாண்டி பழிவாங்கினானா, போலீஸிடமிருந்து தப்பித்தானா, அவனது குடும்பம் என்னவாயிற்று என்பதையெல்லாம் மீதமுள்ள கதை விவரிக்கிறது.

நெப்போலியன் ஆன குமரேசன்

ராம்கோபால் வர்மா இயக்கிய ‘ஷிவா’ திரைப்படத்தைப் பார்த்து நடிப்பில் ஆர்வம் வந்து சினிமாவில் சான்ஸ் தேடத் துவங்கினார் குமரேசன். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று வில்லனுக்கான தோற்றம். ‘நெப்போலியன்’ என்னும் பெயர் சூட்டி ‘புதுநெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. ‘எஜமான்’ படத்தில் ரஜினிக்கு எதிராகத் தோன்றிய ‘வல்லவராயன்’ என்கிற வில்லன் பாத்திரம் இவருக்குப் புகழ் தேடித் தந்தது. ‘கிழக்குச் சீமையிலே’ பாத்திரம் இன்னமும் அதிகப் புகழைச் சேர்த்தது.

இந்த வரிசையில் நெப்போலியன் முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் ‘சீவலப்பேரி பாண்டி’. ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பிறகு ஹீரோவாக மாறிய நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் நெப்போலியன். ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் அந்தப் பாத்திரமாகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். ஒரிஜினல் ஆசாமி இப்படித்தான் இருந்திருப்பாரோ என்னுமளவிற்கான நடிப்பு. "சுடலைமட சாமிக்காவது வெளியத்தான் கோயில் கட்டி வெச்சிருக்காங்க... நான் உனக்கு நெஞ்சுக்குள்ள கட்டியிருக்கேன்” என்று தன் மனைவி வேலம்மாளிடம் உணர்ச்சிகரமாகப் பேசி காதலை உணர்த்துவது முதல் பல காட்சிகளில் நெப்போலியனின் நடிப்பு நன்றாக இருந்தது. குதிரை மீதேறி அரிவாளைத் தூக்கிப் பிடித்து வரும் காட்சிகளில் கிராமத்து சாமிகளில் ஒன்று உயிருடன் வந்தது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டார்.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி

பாண்டியின் மனைவி வேலம்மாளாக சரண்யாவின் நடிப்பு இயல்பாக இருந்தது. கணவனின் மீது காதல் பொழிவதும், கடுமையான நெருக்கடியில் கணவனை விட்டுப் பிரிய முடியாமல் சிரமங்களைத் தாங்கி பின்தொடர்வதும், எந்தவொரு சராசரியான மனைவிக்கு வருவது போலக் கணவன் மீது சந்தேகம் கொள்வதும், இறுதியில் தவறான வார்த்தைப் புரிதலில் விபத்தில் சிக்குவதும் என தன்னுடைய பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்.

சுவாரஸ்யம் சேர்த்த சிறிய பாத்திரங்கள்

ஊர் மதிக்கும் கிராம்ஸ் பாத்திரத்தில் நடித்தவர் விஜயசந்தர். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் நடித்துப் புகழ்பெற்றவர். இதில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் எட்டுப்பட்டி கிராமங்களும் மதிக்கும் நீதிமானாக நடித்திருந்தார். கொலை செய்யப்படும் தறுவாயில் "நீயுமாடா பாண்டி?” என்று உருக்கமாகக் கேட்பார்.

பாண்டியின் அண்ணனாக நடித்த மதன் கேப்ரியலின் நடிப்பு இயல்பாக இருந்தது. ஊர் பெரிய மனிதரை வெட்டிவிட்டு வந்த தம்பியைக் கண்டிப்பது, பாண்டியைச் சிறைக்கு அனுப்பியவர்களிடம் உதவி கேட்டுச் சென்று அங்கு நிகழும் அவமதிப்பால் சீறுவது என்று சிறிய பாத்திரம்தான் என்றாலும் நன்றாக நடித்திருந்தார். “தூக்குல போட்டாலும் பரவாயில்ல. போலீஸ்ல போய் சரணடை” என்று சொல்லும் தாய்க்கிழவி, ‘பாண்டி’ என்று பிறகு உருக்கமாக அழைக்கும் காட்சியில் கலங்கடித்து விட்டார். பிற்காலத் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அதிகம் நடித்த நெல்லை சிவா, இதில் சீரியஸான காவல் அதிகாரியாக ஒரு காட்சியில் வந்து போனார்.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி

