Published:Updated:

சின்னக் கவுண்டர்: “இந்தப் படம் ஓடுமா?” – விஜயகாந்தின் சந்தேகமும், மொய் விருந்து குறித்த காட்சிகளும்!

சின்னக் கவுண்டர்

‘மொய் விருந்து’ என்னும் கிராமத்துக் கலாசாரம் தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சுற்றி அறுபதுகளில் உருவானதொரு பழக்கம். கிராமங்களில் நடக்கும் இந்தச் சடங்கை முதன் முதலில் திரைப்படத்தில் காட்சியாக வைத்தார் உதயகுமார்.

Published:Updated:

சின்னக் கவுண்டர்: “இந்தப் படம் ஓடுமா?” – விஜயகாந்தின் சந்தேகமும், மொய் விருந்து குறித்த காட்சிகளும்!

‘மொய் விருந்து’ என்னும் கிராமத்துக் கலாசாரம் தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சுற்றி அறுபதுகளில் உருவானதொரு பழக்கம். கிராமங்களில் நடக்கும் இந்தச் சடங்கை முதன் முதலில் திரைப்படத்தில் காட்சியாக வைத்தார் உதயகுமார்.

சின்னக் கவுண்டர்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘சின்னக் கவுண்டர்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

இந்தப் படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் இது தொடர்பான சில ஆதாரமான விஷயங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

‘தமிழ் சினிமாவில் சாதி’ என்பது பெரிய ஆய்விற்கான கருப்பொருள். தமிழ் சினிமா துவக்கத்தில் பிராமண பாஷையைப் பேசியது ‘காளிதாஸ்’ திரைப்படம் (1931), தமிழில் உருவான முதல் ‘பேசும் படம்’ என்று சொல்லப்பட்டாலும் அதில் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளும் உரையாடலில் வந்தன. வடதமிழகத்தின் மொழியை முதலியார் சமூகத்தின் பின்னணியோடு ‘சபாபதி’ (1941) படத்தில் கேட்க முடியும். “என்ன மிஸ்டர் பிள்ளைவாள்?” என்று வசனங்களில் சமூக அடையாளங்கள் இயல்பாக வந்து போயின.

‘சபாபதி’ (1941)
‘சபாபதி’ (1941)

பெரியார் போன்றவர்கள் முன்னெடுத்த சமூக நீதி போராட்டங்களுக்குப் பிறகு தனிநபர்கள், தெருப் பலகைகளிலிருந்த சாதிய அடையாளங்கள் மெல்ல மறைந்தன. இந்தப் போக்கு சினிமாவிலும் எதிரொலித்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் படத்தின் தலைப்பிலோ, வசனத்திலோ, உள்ளடக்கத்திலோ வந்தால் அது தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் ஏற்பட்டன. சில சமயங்களில் இரு பிரிவினரிடையே பிளவு ஏற்பட்டு வன்முறையில் முடிந்த சம்பவங்களும் உண்டு.

இதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் சாதிய அடையாளங்களைச் சித்திரிப்பதில் கவனமும் எச்சரிக்கையும் சென்சார் அச்சமும் ஏற்பட்டது. பல திரைப்படங்களில் ஹீரோ என்ன சாதி என்பதைக் காட்சிகளை வைத்துக் கண்டுபிடிப்பது கடினம். பொதுவாக அவர்கள் ஏழைகளாகச் சித்திரிக்கப்படுவார்கள். தன்னுடைய பிம்பமும் திரைப்படங்களும் அனைத்து சமூகத்தினரையும் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கம்தான் இதன் பின்னால் உள்ள பிரதான காரணம்.

சாதிகளும் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட மாற்றமும்

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு சாதியை வைத்து அரசியல் செய்யும் போக்கு அதிகமாயிற்று. குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு அரசியல் கட்சிகளாக உருமாறினார்கள். எனவே இந்தப் போக்கு சினிமாவிலும் எதிரொலித்தது.

