Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: யுவராணி

யுவராணி
பிரீமியம் ஸ்டோரி
News
யுவராணி

இன்ஸ்டாகிராமில் மனோஜ்னு ஒரு அண்ணா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க. நான் ஏதாவது கேப்ஷன் தப்பா போட்டேன்னா அதை சரிசெய்யச் சொல்லுவார்.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஃபுட் ரிவ்யூவிற்குத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. என்னென்ன ரெஸ்டாரன்ட்களில் என்னென்ன உணவுகள் ட்ரை பண்ணலாம் என யோசிக்கிற உணவுப் பிரியர்களுக்கு ஃபுட் ரிவ்யூ ரீல்ஸ் மிகப்பெரிய வரப்பிரசாதம். 60 செகண்டிற்குள் ஹோட்டலின் இடம், வெரைட்டியான உணவுகள், பட்ஜெட் என எல்லாத்தையும் கலந்துகட்டிச் சொல்லிவிடுகிறார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சாய்ஸ் நிச்சயம் இருக்கும். ஆனாலும், சந்து பொந்துக்குள் இருக்கும் ஃபேமஸ் ஹோட்டலைக்கூடத் தவறவிடக்கூடாது என வெறித்தனமாக அலைந்து திரிந்து ரீல்ஸில் கவனம் செலுத்துகிறார் ஃபுட் ரிவ்யூவர் யுவராணி. அவரைச் சந்தித்தேன்.

உள்ளே நுழைந்ததும், ‘‘இது நான் போஸ்ட் போடுறதுக்கான நேரம். ஒரு 5 நிமிடம் ப்ளீஸ்... வீடியோ அப்லோடு பண்ணிட்டு வந்துடுறேன்!' என்றவர் மும்முரமாக வீடியோ அப்லோடு செய்துவிட்டு, பேச ஆரம்பித்தார்.

ரீல்ஸ் பட்டாளம்: யுவராணி

‘‘எனக்கு சாப்பாடுன்னா ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நாளாகவே ஒரு பேஜ் ஆரம்பிக்கலாம்னு தோணிட்டே இருந்துச்சு. ஒருநாள் என் அம்மா இட்லியும், சிக்கன் குழம்பும் செய்திருந்தாங்க. அதை வீடியோ எடுத்து சும்மா போட்டேன். அதுக்கப்புறம் தொடர்ந்து வீட்ல சமைக்கிறதை, ஹோட்டலில் சாப்பிடுறதையெல்லாம் வீடியோவாக போட ஆரம்பிச்சேன். படிப்படியா ஃபாலோயர்ஸ் அதிகமாக ஆரம்பிச்சாங்க. நான் ஆர்க்கிடெக்சர் படிச்சிட்டு இப்ப பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கிடையில் கிடைக்கிற நேரத்துல வீடியோ எடுத்து நானே எடிட்டும் பண்ணிப் போட்டுட்டு இருந்தேன்.

இன்ஸ்டாகிராமில் மனோஜ்னு ஒரு அண்ணா எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க. நான் ஏதாவது கேப்ஷன் தப்பா போட்டேன்னா அதை சரிசெய்யச் சொல்லுவார். அந்த அண்ணன் என்கிட்ட, ‘ஒரு பிரியாணி ஃபெஸ்ட்டிற்காக ஒரு ஹோட்டலுக்கு இன்ஃபுளூயன்ஸர்ஸை இன்வைட் பண்ணியிருக்காங்க' என்கிற தகவலைச் சொன்னார். நானே என்னை ஃபுட் ரிவ்யூவராக நினைச்சிக்கிட்ட தருணம் அதுங்கிறதனால அவங்ககிட்ட போன் பண்ணிக் கேட்டேன். அவங்க, `உங்களுக்கு எத்தனை ஃபாலோயர்ஸ் இருக்காங்க?'ன்னு கேட்டதும், நான் ஐந்நூறுன்னு சொன்னேன். ‘ஆயிரத்துக்கு மேற்பட்ட ஃபாலோயர்ஸ் உள்ளவங்களைத்தான் நாங்க இன்வைட் பண்ணியிருக்கோம்’னு சொல்லிட்டாங்க. ஒரு மாதிரி ஆகிடுச்சு. அந்தத் தருணம்தான் நான் தொடர்ந்து வீடியோ பண்ணனுங்கிறதுக்குத் தூண்டுதலா அமைஞ்சது. 40,000 ஃபாலோயர்ஸ் வந்த பிறகுதான் புரொமோஷனுக்காக ஹோட்டல்களில் என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதுவரைக்கும் நானாகத்தான் எக்ஸ்ப்ளோர் பண்ணிட்டிருந்தேன்.

ரீல்ஸ் பட்டாளம்: யுவராணி

ஒரு ஹோட்டலில் நான் சாப்பிட்டு அந்தச் சாப்பாடு பிடிக்கலைன்னா அதை வீடியோவாகப் போட மாட்டேன். எதுக்கு நல்லா இல்லைன்னு சொல்லி அவங்களுடைய பிசினஸை பாதிக்கணும்? ‘நான் இன்னைக்கு இந்த ஹோட்டலில் இந்த உணவு ட்ரை பண்ணினேன். நல்லா இருந்துச்சு! நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க’ன்னுதான் சொல்றேன். தினமும் இந்த ஹோட்டலில் இந்த மெனுவை சாப்பிடுறேன்னெல்லாம் நான் எந்த வீடியோவிலும் சொல்லலைங்க. எனக்கு சாப்பிடுறது ரொம்பப் பிடிக்கும். பல ஊர்களுக்கு டிராவல் பண்ணி சாப்பிட்டிருக்கேன். ராஜஸ்தான் அரசு சார்பாக தமிழ்நாட்டில் இருந்து என்னை செலக்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க மட்டன் டிஷ் எல்லாமே சூப்பரா இருந்தது. எல்லாத்தையும் எக்ஸ்ப்ளோர் பண்ணி வீடியோ பதிவிட்டேன். அது எல்லாத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது’’ என்றவரிடம் நெகட்டிவ் கமென்ட்கள் குறித்துக் கேட்டோம்.

