Published:Updated:

சிங்கத்திற்கு சிக்கன் பிரியாணி – சிவாஜிக்கு முதல் மரியாதை; கணிப்புகளைத் தாண்டி பாரதிராஜா வென்ற கதை!

முதல் மரியாதை

தனது எல்லாத் திரைப்படங்களிலும் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதுதான் சிவாஜியின் வழக்கம். இதைப் போலவே கதாசிரியரையும் கொண்டாடத் தெரிந்தவர். ‘ஆசிரியர் சொன்னா அதுல தப்பு இருக்காது’ என்று எழுத்தாளனை மதிக்கத் தெரிந்தவர்.

Published:Updated:

சிங்கத்திற்கு சிக்கன் பிரியாணி – சிவாஜிக்கு முதல் மரியாதை; கணிப்புகளைத் தாண்டி பாரதிராஜா வென்ற கதை!

தனது எல்லாத் திரைப்படங்களிலும் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதுதான் சிவாஜியின் வழக்கம். இதைப் போலவே கதாசிரியரையும் கொண்டாடத் தெரிந்தவர். ‘ஆசிரியர் சொன்னா அதுல தப்பு இருக்காது’ என்று எழுத்தாளனை மதிக்கத் தெரிந்தவர்.

முதல் மரியாதை
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘முதல் மரியாதை’

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

“சிங்கத்திற்கு தயிர்சாதம்தான் போட்டாங்க” – ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சிவாஜி என்னும் மகத்தான நடிகனை தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத ஆதங்கத்தை கமல்ஹாசன் இப்படியாகக் குறிப்பிட்டார். புராணம், இதிகாசம், சமூகம், வரலாறு என்று பல்வேறு பாத்திரங்களில் ராஜராஜ சோழனாக, பாரதியாக, கப்பலோட்டிய தமிழனாக நடித்துத் தீர்த்துவிட்டார் சிவாஜி. ஒரு கட்டத்தில் அவரை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தமிழ் சினிமா இயக்குநர்களுக்குத் தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் என்னும் எதிர்துருவம் அதிகார அரசியலுக்குச் சென்று விட்டதால் சிவாஜிக்கான போட்டி என்பது வெற்றிடமாகி விட்டது. கமல், ரஜினி என்னும் அடுத்த தலைமுறை சகாப்தங்கள் வெற்றிகரமாக இயங்க ஆரம்பித்துவிட்டன. தன் வயதை வலுக்கட்டாயமாக மறைத்துக் கொண்ட ஒப்பனையுடன் கோட், சூட், கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு இளம் நடிகைகளுடன் சிவாஜி டூயட் ஆடிய கோலங்களை பொதுவான பார்வையாளர்கள் அவ்வளவாக விரும்பவில்லை. இது சிவாஜியின் தவறல்ல. அவருடைய பாத்திரத்தை வைத்து வித்தியாசமான திரைக்கதை எழுத ஆளே அப்போது இல்லை என்றுதான் தோன்றுகிறது.

சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்

சிங்கத்திற்கு சிக்கன் பிரியாணி – சிவாஜிக்கு முதல் மரியாதை

நாடக உலகத்தை பள்ளியாகக் கொண்டு வந்தவர் என்பதால், சிவாஜியிடம் அதற்கேற்ற நடிப்பு பாணி இருந்தது. உரத்த குரலில் ஏற்ற இறக்கங்களுடன் மிகையான முக அசைவுகளுடன் நடிப்பதை அவரால் கைவிட முடியவில்லை. அதுவே அவரது தனித்த அடையாளமாகவும் ஆகிப் போனது. ஆனால் அவரால் மிக இயல்பாகவும் subtle ஆகவும் நடிக்க முடியும் என்பதை நடிகர் சோ ஒருமுறை விவரித்திருக்கிறார். சிவாஜியிடமிருந்த இயல்பான நடிகனை சரியான முறையில் பயன்படுத்த யாருக்கும் தெரியவில்லை. யானையைக் கட்டி எப்படித் தீனி போடுவது என்று பல இயக்குநர்கள் நினைத்திருக்கலாம் அல்லது சிவாஜியின் காலகட்டம் ஏறத்தாழ முடிந்துவிட்டது என்று கருதியிருக்கலாம். எனவே சம்பிரதாயமான குணச்சித்திர வேடத்தில் மட்டுமே அவரைப் பயன்படுத்தினார்கள்.