எண்பதுகளில் இடைநிலைச் சாதியினரின் அடையாளங்களைப் பின்னணியாக வைத்து தமிழ் சினிமாக்கள் உருவாகின. அவர்களை ஹீரோக்களாக நிறுத்தி பெருமை பேசும் படங்கள் வந்தன. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் பெருமையையும், சாதியப் பெருமிதங்களையும் இந்தப் படங்கள் முன்வைத்தன. கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் போன்ற இயக்குநர்கள் இம்மாதிரியான திரைப்படங்களை உருவாக்கினார்கள். அந்தந்த சமூகத்தினரிடையே இவ்வகையான திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. இதன் பாடல்களை, வசனங்களை தங்களின் பெருமை பேசும் அடையாளங்களாகப் பலர் மாற்றிக் கொண்டார்கள். இதனால் சாதியக் கலவரங்களும் மோதல்களும் கூட ஏற்பட்டன.

தேவர் மகன் படத்தில நாசர், கமல்ஹாசன்
தேவர் மகன் படத்தில நாசர், கமல்ஹாசன்

ஆனால் இங்கு ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். ‘தேவர் மகன்’ போன்ற திரைப்படங்கள் சாதிய வன்முறையைத் தூண்டிவிடும் படங்களாகக் கருதப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டன. சாதியப் பெருமிதம் பேசும் ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் போது காட்சிகளின் நம்பகத்தன்மைக்காக சில நுண் விவரங்கள் தேவைப்படுகின்றன. அந்தப் பாத்திரம் உண்மைக்கு நெருக்கமாக இயங்க வேண்டியிருக்கிறது. ஆனால் படத்தின் மையம் என்பது சாதியப் பெருமைக்கு எதிரானதா, உடன்பாடானதா என்பதுதான் முக்கியம். “போய் புள்ளகுட்டிங்களை படிக்க வைங்கடா” என்பதுதான் ‘தேவர் மகன்’ படம் சொல்லும் நீதி. ஆனால் இந்த இறுதிப்புள்ளியை சௌகரியமாகக் கைவிட்டு விட்டுப் பாடலின் வரிகளை மட்டும் உருவி தங்களின் பெருமைக்காகச் சம்பந்தப்பட்ட சமூகங்கள் பயன்படுத்திக் கொண்டதால் பல சர்ச்சைகள், வன்முறைகள் நடைமுறையில் ஏற்பட்டன. மருந்தின் கசப்பைத் துப்பிவிட்டு இனிப்பை மட்டும் எடுத்துக் கொண்ட சாதியர்களின் விபரீதத்திற்குப் படங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?

ஆனால் உண்மையில் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய திரைப்படங்கள் வேறு. நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தோண்டியெடுத்து அவற்றின் பெருமை பேசும் படங்கள்தான் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ என்று அத்தகைய காலகட்டத்திற்கு அழுத்தமாக வக்காலத்து வாங்கும் திரைப்படங்களின் பின்னுள்ள ஆபத்தைப் பெரும்பாலோனோர் கவனிக்கவில்லை. இந்த வரிசையில் உருவான திரைப்படம்தான் ‘சின்னக் கவுண்டர்’. இது வெற்றிகரமான படமாக இருந்தாலும் படத்திற்குள் சில பிற்போக்கு அம்சங்களும் இருந்தன.

‘தவசி’ என்கிற சின்னக் கவுண்டர் – விஜயகாந்த்தின் மாற்றம்

விஜயகாந்த்தின் திரைப்பட வரிசையில் ஒரு முக்கியமான வெற்றித் திரைப்படம் என்று ‘சின்னக் கவுண்டரை’ சொல்லலாம். பெரும்பாலும் ஆக்ஷன் ஹீரோவாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்தின் பிம்பத்தை மாற்றிய படம் இது. பொதுவாகத் தான் நடிக்கும் பாத்திரங்களின் ‘கெட்டப்’ பற்றி விஜயகாந்த் அதிகம் அக்கறை கொள்ள மாட்டார். வயதான வேடம் என்றால் மட்டும் சற்று மாற்றம் இருக்கும். இந்த வழக்கத்தை மாற்றி சின்னக் கவுண்டருக்கு என பிரத்யேகமான ‘லுக்’கை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார். ஜெல் போட்டு படிய வாரப்பட்ட தலைமுடி, தழையத் தழைய வெள்ளை வேட்டி, சட்டை, நெற்றியில் விபூதி, குங்குமம் என்று படம் முழுவதும் ஒரு கண்ணியமான ‘பஞ்சாயத்துத் தலைவருக்கான’ தோற்றத்தைக் கொண்டு வந்திருந்தார்.

