சினிமா
Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: ஸ்ரீநிதி

 ஸ்ரீநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீநிதி

அதிகமா டிரஸ்தான் புரொமோட் பண்ணுவேன். அதையும் தேர்வு பண்ணுறதுக்கு முன்னாடி பிராண்ட் குறித்து செக் பண்ணிட்டுதான் புரொமோட் பண்ணுவேன்.

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கான்செப்ட் வீடியோவிற்கெனத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அந்த வரிசையில், கணவன் - மனைவிக்கிடையே அன்றாடம் நடக்கிற எதார்த்தமான விஷயங்களை ரீல்ஸ் ஆகப் பதிவிட்டு மில்லியன் கணக்கான வியூஸ்களை அள்ளிக்கொண்டிருப்பவர் ஸ்ரீநிதி.

பல மணி நேரம் கடந்து ஒரு வழியாய் அவருடைய அப்பார்ட்மென்ட்டிற்குள் நுழைந்தோம். எந்த வீடாக இருக்கும் எனத் தேடிக்கொண்டிருக்கையில் ஒருவர் மும்முரமாக போனை வளைத்து வளைத்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்க்க அருகே போனால், நாம் தேடி வந்த ஸ்ரீநிதிதான் எதிரில் இருந்தார். நம்மைப் பார்த்ததும், `வாங்க... வாங்க... இவர்தான் என் கணவர். நீங்க வர நேரம் ஆகும்னு ரீல்ஸ் எடுத்துட்டிருந்தோம். சரி, வாங்க வீட்டுக்குப் போகலாம்!' என்று நம்மை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அவர் கொடுத்த காபியின் சுவையை அறியும் முன்பே அவருடைய வீட்டில் இருந்த புகைப்படங்கள் அவரை அறிமுகப்படுத்தின. கலகலப்பாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘என்னோட சொந்த ஊர் தேனி. ஸ்கூல் படிக்கும்போதே என் கணவரும் நானும் காதலிக்க ஆரம்பிச்சிட்டோம். படிப்பு முடிஞ்சதும் ஐ.டி-யில் ஒரு வருஷம் வேலை பார்த்துட்டிருந்தேன். 2018-ல் எங்களுக்குத் திருமணம் நடந்துச்சு. திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டுட்டேன். அடுத்த வருஷமே என் பையனும் பொறந்துட்டான்.

ரீல்ஸ் பட்டாளம்:  ஸ்ரீநிதி

எனக்கு பொட்டிக் வைக்கணும்னு ரொம்ப ஆசை. அதைப் பற்றி என் கணவர்கிட்ட சொன்னப்ப அவர்தான் ‘இன்ஸ்டாகிராம்ல ஒரு பேஜ் ஆரம்பிச்சு போஸ்ட் பண்ணு. உன் ஸ்டைலிங் முதலில் எல்லாருக்கும் பிடிக்குதான்னு செக் பண்ணு’ன்னு சொன்னார். அதனால, 2021-ல் பேஜ் ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் ஒரு சேலையை எப்படியெல்லாம் ஸ்டைல் பண்ணலாம்னு வீடியோ போட்டுட்டு இருந்தேன். ஸ்டைலிங் சார்ந்து மட்டுமே போஸ்ட் எல்லாம் போட்டேன். ஆனா, எதுக்குமே நல்ல ரீச் கிடைக்கல. சரி, பேஜை விட்டுடலாம்னு கொஞ்ச நாளைக்கு எந்த போஸ்ட்டும் போடல. என் ஃப்ரெண்ட்தான் ‘உன் ஸ்டைலிங் நல்லா இருந்துச்சு... தொடர்ந்து பண்ணு’ன்னு சொன்னாங்க. சரின்னு தொடர்ந்தேன்.

`எந்த வயசு திருமணத்துக்கு ஏற்றது?'ன்னு ஒரு ரீல்ஸ் பண்ணினேன். அது ஒரு வாரத்துல ஒரு மில்லியன் வியூஸ் போச்சு. அப்பத்தான் கன்டென்ட் பார்க்க ஆடியன்ஸ் இருக்காங்கன்னு தெரிஞ்சது. தினமும் என் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை ரீல்ஸ் ஆக போட ஆரம்பிச்சேன். கல்யாணம் முடிஞ்சதும் ஹனிமூன் போகிறோமோ இல்லையோ, கோயில் கோயிலா கூட்டிட்டுப் போனாங்க. இந்தக் கடவுளை வேண்டிக்கோ, குழந்தை பிறக்கும்னெல்லாம் சொன்னாங்க. குழந்தை பிறந்த பிறகு அந்தக் குழந்தை அழுதாலும், தூங்கலைன்னாலும் எல்லாத்துக்கும் நம்மளைத்தான் சொல்லுவாங்க. அப்பெல்லாம் ‘என்ன வாழ்க்கைடா’ன்னு இருக்கும்! குழந்தை பெத்துக்கிறதுங்கிறது ரொம்பப் பெரிய விஷயம். அதுக்கு மனதளவில் தயாராகணும். ஆரம்பத்தில் ‘குழந்தையை மட்டும் பெத்துக் கொடு... நாங்க பார்த்துக்கிறோம்’னு சொல்லுவாங்க. ஆனா, உண்மையில் அப்படியில்லை. பெத்தவங்க மட்டும்தான் பார்த்துக்கணும்! இந்த வாழ்க்கை அனுபவங்களை எல்லாம் ரீல்ஸ் ஆக பண்ணினேன். அதுக்கெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது’’ என்றவரிடம் புரொமோஷன் குறித்துக் கேட்டோம்.