பிந்தைய காலக்கட்டத்தில் சிவாஜி என்னும் சிங்கத்திற்கு சிக்கன் பிரியாணி போட்ட திரைப்படங்கள் என்று இரண்டை மட்டுமே முக்கியமாகச் சொல்ல முடியும். ஒன்று, 'தேவர் மகன்'. இன்னொன்று ‘முதல் மரியாதை’. அந்தப் படத்தைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நினைவுகூரப் போகிறோம்.

வித்தியாசமான காதலைப் பேசிய முதல் மரியாதை

இளம் வயதில் உருவாகும் காதல், அதில் ஏற்படும் பிரச்னைகள், வில்லன்கள், க்ளைமாக்ஸ் தீர்வுகள் போன்றவற்றைப் பற்றி தமிழ் சினிமா திகட்டத் திகட்ட நிறையப் பேசியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரதான கச்சாப் பொருளே காதல்தான். ஆனால் நடுத்தர வயதைத் தாண்டிய ஓர் ஆசாமிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கும் இடையில் உருவாகிற களங்கமற்ற நேசத்தைப் பற்றி தமிழ் சினிமா அதுவரை பேசியதில்லை. பழைய மரபுகளை உடைக்கும் வழக்கம் கொண்ட பாரதிராஜாவே இதையும் உடைத்துக் கொண்டு, காதலின் ஒரு புதிய பரிமாணத்தை ‘முதல் மரியாதை’யின் மூலம் சித்திரித்தார்.

பாரதிராஜா எப்போதோ பார்த்திருந்த ஒரு அயல் சினிமாவில், ஒரு முதிய வயது ஓவியனுக்கும் இளம் பெண்ணுக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. இதைப் போலவே ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலுபேர்’ என்கிற நாவலின் மையக்கருவும் இதுதான். இந்த இரண்டு படைப்புகளின் அடிப்படையை வைத்து ஒரு புதிய கதையை உருவாக்கச் சொல்லி தனது ஆஸ்தான கதாசிரியரான ஆர்.செல்வராஜை கேட்கிறார் பாரதிராஜா.

பாரதிராஜா
பாரதிராஜா

ருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கிக்கும் அவரது படைப்புகளை எழுதித் தருவதற்கு உதவியாளராக வந்த அன்னாவிற்கும் இடையில் ஏற்படுகிற காதல் என்கிற விஷயம் ஆர்.செல்வராஜை ஈர்க்கிறது. இந்த மையத்தை வைத்துக் கொண்டு தமிழகக் கிராமத்தின் பின்னணியில் மளமளவென்று கதையை எழுதி முடிக்கிறார் செல்வராஜ். அதை வாசித்துப் பார்த்த பாரதிராஜாவிற்கு மிகவும் பிடித்துப் போக உடனே படமாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்குகிறார்.

சிவாஜி நடித்த பாத்திரத்திற்கு முதலில் பரிசிலீக்கப்பட்டவர் நடிகர் ராஜேஷ். ஆனால் படம் வியாபாரம் ஆகுமா என்று விநியோகஸ்தர்கள் ஆட்சேபம் எழுப்பினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை பரிந்துரைத்தார் செல்வராஜ். ஆனால் பாடகராக பிஸியாக இருந்த எஸ்.பி.பியால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. (பின்னர் வந்த ‘கேளடி கண்மணி’யும் வயதானவர்களின் காதலைப் பேசிய படம்தான்). "சிவாஜியை அணுகிப் பார்த்தால் என்ன?" என்கிற யோசனை பாரதிராஜாவிற்கு வந்தது. உடல்நலம் சரியில்லாத நிலையிலும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிவாஜி.