‘ஒயிலா’ என்கிற கவர்ச்சியான பாத்திரத்தில் அஹானா நடித்திருந்தார். கதையமைப்பின் படி இவருக்குச் சிறிய பாத்திரம்தான் என்றாலும் இரண்டு பாடல்கள் உள்ளிட்டு நிறைய முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. பாண்டியின் பின்புலம் அறியாமல், அவரைத் தனக்குச் சமமான உழைப்பாளியாக அரவணைக்கும் முதலாளி பாத்திரத்தில் நிழல்கள் ரவியின் நடிப்பு அருமையாக இருந்தது. (சபாஷ் கோனாரே!)

இந்தப் படத்தின் திருஷ்டிப் பரிகாரம் என்று இதன் காமெடி டிராக்கைச் சொல்ல வேண்டும். பொதுவாக ஏ.வீரப்பன் எழுதிய நகைச்சுவை என்றால் சுவாரஸ்யத்திற்குக் குறை இருக்காது. ஆனால் அது கவுண்டமணி – செந்தில் கூட்டணியில்தான் கச்சிதமாக வேலை செய்யும் போல. ‘குரங்கு ரத்தம்’ குடிக்கும் சார்லி, குரங்கைப் போல மாறுவதுதான் காமெடி. போதாக்குறைக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி, பிரசன்ன குமார் ஆகிய இருவரும் காமெடி டிராக்கிலும் வந்து விட்டு வில்லன்களாகவும் இருப்பது சுத்தமாகப் பொருந்தவில்லை. சீரியஸான காட்சிகளுக்கு இடையில் இளைப்பாறுதலுக்காக இருந்தாலும், இதில் வரும் காமெடி டிராக் தனி ரூட்டில் பயணித்து எரிச்சலூட்டுவதாக அமைந்திருந்தது.

பாண்டியை நம்ப வைத்து ஏமாற்றுபவர்களில் ஒருவராக வரும் ஆர்.பி.விஸ்வம் தனது வில்லத்தனத்தைச் சரியாகச் சித்திரித்திருந்தார். சிறையிலிருந்து தப்பி வந்து ஆவேசமாகக் கேள்வி கேட்கும் பாண்டியிடம், அந்தச் சமயத்தில் கூட நயவஞ்சகமாகப் பேசி ஏமாற்ற முயல்வது அசல் வில்லத்தனம். சூர்யகாந்த், அலெக்ஸ் ஆகிய இருவரும் மீதமிருந்த வில்லன்கள்.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி

பாண்டியைப் பிடிக்கக் கொலைவெறியுடன் திரியும் போலீஸ்காரராக ஜி.டி.ரமேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இவர் தயாரிப்பாளரும் கூட. ‘பாண்டியை என்னால சாகடிக்க முடியாது’ என்று இறுதியில் மறுக்கும் காட்சி முதற்கொண்டு பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். "தெய்வமே... நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்கிற காமெடி போல இவரின் உதவியாளராக நடித்தவர் சின்னி ஜெயந்த்.

ஆதித்யன், ராஜேஷ்வர் – அதிகம் கவனிக்கப்படாத திறமைசாலிகள்

இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆதித்யன், ஏறத்தாழ ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமான அதே காலகட்டத்தில் இவரும் திரையிசைக்குள் வந்தார். ரஹ்மானுக்கு நிகராக அறியப்பட்டிருக்க வேண்டிய திறமைசாலி. அடிப்படையில் இவர் ஒரு சவுண்ட் டிசைனர். நவீன நுட்பத்தின் ஒலிகளைப் பாடல்களில் இணைத்து அசத்தியவர். நிறைய பாப் மற்றும் ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கியவர். ‘அமரன்’ இவர் இசையமைத்த முதல் படம். அது பாடல்களுக்காகவே அதிகம் கவனிக்கப்பட்டது.

