தொடர்கள்
Published:Updated:

செம்பி - சினிமா விமர்சனம்

செம்பி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
செம்பி - சினிமா விமர்சனம்

வழக்கறிஞராக வரும் அஷ்வின் குமார் நடிப்பு பரவாயில்லை என்றாலும் அவர் செய்யும் சாகசங்களில் கொஞ்சமும் எதார்த்தமில்லை

ஒரு பழங்குடியினச் சிறுமிக்கு இழைக்கப்படும் அநீதியும், அதற்கான நீதி பெற நடக்கும் முயற்சிகளுமே ‘செம்பி.'

கொடைக்கானலில் வாழும் பழங்குடியின மூதாட்டி வீரத்தாய் (கோவை சரளா) மலைத்தேன் எடுத்து விற்று, தன் ஒற்றை உறவான பேத்தி செம்பியுடன் வாழ்ந்துவருகிறார். கொடைக்கானலுக்கு வரும் அரசியல் பிரமுகரின் மகன் மற்றும் அவன் நண்பர்கள் செம்பியைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்குகின்றனர். லஞ்சம் வாங்கி அவர்களைக் காப்பாற்ற முயலும் காவல்துறை அதிகாரியைத் தாக்கிவிட்டு, தன் பேத்தியுடன் ஒரு பேருந்தில் ஏறித் தப்ப முயல்கிறார் வீரத்தாய். அவரால் தப்ப முடிந்ததா, செம்பிக்கு நீதி கிடைத்ததா என்பதைச் சொல்கிறது படம்.

செம்பி - சினிமா விமர்சனம்

வீரத்தாயாகக் கோவை சரளா. உயரமான மரத்தில் ஏறி மலைத்தேன் எடுக்கும் சாகசம், தன் பேத்தி சிதைக்கப்பட்டது அறிந்து மருத்துவமனையில் அலைபாய்ந்து அழுது அரற்றும் துயரம், நெறி தவறும் காவல்துறையைத் தாக்கி மோதும் வீரம் என்று பாத்திரத்துக்கு அத்தனை நியாயங்களையும் சேர்த்திருக்கிறார். மலைப் பகுதிகளில் ஓடித்திரியும் உற்சாகம், வலி தாளாது அழும் கதறல், யாரைப் பார்த்தாலும் நடுங்கித் தன் பாட்டியோடு ஒட்டிக்கொள்ளும் அச்சம் என்று உணர்வுகளை அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறார் சிறுமி நிலா. ஆனால் இருவருக்குமே நடிப்பை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்பை முதல் பாதியில் சில நிமிடங்கள் மட்டுமே வழங்கியுள்ளார் இயக்குநர்.

வழக்கறிஞராக வரும் அஷ்வின் குமார் நடிப்பு பரவாயில்லை என்றாலும் அவர் செய்யும் சாகசங்களில் கொஞ்சமும் எதார்த்தமில்லை. பேருந்தில் பயணிக்கும் அத்தனை கதாபாத்திரங்களும், நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையாவும் கொஞ்சமும் நம்பகத்தன்மையற்ற செயற்கையான நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள்.

படத்தின் பாடல்களைவிட பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. மலைப்பகுதியின் வனப்பை அள்ளிவந்து சேர்க்கும் ஒளிப்பதிவாளர் ஜீவனின் கேமரா, பேருந்துக்குள்ளும் சுற்றிச்சுற்றிப் படம் பிடித்திருக்கிறது.

செம்பி - சினிமா விமர்சனம்

‘குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை' என்ற சென்சிட்டிவ் பிரச்னையைக் கையில் எடுத்த இயக்குநர் பிரபுசாலமன், அந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணராமல் நாடகத்தனமான காட்சிகளாலும் வசனங்களாலும் திரையை நிரப்பியிருப்பது சோகம். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பேருந்தை வில்லனின் அடியாட்கள் சரியாகக் கண்டுபிடித்து உள்ளேயும் வெளியேயும் தாக்குதல் நடத்துவது, செல்போன் சிக்னலே சரியாகக் கிடைக்காத கொடைக்கானல் - திண்டுக்கல் வழித்தடத்தில் செல்போன்கள் மூலம் ஒட்டுமொத்தப் பேருந்துப்பயணிகளும் புலனாய்வுப் புலிகளாக மாறி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது என்று லாஜிக்கே இல்லாமல் முக்கால்வாசி படம் பயணிக்கிறது.

எடுத்துக்கொண்ட கதையில் எதார்த்தம் நிறைந்திருந்தால் இந்த ‘செம்பி'யைக் கொண்டாடியிருக்கலாம்.