
எளிய கதை, வலிய மனிதர்கள் - இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது தர்புகா சிவாவின் பின்னணி இசை.
பழிக்குப் பழி கதையை ரத்தம் சிதறச் சிதற, உடலுறுப்புகள் நொறுங்கும் சத்தம் கேட்கக் கேட்கச் சொன்னால் அதுதான் ‘ராக்கி.’
ஆயுதம் கடத்தும் கொடுக்கல் வாங்கலில் பாரதிராஜாவுக்கும் (மணிமாறன்) வசந்த் ரவிக்கும் (ராக்கி) முட்டிக்கொள்கிறது. விளைவு, இருதரப்பிலும் சில உயிர்ப்பலிகள். வசந்த் ரவியும் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. 17 ஆண்டுகள் கழித்து அவர் வெளியே வந்து எஞ்சிய குடும்பத்தைத் தேடித் திரிகிறார். பழைய வன்மம் தீர்ந்திடாத பாரதிராஜா மிஞ்சியவர்களையும் வேட்டையாடத் துடிக்க, மீண்டும் தொடங்குகிறது ஒரு ரத்த அத்தியாயம். வன்முறையைக் கையிலெடுத்தபின் நாம் கைவிட நினைத்தாலும் நம்மை அது விடுவதில்லை என்பதைக் குருதி கொப்பளிக்க உணர்த்த முயல்கிறார் அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
வசந்த் ரவிக்கு ரெளத்ரத்தை உடல்மொழியிலும் அமைதியை முகத்திலும் காட்டவேண்டிய வேலை. அவருக்கு அது இயல்பாகவே வருவதால் தப்பிக்கிறார். பாரதிராஜா என்னும் தேர்ந்த நடிகரை ஒன்றிரண்டு காட்சிகளில் காணமுடிகிறது. கதையில் அவருக்கான இடமும் அவ்வளவே.
ரிஷிகாந்த், ஜெயக்குமார், ரவி வெங்கட்ராமன் எனக் குறைவான கதாபாத்திரங்களே இருந்தாலும் அனைவரும் கதையின் அடிநாதமான வன்முறையின் முகங்களைப் பிரதிபலிக்கிறார்கள்.

எளிய கதை, வலிய மனிதர்கள் - இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது தர்புகா சிவாவின் பின்னணி இசை. வன்முறையில் ஒளிந்திருக்கும் அழகியலைக் காட்சிக்குக் காட்சி கடத்துகிறது ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. ரத்தத்தின் வாடை ஊறிப்போயிருக்கும் மனதின் குழப்பமான எண்ணங்களை முடிந்தவரை நமக்கு உணர்த்துகிறது நாகூரானின் படத்தொகுப்பு. ராக்கியைத் தோள்கொடுத்துத் தாங்கி நிற்பது இந்த இருவரும்தான்.
இதுவரை எந்தத் தமிழ் சினிமாவிலும் இல்லாதபடி வன்முறையின் ரத்த வெப்பத்தைச் சுடச்சுடப் பதிவு செய்திருப்பது இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் துணிச்சல். கதை என்று பார்த்தால் 30 ஆண்டுகளுக்கு முந்தைய, மெல்லிய பழிவாங்கல் ஒற்றைவரிக் கதைதான். அ-நேர்க்கோட்டுமுறையிலான கதை சொல்லலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகியல் நிறைந்திருக்கும் காட்சியமைப்புகளும் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசு. ஆனால் இதுமட்டுமே போதும் என்று இயக்குநர் நினைத்திருப்பதுதான் பெரும் பலவீனம்.

இழப்புகளை உணர்த்தும் உணர்ச்சிகளோ சம்பவங்களுக்கான தர்க்க நியாயங்களோ இல்லாததால் வெறுமனே அதீத வன்முறையாக மட்டுமே காட்சிகள் எஞ்சி நிற்கின்றன. சென்னை, நெல்லூர், தனுஷ்கோடி என்று நிலப்பரப்புக்கான இயல்புகள், இயல்பான மனிதர்கள் என்று எதுவும் இல்லாமை, ‘கழுகு’, ‘கடத்தல்’ போன்றவற்றில் விவரிப்புகளற்ற தன்மை என்று முழுமையான படமாக இல்லாமல் ஒரு புதிய அனுபவத்தைத் தருவதுடன் ஏமாற்றமளித்து ஒதுங்கிக்கொள்கிறார் ‘ராக்கி.’