Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: சிபி, விக்ரம், ஹரி

சிபி, விக்ரம், ஹரி
பிரீமியம் ஸ்டோரி
News
சிபி, விக்ரம், ஹரி

தளபதி எங்க மீம் பற்றிப் பேசின வீடியோவைப் பலர் எங்களுக்கு அனுப்பினாங்க. சிலர், அவர் பேசிய வீடியோ வேற ஒரு கிரியேட்டர் பண்ணினதுன்னும் சொன்னாங்க. ஒருவேளை அவங்களாகக்கூட இருக்கலாம்.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

`புஷ்பா’ திரைப்படத்தில் பிரபலமான `ஊ சொல்றியா மாமா' பாடலை `தில்லானா மோகனாம்பாள்' பாடல் காட்சியுடன் இணைத்து `விக்கல்ஸ் டீம்' பதிவிட்ட ரீல்ஸ் சமூக வலைதளப் பக்கங்களில் மில்லியன்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்டது. சமீபத்தில் நடந்த `வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் விஜய் `ரஞ்சிதமே' பாடல் குறித்து வைரலான ஒரு மீம் குறித்துப் பேசியிருப்பார். அதுவும் அவர்களுடைய ரீல்ஸ்தான்!

ரீல்ஸ் பட்டாளம்: சிபி, விக்ரம், ஹரி

‘ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்குள் ஒரு பாடலை எப்படி கம்போஸ் பண்ணுறாங்க’ என நகைச்சுவை கலந்து ரீல்ஸ் போடுவதாக இருக்கட்டும், அன்றாட வாழ்க்கையில் நடக்கிற சின்னச்சின்ன விஷயங்களை கான்செப்ட்டாக எடுத்துக்கொண்டு நக்கல் செய்வதாக இருக்கட்டும், மூன்று பேர் சேர்ந்துகொண்டு இன்ஸ்டாகிராமில் தங்களுக்கென ஓர் இடத்தை கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளனர். விக்ரம், ஹரி, சிபி இந்த மூன்று பேரைத்தான் பெரும்பாலான வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். அவர்களைத் தவிர்த்தும் பலர் அந்த டீமில் இருக்கிறார்கள் என்பது அந்த ஸ்டூடியோவுக்குள் நுழைந்த பிறகுதான் தெரிந்தது. உற்சாகமாய் நம்மை வரவேற்று `வாரிசு' சம்பவம் குறித்துப் பேசத் தொடங்கினார் ஹரி.

‘‘தளபதி எங்க மீம் பற்றிப் பேசின வீடியோவைப் பலர் எங்களுக்கு அனுப்பினாங்க. சிலர், அவர் பேசிய வீடியோ வேற ஒரு கிரியேட்டர் பண்ணினதுன்னும் சொன்னாங்க. ஒருவேளை அவங்களாகக்கூட இருக்கலாம். ஆனா, நாங்கதான் அதுன்னு எப்படி கன்பார்மா நினைச்சோம்னா, விஜய் சொல்லும்போது ‘நான் பாடிட்டு அந்த ரீல்ஸ்ல வந்த மாதிரிதான் போயிட்டேன்’னு சொல்லியிருப்பார். அப்படி நாங்கதான் பண்ணியிருந்தோம். அதுமட்டுமல்லாமல் மானஸி, அந்த மீம் தளபதிக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு எங்ககிட்ட சொன்னாங்க. அதனால அது நாங்கதான்னு முடிவு பண்ணினோம்’’ என்றதும் ‘`மானஸி சொன்ன விஷயம் எனக்கு இப்போதான் தெரியும்’' என்றவாறு விக்ரம் பேச ஆரம்பித்தார். ஸ்டாண்ட் அப் காமெடியன், வக்கீல் என்கிற முகமும் விக்ரமுக்கு உண்டு என்பதை அங்கிருந்த புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்.

ரீல்ஸ் பட்டாளம்: சிபி, விக்ரம், ஹரி

‘‘கிரிக்கெட் வீரர் அஷ்வினுடன் இணைந்து ஒரு விளம்பரம் பண்ணியிருந்தேன். அப்ப அவர்கூட என்னைப் பார்த்ததும் நீங்க மியூசிஷியனான்னு தான் கேட்டார். எங்களுக்கும் மியூசிக்கிற்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு பாட்டைக் கேட்கும்போது அந்த ரெக்கார்டிங்ல இதெல்லாம் நடந்திருக்கும்னு விளையாட்டா காமெடி கலந்து பண்ணினோம். அது நல்ல ரீச் கொடுத்துச்சு. அப்படி எங்களுக்குத் தோணின பாடல்களை எடுத்துதான் ரீல்ஸ் பண்ணினோம். `நிலவைக் கொண்டு வா' பாடலை நாங்க ரீல்ஸ் பண்ணின பிறகு தேவா சார், `அந்தப் பொண்ணோட கேரக்டர் கொஞ்சம் ஹை மோடில் இருக்குங்கிறதனால அவங்க பாடுறது ஹை டோனில் இருக்கும். அந்தப் பையன் கொஞ்சம் அமைதியான கேரக்டருங்கிறதனால அவர் கொஞ்சம் கம்மியான டோனில் பாடுற மாதிரி இருக்கும்!'னு ரொம்ப க்யூட்டா அந்தப் பாட்டோட சூழலை விளக்கினார். ஆனா, நாங்க அதை காமெடியா எங்களுடைய கற்பனையில் பண்ணினோம். அது பயங்கர ரீச் கொடுத்துச்சு’’ என்றதும் ஹரி இடைமறித்தார்.

