
ஜீரோ ஃபாலோயர்ஸுடன் ஆரம்பிச்சதுதான் என்னோட இன்ஸ்டா பேஜ். கொஞ்ச கொஞ்சமா ஃபாலோயர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. ஒரு வருஷம் பேஜ் ரீச் ஆகல
‘இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்’... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தனக்கென ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!
`இருபது நிமிடம் வாக்கிங் போனாலும் முட்டி வலிக்குது... ஏன்?’ என முப்பது விநாடிக்குள் அதற்கான விளக்கத்தைக் கொடுத்து பலரது கவனத்தையும் பெற்றவர், பிசியோதெரபிஸ்ட் சுமையா நாஸ்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஃபிட்னஸ், பிசியோதெரபி, ஜூம்பா டான்ஸ் என வீடியோக்கள் பதிவிட்டுவருகிறார். ஆன்லைனில் கிளையன்ட் பிரச்னைகளைக் கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். வழக்கம் போல டிஸ்டர்ப் செய்ய மூக்கை நுழைத்தோம். ஃபிட்னஸ் உடையில் ஜிம் கோச் போல இருந்தவர், பத்தே நிமிடத்தில் கல்யாண வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறவர் போல ஜம்மென்று ரெடியாகி வந்தார். ரீல்ஸ் பட்டாளம் பகுதிக்காக அவரிடம் பேசினோம்.
``எனக்கு சின்ன வயசில இருந்தே டாக்டருக்குப் படிக்கணுங்கிறதுதான் ஆசை. சில காரணங்களால் எம்.பி.பி.எஸ் படிக்க முடியாமப்போச்சு. ஆனாலும் மருத்துவம் சார்ந்த துறையைத் தேர்ந்தெடுக்கணும்னு தான் பிசியோதெரபி எடுத்துப் படிச்சேன். எனக்கு ஃபிட்னஸ் மீது ஈடுபாடு இருந்ததால அது சார்ந்த வகுப்புக்கும் போனேன். பிசியோதெரபிஸ்ட் ஆக எனக்கு எல்லா நுணுக்கங்களும் தெரியும். லாக்டௌன் சமயத்துல வீட்ல சும்மா இருக்க வேண்டியதாகிடுச்சு. அப்ப ஆன்லைன் மூலமா கிளையன்ட்ஸுக்கு பிசியோ எடுத்துட்டு இருந்தேன். ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் அது அவங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதா இருந்துச்சுன்னு வீடியோ பேசி அனுப்புவாங்க. அதை என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ஆரம்பிச்சேன்.

முதல் ஆறு மாசம் கிளையன்ட்ஸும், நானும் பேசிக்கிறதை ஸ்க்ரீன் ரெக்கார்டு பண்ணி அதை மட்டும்தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். ஜீரோ ஃபாலோயர்ஸுடன் ஆரம்பிச்சதுதான் என்னோட இன்ஸ்டா பேஜ். கொஞ்ச கொஞ்சமா ஃபாலோயர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. ஒரு வருஷம் பேஜ் ரீச் ஆகல. ஆனா, ட்ரீட்மென்ட் பிடிச்சுப்போய் கிளையன்ட்ஸ் வந்துட்டே இருந்தாங்க.
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டுட்டிருந்தேன். அது அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகல. விளையாட்டா தமிழில் பேசி வீடியோ போட்டேன். அந்த வீடியோ மில்லியன் வியூஸ்க்கும் மேல போச்சு. அப்பதான் இனி தமிழிலேயே பேசி வீடியோ போடணும்னு முடிவெடுத்தேன். இப்பவரைக்கும் என்னோட கிளையன்ட்ஸ் எல்லாருமே இன்ஸ்டாகிராம் மூலமா வந்தவங்கதான்! ட்ரீட்மென்டில் குணமானதும் அவங்க சொல்ற ரிசல்ட்டையும் வெளிப்படையா போஸ்ட் பண்ணுவேன். இப்ப வரைக்கும் கன்சல்டிங் ஃப்ரீயாகத்தான் பண்ணிட்டிருக்கேன்.
