Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: திவ்ய லட்சுமி

திவ்ய லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
திவ்ய லட்சுமி

என் பிரண்ட்ஸ் நிறைய பேர் பேஜ் ரீச் ஆக ஆரம்பிச்ச பிறகு, `நீ ஒண்ணுல மட்டும் கவனமா இருக்கலாமே... ஏன் எல்லாத்தையும் பண்ணுற'ன்னெல்லாம் கேட்டிருக்காங்க

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

“பொதுவா, இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர் பொறுத்தவரைக்கும் நாங்க எல்லாத்தையும் காட்டுறோம்.. எங்களுக்கு பிரைவசி இல்லைன்னு நினைக்கிறாங்க. ஆனா, அது உண்மையில்லை! நாங்க என்ன காட்டணும்னு நினைக்கிறோமோ அதை மட்டும்தான் உங்களுக்குக் காட்டுறோம்! அது தவிர்த்து எங்களுக்கும் சீக்ரெட்ஸ் இருக்கு’’ என்றவாறு பேசத் தொடங்கினார் திவ்ய லட்சுமி. லைஃப்ஸ்டைல், ஃபுட், டான்ஸ் என வெரைட்டியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவிட்டு வருபவரைச் சந்தித்தோம்.

‘`லைஃப்ஸ்டைல், ஃபுட் ரிவ்யூ என எனக்கு என்னென்ன பிடிக்குமோ அது எல்லாத்தையும் எக்ஸ்ப்ளோர் பண்ண ரொம்ப ஆசை. அப்படி எனக்குப் பிடிச்சதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுறேன்!

நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஐ.டி கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டிருக்கேன். கடந்த 2019-ல்தான் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் இன்ஸ்டாகிராம்ல பிசினஸ் பண்ணினேன். கொஞ்ச நாள் ஃபுட் பேஜ் வச்சிருந்தேன். இப்படி ஒவ்வொரு பேஜ் வச்சு எனக்குப் பிடிச்சதெல்லாம் பண்ணிட்டு இருந்தேன். எந்த பேஜையும் முழுசா பயன்படுத்தாம பாதியிலேயே விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன். அப்படி பல பேஜ்கள் ஆரம்பிச்சு கடைசியா ஸ்ட்ராங்கா ஒரு பேஜ் ஆரம்பிக்கலாம்னு முடிவெடுத்தேன். அதுல லைஃப்ஸ்டைல், ஃபுட், டிராவல்னு பிடிச்ச எல்லாத்தையும் போடலாம்னு ஆரம்பிச்சேன். இன்ஃபுளூயன்ஸர் ஆகணும்கிற எண்ணமெல்லாம் அப்ப கிடையாது.

என் பிரண்ட்ஸ் நிறைய பேர் பேஜ் ரீச் ஆக ஆரம்பிச்ச பிறகு, `நீ ஒண்ணுல மட்டும் கவனமா இருக்கலாமே... ஏன் எல்லாத்தையும் பண்ணுற'ன்னெல்லாம் கேட்டிருக்காங்க. எனக்கு எல்லாமே பிடிக்கும். பிடிச்ச எல்லாத்தையும் நான் ஏன் பண்ணக் கூடாது? ஒரு விஷயத்துல ராஜாவாக இருக்கிறதை விட எல்லா விஷயத்தையும் கத்துக்கணுங்கிறதை நான் எப்பவும் நம்புவேன். எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். `எஞ்சாயி எஞ்சாமி' பாட்டுல நானும் ஆடியிருக்கேன். தவிர, விளம்பரப்படங்கள், ஆல்பம் சாங்ஸ், ஒரு நிமிட ரீல்ஸ்ல சின்னச் சின்ன புராஜெக்ட்களில் எல்லாம் பேக் டான்ஸராக இருந்திருக்கேன்.

