Published:Updated:

தளபதி: பொன்னியின் செல்வனுக்கு முன்னால் `கர்ணன்' கதையின் நாஸ்டால்ஜியா - மாஸ் ரஜினி, கிளாஸ் மணிரத்னம்!

தளபதி

தளபதியை இடியும் தென்றலும் சரிசமமாகக் கலந்த கவிதை எனலாம். ஒரு பக்கம் ஹைவோல்டேஜ் கம்பியைத் தொடுவது போன்ற பரபரப்பான காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம், தாய் – மகன் சென்டிமென்ட் காட்சிகள் உருக்கத்துடன் சென்று கொண்டிருக்கும்.

Published:Updated:

தளபதி: பொன்னியின் செல்வனுக்கு முன்னால் `கர்ணன்' கதையின் நாஸ்டால்ஜியா - மாஸ் ரஜினி, கிளாஸ் மணிரத்னம்!

தளபதியை இடியும் தென்றலும் சரிசமமாகக் கலந்த கவிதை எனலாம். ஒரு பக்கம் ஹைவோல்டேஜ் கம்பியைத் தொடுவது போன்ற பரபரப்பான காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம், தாய் – மகன் சென்டிமென்ட் காட்சிகள் உருக்கத்துடன் சென்று கொண்டிருக்கும்.

தளபதி
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘தளபதி’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

தமிழ் சினிமாவின் திரைமொழியைப் பாதித்ததில், கணிசமாக மாற்றியதில் மணிரத்னத்திற்குப் பெரும் பங்குண்டு. சுருக்கமான வசனங்கள், குறைவான காட்சிகளில் ஆழமான உணர்ச்சிகளைக் கடத்துதல், நேர்த்தியான படமாக்கம், ஸ்டைலிஷான காட்சிகள் என்று பல விஷயங்கள் புத்துணர்ச்சியாக அமைந்திருந்தன. பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ பார்த்துவிட்டு டைரக்ஷன் பித்துப் பிடித்த பல இளைஞர்களைப் போலவே, அதன் அடுத்த தலைமுறையில் ‘நாயகன்’ பார்த்துவிட்டு சினிமா கனவுடன் கிளம்பியவர்களும் அதிகம்.

முன்னணி நடிகர்களுக்காக ரசிகர்கள் இருந்த நிலையை மாற்றி இயக்குநர்களுக்கான பார்வையாளர்களை உருவாக்கியவர்களுள் மணிரத்னம் முக்கியமானவர். யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், சினிமா மீது கொண்ட பேரார்வம் காரணமாக சுயம்புவாக உருவானவர். உலக சினிமா பார்த்துப் பார்த்து தன் பாதையைத் தானே தீர்மானித்துக் கொண்டவர்.

தளபதி
தளபதி
‘நாயகன்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை அறிவோம். கமலை வைத்து மணிரத்னம் ஒரு படத்தை இயக்கிவிட்டார். சரி, அடுத்து ரஜினியை வைத்து இயக்குவதுதானே முறை?! ஒட்டுமொத்த ரசிகர்களுமே இந்தக் கூட்டணி எப்போது அமையும் என்று ஆவலாகக் காத்திருந்தார்கள். மணிரத்னம் அவசரப்படவில்லை. அவர் நட்சத்திரங்களை நோக்கி ஓடுபவரல்ல. மாறாக நட்சத்திரங்கள்தான் அவரை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

மணிரத்னம் + ரஜினி = தளபதி

மணிரத்னத்தின் படத்தில் நடிக்கும் தன்னுடைய விருப்பத்தை அவரது சகோதரரான ஜீவியிடம் தெரிவித்தார் ரஜினி. ஆனால் ரஜினியின் பிம்பத்திற்கேற்ற ஒரு கதைக்காகக் காத்திருந்தார் மணிரத்னம். மகாபாரதத்தின் ‘கர்ணன்’ பாத்திரம் அவருக்குத் தோதாக வந்து நின்றது. புராண, இதிகாசங்களை நவீன வடிவில் உருவாக்கும் ‘மணிரத்ன’ பாணி இதிலிருந்து துவங்கியது எனலாம்.

