Published:Updated:

சம்சாரம் அது மின்சாரம்: `அப்போதே அப்படியொரு க்ளைமாக்ஸ்!'- தோல்வி படத்தை ரீமேக் செய்து சாதித்த விசு

சம்சாரம் அது மின்சாரம்

“தமிழ்ப் படத்தைத் தமிழிலேயே ரீமேக்கா... அதிலும் பிளாப் ஆன படமா?” என்று ஏ.வி.எம் சரவணன் ஆச்சரியப்பட, விசுவிற்கு தன் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அப்படி அவரின் ட்ரீட்மென்ட்டில் உருவாகி பிரமாண்ட வெற்றியை ஈட்டிய படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.

Published:Updated:

சம்சாரம் அது மின்சாரம்: `அப்போதே அப்படியொரு க்ளைமாக்ஸ்!'- தோல்வி படத்தை ரீமேக் செய்து சாதித்த விசு

“தமிழ்ப் படத்தைத் தமிழிலேயே ரீமேக்கா... அதிலும் பிளாப் ஆன படமா?” என்று ஏ.வி.எம் சரவணன் ஆச்சரியப்பட, விசுவிற்கு தன் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. அப்படி அவரின் ட்ரீட்மென்ட்டில் உருவாகி பிரமாண்ட வெற்றியை ஈட்டிய படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.

சம்சாரம் அது மின்சாரம்
ஃபேமிலி டிராமா எனப்படும் குடும்பத் திரைப்படங்களுக்கு என்றுமே அழிவில்லை. குடும்பம் என்கிற நிறுவனம் இருக்கும்வரை இந்தத் திரைப்படங்களும் வாழும். தமிழ் சினிமாவில் பீம்சிங் தொடங்கி ஏராளமான ‘குடும்பப் பட’ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த வரிசையில் முக்கியமானவர் விசு. அவர் இயக்கியதில் முக்கியமான திரைப்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. அதுவரை வெளியான அத்தனை குடும்பத் திரைப்படங்களிலிருந்தும் இந்தப் படம் சொன்ன ‘செய்தி’ வித்தியாசமானது மட்டுமல்ல, இயல்பானதும் கூட.

‘சம்சாரம் அது மின்சாரத்தில்’ அப்படியென்ன ஸ்பெஷல்? யெஸ், நிச்சயம் ஸ்பெஷல்தான். சற்று யோசித்துப் பாருங்கள். அதுவரைக்குமான குடும்பத் திரைப்படங்களில் என்ன நிகழும்? ஒரு குடும்பத்தில் நிகழும் பிரச்னைகள், உறவுச்சிக்கல்கள், மோதல்கள், கலகங்கள், குழப்பங்கள் ஆகியவை களேபரமாக நடக்கும். ஒரு கட்டத்தில் அனைவரும் தெளிவு பெற்று மீண்டும் இணக்கமாகி விடுவார்கள். குரூப் போட்டோவிற்கு நிற்பது போல அவர்கள் சிரித்தபடி ஒன்றாக நிற்க... ‘சுபம்’ என்கிற வார்த்தை கொட்டை எழுத்தில் வரும். பார்வையாளர்களும், ‘ஏதோ தங்களின் குடும்பப் பிரச்சினையே தீர்ந்து விட்டதைப் போன்ற’ மன ஆறுதலைப் பெற்று ஆசுவாச மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள்... இல்லையா?!

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

‘அந்த க்ளைமாக்ஸ்தான் படத்தின் பெரிய பலம்’

இங்குதான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ தனித்து நிற்கிறது. ஆம், இதன் க்ளைமாக்ஸ்தான் இந்தப் படத்தின் தனித்துவம் எனலாம். பிரச்னைகள் தீர்ந்து அனைவரும் ஒன்றிணையும் போது, அதற்காக மிகவும் பாடுபட்ட ஒரு கதாபாத்திரம் சொல்லும். “குடும்பம்-ன்றது அழகான கண்ணாடி பாத்திரம் மாதிரி. அதைக் கீழே போட்டு உடைச்சிட்டோம். இனிமே அதை ஒட்ட வைக்கறது கஷ்டம். நாம ஓரடி தள்ளி நின்னு... ‘நீங்க சௌக்கியமா. நானும் சௌக்கியம்'ன்னு விசாரிச்சுக்கலாம். நாளு, கிழமைன்னா ஒண்ணா, உக்காந்து சாப்பிட்டுட்டு கிளம்பலாம். அதுதான் சரியா இருக்கும். திரும்பவும் பாத்திரம் உடைஞ்சா, அது அவ்வளவு நல்லா இருக்காது" என்று அந்தக் கேரக்ட்டர் சொல்வது சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பானதாகவும் நடைமுறைக்குப் பொருந்தி வருவதாகவும் இருந்தது.

