Published:Updated:

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
நயன்தாரா

சொன்ன தேதிக்கு முன்னாடியே ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை முடிச்சாச்சு.

“அரசியல் நையாண்டியுடன் ‘எல்.கே.ஜி’யில் அட்மிஷன் கிடைத்த ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம், புராணப் படத்தில் நடித்திருந்தாலும் நயன்தாரா அம்மன் அவதாரம் எடுக்கும் முதல் படம்... `மூக்குத்தி அம்மன்!’ படம் முடிந்து ரிலீஸுக்குக் காத்திருக்கும்போது கொரோனா குறுக்கிட, தவிப்புடன் காத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜியிடம் பேசினோம்.

‘மூக்குத்தி அம்மன்’ படம் எப்படி வந்திருக்கு?

சொன்ன தேதிக்கு முன்னாடியே ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை முடிச்சாச்சு. ஷூட்டிங் மொத்தம் 42 நாள் நடந்தது. நாகர்கோவிலில்தான் ஷூட்டிங். இந்தப் படத்துல எனக்கு அம்மாவா நடிச்ச ஊர்வசி மேடம், வில்லன் அஜய்கோஷ், நயன்தாரான்னு எல்லாருமே முழு ஒத்துழைப்பைக் கொடுத்தாங்க. தமிழ்சினிமாவுல அம்மனுக்கு எதிரான ஒரு வில்லன்னா என்ன மாதிரியான ஒரு தாக்கம் இருக்குமோ அது அஜய்கோஷ் கதாபாத்திரத்துக்கு இருக்கும். அம்மன் பாடல்கள்னாலே எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாதான். அவங்களும் இந்தப் படத்துல பாடியிருக்காங்க. அம்மன் புண்ணியத்துல படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.”

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

“ராம நாராயணன் காலத்துக்குப் பிறகு யாரும் அம்மன் படம் எடுக்கிறதில்லையே, உங்களுக்கு ஏன் திடீர்னு இப்படி ஒரு ஆசை?”

“தமிழில் அம்மன் படம் வந்து 15 வருஷம் ஆகிடுச்சு. எல்.கே.ஜிக்கு அடுத்த படம் ஒரு சாமி படம் எடுக்கணும்னு நான் எந்த முடிவும் பண்ணலை. திடீர்னு ஒரு ஐடியா வந்தது. எங்க ஆபீஸ்ல வேலை செய்யற அக்கா அந்தச் சமயத்துல வந்தாங்க... `மூக்குத்தி அம்மன்’ன்னு படம் வந்தா என்ன பண்ணுவீங்க’ன்னு கேட்டேன். `நீங்க டிக்கெட் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நானே போய் படம் பார்ப்பேன்’னு சொன்னாங்க. `ஹொடிபாபா’ன்னு படம் எடுத்தா என்ன பண்ணுவீங்கன்னு கேட்டேன்... `ஆங்... என்னது புரியலையே’ன்னு சொன்னாங்க. சரி, அம்மன் படமே எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். ஸ்கிரிப்ட் எழுதினோம். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. இப்ப படம் முடிஞ்சதுக்கு அப்புறம் பெரிய பெரிய விநியோகஸ்தர்கள் எல்லாரும் இந்தப் படத்தைப் பற்றி அவ்வளவு ஆர்வமா கேட்குறாங்க. சரியான முடிவுதான்னு உறுதிப்படுத்திக்கிட்டேன்.”

‘எல்.கே.ஜி’ படக் கதாசிரியர் டு ‘மூக்குத்தி அம்மன்’ இயக்குநர். இடைப்பட்ட பயணம் பற்றிச் சொல்லுங்க...”