மகாபாரதத்தில் ஆகச்சிறந்த பாத்திரங்களுள் ஒன்று கர்ணன். எதிர் நாயகனின் தோழனாக இருந்தாலும் ஒரு ஹீரோவிற்கான கம்பீரத்தையும் நல்லியல்புகளையும் கொண்டவன். மணிரத்னத்தின் ‘கிளாஸ்’ மற்றும் ரஜினியின் ‘மாஸ்’, ஆகிய இரண்டின் கச்சிதமான கலவையாக ‘தளபதி’ உருவாகியது. இதை தன்னுடைய படமாகவும் தக்க வைத்துக் கொண்ட அதே சமயத்தில், ரஜினியின் படமாகவும் ரசிகர்களை உணர வைத்தது மணிரத்னத்தின் திறமை.

தளபதி
தளபதி

‘பொன்னியின் செல்வன்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ‘தளபதி’ படத்தில் நடிப்பதற்குத் தான் சிரமப்பட்ட அனுபவத்தை ரஜினி சிரித்துக் கொண்டே பகிர்ந்தது சுவாரஸ்யமான சம்பவம். ஆம், ரஜினியின் ‘வழக்கமான’ உடல்மொழியைக் கழற்றி விட்டு தன்னுடைய ‘சூர்யா’வை ரஜினியிடமிருந்து வரவழைக்க மணிரத்னம் திட்டமிட்டார். ஏனெனில் அவருக்குத் தெரியும். ரஜினிக்குள் ஒரு நல்ல நடிகன் இருக்கிறான் என்பது. ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் வெளிப்பட்ட இயல்பான ரஜினியை அவருக்கு நன்கு நினைவிருந்தது. மணியின் இயக்கத்தில் நடிப்பதற்கு ரஜினி சற்று சிரமப்பட்டாலும் அதற்கு நல்ல பலன் இருந்தது. அவருடைய தனித்தன்மையான நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்றாக ‘தளபதி’ அமைந்தது. 'அவள் அப்படித்தான்', 'முள்ளும் மலரும்', 'ஸ்ரீராகவேந்திரர்' போன்று ரஜினியின் நடிப்பு அருமையாக வெளிப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ‘தளபதி’ நச்சென்று சென்று இணைந்தது.

தளபதி - இடியும் தென்றலும் கலந்த கவிதை

இந்தத் திரைப்படத்தை இடியும் தென்றலும் சரிசமமாகக் கலந்த கவிதை எனலாம். ஒரு பக்கம் ஹைவோல்டேஜ் கம்பியைத் தொடுவது போன்ற பரபரப்பான காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கும். தன்னை கண்டிக்கும் போலீஸ் அதிகாரியை ‘தொட்றா பார்க்கலாம்’ என்று வெடித்து எழுவார் ரஜினி. இன்னொரு பக்கம், தாய் – மகன் சென்டிமென்ட் காட்சிகள் உருக்கத்துடன் சென்று கொண்டிருக்கும். நட்பு, தாய்ப் பாசம் ஆகிய இரு பெரும் பிரிவுகளில் இதன் திரைக்கதை பயணித்தது.

