
‘வீட்ல விசேஷம்’னு சொல்லும்போதே இது குடும்பப் படம்னு தெரிஞ்சிருக்கும். பாக்கியராஜ் சார் கிட்டே இந்தப் பெயரை மட்டும் ரைட்ஸ் வாங்கி வச்சுக்கிட்டோம்.
“கலகலன்னு ஒரு சினிமா. ரொம்பவும் மனதிற்கு ஒன்றிப்போய் அருமையாகப் பொழுதைக் கழிக்கிற சினிமாவாக அது இருக்கும்போதே பளிச்னு அதில் ஒரு பிரச்னையை முன்னெடுத்துப் போனால் எப்படியிருக்கும்? அதுதான் ‘வீட்ல விசேஷம்.’ சாதாரணமான மனிதர்களின் வாழ்க்கை எப்போதும் சுவாரஸ்யங்களும் சுவையும் நிரம்பியது. அந்த வகையில் இது குடும்பப் படம் மட்டுமல்ல, ஃபீல் குட் படமும்தான்” நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ‘எல்.கே.ஜி', ‘மூக்குத்தி அம்மன்’ என சில வித்தியாசங்களில் தெரியவந்தவர்.

“தொடர்ந்து இயக்குநராகச் செயல்பட ஆரம்பிச்சுட்டீங்க...”
‘‘கொஞ்சம் முன்னாடிவரைக்கும் வி.ஜே, காமெடின்னுதான் செய்துக்கிட்டு இருந்தேன். ‘எல்.கே.ஜி’ அரசியலைப் பத்திச் சொன்னது. ‘மூக்குத்தி அம்மன்’ ஆன்மிகத்தையும் தொட்டுட்டுப் போனது. ‘மூக்குத்தி அம்ம’னில் வந்திருந்த குடும்பக் காட்சிகள் சிறப்பாக அமைந்துவிட்டதாகப் பேச்சு எழுந்தது. அதனால் அதைப் பற்றிய கவனத்தில் இருந்தேன். நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எதுவும் எனக்குப் பிடிக்கலை. ஆனால் அத்தனைக்கும் நடுவில் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கே... அதுதான் என் ஆச்சரியம். அப்படி ஆச்சரியங்களையும் நம்பிக்கை களையும் தருகிற படங்களைச் செய்யணும்னு எனக்கு ஆசை. ஒரு நகைச்சுவை நடிகராக இருந்துகொண்டு நம் மனசுக்கு ஒப்பாத சில விஷயங் களைக்கூட செய்ய வேண்டியிருக்கும். அப்படி இல்லாமல் எனக்குப் பிடித்த கருத்துகளைச் சொல்ல காத்திட்டிருக்கும்போதுதான் இந்தப் படம் அமைந்தது.”

“எப்படியிருக்கும் ‘வீட்ல விசேஷம்?”
“ ‘வீட்ல விசேஷம்’னு சொல்லும்போதே இது குடும்பப் படம்னு தெரிஞ்சிருக்கும். பாக்கியராஜ் சார் கிட்டே இந்தப் பெயரை மட்டும் ரைட்ஸ் வாங்கி வச்சுக்கிட்டோம். போனிகபூர் இங்கே ‘நெஞ்சுக்கு நீதி' படத்தோட ‘பதாய் ஹோ' என்ற இன்னொரு இந்திப் படத்தையும் தமிழில் தயாரிக்க முன்வந்தார். இந்தியில் 200 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிக் கொடுத்த படம். அதையே தமிழில் செய்தால் நல்லாருக்கும்னு நினைச்சார் போனிகபூர். வாய்ப்பு என்கிட்டே வந்தபோது அதைப் பயன்படுத்திக்க நினைச்சேன். ஆயுஸ்மான் குரானா அங்கே நடிச்ச படம். இப்போ அங்கே அவருக்குப் பெரிய மரியாதை. படத்துல இருக்கிற சிறு குறைகளை நீக்கி தமிழில் செய்திருக்கோம்.”