கூட்டுக்குடும்பங்கள் சிதறி ‘நியூக்ளியர் குடும்பங்களாக’ மாறுவது போய், இன்று ஒரு சிறிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே மனதளவில் சிதறி தனித்தனி தீவுகளாக ஆகி விட்டார்கள். அந்த அளவிற்கு மனித இடைவெளி அகன்று விட்டது. மனிதர்கள் அருகருகே வசித்தாலும், மனதளவில் தொலைவில் வாழ்கிறார்கள். சமகாலத் திரைப்படங்கள் இந்தப் பிரச்சினையை உரையாட வேண்டியது அவசியம்.

‘சம்சாரம் எப்படி மின்சாரமாகிறது?’

அம்மையப்ப முதலியார் ஒரு அரசு குமாஸ்தா. மனைவி கோதாவரி. சிதம்பரம், சிவா, பாரதி என்று மூன்று மகன்கள். சரோஜினி என்று ஒரு மகள். மூத்த மருமகள் உமா. வீட்டின் மைய அச்சாக இருப்பவள். அங்கு மெல்ல பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தை மறுத்துவிட்டு காதல் திருமணம் செய்யும் சரோஜினி, புகுந்த வீட்டில் சண்டை போட்டு விட்டுப் பிறந்த வீட்டுக்கு வந்துவிடுகிறாள். சிவாவின் மனைவிக்கு வேறு மாதிரியான பிரச்னை. கணவனுடன் பழக அவளுக்கு ‘அந்தரங்கமான வெளி’ கிடைப்பதில்லை. அது சார்ந்த மனப்புழுக்கத்தில் பிறந்து வீட்டுக்குச் சென்று விடுகிறாள்.

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

கடைசிப் பையன் பாரதி, பல நூற்றாண்டுகளாக ப்ளஸ் டூவைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். வீட்டின் மூத்த மகன் சிதம்பரம் எல்லாவற்றிலும் கறாராகக் கணக்குப் பார்ப்பவன். சிதம்பரத்தின் மனைவி உமா, பிரசவத்துக்காகச் சென்றிருக்கும் போது ‘வீட்டுச் செலவுக்குப் பாதி பணம்தான் தர முடியும்’ என்று அவன் சொல்ல அந்தச் சர்ச்சையின் மூலம் அனைத்துப் பிரச்னைகளும் ஒன்று திரண்டு பெரிதாக வெடிக்கிறது. குடும்பத் தலைவரான தந்தைக்கும் மூத்த மகனுக்கும் இடையில் கடுமையான மோதல். “உங்க ஓடுகாலி பொண்ணோட திருமணத்திற்காக நான் தந்த பணத்தை வட்டியோட எடுத்து கீழ வைங்க. வெளில போறேன்” என்று சிதம்பரம் சொல்ல, அம்மையப்பனுக்கு இது தன்மானப் பிரச்னையாகிறது. வீடு இரண்டாகப் பிரிகிறது.

பிறகு என்னவானது... பிரச்னைகள் தீர்ந்தனவா... பிரிந்த குடும்பம் ஒன்றானதா? இந்தக் கேள்விக்கெல்லாம் விடையாக, ஒரு அற்புதமான க்ளைமாக்ஸூடன் படம் நிறைகிறது.

“கோதாவரி... வீட்டுக்கு நடுவுல கோடு ஒண்ணு கிழிடி…"

அம்மையப்ப முதலியாராக விசு. கதை, வசனம், இயக்கம் மட்டுமல்ல, அவரின் நடிப்புப் பயணத்திலும் இதுவே பெஸ்ட் எனலாம். ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத் தலைவரின் தியாகத்தை, நியாயமான கோபத்தை, அசட்டுத்தனமான பிடிவாதத்தை, விட்டுக் கொடுத்தலைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தனை சீரியஸான கேரக்ட்டரை காமெடியும் கலந்து நடிக்க விசுவால் மட்டுமே முடியும். மகளைப் பெண் பார்க்க வருகிறவர்களைச் சாக்காக வைத்து “கேசரில நெய் டொக்கு டொக்கு–ன்னு விழணும்” என்று கோதாவரியிடம் வரிசையாக மெனு சொல்வதும், வீட்டின் பணியாளரான மனோரமா, அதை ஜாலியாக நக்கலடித்து காட்டுவதும் அருமையான நகைச்சுவைக் காட்சி.