சின்னக் கவுண்டர்
சின்னக் கவுண்டர்

தோற்றம் மட்டுமல்ல, நடிப்பிலும் விஜயகாந்த் தனது பாத்திரத்தை ஓரளவிற்கு நன்றாகவே கையாண்டிருந்தார். "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” என்பது மீம் உலகத்தில் புகழடைந்திருந்தாலும் காட்சிகளோடு பார்க்கும் போது உருக்கமாகவே இருந்தது. அம்மாவின் பாசப்பிள்ளையாக அவரது உத்தரவைத் தாண்டாத காட்சிகளாகட்டும், சுகன்யாவோடு ரொமான்ஸ் குறும்புகள் செய்யும் காட்சிகளாகட்டும், மனைவியின் பிரிவை எண்ணிக் கலங்கும் காட்சிகளாகட்டும், சர்க்கரை கவுண்டரைச் சாமர்த்தியமாக மடக்கும் காட்சிகளாகட்டும்... பல காட்சிகளில் வித்தியாசமான விஜயகாந்த்தைப் பார்க்க முடிந்தது. இரண்டு சண்டைக் காட்சிகள் இருந்தாலும் ‘ஆக்ஷன் ஹீரோ’ என்பதைத் தாண்டி குணச்சித்திர வார்ப்பில் விஜயகாந்த் கச்சிதமாகப் பொருந்திப் போகும் படங்களில் ஒன்றாக இருந்தது ‘சின்னக் கவுண்டர்’.

சுகன்யாவின் கேரக்டர் வழக்கமான நாயகியைத் தாண்டி கூடுதலான சிறப்பம்சங்களுடன் எழுதப்பட்டிருந்தது. கடுமையான வறுமையிலும் சுயமரியாதையை விட்டுத்தராத பெண்ணாக அவரது கதாபாத்திரம் இருந்தது. கஷ்டத்திற்கு நடுவிலும் தனது தங்கையைப் படிக்க வைக்கும் அக்காவாக அசத்தியிருந்தார். சுட்டிப் பெண்ணாகச் சிறுவர்களுடன் இணைந்து பம்பரம் விடும் காட்சி, விஜயகாந்த்திடம் செய்யும் குறும்புகள், தான் வாழ்க்கைப்பட்ட குடும்பத்தின் கௌரவத்தை (?!) காப்பாற்றுவதற்காக எடுக்கும் முடிவு என இவரின் பாத்திரம் அழுத்தமாக அமைந்திருந்தது.

செல்லச் சண்டைகளால் அசத்திய சுகன்யா – மனோரமா கூட்டணி

விஜயகாந்த்திற்கும் சுகன்யாவிற்கும் இடையே கெமிஸ்ட்ரி இருந்ததோ இல்லையோ, மனோரமாவுடன் சுகன்யா போடும் செல்லச் சண்டைகள் சுவாரஸ்யமான காட்சிகளாக மலர்ந்திருந்தன. “உன்னோட முதுகெலும்பை எடுத்து மாலையா போட்டுக்குவேன்” என்று இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். திருமணம் முடிந்து சுகன்யா மருமகளாக வரும் போது இருவருமே பழைய சண்டையை நினைத்து வாய் விட்டுச் சிரிக்கும் காட்சி சுவாரஸ்யமானது. சுற்றியுள்ளவர்கள் அனைவரும் சிரிப்பதைப் பார்த்து எதுவும் புரியாமல் தானும் அதில் கலந்து விஜயகாந்த் சிரிக்கும் காட்சி குறும்புத்தனமாக இருக்கும். திக்கித் திக்கி கொங்கு மொழி வழக்கில் பேச முயற்சி செய்திருந்தார் சுகன்யா. ஆனால் விஜயகாந்த் இதைக் கூட முயலவில்லை.
சின்னக் கவுண்டர்
சின்னக் கவுண்டர்

