சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை!”

ராக்கி படக்குழுவினர்
பிரீமியம் ஸ்டோரி
News
ராக்கி படக்குழுவினர்

விசுவாசம்னு சொல்றாங்களே, அதுவும் அவங்களை இயக்குது. நம்பிக்கைத் துரோகத்திற்கு அவங்க கோர்ட்டில் உச்சபட்ச தண்டனை இருக்கு.

‘ராக்கி’ டிரெய்லர் இணையவெளியில் எக்கச்சக்க ஹிட். அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன். எடிட்டிங் அறையின் வெளியே வந்து அமர்கிறார். ‘ராக்கி’ ரத்தமும் சதையுமாக இருக்கும் மனிதர்களைப் பற்றிச் சொல்லியது போல் இருக்கிறது!

அருண் மாதேஸ்வரன் - வசந்த் ரவி
அருண் மாதேஸ்வரன் - வசந்த் ரவி

“இலங்கையிலிருந்து அகதியாக வந்து இறங்கிய அம்மா மீண்டும் சொந்த நாட்டுக்குப் போக ஆசைப்படுகிறார். போகணும்ங்கிற ஆசை நிறைவேறியதா, என்னதான் நடந்தது என்கிற ஒற்றைவரிக் கதைக்குள்ளேயே க்ரைம், ஆக்‌ஷன், டிராமான்னு பல விஷயங்கள் இருக்கு.

ரௌடி, தாதான்னு நாம் கற்பனை பண்ணி வெச்சிருக்கிற மாதிரி அவங்க நிஜத்தில் இல்லை. அவங்க உலகமே தனி. அசந்து தூங்கினால் யாராச்சும் வந்து போட்டுடுவானோன்னு ஒழுங்கா தூங்குவதுகூட இல்லை. எல்லோரோட கண்ணிலும் ரெண்டு நாள் தூக்கம் எப்பவும் மிச்சமிருக்கும்.

அவங்க யாருக்கும் வாழ்வு மட்டுமல்ல, சாவுகூட நிம்மதியா அமையாது. ஒண்ணு எதிர்த்தரப்பு போட்டுத்தள்ளும். இல்லைன்னா, போலீஸ் என்கவுன்டரில் போட்டுத் தள்ளும். அவங்க யாரோட குடும்பமும் நிரந்தரமாக நிம்மதியாயிருந்ததா வரலாறு இல்லை. பத்து வருஷத்துக்குப் பிறகுகூட எங்கோ இருந்து ஒரு வில்லன் முளைச்சு வருவான்... பழிக்குப் பழி வாங்குவான். ஆனால், அவங்க உலகத்துல இருக்கிற நாகரிகம், தெளிவான திட்டம், பிளானிங் லெவல் எல்லாம் பொறி பறக்கும்.

விசுவாசம்னு சொல்றாங்களே, அதுவும் அவங்களை இயக்குது. நம்பிக்கைத் துரோகத்திற்கு அவங்க கோர்ட்டில் உச்சபட்ச தண்டனை இருக்கு. இப்படியான உலகத்தைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணி உருவான ஸ்கிரிப்ட்தான் ‘ராக்கி’...” பேசத் தொடங்குகிறார் அருண் மாதேஸ்வரன். இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, தியாகராஜன் குமாரராஜாவிடம் பாடம் பயின்றவர்.

“இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை!”

``வன்முறை கொஞ்சம் அதிகமா இருக்கிற மாதிரி தெரியுதே...?’’

‘‘இந்த மாதிரி ஒரு மோசமான லைஃப்ல இதெல்லாம் இருக்கும். ஏன் எதுக்குன்னு நியாயப்படுத்த சில காட்சிகளை வைக்க வேண்டியிருக்கு. படம் பார்த்தால் எனக்கு வன்முறை உவப்பானதா இல்லைன்னு காட்சியமைப்பில் தெரியும். நாம எல்லோருக்குமே பலவீனங்கள் இருக்கு. சிலர் தப்பிக்கிறாங்க; சிலர் மாட்டிக்கிறாங்க. அது மட்டும்தான் வித்தியாசம். இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை. ஒரு கதைக்கு என்ன வேணுமோ அது மட்டுமே இருக்கு.’’

“இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை!”
“இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை!”

``வசந்த் ரவி, பாரதிராஜான்னு இரண்டு பேரும் வேறு முகங்கள் கொண்டிருக்காங்களே..?’’

‘‘இந்த ராக்கி கேரக்டருக்கு முதலில் கௌதம் மேனனைத்தான் நினைச்சேன். போய்ச் சொன்னால், அவருக்கு ரொம்பப் பிடிச்சது. அவருக்கு இருந்த சில வேலைகளில் அவரால் செய்ய முடியலை. அப்புறம்தான் வசந்த் ரவி படத்திற்குள் வந்தார். கதையின் அத்தனை மடிப்புகளையும் தெரிந்து கொண்டு நடித்தார். ரொமான்டிக் படத்தில் நடித்தவருக்கு இதுல வேற ஒரு இடம் கொடுத்திருக்கோம். முக்கியமான கேரக்டரில் பாரதிராஜா. இதில் அவர் இப்படித்தான் இருப்பார்னு நீங்க கற்பனை பண்ணவே முடியாது. தயங்கித் தயங்கித்தான் அவர்கிட்ட சொன்னேன். கதையையும், எடுத்ததில் சிலதையும் காண்பிச்சேன். ‘ஷூட்டிங் வந்துடுறேன் போ’ன்னு சொல்லிட்டாரு. இந்த கேரக்டருக்கும் கௌதம் மேனனை நினைத்து வைத்திருந்தேன். சூழல்களால் இதற்கும் அவர் வரமுடியவில்லை. ரோகிணி, ரவீனா ரவி, பூ ராமு, ஜெயகுமார் னு இருக்காங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் படத்தில் முக்கியமான இடங்கள் இருக்கு.”

“இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை!”
“இது வன்முறையை நம்பி எடுத்த படமில்லை!”

``செல்வராகவன்கூட ‘சாணி காகிதம்’ படம் எப்படி இருக்கு?’’

‘‘ரொம்ப அனுபவிச்சுப் படம் செய்திட்டிருக்கோம். எத்தனையோ பேருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து வந்தவருக்கு அவருக்கான இடம் தெரியாமலா போகும்? யாராலும் தொட முடியாத சில இடங்களை அவர் இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷுக்கு இது வேறான கதாபாத்திரம். இத்தனை கோபமா அழுத்தமா செய்வாங்கன்னு யாராலும் நம்ப முடியலை. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் திடீர்னு ஒருத்தர்வந்து இங்க வந்து நின்னுடுவாங்க. அப்படி கீர்த்தி சுரேஷ் இருக்கிறார்.”

``முதல் படம் இன்னும் திரையைத் தொடாமலேயே செல்வராகவன், தனுஷ் படங்களில் இருக்கீங்க. உங்களைத் தமிழ் சினிமா பொறாமையாகப் பார்க்குறது தெரியுமா?’’

‘‘கிளம்பி வந்த நேரமும் பட்ட கஷ்டமும் அவ்வளவு பெருசு பிரதர். ஒவ்வொரு தடவையும் ஆரம்பிச்சு நகர்ந்து பட்ட துயரத்தையெல்லாம் தனிப் படமா எடுக்கலாம். ‘இறுதிச்சுற்றி’ல் வசனம் எழுதி ஒரு இடத்திற்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்த நேரங்கள் போய் இப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு. தனுஷ் படம் இன்னும் பேச்சுவார்த்தையில் தான் இருக்கு. என் உழைப்புக்குக் கிடைத்த மரியாதையான நேரம் இதுன்னு நம்புறேன்.’’