“சத்யராஜ், ஊர்வசி, கே.பி.ஏ.சி.லலிதான்னு அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருக்காங்க...”
“அப்படி அமைஞ்சதுதான் வீட்ல விசேஷத்துல ரொம்ப விசேஷம். ஐம்பது வயது அம்மா மறுபடியும் தாய்மை யடையறாங்க. எதிர்பாராத அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கிறாங்க. அதைச் சுற்றியிருக்கிற மகன், பாட்டி முதற்கொண்டு எப்படிப் பார்க்கிறாங்க என்பதுதான் கதை. உணர்வுபூர்வமான இடங்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாத படம். நிச்சயமாக மெசேஜ் இருக்காது. இனிமேல் மெசேஜ் சொன்னா சினிமா தாங்குமான்னு தெரியலை. தினமும் டன் டன்னா புத்திமதிகள் செல்போனில் ஃபார்வேர்டு ஆகிவந்து கொட்டுது. அதுவே நம் முழு வாழ்க்கைக்கும் போதும். அதனால் காட்சிகளின் ஊடே உணர்வு கூடித்தான் செய்திகள் உங்களை அடையணும்.”

“படம் எப்படி வந்திருக்கு?”
“அதை நான் சொல்வதைவிடவும் படத்தைப் பார்த்துட்டு சத்யராஜ் சார் சொன்னதைச் சொல்லலாம். ‘என்னோட சிறந்த பத்துப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். இப்படி படங்கள் செய்யும்போது சினிமாவில் இருக்குறோம்னு சந்தோஷமாக இருக்கு’ன்னு சொன்னார். அவர் மாதிரி ஒரு ஜாம்பவானிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டது எனக்கு பாக்கியம். ஊர்வசி அம்மாவுக்கு ஒரு கேரக்டர் அமைந்துவிட்டால் அவங்க அதை இன்னொரு இடத்திற்குக் கொண்டுபோய் நிறுத்திடுவாங்க. நான் இவங்களோட மகனாக நடிக்கிறேன். எனக்கு இணையாக அபர்ணா நடிக்கிறாங்க. மறைந்த லலிதா அம்மா பிரமாதமாக நடிச்சுக் கொடுத்தாங்க. என்னோட சேர்ந்து இந்தப் படத்தை சரவணனும் இயக்குகிறார். எங்கள் இணை மூன்று படங்களாகத் தொடர்கிறது.”
“நீங்கள் ஒரு கல்லூரியில் பெண்களைப் படங்கள் எப்படிச் சித்திரிக்கின்றன எனப் பேசி அது சில ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது...”
“குழந்தைக்காகப் பள்ளிக்கூட வாசலில், சகோதரிக்காகக் கோயில் வாசலில், தோழிக்காகக் கல்லூரி வாசலில், காதலிக்காக நெடுஞ்சாலையில், மனைவிக்காகக் கடை வாசலில், அம்மாவிற்காக மருத்துவமனையில் என வாழ்க்கை முழுக்கக் காத்திருக்கிற ஒவ்வொரு ஆணும் அழகன்தான். ஆனால் அவர்கள் பிற பெண்களை மதிக்கும் போதும், புரிந்துகொள்ளும்போதும், பழகும் போதும்தான் தவறுகிறார்கள். பெண்களை சினிமாக்கள் எப்படிச் சித்திரிக்கின்றன என்பதைப் பற்றி அந்த விழாவில் பேசும்போது சில உதாரணங்களைச் சொன்னேன். சோஷியல் மீடியாவில் இப்போது எதையும் சொல்ல முடியவில்லை. இரண்டும் இரண்டும் நான்கு என்று எழுதினால்கூட அதில் தவறு இருப்பதாக 15 பேராவது களத்தில் குதிக்கிறார்கள். சக மனிதர்கள், மனுஷிகள் மேலான அக்கறை எனக்குக் கூடப் பிறந்தது. என் மனதிற்குப் பட்டதை நியாயமானதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. பல இடங்களில் என்னைச் சந்திப்பவர்கள், ‘சரியாகப் பேசினீர்கள்’ என்று பாராட்டுகிறார்கள். பெரியவர்கள் கைகொடுத்து, முதுகில் தட்டிக்கொடுக்கிறார்கள். எங்கள் பக்கத்து நியாயத்தைச் சொல்லிவிட்டீர்கள் என பெண்மணிகள் சொல்கிறார்கள். இப்படி நல்லபடி பேசுவது நிறைய பேருக்குப் போய்ச் சேர்வதால் அதை எப்போதும் செய்யப் போகிறேன்.”