தூக்கலான பல்லை வைத்துக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தார் மனோரமா. ‘வழக்கமான’ அம்மா வேடம் என்றாலும் பஞ்சாயத்தில் வீறாப்பாக அமர்ந்திருக்கும் காட்சியில் தான் ஒரு திறமையான நடிகை என்பதை நிரூபித்து விடுவார். “இந்தச் சாதாரண விஷயமே இவனுக்குத் தெரியலையே... இவனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சு” என்று தன் மகனை நினைத்து முனகும் காட்சியில் ‘நகைச்சுவை நடிகை’யாக மாறிவிடுவார். “நீ வீட்டை விட்டு வெளியே போ” என்று கோபமும் கலக்கமுமாக மகனை விரட்டியடிக்கும் காட்சியில் ஆச்சியின் நடிப்பு சிறப்பாக இருக்கும். ஒரு காட்சியில் தூங்கிக் கொண்டிருப்பார் மனேராமா. யாரோ வந்து அழைத்தவுடன் உடல் பதறி எழுந்திருப்பார். வயதானவர்களின் இந்த உடல்மொழியைச் சிறப்பாகப் பின்பற்றியிருந்தார் ஆச்சி.

கவுண்டமணி – செந்தில் ஜோடியின் காமெடி இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. ‘வில்லேஜ்’ விஞ்ஞானியான செந்தில், ‘கோக்கு மாக்காக’ யோசித்து விட்டு அதைக் கேள்விகளாக முன்வைப்பதும், பிறகு கவுண்டமணி மற்றும் ஊர்க்காரர்களிடம் உதை வாங்குவதும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். என்றாலும் கூட செந்தில் கேட்கும் கேள்விகள் ‘அதானே... ஏன் அப்படி?” என்று யோசிக்கவும் வைத்து விடும். உருவக் கேலியாக இருந்தாலும் “பல்ல பத்தி நீ பேசாத ஆத்தா. குழந்தை பயப்படுது” என்று மனோரமாவின் தோற்றத்தை வைத்து சரமாரியாகக் கிண்டலடிப்பார் கவுண்டமணி.

நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர பாத்திரங்களை ஏற்கும் போது அற்புதமாக ஜொலிப்பார்கள். நாகேஷ் முதற்கொண்டு பல உதாரணங்கள் இதற்கு உண்டு. கவுண்டமணி நடித்ததில் ‘சின்னக் கவுண்டர்’ படத்தையும் இந்த வரிசையில் குறிப்பிடலாம். பெரும்பான்மையான ஊரே விஜயகாந்த்தைத் தவறாகப் புரிந்து கொண்டு அவதூறாகப் பேச "அடப்பாவிகளா! ஊருக்கு நல்லது பண்ண மனுசன்யா அவரு... இனிமே உங்க துணிகளை நான் துவைக்க மாட்டேன்” என்று கதறியழும் காட்சியில் விஜயகாந்த்திற்கு ஆதரவாக நிற்கும் பாத்திரத்தில் மனதைக் கவர்ந்துவிட்டார் கவுண்டமணி.

ஒல்லியான தோற்றத்தில் ஆரம்பக்கால வடிவேலுவை இந்தப் படத்தில் காணலாம். விஜயகாந்த்திற்குக் குடை பிடிப்பவராக வருவார். விஜயகாந்த்தை ஊரே பழித்துப் பேச, அதனால் கோபம் கொண்டு கவுண்டமணி தொழிலை விட்டு விட, அந்த இடத்தைப் பிடித்துக் கொள்வார் செந்தில். அவரது முதல் வாடிக்கையாளர் வடிவேலுதான். “ஆமாம்... இவனே ஒரு இத்துப் போனவன், இவன் போட்டிருக்கிறது ஒரு இத்துப் போன பனியன்” என்று நொந்துபோய் கிண்டலடிப்பார் கவுண்டர். இப்படி ஓரமாக வந்து போன வடிவேலு பின்பு எத்தனை விஸ்வரூபம் எடுத்தார் என்பது பிரமிப்பான சமாச்சாரம்.