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

இதற்கு நேரெதிரான காட்சியும் உள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அந்தக் கடுமையான விவாதத்தைத் தமிழ் சினிமாவின் ‘சிறந்த காட்சிகளில்’ ஒன்றாகவும் அட்டகாசமான ‘இன்டர்வெல் பிளாக்’குகளில் ஒன்றாகவும் சொல்லி விடலாம். அனைத்திலும் கணக்குப் பார்க்கும் சுயநலம் மிகுந்த மகன், "என் பணத்தை எடுத்து வைங்க. வெளில போறேன்" என்று சொல்ல, "உன்னை வளர்க்க எப்படியெல்லாம் பாடுபட்டேன்... இந்த அம்மையப்ப முதலியாரை உனக்குத் தெரியலையா?" என்று வரிசையாகப் பட்டியலிட்டுக் கேட்பார் விசு. (இப்படி லிஸ்ட் போட்டு வசனம் எழுதுவது விசுவின் ஸ்டைல்). அனைத்துக்கும் ‘தெரியலை’ என்றே மகன் சொல்ல, வீட்டைக் கோடு கிழித்து இரண்டாகப் பிரிக்கும் விசு “என் தலையை அடமானம் வெச்சாவது உங்க பணத்தைச் சீக்கிரம் கொடுத்துடறேன் சார்... இனிமே என் முகத்துல நீங்க விழிக்கக்கூடாது. என் பிணத்துக்குக் கூட கொள்ளி போடக்கூடாது. கெட் லாஸ்ட்” என்று வெடிப்பதும், அந்தச் சமயத்தில் ஒலிக்கும் உக்கிரமான பின்னணி இசையும் எனத் திரையே தீப்பிடிக்கும் ரகளையான காட்சி அது. ஒரு ஃபேமிலி டிராமாவில், ஆக்ஷன் பிளாக்கிற்கு இணையான சூட்டைக் கிளப்ப விசுவால் மட்டுமே முடியும்.

“ஒரு முக்கியமான பாத்திரத்தை அறிமுகப்படுத்தறேன்” என்றுதான் படத்திற்குள் தன் மூத்த மருமகளை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்துவார் விசு. அது உண்மைதான். இந்தப் படத்தின் ஆகச் சிறந்த கேரக்ட்டர் என்றால் அது ‘உமா’வாக நடித்த லட்சுமியின் கேரக்ட்டர்தான். தென்னிந்திய சினிமாவின் நடிப்பு ராட்சசிகளுள் முக்கியமானவர் லட்சுமி. ‘உமா’ என்கிற இந்தப் பாத்திரத்தில் அத்தனைக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பொதுவாக மருமகள் என்கிற பாத்திரம் குடும்பத்தைப் பிரிப்பதாக, தனிக்குடித்தனம் செல்ல முனைவதாகத்தான் சித்தரிக்கப்படும். ஆனால் இந்த ‘மரக்காண’ மருமகள் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுபடுவதற்காக அத்தனை பாடுபடுகிறார்.
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

ஆனால் அத்தனை சிரமப்பட்டு ஒன்று சேர்த்துவிட்டு முத்தாய்ப்பாக அவர் சொல்லும் க்ளைமாக்ஸ் காட்சியும் அதில் லட்சுமியின் நடிப்பும் அருமை. "இவ்ளோ நடந்தப்புறம் ஒண்ணாவது சாத்தியமில்ல. ஒரு அடி தள்ளி நின்னு, 'நீ நல்லா இருக்கியா’ன்னு விசாரிச்சா போதும்" என்கிற அந்தக் காட்சி இன்றும் கூட நினைவுகூரப்படுகிறது. இந்த க்ளைமாகஸ் சிறப்பாக இருந்தாலும் மக்கள் ஏற்பார்களா என்று தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணனுக்கு ஒரு கவலை. ஆனால் இயக்குநர் விசு, தன் தரப்பில் உறுதியாக இருந்திருக்கிறார். ஏனெனில் இது நாடகமாக நடந்த போது மக்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியிருக்கிறார்கள். எனவே இந்தப் பஞ்சாயத்து சரவணனின் தாயாரிடம் சென்றிருக்கிறது. அவர் படத்தைப் பார்த்து முடித்தவுடன், கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, "விசுவிற்கு குடும்பம்ன்னா என்னன்னு நல்லா தெரிஞ்சிருக்கு. எந்தக் காட்சியையும் மாற்ற வேண்டாம்” என்று நெகிழ்ச்சியுடன் தீர்ப்பளித்திருக்கிறார்.