‘சீவலப்பேரி பாண்டி’ படத்திலும் ஆதித்யனின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. சித்ரா பாடிய, ‘ஒயிலா பாடும் பாட்டில’ என்னும் பாடலை ‘சின்னச் சின்ன ஆசைக்கு’ நிகரான பாடல் என்று சொல்லலாம். ராஜகோபால், சுஜாதா மோகன் பாடிய ‘கிழக்கு செவக்கையிலே’ பாடலும் மிகவும் புகழ்பெற்றது. ‘அருவியொண்ணு குளிக்குது’ என்கிற கவர்ச்சிப்பாடலை ஸ்வர்ணலதா பாடியிருந்தார். ‘திருநவேலி சீமையில’ என்று பாண்டி சார்ந்திருந்த சமூகத்தின் பெருமையைப் பேசும் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறப்பாகப் பாடியிருந்தார். ‘கிழக்கு செவக்கையிலே’ பாடலை மட்டும் ராஜேஷ்வர் எழுதியிருந்தார். “என் விதிய எழுதையில அந்தச் சாமியும் ஒறங்கியதே" என்பது போன்ற ஆத்மார்த்தமான வரிகள் இருந்தன. மற்ற பாடல்களை எழுதியவர் வைரமுத்து.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி

இதன் திரைக்கதையை எழுதியவர் கே.ராஜேஷ்வர். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த இவர், ‘அவள் அப்படித்தான்’ படத்தின் உருவாக்கத்தில் பங்களித்துள்ளார். 'இதயத் தாமரை', 'அமரன்' போன்ற படங்களை இயக்கியவர், திரைக்கதையில் மிகுந்த ஞானம் உள்ளவர். ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போனது துரதிர்ஷ்டம்.

பிரபல கொள்ளைக்காரர்களாக இருப்பவர்களைப் பற்றி, உண்மையும் பொய்யுமாகக் கலந்து பல கதைகள் உருவாகும். அது சம்பந்தப்பட்ட நபரின் வீரத்தை, ஈகைக் குணத்தைப் பெருமிதப்படுத்துவதாக அமைந்திருக்கும். இந்தத் திரைப்படத்திலும் அப்படியான சித்திரிப்புகள் உண்டு. காவல்துறை அதிகாரியை வெட்டிச் சாய்ப்பதற்காகத் தேநீர்க்கடைக்கு வரும் பாண்டி, அன்று போலீஸ்காரருக்குப் பிறந்த நாள் என்பதை அறிந்ததும் அரிவாளை அப்படியே பதுக்கிக் கொள்வார். இதைப் போலவே அவரைக் கொல்வதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்திலும் கொல்லாமல் விட்டு விடுவார். இதனாலேயே பாண்டியின் நல்ல குணத்தை அறிந்து கொண்டு இறுதியில் காவல் அதிகாரி சிநேகம் பாராட்டுவார். அவரது என்கவுன்ட்டருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்.

ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத படங்களை இயக்கியவர்

இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் ‘பிரதாப் போத்தன்’ என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆம், அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களின் வரிசையைக் கவனித்தால் ஒன்றுக்கொன்று பெரிதும் சம்பந்தமே இருக்காது. முற்றிலும் வெவ்வேறு ஜானரில், பின்னணியில் இருக்கும். 'ஜேம்ஸ்பாண்ட்' படம் போன்ற சாயலில் ‘வெற்றி விழா’ எடுத்த அதே இயக்குநர்தான், மண்ணின் மணம் கமழ இந்தப் படத்தை எடுத்தாரா என்று பிரமிப்பாக இருக்கும்.

சீவலப்பேரி பாண்டி
சீவலப்பேரி பாண்டி

இது மகத்தான படைப்பு அல்லதான். ஆனால் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு ‘ராபின்ஹூட்’ வகை நபரைப் பற்றிய சினிமா பதிவு என்கிற வகையில் முக்கியமானது. என்கவுன்ட்டரின் போது முதுகைக் காட்டி ஓட விரும்பாமல் “என் நெஞ்சுல சுடுங்க சார்... சாதி மீதிருந்த வெறியாலதான் இந்த நிலைமைக்கு வந்தேன். என் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் சாதிக்கு எதிரானதா மாறணும்” என்று இறுதிக்காட்சியில் பாண்டி சொல்லும் செய்தி முக்கியமானது.

சமூகவிரோதிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று எளிதாகச் சொல்லப்படும் பலர் திட்டமிட்டு அவ்வாறு உருவாவதில்லை. அதற்குப் பின்னால் பல சமூகக்காரணங்களும் பரிதாபக் கதைகளும் இருக்கின்றன. அப்படிப்பட்ட பிரதிநிதிகளுள் ஒருவன்தான் – 'சீவலப்பேரி பாண்டி’.