சலீம் கவுஸ்
சலீம் கவுஸ்

சலீம் கவுஸ் என்கிற அற்புதமான நடிகன் இதில் ‘சர்க்கரை கவுண்டர்’ என்னும் பாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது அருமை இயக்குநருக்குத் தெரியவில்லையோ, என்னவோ! வழக்கமான வில்லன் வேடம்தான். என்றாலும் “வேலையை அங்க செய். விசுவாசத்தை என்கிட்ட காட்டு” என்பது போன்ற வசனம் பேசும் காட்சிகளில் அசத்தி விடுவார். குறிப்பாக க்ளைமாக்ஸில் இவரது நடிப்பு அருமையாக இருக்கும்.

‘கண்ணுபடப் போகுதய்யா’ – இளையராஜாவின் இசை

தனது இசையை அள்ளி வழங்குவதில் இளையராஜா என்றுமே குறை வைத்ததில்லை. இந்தப் படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் வழக்கம் போல் அட்டகாசமான விருந்தாகத் தந்திருந்தார் ராஜா. ‘கண்ணுபடப் போகுதய்யா சின்னக் கவுண்டரே’ என்று ராஜாவின் குரலில் படம் ஆரம்பிக்கும் போதே திருவிழாவின் மனநிலை நமக்கு வந்துவிடும். இந்த ஆல்பத்தின் சிறப்பான பாடல்களுள் ஒன்று ‘முத்துமணி மால’... ஒரு பாடலுக்குத் தாளம் எத்தனை முக்கியம் என்பதை உணர்த்தும் பாடல். தபேலாவின் ரிதம் ‘கணீர்... கணீர்’ என்று ஒலித்து நம்மைப் பரவசப்படுத்தும். எஸ்.பி.பியும் சுசிலாவும் இந்தப் பாடலின் கேட்பனுபவத்தை கூடுதல் சிறப்பாக்கியிருந்தார்கள்.

‘அந்த வானத்தைப் போல’ என்பது ‘தவசி’ கேரக்டரின் பெருமையைச் சொல்லும் பாடல். இளையராஜா இதை அற்புதமாகப் பாடியிருந்தார். இதே பாடல் ஜானகியின் குரலில் இன்னொரு சூழலில் உருக்கமாக ஒலிக்கும். ‘சொல்லால் அடிச்ச சுந்தரி’ என்கிற பாடலும் ராஜாவின் குரலில் உருக்கமாக இருக்கும். ‘சின்னக்கிளி வண்ணக்கிளி’ என்பது பாலு மற்றும் ஜானகியின் குரலில் பதிவான இன்னொரு சிறப்பான பாடல். ‘சுட்டி... சுட்டி... உன் வாலை கொஞ்சம் சுருட்டிக் கொள்ளடி’ என்கிற குறும்பான பாடலை மலேசியா வாசுதேவன் பாடி அசத்தியிருந்தார். ‘கூண்டுக்குள்ள உன்ன வெச்சு’ என்பது சூழலுக்கு ஏற்ப ஒலிக்கும் உருக்கமான பாடல். அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்தான்.

“இந்தப் படம் ஓடுமா?” – விஜயகாந்த்தின் சந்தேகம்

பொள்ளாச்சி அருகேயுள்ள ‘சேத்துமடை’ என்னும் அழகான ஊரில்தான் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நடந்தது. ‘சேத்துமட வாத்துதானடி’ என்பது பாடல் வரியாகக் கூட வரும். இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரின் மாமா ஒருவர் நீண்டகாலமாகப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். அவரின் பண்பு மற்றும் நற்செயல்கள் காரணமாக ஊரே அவரின் மீது மதிப்பு வைத்திருந்தது. அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை யோசித்து வைத்திருந்தார் இயக்குநர். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் ஆர்.செல்வராஜ். பாரதிராஜாவின் பல படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்.