திவ்ய லட்சுமி
திவ்ய லட்சுமி

இன்ஸ்டாகிராம் பொறுத்த வரைக்கும் எது ரீச் ஆகும், எது ஆகாதுன்னு சொல்லவே முடியாது. ரொம்ப மெனக்கெட்டு ஒரு ரீல் எடுத்திருப்போம்... ஆனா, அது ரீச் ஆகியிருக்காது. சும்மா விளையாட்டா ஸ்லோ மோஷனில் ஏதாவது ரீல்ஸ் போட்டிருப்போம். அது ஹிட் ஆகிடும். அப்படி நிறைய தடவை எனக்கு நடந்திருக்கு. பேஜ் ஆரம்பிச்ச புதுசுல நானும், அம்மாவும் சேர்ந்து விளையாட்டா ஒரு ரீல் பண்ணினோம். அது நல்ல ரீச் ஆச்சு. அதிலிருந்து என்னைவிட என் அம்மாவுக்கு ரசிகர்கள் அதிகமாகிட்டாங்க. ஒரு மாலுக்குப் போயிருந்தோம்... அங்க என்னை யாருமே கண்டுக்கல. என் அம்மாவைப் பார்த்துட்டு ‘நீங்கதானே அது’ன்னு சொல்லி செல்ஃபி எடுத்தாங்க. `டேய்! என்னடா நடக்குது இங்க... நான் இருக்கேன்டா!'ங்கிற மாதிரி ஆகிடுச்சு’’ எனச் சிரித்தவர், தொடர்ந்து பேசினார்.

‘‘எனக்கு வெஸ்டர்ன் டிரஸ் போடப் பிடிக்கும். அதனால வெஸ்டர்ன் டிரஸ்ல நிறைய வீடியோ பண்ணியிருக்கேன். அந்த வீடியோவில் என் முட்டியைப் பார்த்துட்டு, `ஏன் இவ்வளவு கறுப்பா இருக்கு’ன் னெல்லாம் கமெண்ட் பண்ணுணாங்க. உருவ கேலியும் பண்ணுவாங்க. முட்டி கறுப்பா இருக்குங்கிறதனால அதைக் காட்டக் கூடாதுன்னெல்லாம் இல்லையே? எனக்கு கம்பர்ட்டபுளா இருக்கிற, எனக்குப் பிடிச்ச டிரஸ்ஸை நான் போடுவேன். அதே மாதிரி எனக்குப் பிடிச்சதை வீடியோவாக பண்ணுறேன். அதனால நெகட்டிவ் கமெண்ட்ஸ் பண்ணுறவங்களை நான் பெருசா எடுத்துக்க மாட்டேன்’’ என்றவரிடம் கொலாபரேஷன் குறித்துக் கேட்டோம்.

“ஆடியன்ஸ், பிராண்ட் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணணும். தப்பான தகவலை ஆடியன்ஸுக்குச் சொல்லிடக் கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருப்பேன். பெரும்பாலும் கடைகளுக்குப் போய் அந்தக் கடைகள் குறித்துப் பேசி வீடியோ போடுவேன். அதனால அது பலருக்கும் பயனுள்ளதா இருக்கும். சமீபத்தில் மூவி புரொமோஷனுக்குப் போயிருந்தேன். ‘கட்டா குஸ்தி’ பட புரொமோஷனில் விஷ்ணு விஷால்கூட டான்ஸ் ஆடி ரீல்ஸ் போட்டிருந்தேன். `கனெக்ட்' பட புரொமோஷனில் நயன்தாரா மேடமை சந்திச்சேன். நயன்தாராவை ஸ்கிரீன் தவிர்த்து எங்கேயும் நான் பார்த்ததில்லை. அவங்களை சந்திச்சப்ப, `உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க என்னோட இன்ஸ்பிரேஷன். எனக்கு உங்களை மாதிரி ஆகணும்னு ஆசை. ஒரு தடவை உங்களைக் கட்டிப் பிடிச்சிக்கலாமா'ன்னு கேட்டதும், ‘கண்டிப்பா என்னை மாதிரி வருவீங்க’ன்னு சொல்லி, என்னைக் கட்டிப் பிடிச்சாங்க. அந்த மொமன்ட் அவ்வளவு எமோஷனலா இருந்தது.