ராதா நடித்திருந்த ‘குயில்’ என்கிற பாத்திரத்தில் நடிக்க ராதிகா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் யோசனைக்கு வந்தாலும் பாரதிராஜாவிற்கு அவை பொருத்தமாகப் படவில்லை. ‘மண்ணுக்கேற்ற நிறம் கொண்ட பெண் இருந்தால்தான் பாத்திரம் சோபிக்கும்’ என்று நினைத்த பாரதிராஜா, ராதாவை உள்ளே கொண்டு வந்தார். தனது குருநாதரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மற்றும் சிவாஜிக்கு இணை என்னும் இரட்டிப்பு சந்தோஷம் ராதாவிற்கு ஏற்பட்டது.

கணவனை எப்போதும் கரித்துக் கொட்டும் ‘சிடுசிடு’ மனைவியின் பாத்திரத்தில் நடிக்க வடிவுக்கரசி அழைக்கப்பட்டிருந்தார். ‘கே.ஆர்.விஜயா மாதிரி சிவாஜிக்கு சிறந்த ஜோடியாக தான் நடிக்கப்போகிறோம்’ என்கிற கனவுடன் ஆசையாக வந்த வடிவுக்கரசிக்கு வசனங்களை வாசித்த முதல் நாளிலேயே திகைப்பும் கோபமும் ஏற்பட்டது. ‘சிவாஜியை திட்டி நடிக்க வேண்டுமா?’ என்கிற ஆட்சேபம் ஏற்பட்டது. ஆனால் பாரதிராஜா வற்புறுத்தியதால் வேண்டாவெறுப்பாக நடிக்க ஆரம்பித்த வடிவுக்கரசிக்கு இயக்குநரின் மீது பொல்லாத கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தையெல்லாம் தன் பாத்திரத்தின் மூலம் இறக்கி வைத்தார்.

முதல் மரியாதை
முதல் மரியாதை

ஆனால், படம் வெளிவந்த பிறகு தனது பாத்திரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட வடிவுக்கரசி, தனது கலைப்பயணத்தில் ‘முதல் மரியாதை’ மிக முக்கியமானதொரு படைப்பு என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

ஜானகி எம்.ஜி.ஆரின் உறவினரான திலீபன் என்கிற இளைஞன், சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ரஞ்சனி ஆகிய இருவரும் இந்தத் திரைப்படத்தில் இளம் காதலர்களாக அறிமுகமானார்கள். ஜனகராஜ், சத்யராஜ், அருணா, வீராச்சாமி உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் இணைந்தார்கள். சத்யராஜ் அப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவின் படத்தில் ஒரு காட்சியாவது நடித்துவிட வேண்டும் என்பதால் விடுமுறை தினத்தில் வந்து நடித்துத் தந்தார். அவர் வரும் காட்சியானது ஒரே நாளில் படமாக்கப்பட்டு விட்டது.

“இந்தப் படம் நிச்சயம் ஓடாது” – இளையராஜாவின் வெளிப்படையான விமர்சனம்

கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள ‘தலக்காடு’ என்னும் இடத்தின் பின்னணியில் படப்பிடிப்பு நடப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கின. கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பாரதிராஜா. எனவே காவிரி ஆறு வளைந்து ஒடும் அந்தப் பசுமையான பிரதேசம் இயக்குநரின் மனதில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும். பழைமை கலையாமல் உறைந்திருக்கும் கிராமத்து வீடுகள் படத்தின் பின்னணிக்கு பொருத்தமாக இருந்தன. ஆனால் ஒரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டும். அண்டை மாநிலத்தின் பின்னணியாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டின் கிராமத்தில் கதை இயங்குவது போன்ற சித்தரிப்பை பாரதிராஜா வெற்றிகரமாக உருவாக்கிவிட்டார். அதுதான் சினிமாவின் மேஜிக். ஆனாலும் கூட பரிசல் ஓட்டும் பெண் எங்கே தமிழ்நாட்டில் இருக்கிறார், ஏன் நாயகியை ஜாக்கெட் அணியாதவராக காட்டுகிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