ரீல்ஸ் பட்டாளம்:  ஸ்ரீநிதி

‘‘அதிகமா டிரஸ்தான் புரொமோட் பண்ணுவேன். அதையும் தேர்வு பண்ணுறதுக்கு முன்னாடி பிராண்ட் குறித்து செக் பண்ணிட்டுதான் புரொமோட் பண்ணுவேன். சில பிராண்ட் குவாலிட்டி நல்லா இல்லைன்னெல்லாம் திருப்பியும் அனுப்பியிருக்கேன். ஆரம்பத்தில் ‘புரொமோட் பண்ணச் சொல்லி டிரஸ் அனுப்புறாங்க... பிடிக்கலைன்னு எப்படி நோ சொல்றது’ன்னு தயக்கமாகத்தான் இருந்துச்சு. ஆனா, என்னை நம்பி அந்த பிராண்ட்டை என் ஃபாலோயர்ஸ் வாங்குவாங்க. அந்த ரெஸ்பான்சிபிலிட்டி இருந்ததால தயக்கமில்லாமல் நோ சொல்லப் பழகிட்டேன். ஃபுட் புரொமோட் பண்ணச் சொல்லிக் கேட்டிருக்காங்க. அதெல்லாம் நிச்சயமா நான் பண்ண மாட்டேன். அன்றாட வாழ்க்கையில் நான் பயன்படுத்துற பொருள்கள் மட்டும்தான், நான் யூஸ் பண்ணி நல்ல ரிசல்ட் கொடுத்தா மட்டும்தான் அதை புரொமோட் பண்ணுவேன்’’ என்றவரிடம் ரீல்ஸ் டைமிங் குறித்துக் கேட்டோம்.

‘‘ரீல்ஸ்ல கன்டென்ட் மட்டும்தான் பண்ணுவேன். ஸ்டைலிங் விஷயங்களை இப்ப போஸ்ட் ஆக மட்டும்தான் போடுறேன். என் கணவருக்கு இப்ப ஒர்க் ஃப்ரம் ஹோம். அதனால அவரே ரீல்ஸ், போட்டோஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்திடுவார். என் பையன் காலையில் ஒரு மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம் தூங்குவான். அந்த இடைவெளியில் ரீல்ஸ் எடுத்து போஸ்ட் பண்ணிடுவேன்’’ என்றவர், ``இதைச் சொல்ல மறந்துட்டேங்க’' என்றவாறு தொடர்ந்து பேசினார்.

ரீல்ஸ் பட்டாளம்:  ஸ்ரீநிதி

‘‘ஒருசில புரொமோஷன்களில் மோசமான அனுபவமும் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் புரொமோட் பண்ணி போஸ்ட் போட்டுடுவேன். ஆனா, அவங்க தர வேண்டிய பணத்தைக் கொடுக்காம என் நம்பரையும், என் பேஜையும் பிளாக் பண்ணிட்டுப் போயிருக்காங்க. அப்புறமாகத்தான் முழுத்தொகையும் வாங்காம போஸ்ட் போடக் கூடாதுங்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன். என்னால வெளியில் போய் கன்டென்ட் எடுக்க முடியாது. என் பையன் இருக்கிறதால கடைக்குப் போய் டிரஸ் போட்டுப் பார்த்து ரீல்ஸ் எடுக்கிறதெல்லாம் சாத்தியம் இல்லைங்கிறதனால வீட்ல இருந்து மட்டும்தான் ரீல்ஸ் எல்லாம் எடுத்துட்டிருக்கேன். கன்டென்ட் பொறுத்தவரைக்கும் சீரியல் Vs ரியாலிட்டி, பெண்கள் சார்ந்த விழிப்புணர்வு கன்டென்ட் போடணும்னு பிளான் பண்ணியிருக்கேன்’’ என்றபோது அவர் மகன் அழ, ‘`கடமை அழைக்கிறது, சாரி சாரி... தாய்மை அழைக்கிறது!’' என்று விடைபெற்றார்.

ரீல்ஸ் பட்டாளம்:  ஸ்ரீநிதி

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

என் கணவருக்கு பர்ப்யூம் வாசனை அலர்ஜிங்கிறதனால எங்க வீட்ல யாரும் பர்ப்யூம் பயன்படுத்த மாட்டோம். சமீபத்தில் ஒருத்தர் பர்ப்யூம் புராடக்ட் புரொமோட் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. நீங்க யூஸ் பண்ணலைன்னாலும் பரவாயில்ல, புரொமோட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. நான் யூஸ் பண்ணாம எதையும் புரொமோட் பண்ண மாட்டேங்கிறதனால நோ சொல்லிட்டேன். எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பர்ப்யூம் புராடக்ட்ஸை புரொமோட் பண்ண மாட்டேன்.