‘கண்ணம்மா... கம்முனு கெட’ – ரகளையான நடிப்பைத் தந்த மனோரமா

லட்சுமியின் நடிப்பிற்கு இணையாக பட்டையைக் கிளப்பியிருப்பவர் மனோரமா. உண்மையில் இந்தப் பாத்திரமே படத்தில் முதலில் கதையில் கிடையாது. “உங்க ஸ்கிரிப்ட் நல்லா இருக்கு. ஆனா ரொம்ப டிரையா இருக்கு. காமெடியா ஒரு பாத்திரத்தை சேர்த்தாதான் நல்லாயிருக்கும்” என்று தயாரிப்பாளர் சரவணன் சொல்ல, ‘சொல்ல வந்த விஷயம் நீர்த்துப் போய் விடுமோ’ என்று கவலைப்பட்டிருக்கிறார் விசு. ஆனால் இந்தப் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக ‘கண்ணம்மா’ பாத்திரம் மாறியது. வீட்டின் வேலைக்காரியாகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றினாலும் ஒரு விசுவாசமான பணியாளரின் குணாதிசயத்தை அற்புதமாகச் சித்திரித்துக் காட்டினார் மனோரமா. கிஷ்முவுடன் இவர் மோதி நடிக்கும் ‘கம்முன்னு கெட’ வசனக்காட்சி மிகவும் ‘ஹிட்’ ஆனது. இதைப் போலவே, குழந்தையை விசுவின் காலடியில் போட்டு அவரின் மனதை மாற்றும் காட்சியிலும் மனோரமாவின் நடிப்பு அருமை.

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

ஹீரோவாக இருந்து வில்லனாகப் பிரகாசித்தவர் ரகுவரன். இடைப்பட்ட காலத்தில் சில குணச்சித்திரப் பாத்திரங்களையும் கையாண்டார். அதில் முக்கியமானது ‘சிதம்பரம்’. ஆட்டோக்காரரிடம் பேரம் பேசுவதில் தொடங்கி, குழந்தை குடித்திருக்கும் பால் பவுடர் டப்பாக்களைக் கணக்குப் பார்ப்பது வரையுள்ள ‘மிடில் கிளாஸ் மாதவன்’ பாத்திரத்தை அட்டகாசமாகக் கையாண்டார். வீம்பாக ‘தனிக்குடித்தனம்’ போய் விட்டு "கணக்கே டாலி ஆக மாட்டேங்குது. அங்க இருக்கும் போது இவ்வளவு சுமை தெரியல” என்று புலம்பி விட்டு மனம் மாறுவார். தான் மட்டுமே அதிகச் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கிறது என்கிற மனப்புழுக்கம் வீட்டின் முதல் பிள்ளைக்கு எப்போதுமே இருக்கும். இந்த மனோபாவத்தை ரகுவரன் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

லட்சுமியைத் தாண்டி அந்த வீட்டிலேயே குறை சொல்ல முடியாத பாத்திரம் ஒன்று உண்டென்றால், அது சந்திரசேகருடையது. “சிவா... தங்கம்டா... அவனைக் குறை சொல்றவங்க யாரும் உருப்படவே மாட்டாங்க” என்று அம்மையப்ப முதலியாரே சான்றிதழ் தரும் அளவிற்குப் பொறுப்பான பிள்ளை. அந்தரங்கத் தருணங்கள் அமையாத மனப்புழுக்கத்துடன் இருக்கும் மனைவியை முரட்டுத்தனம் கலந்த பொறுமையுடன் கையாள்பவர்.