ஒரு டாப்பிக் சொல்லிக் கொடுக்கிறதுக்கு முன்னாடி அதுகுறித்து முழுசா ஆய்வு பண்ணித் தெரிஞ்சிப்பேன். தப்பான விஷயத்தைச் சொல்லிடக் கூடாதுங்கிறதுல ரொம்பவே கவனமா இருப்பேன். இன்ஸ்டாகிராமில் பிசியோ பக்கம் இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்கிறதையே நான் பெருமையா நினைக்கிறேன். பலரும் ‘ஆன்லைனில் எப்படி பிசியோ பண்ண முடியும்’னு கேட்பாங்க. ஆனா, ஆன்லைனில்தான் நான் கடந்த ரெண்டு வருஷத்துக்கும் மேல பண்ணிட்டிருக்கேன். பலர் என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்து குணமாகியிருக்காங்க. அசெஸ்மென்ட் கத்துக்கிட்டு பிசியோ பற்றி முழுசா தெரிஞ்சுக்கிட்டுதான் நான் இதைப் பன்றேன். அதனால என்னை நம்பி சிகிச்சைக்கு வர்றாங்க’’ என்றவரிடம் புரொமோஷன் குறித்துக் கேட்டோம்.

‘‘பியூட்டி புராடக்ட்ஸ், நகை விளம்பரங்கள் எல்லாம் புரொமோஷனுக்காகப் பண்ணியிருக்கேன். பியூட்டி புராடக்ட்ஸ் பொறுத்தவரைக்கும் ஒரு மாசம் நான் ட்ரை பண்ணி அது நல்ல ரிசல்ட் கொடுத்தா மட்டும்தான் புரொமோட் பண்ணுவேன். பட புரொமோஷனுக்குக் கூப்பிடும்போது அதுவும் இன்ஃபுளூயன்ஸர் என்கிற முறையில் பண்ணிக் கொடுப்பேன். சமீபத்தில் ‘கனெக்ட்’ படத்தோட பிரிவியூ ஷோவுக்குக் கூப்பிட்டிருந்தாங்க. எனக்கு பர்சனலா நயன்தாராவைப் பிடிக்கும்னாலும் அவங்ககூட போட்டோ எடுக்கிறதெல்லாம் கஷ்டம் என்கிற மைண்ட் செட்ல தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன்.
அங்க நிறைய பொண்ணுங்களும், பசங்களும் நைட்டு 1 மணிக்கு நயன்தாராவைப் பார்க்கிறதுக்காக தியேட்டர் வாசலில் நின்னுட்டு இருந்தாங்க. இன்ஃபுளூயன்ஸர்களை மட்டும் தனியா அவங்ககூட போட்டோ எடுக்கக் கூட்டிட்டுப் போனாங்க. அப்பதான் இன்ஃபுளூயன்ஸர்னா இவ்வளவு மரியாதையான்னு தெரிஞ்சது. நயன்தாரா எங்க ஒவ்வொருத்தரிடமும், `நீங்க இன்ஃபுளூயன்ஸர்னு தெரியும்... ஆனா, நீங்க என்ன பன்றீங்கன்னு தெரியாது’ன்னு சொல்லி எங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு எங்ககூட போட்டோவுக்கு போஸ் கொடுத்தாங்க. அந்தத் தருணம் ரொம்பவே ஸ்பெஷல்’’ என்றவரிடம் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.
‘‘பிசியோதெரபிஸ்ட் டாக்டரா, இல்லையான்னு ஒரு வாதம் இன்னமும் போயிட்டே இருக்கு. நான் எந்த இடத்திலும் என்னை டாக்டர்னு குறிப்பிட்டதில்லை. பிசியோதெரபிஸ்ட்னுதான் சொல்லுவேன். ஆனாலும், கமென்ட்ல வந்து, `நீ என்ன பெரிய டாக்டரா?’ன்னு கேட்பாங்க. அப்போதெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கும். என் ரீல்ஸ பொறுத்தவரைக்கும் நானே வீடியோ எடுத்து, எடிட்டிங் பண்ணிப்பேன். பலரும் சினிமாவில் நடிக்க இதை ஒரு பிளாட்பாரமா பயன்படுத்துவாங்க. எனக்கு சினிமா ஆசையெல்லாம் இல்லைங்க’’ என்றதும் ஆன்லைன் கிளாஸுக்கான அழைப்பு மணி அடிக்க, `மீண்டும் சந்திப்போம்!’ என விடைபெற்றார்.
அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?
இந்தப் பவுடரை பாலுடனோ, தண்ணீருடனோ கலந்து குடிச்சா இத்தனை நாளுக்குள் இவ்வளவு எடை குறைக்கலாம்னு சொல்லி பவுடரை புரொமோட் பண்ணித் தரச் சொல்லிக் கேட்பாங்க. அதை நிச்சயம் பண்ண மாட்டேன்!