ராஜாவின் இசை ராஜாங்கம் பற்றி நமக்குத் தெரியும். மிகச்சுமாரான படத்தைக் கூட தனது அற்புதமான இசையால் தூக்கி நிறுத்திவிடுவார். ‘முதல் மரியாதை’ திரைப்படத்தை ராஜா இல்லாமல் துளி கூட நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு இதன் பாடல்களும் பின்னணி இசையும் படத்தோடு அத்தனை ஒன்றிப் போயிருந்தன.
முதல் மரியாதை
முதல் மரியாதை

‘குக்கூ’ என்று சோகமாக கூவும் குயிலின் துயரம், படம் முழுவதும் நம்மை வருடிக் கொண்டேயிருக்கும் ‘அடி நீதானா அந்தக் குயில்’ என்கிற மெட்டின் இசை, படம் முழுவதும் புல்லாங்குழலின் இசை அபாரமாகப் பயன்படுத்தப்பட்டிருந்த விதம் போன்ற ஜாலங்கள் இந்தப் படத்தின் உயரத்தை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டன. பாரதிராஜாவே கண்கலங்கி ஒப்புக் கொண்ட விஷயம் இது.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பின்னணி இசை அமைப்பதற்கு முன்னால் படத்தைப் பார்த்த ராஜாவிற்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. ‘இந்தப் படம் நிச்சயம் ஓடாது. நண்பன் பாரதிராஜா நஷ்டமடைவார்’ என்றே உறுதியாக நம்பினார். ராஜா மட்டுமல்ல, கதை, திரைக்கதை உருவாக்குவதில் பழுத்த அனுபவமுள்ள பஞ்சு அருணாச்சலம் உட்பட பல பிரபலங்கள் இந்தப் படத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்கள். “வயசான ஆள் லவ் பண்ற மாதிரி எடுத்தா யாரு பார்ப்பாங்க?” என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஏன், பாரதிராஜாவின் உதவி இயக்குநர்களுக்குகூட நம்பிக்கையில்லை. ஆனால் இந்தப் படத்தின் மீது தளராத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஒருவர் மட்டுமே இருந்தார். ‘தமிழக மக்கள் ரசனையுள்ளவர்கள், நிச்சயம் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள்' என்கிற நம்பிக்கை அவருக்கு உறுதியாக இருந்தது. அந்த நபர் பாரதிராஜா மட்டுமே. அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.

மலைச்சாமி – குயில் – பொன்னாத்தா

படம் தயாராக இருந்தாலும் வாங்குவதற்கு ஆளில்லை என்பதால் தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமே துணிச்சலாக வெளியிட்டார் பாரதிராஜா. பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியிருந்தாலும் முதல் இரண்டு நாள்களுக்கு தியேட்டரில் கூட்டமில்லை. சிவாஜி, ராதா, ராஜாவின் பாடல்கள் என்பதற்காக சிலர் வந்தார்கள். இவற்றைத் தவிர மயான அமைதிதான். ஆனால் மூன்றாவது நாளில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. வாய்மொழியாக இந்தப் படத்தின் சிறப்பு பரவி கூட்டம் கூட்டமாக வந்து பார்க்கத் துவங்கினார்கள். படம் சூப்பர் ஹிட். மரபை மீறிய காதலாக இருந்தாலும் கவித்துவமாகச் சொல்லப்பட்டதால் ஆட்சேபமின்றி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ‘படம் ஓடாது’ என்று சொன்னவர்களின் கணிப்பைப் பொய்யாக்கினார்கள்.