தாய் – மகன் சென்டிமென்ட்டைச் செயற்கையான அழுகைக் காட்சிகள் இன்றி, மிக நேர்த்தியாகவும் கவித்துவமாகவும் சித்திரித்த படம் ‘தளபதி’. பார்த்திபனின் ‘புதிய பாதை’ திரைப்படத்தில், பிறந்தவுடன் தன்னைத் தூக்கியெறிந்து விட்டுப் போன தாயைப் படம் முழுவதும் திட்டிக்கொண்டேயிருப்பார் ஹீரோ. ஆனால் இந்தப் படத்திலோ படம் முழுவதும் தாயைத் தேடிக் கொண்டேயிருப்பார் ரஜினி. ஸ்ரீவித்யா மற்றும் ரஜினி ஆகிய இருவரும் சந்திக்கும் காட்சிகள் அனைத்துமே படத்தில் அத்தனை உருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். உண்மையில் ரஜினியை விடவும் வயது குறைந்தவர் ஸ்ரீவித்யா. ஆனால் தாய்மையுணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருவரின் நடிப்பும் அருமையாக இருந்தது.

தளபதி
தளபதி

இந்தப் படம் முழுவதும் தீபாவளி பட்டாசு போல விதம் விதமான வாண வேடிக்கைகளை நிகழ்த்தினார் ரஜினி. “ஏன்னா... நீ என் நண்பன்” என்று மம்மூட்டியிடம் உருகுவதாகட்டும், “நான் கறுப்பா இருந்தேனா... எங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலை. தூக்கி எறிஞ்சிட்டாங்க” என்று குழந்தையிடம் கதை சொல்வதாகட்டும், பெற்றோர்கள் பற்றிய விவரம் கேட்கும் போலீஸ்காரர்களிடம் “தெரியாதுடா... எத்தனை தடவை சொல்றது?” என்று வெடிப்பதாகட்டும், தன்னால் கொல்லப்பட்டவனின் மனைவியைப் பார்த்து குற்றவுணர்வில் தவிப்பதாகட்டும், கோயிலில் தன் தாயைப் பரிதவிப்புடன் பின்தொடர்வதாகட்டும்... ரஜினியின் தலைசிறந்த நடிப்புத் திறனை வெளிக்காட்டிய இந்த ‘தளபதி’, ஒரு மாஸ்டர் பீஸ்!

தளபதியில் நடிக்க மறுத்த மம்மூட்டி

குந்தி மற்றும் கர்ணனாக முறையே ஸ்ரீவித்யாவும் ரஜினியும் நடித்தார்கள் என்றால் துரியோதனன் பாத்திரத்தில் அசத்தியவர் மம்மூட்டி. “பார்த்தியா என் நண்பனை... பார்த்தியா என் தளபதியை...” என்று ரஜினியின் நட்பைப் படம் முழுவதும் சிலாகித்துக் கொண்டேயிருப்பார் மம்மூட்டி. மணிரத்னம் கதை சொன்ன போது முதலில் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். “தமிழ் ரசிகர்களிடம் நீங்கள் சென்று சேர இந்தப் படம் உதவியாக இருக்கும்” என்று மலையாள இயக்குநர் ஜோஷி அறிவுறுத்திய பிறகு நடிக்கச் சம்மதித்தார். அது பிறகு உண்மையானது. மம்மூட்டி என்னும் சிறந்த நடிகனின் முகம் தளபதியின் மூலம் தமிழகத்தில் அழுத்தமாகப் பரிச்சயமாகியது. “நீ பிச்சைக்காரனுக்கு நாலணா போட்டியிருக்கியா... இவன் கையில் இருக்கறதையெல்லாம் கொடுத்துடுவான்” என்று ரஜினிக்காகப் பெண் கேட்கும் காட்சி முதல் பல இடங்களில் ‘தேவராஜாக’ அசத்தியிருப்பார் மம்மூட்டி.