`` `எல்.கே.ஜி’ படத்துல ஸ்கிரிப்ட், மார்க்கெட்டிங், காஸ்டிங்னு எல்லா வேலையும் நான்தான் பார்த்தேன். அந்த மாதிரி இருந்த சமயத்துல, இயக்கம் நல்லா தெரிஞ்ச ஒருத்தர் இந்தப் படத்துக்குள்ள வர்றது மட்டுமல்லாம, எனக்கும் சரியான வழிகாட்டுதல் வேணும்னு யோசிச்சபோதுதான் இயக்குநர் பிரபு உள்ள வந்தார். அவர்கூட சேர்ந்து கோ-டைரக்டரா வேலை பார்த்தபோது கிடைச்ச அனுபவங்கள்தான் அடுத்து படம் இயக்கறதுக்கான நம்பிக்கை கொடுத்தது. இந்தப் படத்துடைய இன்னொரு இயக்குநரான சரவணன் ‘உள்ளம் கொள்ளை போகுதே’ பட சமயத்துல இருந்து சினிமாவில் இருக்கார். இயக்குநர் ஆகணுங்கறதுதான் அவருடைய கனவு. ‘எல்.கே.ஜி’ படத்திலேயும் கோ-டைரக்டரா வேலை பார்த்திருக்கார். திறமையான ரொம்ப சின்சியரான ஒருத்தர். கிட்டத்தட்ட 20 வருஷமா இயக்குநர் கனவோடு உழைச்சுட்டிருக்கிற ஒருத்தருக்கு இந்தப் படம் மூலமா வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கேன்ங்கறதுல சந்தோஷம்.”

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

“முதல்முறையா நயன்தாரா அம்மன் வேஷத்துல நடிக்கறாங்க. அவங்க என்ன ஃபீல் பண்ணுனாங்க, நீங்க என்ன ஃபீல் பண்ணுனீங்க?”

“கடவுளை மெய்மறந்து கையெடுத்துக் கும்பிடுவோமே, அப்படி ஒரு பயபக்தியோடுதான் முதல்முறையா அம்மன் வேஷத்துல நயன்தாராவைப் பார்க்கும்போது எங்க மனநிலை இருந்தது. கடந்த பத்து வருஷமா தனக்கான நம்பர்1 இடத்தைத் தக்க வெச்சுக்கறது சாதாரண விஷயம் கிடையாது. ஸ்பாட்லேயும் ரொம்ப சின்சியரா, முன்னாடி நாளே சீன் எல்லாம் கேட்டு தயாரா இருப்பாங்க. இந்தப் படத்துடைய கதை நயன்தாராக்குன்னு பண்ணினது கிடையாது. `நேர்கொண்ட பார்வை’ மாதிரியான படத்துல அஜீத் சார் நடிச்சபோது எப்படி அந்தப் படத்துடைய கண்டென்ட் நிறைய பேருக்குப் போய்ச் சேந்ததோ, அந்த மாதிரி ‘மூக்குத்தி அம்ம’னோட கண்டென்ட் நயன்தாரா மாதிரியான ஸ்டார் வேல்யூ இருக்கிற ஒருத்தர் நடிக்கும்போது அதோட ரீச் வேற லெவல்ல இருக்கும்.

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

முதல்முறையா கதை கேட்கும்போதே நயன்தாராவுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கதை கேட்ட அன்னைக்கு நைட்டே நயன்தாரா கால் பண்ணி, ‘சாமி படம் பண்ணப்போறோம். சுத்தமா இருந்து எல்லாம் கரெக்ட்டா பண்ணணும். கட்டுப்பாடுகளைச் சரியா கடைப் பிடிக்கணும்’னு கண்டிஷன் போட்டாங்க. எங்களுக்கும் அதே மனநிலைதான்கிறதால் அந்த கண்டிஷன் பிடிச்சிருந்தது. ஒரு படத்துல கமிட் ஆகிட்டா நயன் சின்சியரா இருப்பாங்க. கன்னியாகுமரியில எத்தனை கோயில் இருக்கோ அத்தனை கோயிலுக்கும் போய் சாமி கும்பிட்டுதான் ஷூட்டிங் தொடங்கினோம். இதில் ஆச்சர்யம் என்னன்னா, 200 பேர் கொண்ட மொத்த யூனிட்டுமே அப்படித்தான் இருந்தது.