ரீல்ஸ் பட்டாளம்: சிபி, விக்ரம், ஹரி

‘`முன்னாடியெல்லாம் நம்மளை யாராவது பார்த்து நீங்கதானே அதுன்னு கேட்டுட மாட்டாங்களான்னு இருக்கும். இப்ப நிறைய பேர் பொது இடத்துல எங்களை அடையாளம் கண்டுபிடிக்கிறாங்க. அது ரொம்பவே சந்தோஷமா இருக்கு’’ என்றவருக்கு ஆடிஷன் கால் வர, `விக்ரம், யூ கண்டின்யூ!' என்று போன் பேசச் சென்றார். விக்ரம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

``நான் ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணுறதனால டிஜிட்டல் பிளாட்பார்முக்கு முன்னாடியே மக்கள் என்னை அடையாளம் கண்டு, நேரடியாக வந்து பேசலைன்னாலும் குறுகுறுன்னு பார்க்கவாச்சும் செய்திருக்காங்க. டிஜிட்டலுக்கு வந்தபிறகு, நீங்க எவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்டா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா மக்களுக்கிடையில் ரீச் ஆகும்போது நீங்க வீடியோவாகத்தான் தெரிவீங்கன்னு புரிஞ்சது. ‘நீங்கதானே ப்ரோ அந்த வீடியோவில் வந்தது’ன்னுதான் கேப்பாங்க. கடைசி வரைக்கும் அந்த வீடியோவாகவே போயிடுவோமோன்னெல்லாம் தோணும். என் அப்பா வெளிப்படையா என்னைப் பாராட்டவே மாட்டார். நானும் அப்பாவும் விடுமுறை நாளில் மாலுக்குப் போயிருந்தோம். அங்க என்னைப் பார்த்துட்டு சிலர், அவங்களுக்குள்ளேயே என்னைக் காட்டிப் பேசினாங்க. அதையெல்லாத்தையும் தூரத்துல நின்னு என் அப்பா ரசிச்சுப் பார்த்துட்டு இருந்தார். ஆனா, அப்பகூட அவர் என்னைப் பாராட்டலைங்க, அதுதான் என் அப்பா’’ என்றவரிடம் இன்ஸ்டாகிராம் குறித்துக் கேட்டோம்.

‘‘இப்ப டிஜிட்டல் பிளாட்பாரம் மொத்தமா கார்ப்பரேட் ஆகிட்டு இருக்கு. இன்ஸ்டாகிராமும் அப்படியாகத்தான் இருக்கு. நான் மூணு வருஷம் முன்னாடி எழுதுன அதே ஜோக்கைத்தான் இப்பவும் ஸ்டாண்ட் அப் காமெடில பண்ணுறேன். முன்னாடி 17 டிக்கெட் விக்கிறதே பெருசு. இப்ப ஷோ ஃபுல் ஆகிற அளவுக்கு டிக்கெட் விக்குது. ஆர்ட்டிஸ்ட்டிற்கு சோஷியல் மீடியா மிகப்பெரிய வரப்பிரசாதம். அவன் பிராண்டை அவனே புரொமோட் பண்ணிக்க முடியும். என்னோட டிக்கெட் விக்கிறதுக்கு பெரிய காரணமே இன்ஸ்டா ரீல்ஸ் தான்! ஒரு வீடியோ வைரல் ஆனா அத வச்சு ஒன்னும் பண்ண முடியாது. தினமும் வீடியோ பண்ணியேதான் ஆகணும். அதனாலதான் கன்டென்ட் சார்ந்த ரீல்ஸிலும் கவனம் செலுத்துறோம்.

சமீபத்தில், `லத்தி' படத்துக்காக புரொமோஷன் வீடியோ பண்ணியிருந்தோம். அதுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். எங்களுக்கு கம்பர்டபுளான புரொமோஷன்களையும் பண்ணுறோம். தொடர்ந்து மக்களை என்டர்டெயின் பண்ணிட்டே இருக்கணும். கூடவே சமூகத்துக்குத் தேவையான கருத்துகளையும் விதைக்கணும்... அதுதான் எங்க நோக்கம்!'’ எனப் புன்னகைத்தார். மூவரிடமும் வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

சூதாட்டம் சார்ந்த புரொமோஷன்களை நிச்சயம் பண்ண மாட்டோம். அதே மாதிரி, எங்களுக்கு நேர்மையாகத் தெரியாத பிராண்ட் கொலாபரேஷன்களையும் பண்ண வேண்டாம் என்பதில் ரொம்பவே உறுதியா இருக்கோம்.