அர்ஜுன் பாத்திரத்தில் நடித்தவர் அரவிந்த்சாமி. பின்னாளில் பல இளம்பெண்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட இந்த அழகர் அறிமுகமானது இந்தப் படத்தில்தான். இந்தப் பாத்திரத்திற்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். நடிகர் ஜெயராமை பரிந்துரைத்தார் மம்மூட்டி. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் ஜெயராம் நடிக்க முடியவில்லை. ஒரு விளம்பரப்படத்தில் பார்த்த முகம் கவர்ந்ததால் அரவிந்த்சாமியை ‘தளபதி’யில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். “நீங்க எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னறீங்க” என்கிற காமெடி வசனம், உண்மையிலேயே அரவிந்த்சாமிக்குப் பொருந்தும். அமுல்பேபி மாதிரியான முகம் இருந்தாலும் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்திருந்தார். குறிப்பாக மம்மூட்டி மற்றும் ரஜினியிடம் இவர் நடத்தும் உரையாடலும், அந்த ரவுண்ட் டிராலி ஷாட்டும்... என்னவொரு காட்சி!

தளபதி
தளபதி

ரஜினியின் காதலியாக, அதாவது திரௌபதியாக நடித்தவர் ஷோபனா. இவரது தோற்றத்திற்கும் நடனத்திறமைக்கும் ஏற்ற பொருத்தமான வேடம். கண்களிலேயே தன் உரையாடலை நிகழ்த்தினார். ரவுடியாகச் சுற்றும் ரஜினியைப் பார்த்து முதலில் மிரள்வது, பிறகு அவரின் நல்லியல்பைப் புரிந்து கொண்டு தன்னிச்சையாகக் காதலில் விழுவது, தன் தகப்பனாரை மம்மூட்டி மிரட்டும் போது குறுக்கே வந்து கண்ணீருடன் தடுப்பது, “போ... யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோ” என்று வெறுப்பில் குமுறும் ரஜினியிடம் மௌனக் கண்ணீருடன் விடைபெறுவது, திருமணத்திற்குப் பிறகு ரஜினியைச் சந்திப்பது... என ஷோபனாவின் தமிழ்ப்பட வரிசையிலும் ‘தளபதி’ ஒரு மறக்க முடியாத படம்.

குறைந்த காட்சிகளே வந்தாலும் தன் மௌனமான நடிப்பால் கவர்ந்து விட்டார் பானுப்பிரியா. ஷோபனாவைப் போலவே இவரும் தன் மௌன முகபாவங்களால் உணர்ச்சிகளைச் சிறப்பாகக் கடத்தியிருப்பார். மம்மூட்டியின் உதவியாளராக நாகேஷ் ஓரமாகச் சத்தமில்லாமல் வந்து போனார். “உனக்குப் பயம் கிடையாது. என்கிட்ட வந்துடு” என்று ரஜினியைச் சாமர்த்தியமாக அழைக்கும் ‘சைலண்ட்’ வில்லனாக அம்ரீஷ்புரி அசத்தியிருந்தார். அம்மா – பிள்ளையின் பாசத்திற்குப் பாலமாக நின்று கண்ணியமான வேடத்தை ஏற்றிருந்தார் ஜெய்சங்கர். சாருஹாசனுக்கு வழக்கமான வேடம். ஒரு தந்தையின் பாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருந்தார். மம்மூட்டியின் மனைவியாக தன் பங்களிப்பைச் சரியான அளவில் தந்திருந்தார் கீதா. அதுவரை மலையாளத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த நடிகர் மனோஜ் கே.ஜெயனைத் தமிழில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். மம்மூட்டியின் வலதுகரமாக வந்து பிறகு துரோகம் செய்யும் சிறிய பாத்திரம். பல படங்களில் ஸ்ட்ண்ட் நடிகராக வந்து போன தினேஷிற்கு இதில் ரஜினியுடன் ஒரு சோலோ பைட் காட்சி. இதில் கிடைத்த புகழ் காரணமாக ‘தளபதி’ தினேஷ் என்கிற அடைமொழி இவருடன் பின்னால் இணைந்தது.