பொதுவா நயன்தாரா காலையில ஷூட்டிங் வர்றாங்கன்னா... முதல் ஷாட் ஓ.கே ஆகாமல், பிரேக் பாஸ்ட் சாப்பிட மாட்டாங்க. இந்தப் படத்துல அதுக்கும் ஒரு படி மேல போய் படம் முடியும் வரை வெஜிடேரியனாக இருந்தாங்க.”

“படத்துடைய ஒன்லைன்?”

``நாகர்கோவில்ல அம்மா, அப்பா, தாத்தா, மூணு தங்கச்சிகளோடு குடும்பத்துல மூத்த பையனா குடும்பத்தை நடத்தக் கஷ்டப்படக்கூடிய ஒருத்தன்தான் ஹீரோ, அதாவது நான். இந்தக் குடும்பத்துல அம்மன் வந்தா என்ன நடக்கும்கிறதுதான் கதை. நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமா இருக்கும்.”

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

“படத்துடைய ஃப்ர்ஸ்ட் லுக் வந்தபோது சோஷியல் மீடியாவுல ட்ரெண்டிங்ல இருந்த அதேசமயம் பல விமர்சனங்களும் வந்தன. இதை எப்படிப் பார்க்கறீங்க?”

``எல்லாரையும் இங்க திருப்திப்படுத்தற துங்கறது யாராலும் முடியாத காரியம். படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் பார்த்துட்டு ‘முடி ஏன் கலரா இருக்கு? பொட்டு ஏன் சின்னதா இருக்கு?’ங்கற மாதிரியான நிறைய கேள்விகள் வந்தது. சிலதுக்கான பதில் படத்துல இருக்கும். வேற சில முடிவுகள் எல்லாம் கதைக்குத் தேவைப் பட்டதால நாங்களாவே பண்ணினதுதான். இதையெல்லாமும் தாண்டி `ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்துல நயன்தாரா அம்மனா நடிச்சி ஒரு சாமி படம் வெளிவர இருக்கு’ங்கற தகவல் எல்லாருக்கும் பாசிட்டிவா போய்ச் சேர்ந்ததுல மகிழ்ச்சி.”

“படம் எப்போ ரிலீஸ்? கொரோனா, லாக்டௌனால் தள்ளிப்போகுமா?”

“மே 1 சம்மர் ரிலீஸ் பண்ணலாம்னுதான் ப்ளான் வெச்சிருந்தோம். ஆனா, இப்போ நடந்துட்டிருக்கும் நிகழ்வுகள் நம்ம வாழ்க்கையோடு, நம்ம வாழ்வாதாரத்தோடு நடந்துட்டிருக்கும் பயங்கரமான போராட்டம். அதனால், இந்த உலகம் எப்போ பாதுகாப்பானதாக மாறுதோ, மக்கள் எல்லாரும் பயப்படாமல் எப்போது குடும்பத்தோடு தியேட்டருக்கு வர்றாங்களோ அப்பதான் `மூக்குத்தி அம்ம’னும் ரிலீஸ் ஆகும். இதை நானும் என் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாரும் பேசியே முடிவு பண்ணினோம். இப்போ படம் ஃபைனல் டிரிம் முடிஞ்சு போட்டுப்பார்த்தோம். செமயா வந்திருக்கு. தியேட்டர்ல வந்து மக்கள் என்ஜாய் பண்ணிப் பார்க்கும் படம் இது. அதனால, ஓ.டி.டி-யில ரிலீஸ் பண்ணமாட்டோம்.’’

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

“உங்க நண்பர் விக்னேஷ் சிவன் என்ன சொன்னார்?”