‘மலைச்சாமி’ என்கிற சிவாஜியின் கேரக்டர் இயல்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த ஊரின் பெரிய தலைக்கட்டுக்களில் ஒருவர். அவர் சொன்ன சொல்லை ஊரே மதித்து வணங்கும். ஆனால் இன்னொரு பக்கம் குழந்தை மனம் படைத்தவர். குயிலுக்கு எசப்பாட்டு பாடுபவர். இயற்கையின் அழகை குழந்தைகயின் கண்களோடு பார்த்து ரசிப்பவர். பிலுபிலுவென்ற வார்த்தைகளால் படுத்தியெடுக்கும் மனைவியின் வாயில் விழாமல் தப்பிக்க முயல்பவர். ஊரே இவரின் பேச்சைக் கேட்டாலும் அடாவடி மனைவி மட்டும் இவரை மதிப்பதில்லை.
முதல் மரியாதை
முதல் மரியாதை

தன்னை வளர்த்த மாமனின் கெளரவம் கருதி, அவர் காலில் விழுந்து கேட்டுக் கொண்ட ஒரே காரணத்திற்காக மாமனின் மகளான ‘பொன்னாத்தா’வை திருமணம் செய்து கொள்கிறார் மலைச்சாமி. விருப்பமற்ற இல்லற வாழ்க்கையின் மனப்புழுக்கத்தை பல வருடங்களாக சகிச்த்துக் கொண்டிருப்பவர். பெறாத மகளாக இருந்தாலும் அவள் மீது உண்மையான தகப்பனை விடவும் அதிக பாசத்தைக் கொட்டுபவர். ‘உள்ளே அழுகறேன்… வெளியே சிரிக்கறேன்’ என்கிற கதையாக விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவரின் பாலைவன வாழ்க்கையில் இளம் தென்றலாய் நுழைகிறாள் ‘குயில்’. வழக்கமான கிராமத்துக் குசும்புகளுடன் ஆரம்பிக்கும் இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் களங்கமற்ற அன்பாகவும் குற்றமற்ற நேசமாகவும் மாறுகிறது. ஊராரின் எதிர்ப்பிற்கும் அவதூறுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் இவர்களின் உறவு ஒரு காவியத் துயரத்துடன் நிறைவடைவதை உருக்கத்துடன் சித்திரித்திருந்தார் பாரதிராஜா.

சிவாஜி முதல் நாள் படப்பிடிப்பிற்குத் தயாராகி வரும்போது தன்னுடைய வழக்கப்படி ‘பெரிய விக், மீசை’ என்று சினிமாவிற்கான தோரணையுடன் வந்தததைப் பார்த்து திகைத்துப் போன பாரதிராஜா “ஐயா... நீங்க இயல்பான தோற்றத்தில் வந்தால் போதும். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்ல “அப்படியா சொல்ற... சரிப்பா” என்று சிவாஜி உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தத் திரைப்படம் என்றல்ல, தனது எல்லாத் திரைப்படங்களிலும் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதுதான் சிவாஜியின் வழக்கம். இதைப் போலவே கதாசிரியரையும் கொண்டாடத் தெரிந்தவர். ‘ஆசிரியர் சொன்னா அதுல தப்பு இருக்காது’ என்று எழுத்தாளனை மதிக்கத் தெரிந்தவர்.

படம் மகத்தான வெற்றியடைந்த பின்னரும் கூட “என்னமோப்பா... பாரதி என்ன சொன்னாரோ அதைத்தான் நான் செஞ்சேன். எனக்கு இதுல பெருமை எதுவும் கிடையாது” என்று முழு கிரெடிட்டையும் இயக்குநருக்குத் தந்த பெருந்தன்மை சிவாஜியிடம் இருந்தது.
முதல் மரியாதை
முதல் மரியாதை

‘குயில்’ பாத்திரம் என்பது ராதாவிற்கு லைப் டைம் கேரக்ட்டர்களில் ஒன்றாக அமைந்தது. அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதில்கூட ராதாவின் பெயர் அடிபட்டது. ஆனால் இவருக்கு ராதிகா டப்பிங் குரல் தந்திருந்ததால் விதிகளின் படி ராதாவைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலைமை. ஊர்ப் பெரியவரான சிவாஜியிடம் துடுக்குத்தனமாக பேசுவதாகட்டும், மறைந்திருந்து எசப்பாட்டு பாடுவதாகட்டும், அவரின் சொந்தக்கதையை அறிந்து வருந்துவதாகட்டும், அதுவே பிறகு பாசமாகவும் நேசமாகவும் மலர்வதாகட்டும், “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகட்டும். ‘குயில்’ பாத்திரத்திற்குள் அற்புதமாக கூடு புகுந்தார் ராதா. இதற்கான கிரெடிட் பாரதிராஜாவையும் சேரும். கல்லையும் நடிக்க வைக்கும் கலைஞன் அவர்.