தளபதி
தளபதி

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி ரஜினியின் ‘மாஸ்’ குறையாமலும் தன்னுடைய ஸ்டைலைச் சிதைக்காமலும் மிக நேர்த்தியாக இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். படத்தின் ஆரம்பக் காட்சிகளே கவிதையாக இருக்கும். திருமணத்திற்கு முந்தைய உறவில் குழந்தை பெற்றுவிடும் ஓர் இளம்பெண், தன் குழந்தையைக் கண்ணீருடன் ஓடும் ரயிலில் போட்டு விடுவதும், பிறகு பரிதவிப்புடன் ரயிலின் பின்னாலேயே ஓடி வருவதும் கறுப்பு – வெள்ளைக் காட்சிகளாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

"யாரு?" – "தேவா!" – மணிரத்தினச் சுருக்க வசனம்

வழக்கமான ஹீரோ என்ட்ரி சீன் இல்லைதான். என்றாலும் கொட்டும் மழையில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சியில் ரஜினியின் பாதி முகம் மட்டும் டைட்குளோசப்பில் தோன்றும் அந்த அறிமுகக் காட்சியே அட்டகாசமாக இருக்கும். சுருக்கமான வசனங்களுக்கு மணிரத்னம் புகழ் பெற்றவர். இதில் வரும் ஒரு காட்சியில் வசனம், (மணி)ரத்தினச் சுருக்கமாக அமைந்திருக்கும். கொலைக் குற்றத்திற்காகக் காவல் நிலையத்தில் பயங்கரமாக அடிவாங்குவார் ரஜினி. ஆனால் திடீரென்று ஒரு மாற்றம் நிகழும். "நான்தான் கொலை செய்தேன்” என்று ஒருவர் தன்னால் வந்து ஆஜராவார். ரஜினி விடுவிக்கப்படுவார். இருவரும் கடக்கும் தருணத்தில் “ஏன்?” என்று ரஜினி ஆச்சரியத்தோடு கேட்க “தேவா” என்கிற ஒற்றை வார்த்தையோடு அவர் கடந்து விடுவார். படம் வெளியான சமயத்தில் அரங்கில் பலத்த கைத்தட்டல் வாங்கிய காட்சி இது.

'தளபதி' திரைப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் நடந்தது. குந்திதேவி தனக்குப் பிறந்த குழந்தையை நதியில் இடுவார். எனவே அப்படியொரு இடத்தை மணிரத்னம் தேர்ந்தெடுத்திருந்தார். அங்குள்ள புராதன இடங்களும் பின்னணியும் படத்திற்குப் பொருத்தமாக இருந்தன. ரஜினியின் வீடு இருந்த குடிசைப்பகுதி சென்னையில் அரங்காக அமைக்கப்பட்டது. தோட்டா தரணி வழக்கம் போல் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தார்.
தளபதி
தளபதி

சின்னத் தாயவள் தந்த ராசாவே...

மணிரத்னத்தின் சிறப்பான இயக்கத்தைத் தாண்டி ‘தளபதி’ திரைப்படம் ஸ்பெஷல் ஆனதற்கு இளையராஜாவின் இசை ஒரு முக்கிய காரணமாக இருந்தது. தனது அற்புதமான பின்னணி இசையாலும் அட்டகாசமான பாடல்களாலும் படத்தை அடுத்த உயரத்திற்கு எடுத்துச் சென்றார் ராஜா. மணிரத்னம் + இளையராஜா என்றாலே அதன் பாடல்கள் உத்தரவாதமாக நன்றாக இருக்கும் என்பதை முந்தைய ஆல்பங்கள் ஏற்கெனவே நிரூபித்திருந்தன. தளபதியின் ஆல்பம் கூடுதல் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்தக் கூட்டணி பணிபுரிந்த கடைசி திரைப்படமாக ‘தளபதி’ அமைந்தது ஒரு துரதிர்ஷ்டம். கலைஞர்களுக்குள் நிகழும் தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக ரசிகர்கள்தான் நிறைய உன்னத படைப்புகளை இழக்கிறார்கள். ஒருவேளை இன்றும் மணி + ராஜா கூட்டணி தொடர்ந்து கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்?! நினைத்துப் பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. ஆனால் ‘கெட்டதிலும் ஒரு நல்லது நிகழ்வதைப் போல’, மணிரத்னத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உருவாகி அடுத்த சகாப்தத்தை உருவாக்கியதில் மகிழ்ச்சி.