``பொண்ணு எப்படி சாப்பிடுறா பாருன்னு கமென்ட் பண்ணுவாங்க. அதுதான் நெகட்டிவ் கமென்ட்டா நான் நினைக்கிறது. அதையெல்லாம் தாண்டி எனக்கு ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட்டா இருக்கிற ஃபாலோயர்களை செலக்ட் பண்ணி அவங்களை என்னுடன் சாப்பிடக் கூட்டிட்டுப் போறேன்’’ என்றவரிடம், மறக்கமுடியாத மோசமான அனுபவம் குறித்துக் கேட்டோம்.

ரீல்ஸ் பட்டாளம்: யுவராணி

‘`எந்த ஹோட்டலுக்குப் போனாலும் கிச்சனை விசிட் பண்ணுவேன். ஒரு ஹோட்டலில் கஸ்டமர் சாப்பிட்டு மிச்சம் வச்சதை எடுத்துட்டு வந்து ஒரு பாத்திரத்தில் போட்டாங்க. அதை அவங்க சூடு பண்ணிப் பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சது. அந்த ஹோட்டலில் வீடியோ எடுக்காம வெளியேறிட்டேன். உங்க ஹோட்டலுக்கு வீடியோ எடுக்க வர்றவங்களுக்கு எப்படி நல்ல உணவைக் கொடுக்குறீங்களோ, அப்படி உங்களை நம்பி சாப்பிட வர்ற கஸ்டமர்ஸுக்கும் கொடுங்கன்னு ஹோட்டல் உரிமையாளர்களுக்குச் சொல்லிக்கறேன். அதேசமயத்துல, எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. ரிவ்யூ சொன்ன ஹோட்டலில் ஏதாவது பிரச்னைன்னா, அதுக்கு ரிவ்யூவர் எப்படி பொறுப்பேத்துக்க முடியுங்கிறதை மக்கள்கிட்டேயும் சொல்லிக்க நினைக்கிறேன்’’ என்றவர், தன் டயட் ரகசியங்களையும் சொன்னார்.

‘‘ஹெல்த் விஷயத்தில் ரொம்பவே கவனமா இருப்பேன். வெரைட்டியான உணவுகள் சாப்பிட்டாலும் கலோரியில் கண்ட்ரோல் ஆக இருப்பேன். ஆரம்பத்தில் 75 கிலோ எடை இருந்தேன். இப்ப 55 கிலோ இருக்கேன். ஃபுட் விலாக் (Vlog) பண்ணித்தான் எடையைக் குறைச்சேன். இப்ப பலர் ஃபுட் ரிவ்யூ பண்ணுறாங்க. வித்தியாசமாகக் கொடுக்கறதுதான் சவால். அதுக்கு நான் எடுத்த ஸ்டெப்தான் ‘பின்கோடு சீரிஸ்.' இப்ப சென்னையில் ஆயிரம் விளக்கு ஏரியான்னு எடுத்துக்கிட்டா, அங்க மிஸ் பண்ணக் கூடாத, கண்டிப்பா ட்ரை பண்ணிப் பார்க்க வேண்டிய மூன்று டிஷ் குறித்து வீடியோ போடுவேன். அப்படி இந்த சீரிஸில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 15 பின்கோடுகள் வரைக்கும் பண்ணியிருக்கேன்’' என்றவருக்கு வீட்டிலிருந்து அழைப்பு மணி வர, ‘`சாப்பிடுற நேரம் வந்துடுச்சு... அம்மா போன் பண்ணிட்டாங்க!’' என்றார். `நூறு டிஷ்கள் இருந்தாலும் அம்மாவின் மெனுபோல் ஆகிடுமா!' என `பிச்சைக்காரன்' பட பாணியில் ரைமிங்காகப் பாடி, அவருக்கு டாட்டா காட்டினோம்.

ரீல்ஸ் பட்டாளம்: யுவராணி

‘‘அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?’’

‘‘எனக்கு கேட்ஜெட் பற்றி எதுவும் தெரியாது. புரொமோஷனுக்காகக் கேட்டாங்கன்னு ஒரு முறை கேட்ஜெட் குறித்து வீடியோ பண்ணிட்டேன். பிறகுதான் என் ஃபாலோயர்ஸ், ‘அக்கா, இது செகண்ட் காப்பி. உங்களுக்குத் தெரியாதா?’ன்னு கேட்டாங்க. நிஜமாகவே அது செகண்ட் காப்பின்னு எனக்குத் தெரியாது. அதிலிருந்து எனக்குத் தெரியாத, நான் பயன்படுத்திப் பார்க்காத விஷயங்களை நிச்சயம் புரொமோட் பண்ண மாட்டேன். நான் ட்ரை பண்ணி எனக்கு அது உண்மையாகவே நல்ல ரிசல்ட் கொடுத்திருந்தா மட்டும்தான் புரொமோட் பண்ணுவேன்.’’