ஃபாலோயர்ஸ் எத்தனை பேர் இருக்காங்க என்பதை பேஸ் பண்ணி சில இடங்களில் என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. சில சமயங்களிலெல்லாம் இந்த அக்கவுன்ட்டை விட்டுடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனா, எனக்கு ரிஜெக்‌ஷன் புதுசு கிடையாது. என் உயரம் 5 அடி. அதனால மாடலிங் ஃபீல்டுல என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க. பெரும்பாலும் `இவருக்கு பதிலாக இவர்'னு சீரியலில் எல்லாம் காட்டுவாங்களே, அப்படி ரீப்ளேஸ்மென்ட் வாய்ப்புதான் எனக்கு இதுவரைக்கும் கிடைச்சிருக்கு. `எஞ்சாயி' பாட்டுலகூட ஒரு பொண்ணு கடைசி நேரத்துல வரலைன்னு அவங்களுக்கு பதிலாதான் நான் போய் ஆடினேன். தோல்வி என்னைக்கும் நிலையானது இல்லை. நாம தொடர்ந்து நம்மளுடைய உழைப்பைக் கொடுத்தா மட்டுமே போதும்’’ என்றவரிடம் மறக்கமுடியாத அனுபவம் குறித்துக் கேட்டோம்.

திவ்ய லட்சுமி
திவ்ய லட்சுமி

“வெளியில என்னைப் பார்க்கிற பலரும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு என் இன்ஸ்டாகிராம் ஐ.டி பெயரைச் சொல்லி, `நீங்கதானே அவங்க?'ன்னு கேட்பாங்க. எப்படி சீரியல் ஆர்ட்டிஸ்டை அவங்க நடிச்ச சீரியல் கேரக்டருடைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுறதுதான் அவங்களுடைய வெற்றியோ, அப்படித்தான் எனக்கும் அந்தத் தருணம். `ஜெயிச்சிட்ட மாறா!'ன்னு இருந்துச்சு. தவிர, என் வீடியோ பார்த்துட்டு, `அந்தக் கடைக்குப் போய் பொருள்கள் வாங்கினோம். எங்களுக்கும் அந்த புராடக்ட் ரொம்பப் பிடிச்சிருந்தது’ன்னு சொல்வாங்க. அப்போதெல்லாம் நாம சரியான பாதையில்தான் போயிட்டு இருக்கோம்னு சந்தோஷமா இருக்கும்’’ என்றவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.

‘‘பின்வரிசையில ஆடுறவங்களுடைய முகம் பெரும்பாலும் திரையில் தெரியாது. ஆனாலும் நாங்க ஏன் சந்தோஷமா ஆடுறோம்னா எங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்! அதனால அதை நாங்க என்ஜாய் பண்ணிப் பண்ணுறோம். அப்படித்தான் எனக்கு நடிக்கவும் பிடிக்கும். `வாம்மா மின்னல்' மாதிரி ஒரு செகண்ட் வந்தாக்கூட போதும்! அப்படி ஏதாவது ஒரு கேரக்டரில் படங்களில் நடிக்க ஆசைப்படுறேன்’’ என்றவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்!

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

தேவையற்ற முடி வளர்ச்சியை நிரந்தரமாக நீக்குவதுங்கிறதுல எனக்கு நிறைய பயம் இருக்கு. அதனால அந்தச் சிகிச்சையை நான் எடுத்துக்க மாட்டேன். நான் யூஸ் பண்ணாம அதை என் ஆடியன்ஸுக்கும் சொல்ல முடியாதுங்கிறதனால அந்த மாதிரியான புரொமோஷன்களைத் தவிர்த்திடுவேன்.