இளையராஜாவின் இசையில் உருவான ஆல்பங்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவற்றில் ஒன்று ‘தளபதி’. ஸ்டிரியோஃபோனிக் இசையை முதன் முதலாகப் பயன்படுத்தியிருந்தார் மணிரத்னம். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. யேசுதாஸூம் ஜானகியும் அற்புதமாகப் பாடியிருந்த ‘புத்தம் புது பூ பூத்ததோ' படத்தில் இடம் பெறவில்லை. எனவே பின்னணி இசையாக அதைப் பயன்படுத்தினார் ராஜா. பானுப்பிரியாவை ரஜினி திருமணம் செய்து அழைத்து வரும் போது இந்தப் பாடல் இசையாக ஒலிக்கும்.

தமிழ் சினிமாவில் ‘தீம் மியூசிக்’ என்னும் பாணி, ராஜாவின் வருகைக்குப் பின்னர்தான் நிகழ்ந்தது. ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே’ பாடலின் துவக்க இசையும் ரயிலின் கூவல் சத்தமும் அதைத் தொடரும் சாரங்கி இசையும் மனதை உருக்கும் வகையில் இருக்கும். இதைக் கருப்பொருள் இசையாகப் படம் முழுவதும் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார் ராஜா. குறிப்பாக ரஜினியும் ஸ்ரீவித்யாவும் தோன்றும் காட்சிகளில் இந்த இசை பின்னணியில் உருக்கமாக ஒலிக்கும். சாருகேசி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை ஜானகி அருமையாகப் பாடியிருந்தார். ‘தாயழுதாளே நீ வர... நீ அழுதாயே தாய் வர’... என்று இந்தப் படத்தின் ஒன்லைனை ஒரே வரியில் அற்புதமாகக் கடத்தியிருந்தார் கவிஞர் வாலி. அனைத்துப் பாடல்களையும் படைத்தவர் இவர்தான்.

‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடல் மும்பையில், ஆர்.டி.பர்மனின் ஒலிப்பதிவுக்கூடத்தில் பதிவானது. இந்தப் பாடலுக்கு ராஜா இசையமைத்திருக்கும் விதத்தைக் கண்டு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் பிரமித்துப் போய் பாராட்டினார்கள். போருக்குச் சென்றிருக்கும் தலைவனை நினைத்து தலைவியும் போர்முனையில் நின்றபடி தலைவனும் மனம் உருகும் இந்தக் காட்சிகளை, சங்கப்பாடல்களின் காலத்தை நினைவுபடுத்தும்படியாக அமைத்திருந்தார் மணிரத்னம். அவருடைய ஆதர்ச இயக்குநரான அகிரா குரசேவாவின் ‘செவன் சாமுராய்ஸ்’ திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பில் இந்தப் பாடலின் போர்க்களக்காட்சிகளை உருவாக்கினார். மினிமலிச பாணியில் குறைந்த அளவிலான குதிரைகள், நபர்களை வைத்துக் கொண்டே மிக அற்புதமாகப் படமாக்கியிருப்பார். இந்தப் பாடலில் குழலோசை பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் கேட்க அத்தனை இனிமையானது.