சின்னக் கவுண்டர்
சின்னக் கவுண்டர்
அதுவரை கோபத்தில் கண்களை உருட்டி ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்தை அமைதியான தோற்றம் மற்றும் உடல்மொழியில் நடிக்க வைத்து மாற்றம் செய்திருந்தார் உதயகுமார். “எப்பப் பாரு குடையைப் பிடிச்சுட்டு சுத்தி வரச் சொல்றீங்க. படம் ஓடுமா?” என்று சந்தேகமாகக் கேட்ட விஜயகாந்த், பிறகு பிரமாண்டமான வெற்றியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்.

பல சிறப்பான காட்சிகளின் தொகுப்பாக இந்தப் படம் அமைந்திருந்தது. படத்தின் ஆரம்பக் காட்சியே சிறப்பானது. நீண்ட காலமாக நிலுவையிலிருந்த ஒரு வழக்கின் தீர்ப்பை ‘சின்னக் கவுண்டர்’ வழங்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதுமே எட்டுப் பட்டியிலிருந்தும் வண்டி கட்டிக் கொண்டு மக்கள் பஞ்சாயத்தில் கூடி விடுவார்கள். பொய்யான பத்திரம் எழுதி சர்க்கரைக் கவுண்டர் செய்த மோசடியை விஜயகாந்த் எளிதில் கண்டுபிடித்துப் பறிபோகவிருந்த நிலம் ‘கோயிலுக்கே சொந்தம்’ என்று தீர்ப்பளிப்பார். அந்தப் பக்கம் தற்செயலாக வரும் ஒரு வழக்கறிஞர் “எப்படிய்யா இந்தப் பையன் இத்தனை சீக்கிரம் கேசை பைசல் பண்ணிட்டான்?” என்று தன் கார் டிரைவரிடம் வியந்து பேசுவார்.

காவல், நீதிமன்றம் என்கிற சமூக நிறுவனங்கள் ஏற்படுவதற்கு முன்னால் கிராமத்து வழக்குகளை, சர்ச்சைகளைத் தீர்க்க பஞ்சாயத்துக்கள்தான் இருந்தன. இவை நல்ல ஏற்பாடுகள்தான். ஆனால் படத்தில் காட்டப்படுவது போல் இங்கு வழக்குகள் நேர்மையாகவும் சார்பின்றியும் நடப்பது மிக அரிதானது. ஏனெனில் பொதுவாகச் செல்வந்தர்கள், ஆதிக்கச் சாதியினர் கைகளில்தான் பஞ்சாயத்தின் அதிகாரம் இருக்கும். எனவே எளிய மக்களுக்கு அங்கு நியாயமான தீர்ப்பு கிடைப்பது அரிதானது. கடுமையான அபராதம் விதிக்கப்பட்டால் ‘மன்னிச்சுடுங்க சாமி’ என்று அவர்கள் விழுந்து கும்பிடும் ஒவ்வொரு முறையும் சற்று அபராதம் குறைக்கப்படும். நாகரிகம் வளர்ந்து இட ஒதுக்கீடு மலர்ந்த சமகாலத்தில் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ‘பஞ்சாயத்துத் தலைவர்’ என்னும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அத்தனை லேசான சமாச்சாரமில்லை. ஆக... படத்தில் காட்டப்படுவது பெரும்பாலும் ‘சினிமா’ ஜோடனைதான். ‘தவசி’ போன்ற நேர்மையாளர்கள் ஆங்காங்கே மிக அரிதான முன்னுதாரணமாக இருந்திருக்கலாம்.