வடிவுக்கரசிக்கும் இதுவொரு லைஃப் டைம் கேரக்ட்டராக ஆயிற்று. "அடாவடி மனைவி கேரக்டரா 'முதல் மரியாதை'யில வடிவுக்கரசி செய்வாங்கள்ல.. அந்த மாதிரி” என்று கதை விவாதங்களில் பிறகு உதாரணம் சொல்லுமளவிற்கு இந்தப் பாத்திரம் அழுத்தமாக நிலைத்துப் போயிற்று. கிராமத்து சொலவடைகளை நையாண்டியான குத்தலுடன் இழுவையான மொழியில் பேசும் ‘பொன்னாத்தா’வாகவே மாறிவிட்டார் வடிவுக்கரசி. “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” என்று திகிலான தோரணையில் வந்து கெஞ்சும் வீராச்சாமியின் வசனமும் மக்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்து போனது. “ஆத்தா... வெத்தலைக்கு கொஞ்சம் சுண்ணாம்பு கொடேன்... சுண்ணாம்புக்கு கொஞ்சம் வெத்தலை கொடேன்” என்கிற வசனத்தில் ஆரம்பித்து ‘கயிறு திரிக்கும்’ வேலையில் ஈடுபடுபவராக ஜனகராஜ் சுவாரஸ்யப்படுத்தியிருந்தார். மனைவி மீது எப்போதும் சந்தேகப்பட்டு அடித்து உதைக்கும் பாத்திரம் இவருக்கு.

மாண்டேஜ் காட்சிகளை இணைத்து மாயாஜாலம் செய்த பாரதிராஜா

பாரதிராஜாவின் திரைமொழியைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். வானத்துப் பறவைகளின் உற்சாகம், பெண்ணின் ஜிமிக்கி அசைவு, கிளை நுனியில் துள்ளும் மலர்கள், உற்சாகமாகப் பாயும் கடல் அலை, காற்றில் ஆடும் செடிகளின் குதூகலம் போன்ற காட்சிகளைத் திறமையாக அடுக்குவதன் மூலம் அந்தக் குதூகலகத்தை பார்வையாளனுக்கும் கடத்திவிடும் ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கிய சாதனை பாரதிராஜாவிற்கு உண்டு. ‘முதல் மரியாதை’ திரைப்படத்திலும் அது போல் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். தன்னுடைய காதல் மனைவி செவுளி இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் புல்லாங்குழலை தூக்கிப் போட்டுவிட்டு ஓடி வருவான் செல்லக்கண்ணு. இதர காட்சிகளுக்கு நடுவில் புல்லாங்குழல் கீழே விழுவதை துண்டு துண்டாக காட்டி அந்தத் துயரத்தின் வீரியத்தை இயக்குநர் அதிகப்படுத்தியிருப்பார். இதற்கு ராஜா தந்திருக்கும் பின்னணி இசையும் அற்புதமாக இருக்கும். இயக்குநரின் கண்களாக விளங்கும் பி.கண்ணனின் ஒளிப்பதிவு தனித்துக் குறிப்பிடப்பட வேண்டிய சிறப்பைக் கொண்டது.

முதல் மரியாதை படப்பிடிப்பில்...
முதல் மரியாதை படப்பிடிப்பில்...
‘இளவட்டக்கல்லை’ தூக்கிவிட்டால் உன்னை கட்டிக் கொள்கிறேன்’ என்று ராதா விளையாட்டாக சவால்விட, அந்தக் கல்லை கடந்து போகும் ஒவ்வொரு முறையும் சிவாஜி அதைத் தூக்குவதற்கு குறுகுறுப்புடன் முயல்வதும், அதற்குப் பின்னால் ஒலிக்கிற குறும்பான இசையும் ரசிக்கத்தக்கது.