ஆடம்பரமான, சுதந்திரமான வாழ்க்கையை விரும்பும் பிடிவாதப் பெண்ணாக இளவரசியும், கணவனின் இல்லற இன்பத்திற்காக ஏங்கும் பெண்ணாக மாதுரியும் அவரவர்களின் பாத்திரங்களைச் சரியாகக் கையாண்டிருந்தார்கள். கோதாவரியாக கமலா காமேஷ். ‘ஜானகி தேவி...’ என்று புதுமணப்பெண் வேடத்தில் இவர் பாடும் காட்சியும் அதற்கு விசு தரும் கோணலான எக்ஸ்பிரஷன்களையும் கண்டு சிரிக்காதவர்கள் இருக்க முடியாது. “எல்லாத்துலயும் ஒரு கணக்கு வேணும்மா” என்னும் ரகுவரனிடம் “பத்து மாசம் சுமக்கணும்ன்றதுதான் கணக்கு. நீ பத்து மாசம் பதினேழு நாள் இருந்தே... இறக்கியா வெச்சுட்டேன்” என்று கமலா காமேஷின் நடிப்பு மட்டுமல்ல, வசனகர்த்தா விசுவும் இணைந்து ஜெயிக்கிறார்.

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

விசு படம் என்றால் ஆஸ்தான நடிகர்கள் இல்லாமலா? சம்பந்தி பாத்திரத்தில் டெல்லி கணேஷின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. ஆல்பர்ட் பெர்ணாண்டஸாக வந்து மனோரமாவுடன் மோதும் கிஷ்முவின் நடிப்பும் சிறப்பு. “நீ புடவை கட்டி பூ வெச்சு பார்க்கறதுலதான் எனக்கு சந்தோஷம்” என்று மனைவியிடம் சொல்லும் பீட்டர் பெர்ணாண்டஸாக நடித்திருக்கும் திலீப்பின் நடிப்பும் அருமை. ப்ளஸ் டூவை பல வருடங்களாக எழுதும் கடைக்குட்டியாக ஹாஜா ஷெஃரீப். சிறுவனாக இருந்த போது அநாயசமாக நடிப்பில் கலக்கிய இவர், இளைஞனான பின்பு சுமாராக நடித்தது ஏன் என்று தெரியவில்லை.

விசு எழுதிய டிராமா, பின்னர் திரைப்படமானது!

1970-ம் வருடத்தில் விசு எழுதிய நாடகம்தான், இந்தத் திரைப்படத்திற்கு அடிப்படை. ஆனால் இந்த நாடகம் 1975-ல் ‘உறவுக்குக் கைகொடுப்போம்’ என்கிற தலைப்பில் ஏற்கெனவே திரைப்படமாக வந்த விஷயம் பலருக்குத் தெரியாது. ஆம், குடும்பத் திரைப்படங்களை எடுப்பதில் திறமையான இயக்குநரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து திரைக்கதை, வசனம் எழுத, அதை இயக்கியது யார் தெரியுமா? ஒய்.ஜி.மகேந்திரன். ஆனால் இந்தப் படம் ஓடவில்லை. ‘மிஸ்டர் பாரத்’ உள்ளிட்ட ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் பணிபுரிந்து சரவணனின் அபிமானத்தைப் பெற்ற விசு, தன்னிடம் உள்ள ஸ்கிரிப்டைப் பற்றி அவரிடம் சொன்னார். முன்பு வெளியாகி பெரிய தோல்வியைத் தழுவிய அதே படம்தான்.

“தமிழ்ப் படத்தைத் தமிழிலேயே ரீமேக்கா... அதிலும் பிளாப் ஆன படமா?” என்று சரவணன் ஆச்சரியப்பட, விசுவிற்கு தன் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனவே கே.எஸ்.ஜியிடமிருந்து உரிமையை வாங்கி (இதை ஏம்ப்பா வாங்கறீங்க?!) விசுவின் ட்ரீட்மென்ட்டில் உருவாகி பிரமாண்ட வெற்றியை ஈட்டிய படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’. சுமார் 15 லட்ச ரூபாய் முதலீட்டில், 35 நாள்களில், ஆர்வோ கலரில் (ORWO Color) எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படம், தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பெருத்த லாபத்தை ஈட்டித் தந்தது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அது மட்டுமல்ல, ‘சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருதிற்கான ‘தங்கத் தாமரை’ விருதைப் பெற்றது. ஒரு தமிழ்த் திரைப்படம், இந்தப் பிரிவில் தங்கத் தாமரை விருது வாங்குவது இதுவே முதன்முறை. அந்தப் பெருமையை ‘சம்சாரம் அது மின்சாரம்’ பெற்றது.

‘தாய்ப்பாலுக்குக் கணக்குப் போட்டா தாலி மிஞ்சுமா?’