சின்னக் கவுண்டர்
சின்னக் கவுண்டர்

‘மொய் விருந்து’ என்னும் கலாசாரத்தை முதன்முதலில் பேசிய படம்

‘மொய் விருந்து’ என்னும் கிராமத்துக் கலாசாரம் தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சுற்றி அறுபதுகளில் உருவானதொரு பழக்கம். பொருளாதார ரீதியாகச் சிரமத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மறைமுகமாக நிதியுதவி செய்யும் சடங்கு இது. இதற்காக ஆடு வெட்டி, கறி விருந்து நடத்தப்படும். ஆயிரக்கணக்கில் மக்கள் திரளாக வந்து மொய் எழுதுவார்கள். இன்றைய தேதியில் இந்தக் கலாசாரம் பிரமாண்டமாக வளர்ந்து துப்பாக்கி ஏந்திய தனியார் காவல் படை, பணம் எண்ணும் இயந்திரம் என்று கோடிகளில் வசூலாகும் அளவிற்கு ஹைடெக்காக வளர்ந்துவிட்டது. மொய் பெற்றுக் கொண்டவர்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு பதில் மொய் கட்டாயமாக எழுத வேண்டும். இதைச் செய்ய முடியாமல் அவமானப்பட்டவர்களும் உண்டு. ‘பஞ்சாயத்தைப்’ போலவே இந்தச் சடங்கும் நடைமுறையில் சரியானதா என்பது ஒரு விவாதப் பொருள்தான்.

கிராமங்களில் நடக்கும் இந்தச் சடங்கை முதன் முதலில் திரைப்படத்தில் காட்சியாக வைத்தார் உதயகுமார். சாப்பிட வந்தவர்கள் இலையின் அடியில் பணத்தை வைத்து விட்டுப் போக, விஜயகாந்த் மட்டும் தாலியை வைத்து விட்டுப் போகும் காட்சியும், அதைக் கண்டு சுகன்யா கலங்கி அழுவதும், பிறகு நடக்கும் திருமணக்காட்சியும், இதற்கு ராஜா தந்திருக்கும் அற்புதமான பின்னணி இசையும்... என்று ஒட்டுமொத்த காட்சிக்கோர்வையே சிறப்பாக இருக்கும்.

சுகன்யாவை ஜாமீனில் எடுப்பதற்காக ஊரை விட்டுக் கிளம்பும் விஜயகாந்த், தனது ஆத்தாவைப் பஞ்சாயத்தின் நடுவில் அடைமானமாக வைத்து விட்டுப் போவதும், பொழுது சாய்வதற்குள் அவர் திரும்பாவிட்டால் விஷமுள்ள நீரை அவரின் அம்மா குடிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் பரபரப்பான காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும்.

இது தவிர ஒரு கூடுதல் விசேஷமும் இந்தப் படத்திற்கு உண்டு. ஆம், சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விடும் காட்சி. சினிமாவில் தோன்றிய இந்தச் சடங்கும், மொய் விருந்தைப் போலவே பிரமாண்டமாக வளர்ந்து பிறகு ஆம்லேட் சுடும் அளவிற்கு ஹைடெக்காக ஆகிவிட்டது.

சின்னக் கவுண்டர்
சின்னக் கவுண்டர்

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை வித்தியாசமாக அமைத்திருந்தார் இயக்குநர். ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து வில்லனுக்கு வித்தியாசமான தண்டனையைத் தருவார்கள். அதற்கு எதிர் முரணாக, விஜயகாந்த்தின் பாணியில் ஊரே வில்லனுக்கு மன்னிப்பு தந்துவிட்டு நகரும். “ஐயா. எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கய்யா” என்று வில்லனே ஊர் மக்களிடம் கதறிக் கேட்பார். ‘தீர்ப்பு என்பது ஒருவனைத் திருத்துவதற்குத்தான், தண்டிப்பதற்கு அல்ல’ என்பதான செய்தியுடன் படம் நிறைவுறும்.

விஜயகாந்த்தின் வித்தியாசமான நடிப்பு, சுகன்யா – மனோரமாவின் சுவாரஸ்யமான சண்டைகள், கவுண்டமணி - செந்தில் காமெடி, இளையராஜாவின் அற்புதமான இசை என்று ஒரு வெகுசன திரைப்படத்திற்குரிய அனைத்து அம்சங்களும் கூடி அமைந்திருப்பதால், இதிலுள்ள பிற்போக்கு அம்சங்களைத் தாண்டி, இன்று பார்த்தாலும் சுவாரஸ்ய அனுபவத்தைத் தருகிறார், ‘சின்னக் கவுண்டர்’.