Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: பிரியங்கா - ஐஸ்வர்யா

பிரியங்கா - ஐஸ்வர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியங்கா - ஐஸ்வர்யா

சேர்ந்து ஏதாவது பண்ணணும்ங்கிற ஆசை ரெண்டு பேருக்குமே இருந்துச்சு. பொட்டிக் வச்சு நடத்தலாமா, வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்த சமயம்தான் எங்களுக்கு இன்ஸ்டாகிராம் அறிமுகமாச்சு

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அந்த வரிசையில், எந்தக் கடையில் பட்ஜெட்டுக்குள் ஆடைகளைத் தேர்வு செய்யலாம்? ஒரு டிரஸ்ஸை எப்படியெல்லாம் கஸ்டமைஸ் பண்ணி அணிந்துகொள்ளலாம்? மிக்ஸ் மேட்ச் ஆடைகளை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? இப்படி லைஃப்ஸ்டைல் சார்ந்த விஷயங்களைத் தங்களுடைய ஃபாலோயர்ஸுக்கு அக்கா, தங்கை இருவர் சொல்லிக்கொடுக்கின்றனர்.

ரீல்ஸ் பட்டாளம்: பிரியங்கா - ஐஸ்வர்யா

மார்கழி மாத மழையின் நடுவே வளசரவாக்கத்தில் வலை வீசித் தேடி அவர்களுடைய இல்லத்தைக் கண்டுபிடித்துக் கதவைத் தட்டினோம். `வாங்க... வாங்க!' என ஒருவர் நம்மை வரவேற்றார். அவர் தங்கை பிரியங்காவாக இருக்குமோ அல்லது அக்கா ஐஸ்வர்யாவாக இருக்குமோ என்கிற குழப்பத்தில் திருதிருவென முழிக்க, `ஹாய்... நான் ஐஸ்வர்யா..!' எனச் சிரித்தார். `ஆரம்பமே இப்போ அதிருதடா..!' என்கிற பாடலும் பொருத்தமாக வீட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

‘`2018-ல்தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட ஆரம்பிச்சோம். பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் வர்றதுக்கே கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆச்சு. ஆனாலும், என்னைக்காவது ஒருநாள் நிச்சயம் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்னு நம்பினோம். அது இப்ப கிடைச்சிருக்கு’’ என்றவாறு பேசத் தொடங்கினார் ஐஸ்வர்யா.

‘`நானும் சரி, பிரியங்காவும் சரி, வழக்கமா ஒரே மாதிரியான ஸ்டைலில் டிரஸ் போட விரும்ப மாட்டோம். ஃபேஷன் டிசைனிங் சார்ந்த விஷயங்களில் எங்களுக்குள் ஆர்வம் இருந்துச்சு. நாங்களே வரைஞ்சு எங்களுடைய காஸ்டியூம் டிசைனர்கிட்ட ‘இப்படி தைச்சுக் கொடுங்க’ன்னுலாம் கேட்டுப் போட்டிருக்கோம். அப்படி நாங்க போடுற டிரஸ்கள பார்த்துட்டு பலரும் ‘இதை எங்க வாங்குறீங்க, எப்படி தைக்குறீங்க’ன்னுலாம் கேட்பாங்க’’ என்றதும் பிரியங்கா, ‘`இரு... நான் சொல்றேன்!’' என்றவாறு தொடர்ந்தார்.

‘`சேர்ந்து ஏதாவது பண்ணணும்ங்கிற ஆசை ரெண்டு பேருக்குமே இருந்துச்சு. பொட்டிக் வச்சு நடத்தலாமா, வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்த சமயம்தான் எங்களுக்கு இன்ஸ்டாகிராம் அறிமுகமாச்சு. இன்ஸ்டாகிராமில் முதலில் அக்கா ஒரு அக்கவுன்ட் வச்சிருந்தாங்க. அதையே நாம சேர்ந்து பயன்படுத்தலாம்னு தோணவும், அதை எங்களுடைய பப்ளிக் பேஜ் ஆக மாத்தினோம்.

ரீல்ஸ் பட்டாளம்: பிரியங்கா - ஐஸ்வர்யா

ஆரம்பத்தில் ஒரு டிரஸ்ஸை எப்படி அணியலாம், நாங்க எப்படி டிரஸ் செலக்ட் பண்ணுவோம்னு பேசிட்டிருந்தோம். கொஞ்ச கொஞ்சமா பேஜ் ரீச் ஆக ஆரம்பிச்சது. வெறும் ஃபேஷன் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் லைஃப்ஸ்டைல் சார்ந்த விஷயங்களையும் சொல்லலாம்னு தோணுச்சு. அதனால ஃபேஷன், ஃபுட், டிராவல் மூணு பற்றியும் வீடியோஸ் பண்ண ஆரம்பிச்சோம். எல்லாமே ரெண்டு பேருடைய உழைப்புதானே தவிர தனிநபரா நாங்க எப்பவும் கிரெடிட் எடுத்துக்க மாட்டோம்’' என்றதும், ஐஸ்வர்யா தொடர்ந்தார்.