தளபதி
தளபதி

‘ராக்கம்மா கையைத் தட்டு’ பாடலின் இசைக்கோர்வையும் அபாரமானது. பாடல் முழுவதும் வயலின்களை ரணகளமாகத் தெறிக்க விட்டிருப்பார் ராஜா. இந்தப் பாடலுக்கு இடையே ஷோபனா நமக்கு அறிமுகமாகும் காட்சி வரும். ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்’... என்கிற தேவாரப் பாடல் வரிகளும் இணைக்கப்பட்டிருக்கும். துள்ளலான இசையையும் பக்தி இலக்கிய வரிகளையும் உறுத்தாமல் அட்டகாசமான கலவையாகத் தந்திருப்பார் ராஜா. இந்தப் பாடலின் நடனத்தில், அப்போது உதவியாளராக இருந்த பிரபுதேவாவின் பிரத்யேக அசைவுகளைக் காண முடியும்.

எஸ்.பி.பி மற்றும் ஜேசுதாஸின் கூட்டணியில் பாடப்பட்ட ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ மறக்க முடியாத அட்டகாசமான பாடல். மிதாலி பானர்ஜி பாடிய ‘யமுனையாற்றிலே’ மனதை உருக்கும் பாடலாக இருந்தது. ‘தளபதி’ ஆல்பத்தின் விற்பனை உச்சபட்ச சாதனையை அந்தக் காலத்தில் படைத்தது.

காவியத்தை ஓவியமாக்கிய சந்தோஷ் சிவன்

இசையைத் தாண்டி ‘தளபதி’ படத்தின் இன்னொரு சிறப்பிற்குக் காரணம் சந்தோஷ் சிவன். இந்தியாவிலுள்ள மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். மணிரத்னத்துடன் சந்தோஷ் சிவன் இணைந்த முதல் படம் இதுதான். ஏறத்தாழ படத்தின் காட்சிகள் அனைத்துமே ஓவியம் போல இருக்கும். இதிகாசத்தின் படி, கர்ணன் என்பவன் சூரியனின் குழந்தை என்பதால் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளில் சூரிய வெளிச்சத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். நாம் தினசரி பார்க்கும் சாதாரண காட்சிகள், சந்தோஷ் சிவனின் கேமராவின் வழியாக மட்டும் எப்படி ஓவியமாக மாறுகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். டைட்குளோசப் காட்சிகளில் நடிகர்களின் முகபாவங்கள் துல்லியமாகத் தெரியும்படி பல காட்சிகளை வடிவமைத்திருப்பார் சந்தோஷ் சிவன்.

இதிகாச ‘கர்ணன்’ இறந்தாலும் தளபதி ‘சூர்யா’ கிளைமாக்ஸில் இறக்கக்கூடாது என்பதை முதலிலேயே தீர்மானித்து விட்டார் மணிரத்னம். படம் சிறப்பாக அமைந்திருந்தாலும் படத்தின் இறுதிக்காட்சிகளில் சமரசம் இருந்ததைப் போல் தோன்றியது. சூர்யா, தேவராஜ் என்கிற சமூகவிரோதிகளை ஒழிக்க வேண்டும் என்று அதுவரை துடித்துக் கொண்டிருந்த கலெக்டர் பாத்திரம், இறுதியில் ‘என் அண்ணன் கூடவா சண்டை போட்டேன்’ என்று சென்டியாவது பொருந்துவதாக இல்லை. அதையும் விட காமெடி என்னவென்றால் “சூர்யா மீது எந்த வழக்கும் சாட்சியமும் இல்லை” என்று காவல் அதிகாரியும் கைகழுவி விடுவார். "இதுக்கா யூ டர்ன் போட்டு இத்தனை பர்னிச்சரை உடைச்சீங்க” என்று நமக்குத்தான் நெருடலாகி விடும்.

தளபதி
தளபதி
மணிரத்னத்தின் ஸ்டைலான மேக்கிங், ரஜினி – மம்மூட்டி கூட்டணியின் சிறப்பான நடிப்பு, இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சந்தோஷ் சிவனின் நேர்த்தியான ஒளிப்பதிவு உள்ளிட்ட பல காரணங்களால் இன்று பார்த்தாலும் தன்னுடைய புத்துணர்ச்சியை இழக்காமல் இருக்கிறார் ‘தளபதி’.