சினிமா
தொடர்கள்
Published:Updated:

ராக்கெட்ரி - சினிமா விமர்சனம்

மாதவன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாதவன்

கடந்த கால இஸ்ரோவை நம்பும்படி காட்சிப்படுத்தியிருப்பதில் கலை இயக்கத்தின் பங்கு அளப்பரியது

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் சாகசங்கள் நிறைந்த வாழ்க்கையை, அதனூடே புதைந்துபோன தேசத் துரோக வழக்கை உலகுக்குச் சொல்லும் பயோபிக்.

விண்வெளிச்சாதனைகளில் இந்தியா பின்தங்கியிருந்தபோது பிரான்ஸ், ரஷ்யா என்று பல நாடுகளில் உதவி பெற்று விகாஸ் என்ஜினை உருவாக்கி, இந்தியா விண்வெளியில் தடம் பதிக்கக் காரணமாக இருந்தவர் நம்பி நாராயணன். இதற்காகப் பல தந்திரங்கள் செய்து பல ஆபத்துகளையும் சந்திக்கிறார். அப்படிப்பட்ட விஞ்ஞானியின்மீது பொய்யான தேசத்துரோக வழக்கு பாய, அதன்பின் அவர் வாழ்க்கையே நிலைகுலைந்துபோகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பதை உணர்ச்சி ததும்பச் சொல்லியிருக்கிறார்கள்.

இளவயது காட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நம்பியாக உருமாறி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் மாதவன். பற்களின் வரிசையை மாற்றியது, உடல் எடை ஏற்றி இறக்கியது, தாடி, தலைமுடி என ஒவ்வொரு அணுவிலும் நம்பியாகியிருக்கிறார்.

நம்பியின் மனைவி மீனாவாக சிம்ரன். சில காட்சிகளில் வந்தாலும் அவரின் அனுபவ நடிப்பால் மிளிர்கிறார். படத்தில் வரும் டஜன் விஞ்ஞானிகளுள் உன்னியாக வரும் சாம் மோகனும், பரமாக வரும் ராஜீவ் ரவீந்திரநாதனும் கவனம் ஈர்க்கிறார்கள். கௌரவ வேடம் என்றாலும் சூர்யா ஏற்றிருக்கும் பாத்திரம் அப்ளாஸ் ரகம். இந்த தேசத்துக்கான ஒற்றைப் பிரதிநிதியாய் சூர்யா நிஜ நம்பியிடம் மன்னிப்பு கேட்பதும்; அதற்கு நிஜ நம்பி தரும் பதிலும் நிச்சயம் இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்று.

ராக்கெட்ரி - சினிமா விமர்சனம்

கதை, தயாரிப்பு இயக்கம் எனப் படத்தை மொத்தமாய்த் தாங்கி நிற்கிறார் மாதவன். கடந்த கால இஸ்ரோவை நம்பும்படி காட்சிப்படுத்தியிருப்பதில் கலை இயக்கத்தின் பங்கு அளப்பரியது. சிர்ஷா ரேயின் ஒளிப்பதிவு பல்வேறு கால கட்டங்களில் நிகழும் கதைக்கான வித்தியாசத்தை எளிதாகக் காட்டுகிறது. ஏனோ சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்துக்கு வலுச்சேர்க்கவில்லை.

அறிவியல் சார்ந்த கதையில் நம்பகத்தன்மைக்காக வரும் ஏராளமான டெக்னிக்கல் சாராம்சங்கள், நம்பியின் கதையை சினிமாவாக மாற்ற விடாமல் வெறுமனே தகவல்களாக நிற்க வைத்துவிடுகின்றன. நம்பி நாராயணன் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வான தேசத்துரோக வழக்கு, அதன் பின்னணியை இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். தமிழ்ப்படமாக இருந்தாலும் வசனங்கள் டப்பிங் படத்தின் சாயலை ஒத்திருப்பது, வெளிநாட்டு நடிகர்களின் நாடக பாணியிலான நடிப்பு ஆகியவை மைனஸ்.

குறிப்பிடத்தக்க ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கியது, மாதவனின் நடிப்பு ஆகிய இரட்டை என்ஜின்களில் லாஞ்ச் ஆகியிருக்கிறது இந்த ராக்கெட்.