பொதுவாக விசுவின் படங்களில் பாடல்கள் சுமாராகத்தான் அமையும். விதிவிலக்காக, இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன. சங்கர் – கணேஷ் கூட்டணி அருமையான பாடல்களை உருவாக்கியிருந்தார்கள். கூடுதல் சிறப்பம்சமாக, வைரமுத்துவின் வரிகள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன. ‘தாய்ப்பாலுக்குக் கணக்குப் போட்டா தாலி மிஞ்சுமா’ என்பது போன்ற வரிகள் பெற்றோர்களின் தியாகத்தைச் சிறப்பாக உணர்த்தின. ‘இந்தக் குடும்பத்தின் முதல் வாரிசைப் பெற்றெடுத்து வந்த வேளையில் குடும்பம் பிரிந்திருக்கிறதே’ என்னும் சூழலில், லட்சுமி பாடும் தாலாட்டுப் பாடலில் ‘உன் தாய்ப்பாலில் கண்ணீரை யார் சேர்த்தது?’ என்கிற வரி நெகிழ்வை ஏற்படுத்தியது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்கிற பாடலையும் துண்டு துண்டாகப் பிரித்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருந்தார்கள்.

சங்கர் - கணேஷ், விசு, வைரமுத்து, சித்ரா
சங்கர் - கணேஷ், விசு, வைரமுத்து, சித்ரா
AVM Productions

இத்தனை சிறப்பம்சங்கள் உள்ள குடும்பத் திரைப்படமாக இது இருந்தாலும் மீள்பார்வையில் பல பிற்போக்குத்தனங்கள் இதில் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. திருமணத்திற்கான சம்மதத்தை தன் மகளிடம் கேட்காமலேயே விசுவிடம் சொல்கிறார் டெல்லி கணேஷ். பதிலுக்கு தன் மகனுக்கும் அதையே செய்கிறார் விசு. இருவரும் இதைப் பெருமிதமாக வேறு பேசிக் கொள்கிறார்கள். தந்தைக்கும் மூத்தமகனுக்கும் இடையில்தான் பிரச்னை. ஆனால் வீட்டில் உள்ள அனைவருமே மூத்த பிள்ளையின் குடும்பத்துடன் பேசக்கூடாது என்று குடும்பத் தலைவர் நினைப்பது ஆணாதிக்கத்தனமான விஷயம்.

புதிதாகத் திருமணமான பெண், தாம்பத்திய இன்பத்தையும் அதற்குரிய தனிமையான தருணங்களையும் எதிர்பார்ப்பது இயல்பான விஷயம். ஆனால் அதையே ஒரு குற்றம் போலப் படத்தில் சித்திரித்திருப்பார்கள். ‘தன்னடக்கம் வேணுமம்மா. பெண்ணுக்கது நல்லதம்மா’ என்று கவிஞரும் இதற்கு உடன்பட்டிருப்பார். ‘இந்த உடைதான் உனக்குப் பொருத்தமானது. அந்தப் பாரம்பரியம்தான் எனக்குப் பிடித்த விஷயம்’ என்று இளவரசியிடம் திலீப் பாத்திரம் வற்புறுத்துவதும் அத்துமீறலான விஷயம். இப்படியாக சில விஷயங்களில் பழைமைவாதங்களுக்குப் படம் தன்னிச்சையாக முட்டுக் கொடுப்பது ஒரு பலவீனம். மரபு என்கிற பெயரில் இந்தியக் குடும்பங்கள் இப்படித்தான் இயங்குகின்றன என்று விசு சுட்டிக் காட்டியிருக்கிறார் என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இறுதிவரை அதற்கான எதிர்வினை வாதம் என்பது படத்தில் இடம்பெறவே இல்லை.

சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுதான். குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிற வரை ‘ஃபேமிலி டிராமாக்களுக்கு’ அழிவில்லை. கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்புக்குச் சில பலவீனங்கள் இருக்கும். அதே சமயத்தில் நிறைய பலங்களும் உண்டு. அப்படியொரு அற்புதமான விஷயத்தை நாம் இன்றைக்குப் பெரிதும் தவற விட்டிருக்கிறோம். இளைய தலைமுறையினர் இன்றைக்குப் பார்த்தாலும் மிகுந்த சுவாரஸ்யமான அனுபவத்தையும் பாடத்தையும் தரக்கூடிய திரைப்படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.

இந்தப் படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.