இந்தத் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இனிமையானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. டி.எம்.செளந்தராஜனுக்குப் பிறகு மலேசியா வாசுதேவனின் குரல் சிவாஜிக்கு மிகப் பொருத்தமாக அமைந்தது என்பதை ‘முதல் மரியாதை’ பாடல்கள் மீண்டும் நிரூபித்தன. ‘பூங்காற்று திரும்புமா’ பாடலில் உள்ள ஏக்கம், அதற்கு முரணாக ‘ஹே... குருவி. சிட்டுக்குருவி’ பாடலில் உள்ள உற்சாகம் என்று அசத்தியிருந்தார் மலேசியா. இன்னொரு பக்கம் ஜானகியம்மாவின் ராஜாங்கம். ‘அந்த நெலாவத்தான் கையில பிடிச்சேன்' என்று ரொமான்ஸில் பின்னியெடுத்தவர், ‘வெட்டிவேரு வாசத்தில்’ நம்மை உருக்கியெடுத்துவிட்டார்.

இளையராஜாவிற்குக் கிடைத்திருக்க வேண்டிய தேசிய விருது

படம் பிடிக்காமலேயே இத்தனை அருமையாக ராஜா இசையமைத்தார் என்றால், படம் பிடித்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்காக ராஜாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அதுதான் ‘முதல் மரியாதை’யாக இருந்திருக்கும். ஆனால் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவிற்கும் 'சிறந்த தமிழ்ப் படம்’ என்கிற பிரிவில் பாரதிராஜாவிற்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

கொலைகாரனின் கட்டைவிரல், செவுளியின் வாயில் இருந்து எடுக்கப்படுவதும் அதன் மூலம் குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவதும் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ என்னும் நாவலில் இருந்து அனுமதியுடன் எடுத்தாளப்பட்டிருந்தது.

முதல் மரியாதை
முதல் மரியாதை

‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் பல உணர்ச்சிகரமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் திரைக்கதை அருமையாகப் பின்னப்பட்டிருந்தது. ராதா சமைக்கும் மீனை வெட்டி வீறாப்புடன் முதலில் மறுத்துவிட்டு பிறகு ‘உனக்கு வயித்த வலிக்கும். அதான் சாப்பிடறேன்’ என்று குழந்தைத்தன்மையுடன் சிவாஜி சொல்லும் காட்சி அற்புதமானது. “உன் மனசுல நான் இல்ல... உண்மையைச் சொல்லுய்யா” என்று கேட்கும் ராதாவின் கன்னத்தில் அறைந்து விட்டு “பச்சைப் புள்ளன்னு நெனச்சு பழகினது தப்பாப் போச்சு” என்று பாவனையாகக் கோபப்படும் சிவாஜி, கடைசிக்காட்சியில் தன் காதலை ஒப்புக் கொள்வது உருக்கமானது. “என் புருஷனை நீ வெச்சிருக்கியா சொல்லுடி” என்று துடைப்பைக் கட்டையால் ராதாவை வடிவுக்கரசி அடிப்பதும், ஊராரின் அவதூறு தாங்காமல் “ஆமாம். நான் அவளை வெச்சிருக்கேன்” என்று பஞ்சாயத்தின் நடுவில் சிவாஜி வாக்குமூலம் தருவதும் அந்த வார்த்தைகளை மலர் தூவல்களாக ராதா கற்பனை செய்து கொள்வதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

சிவாஜி, ராதா, பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என்று இதில் பணியாற்றிய பல கலைஞர்கள், வருங்காலத்தில் கூட `முதல் மரியாதை’யுடன் நினைவுகூரப்படுவார்கள் என்றால் அதற்கு இந்தத் திரைப்படம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும்.

'முதல் மரியாதை' படத்தில் நீங்கள் ரசித்த விஷயங்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.