‘`எனக்கு வெரைட்டியான உணவுகளை டேஸ்ட் பண்ணிப் பார்க்க ரொம்பப் பிடிக்கும். அதனால ஃபுட் ரிவ்யூ வீடியோ பண்ணினோம். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. நானும் பிரியங்காவும் டிராவல் அதிகம் பண்ணுவோம். அப்படி டிராவல் போற இடங்கள எக்ஸ்ப்ளோர் பண்ணி எங்க அனுபவத்தைப் பகிர்ந்தோம். அந்த வீடியோவிற்கும் நல்ல வரவேற்பு. `சென்னையின் கிளீனஸ்ட் பீச்' என ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டோம். அது மில்லியன் வியூஸ்க்கு மேல போச்சு. அது ஆடியன்ஸுக்குப் பிடிச்சிருந்ததுன்னு தெரிஞ்சதும் அது மாதிரியான இடங்கள் குறித்துப் பண்ண ஆரம்பிச்சோம். நிறைய ரிசர்ச் பண்ணி புதுப்புது இடங்கள், பட்ஜெட் ஃப்ரெண்ட்லியான டிரஸ், மிஸ் பண்ணக் கூடாத உணவகங்கள்னு தொடர்ந்து வீடியோக்கள் பண்ண ஆரம்பிச்சோம்’' என்றவரைப் பிரியங்கா தொடர்ந்தார்.

ரீல்ஸ் பட்டாளம்: பிரியங்கா - ஐஸ்வர்யா

‘‘பலரும் நாங்க போடுற எல்லா டிரஸ்ஸும் புரொமோஷனில் வாங்கினதுன்னு நினைக்கிறாங்க. உண்மையில் அப்படியில்லை. புரொமோஷனுக்காக இல்லாம எங்களுக்குப் பிடிச்ச கடைன்னும் நாங்க சில வீடியோக்கள் பண்ணியிருக்கோம். புரொமோஷன் சார்ந்த விஷயங்கள் நாங்க பண்ணுறோம்தான்! ஆனா, ஒரு புராடக்ட்டைப் பயன்படுத்தி அது எங்களுக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கலைன்னா அதை நாங்க பணத்துக்காக புரொமோட் பண்ணுறதில்லை. உதாரணத்துக்கு, ஒரு ஸ்கின் கேர் புராடக்ட் நான் ஆல்ரெடி யூஸ் பண்ணியிருக்கேன். அது எனக்கு ரிசல்ட் கொடுக்கலை. அதே பிராண்ட்ல இருந்து புரொமோட் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. அதை மறுத்துட்டோம்’’ என்றவர், நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

‘‘எல்லாருக்கும் எல்லாமும் நிச்சயம் பிடிச்சிருக்காது. எங்களுக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. அதை மீறாம புரொமோஷன் சார்ந்த விஷயங்கள் பண்ணுறோம். சமீபத்தில், `கட்டா குஸ்தி' பட புரொமோஷனுக்குப் போனோம். தொடர்ந்து பட புரொமோஷனுக்குக் கூப்டாங்கன்னா கண்டிப்பா பண்ணுவோம். இன்ஸ்டாகிராமிலிருந்து (BOI) மாதம் ஒருமுறை இன்ஸ்டா கிரியேட்டர்ஸுக்கென விருது கொடுப்பாங்க. அப்படி அக்டோபர் மாதத்துக்கான `Insta Reels award Winner 2022' விருது எங்களுக்குக் கிடைச்சிருக்கு’’ என்றதும், ஐஸ்வர்யா தொடர்ந்தார்.

‘‘எங்க ரெண்டு பேருக்கும் திருமணம் ஆகிடுச்சு. எங்க கணவர்கள்தான் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ஷூட் சார்ந்த விஷயங்களில் உதவி பண்ணுறதா இருக்கட்டும், ஐடியா கொடுக்கிறதா இருக்கட்டும், `நீங்க நீங்களா இருங்க, உங்க மனசுக்குப் பிடிச்சதைப் பண்ணுங்க' என்கிற சுதந்திரத்தைக் கொடுத்ததாலதான் நாங்க ரெண்டு பேரும் வேலையை விட்டுட்டு முழுநேர இன்ஸ்டா இன்ஃபுளூயன்ஸராக கவனம் செலுத்த ஆரம்பிச்சோம். இப்ப நாங்க ஸ்டார்ட்டிங் லெவலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பண்ணிட்டிருக்கோம். அதை அடுத்த லெவலுக்குக் கொண்டு போகணும். அதுதான் இப்போதைக்கு எங்க பிளான். அதுக்காக ஓடிட்டிருக்கோம்’’ எனப் புன்னகைக்க, இருவருக்கும் வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்.

ரீல்ஸ் பட்டாளம்: பிரியங்கா - ஐஸ்வர்யா

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

டேட்டிங் சார்ந்த ஆப்களை புரொமோட் பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க. அது எங்களுக்கு சம்பந்தமே இல்லாததுங்கிறதனால அதை நாங்க பண்ண மாட்டோம்னு சொல்லிட்டோம். அது மாதிரி, கேமிங் ஆப்களையும் கண்டிப்பா புரொமோட் பண்ண மாட்டோம்!