``வேற ஒரு ஷூட்டிங்ல பிஸியா இருந்ததால, ஒரு நாள் மட்டும்தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவரால வர முடிஞ்சது. எனக்குத்தான் கொஞ்சம் நெர்வஸா இருந்தது. சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் பார்த்து கரெக்‌ஷன் சொன்னார். ‘ஷூட்டிங் பார்த்த வரைக்கும் திருப்தியா இருந்தது. உன்னை நினைச்சு எனக்கு பெருமையா இருக்கு. சூப்பரா பண்ணு’ன்னு மெசேஜ் அனுப்பினார்.”

“அன்னையர் தினத்தில் ‘வருங்கால என் குழந்தைகளின் அம்மா’ன்னு நயன் படத்தை விக்னேஷ் சிவன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததைப் பார்த்தீங்களா... நயன், விக்னேஷ் சிவன் ரெண்டுபேருக்குமே நல்ல நண்பர் நீங்கள். அவங்க எப்போ கல்யாணம் பண்ணுவாங்க?”

“ஒரு நல்ல நண்பர் என்ன பண்ணுவார்... உள்ளே நடப்பதை வெளியே சொல்ல மாட்டார். அது அவங்க பர்சனல். அவங் களேதான் அதை வெளியே சொல்லணும்.”

`` `எல்.கே.ஜி’ படத்துல நோயை எதிர்த்துப் போராடின மாதிரியான காட்சிகள்தான் இப்ப `கோ கொரோனா’ன்னு நாடு முழுக்க நடந்தன. அதை எப்படிப் பார்க்கறீங்க?’’

``படத்துல அந்த சீன் வைக்கும்போதே, ‘இப்படியெல்லாம் நடக்குமா? ஓவரா இருக்கு’ன்னு என் டீம்லயே சொன்னாங்க. ஆனா, படம் பார்த்த நிறையபேர், `நல்லா வந்திருக்கு’ன்னு கமெண்ட்ஸ் கொடுத்தாங்க. அந்த மாதிரி ஒரு விஷயம்தான் இப்ப போயிட்டிருக்கு. ‘கோ கொரனோ’ன்னு போராட்டம் பண்றதைத் தாண்டி, அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமா இருக்கணும்.”

அம்மனாக நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன்!

“சோஷியல் மீடியா பக்கம் இப்போ அதிகம் உங்களைப் பார்க்க முடியறதில்லையே?”

``கடந்த மூணு வருஷத்துல என் கரியரோட வெற்றியின் ரகசியம் என்னன்னு கேட்டீங்கன்னா இந்த சோஷியல் மீடியாலேருந்து ஒதுங்கி இருக்கறதுதான். `நான் சோஷியல் மீடியால, நடக்கற விஷயங்களுக்குக் கருத்து சொல்லலைன்னா இந்த உலகம் நின்னுரும்’ங்கற மாதிரியான மனநிலையில இருந்து எப்பவோ வெளிய வந்துட்டேன். இப்போ என்னோட சோஷியல் மீடியா ஹேண்டில்ஸ் எல்லாம் நண்பர் ஒருத்தர்தான் பார்த்துட்டு இருக்கார். இதனால, தினமும் எனக்கு நிறைய நேரம் சேமிக்க முடியறது மட்டுமல்லாம, நெகட்டிவிட்டில இருந்து தப்பிக்கறதுன்னு கொஞ்சம் ரிலாக்ஸாவும் இருக்கேன். இதையும் தாண்டி ஒரு விஷயத்துக்கு என்னுடைய கருத்து சொல்லணும்னு நினைக்கறேன்னா, அதை இனி என்னுடைய படங்கள் பேசும். அந்த மாதிரி சில விஷயங்களைத்தான் ‘மூக்குத்தி அம்மன்’ பேச இருக்கு.”

மிகத் தெளிவாகப் பேசுகிறார் பாலாஜி.