சினிமா
பேட்டிகள்
Published:Updated:

சண்டைக் கலையில் ஒரு சகாப்தம்!

ஜூடோ ரத்தினம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூடோ ரத்தினம்

நிறைவான வாழ்க்கை வாழ்ந்துட்டேன் தம்பி. எம் மவன் ஜூடோ ராமு, பெங்காலி, ஒடிஷா படங்கள்ல பிஸியான ஸ்டன்ட் டைரக்டர். இன்னொரு மவன் கேமராமேன்.

குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள அந்த மூன்றடுக்கு வீட்டின் கதவைத் தட்டுகிறேன். மெல்ல வாசற்படியிறங்கி வந்து கதவைத் திறந்து விழியிடுக்கிப் பார்க்கிறார் அந்தப் பெரியவர். ‘ஆனந்த விகடன்’ என்று அறிமுகப்படுத்தியதும் முகம் மலரச் சிரித்து, கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார். முன்னறையில் ‘முரட்டுக்காளை’ தொடங்கி ‘முந்தானை முடிச்சு’ வரை பல நூறு படங்களின் வெள்ளி விழாக்களில் வழங்கப்பட்ட கேடயங்கள் நிறைந்திருக்கின்றன. கோவிந்தம்மாள் என்று பெயரிடப்பட்ட பெரிய படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. நிஞ்சா, வாள் கருவிகள் சுவர்களில் மாட்டப்பட்டுள்ளன. அறையின் மையத்தில் ஒற்றை இருக்கை... அருகில் ஒரு தட்டில் உப்புமா... மருந்து, மாத்திரைகள் அடுக்கப்பட்டுள்ளன.

சண்டைக் கலையில் ஒரு சகாப்தம்!

“இவதான் கோவிந்தம்மா. என் அக்கா மகதான். குழந்தைய மாதிரி என்னையப் பாத்துக்கிட்டவ. போய் ஏழு வருஷமாச்சு...தனியாத்தான் இருக்கேன். புள்ளைகள்லாம் சென்னையில வசதியா இருக்குதுங்க. ஆனா இந்தக் குடியாத்தத்தை விட்டுட்டு என்னால அங்கெல்லாம் போய் இருக்க முடியலே...”

மென்சோகம் இழையோடப் பேசும் அந்தப் பெரியவர் ஜூடோ ரத்தினம். ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஸ்டன்ட் டைரக்டர். ரஜினிக்கு 46 படங்கள், கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு 52 படங்கள், கமலுக்கு 6 படங்கள் என இந்தியாவின் டாப் ஸ்டார்களுக்கு சண்டைப் பயிற்சியளித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத்தந்தவர். 92 வயதாகிறது. தான் பிறந்த ஊரான குடியாத்தத்தில் தனித்து வாழ்கிறார்.

“நிறைவான வாழ்க்கை வாழ்ந்துட்டேன் தம்பி. எம் மவன் ஜூடோ ராமு, பெங்காலி, ஒடிஷா படங்கள்ல பிஸியான ஸ்டன்ட் டைரக்டர். இன்னொரு மவன் கேமராமேன். சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, கராத்தே ஹரி, ராம்போ ராஜ்குமார், ராஜா, விக்கின்னு நம்மகிட்ட இருந்து வந்த பிள்ளைங்க இன்னைக்கு நம்ம பேரைச் சொல்றாங்க. ‘பாகுபலி’ படத்தைப் பார்த்தப்போ கண்ணெல்லாம் கலங்கிருச்சு. பீட்டரும், அவங்க அப்பாவும் என்கிட்ட வேலை பாத்தவங்கதான். எங்காலத்துல நான் அதிகபட்சம் வாங்குன சம்பளம் ரெண்டு லட்சம். இன்னைக்கு நம்ம புள்ளை ஒண்ணு மலையாளப் படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்குன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு ஸ்டன்ட் டைரக்டர்களுக்கு மதிப்பு கூடியிருக்கு...”

ரத்தினத்தின் தந்தை குடியாத்தத்தில் கிராமணியாக இருந்தவர். பத்து கிராமணி குள்ளப்ப முதலியார் என்று பெயர். அம்மா, அம்மாக்கண்ணு. 9 பிள்ளைகளில் கடைசி, ரத்தினம்.

“பேருதான் கிராமணி. சாப்பாட்டுக்கு கஷ்டம். சின்ன வயசுலேயே கோலார் தங்கவயலுக்குப் பிழைக்கப் போயிட்டோம். ஒருமுறை சுரங்க விபத்துல ரெண்டு அண்ணனும் மாட்டிக்கிட்டாங்க. இனிமே இந்தத் தொழிலே வேண்டாம்னு திரும்பவும் குடியாத்தமே வந்துட்டோம். நான் நெசவு வேலை செஞ்சுக்கிட்டே எங்கூர் துரைசாமி வாத்தியார்கிட்ட சிலம்பம் கத்துக்கிட்டேன். குடியாத்தத்துல பிரபலமான ஒரு பஞ்சாலை உண்டு. அதுல வேலை கேட்டுப் போனேன். கூடவந்த முப்பது பேருக்குக் கிடைச்சிருச்சு. என்னை மட்டும், ‘எலும்பும் தோலுமா இருக்கான்’னு நிராகரிச்சுட்டாங்க. ‘ஒரே வருஷத்துல உடம்பைத் தேத்திக்காட்டுறேன் சார்... வேலை கொடுங்க’ன்னு கெஞ்சினேன். அதை நம்பி சேத்துக்கிட்டாங்க. ஜிம்முக்குப் போனேன். கராத்தே, ஜூடோ, பாக்ஸிங் கத்துக்கிட்டேன். வெயிட் லிப்ட் போனேன். வேலூர்ல கலெக்டர் முன்னிலையில நடந்த பாக்ஸிங்ல ஏழு பேரை ஜெயிச்சு வாங்கின பதக்கம் இது...”

சண்டைக் கலையில் ஒரு சகாப்தம்!

ரத்தினம் கழுத்தில் எப்போதும் இரண்டு பெரிய தங்கப்பதக்கங்கள் தொங்குகின்றன. ஒன்று கலைமாமணி விருதுப் பதக்கம். இன்னொன்று, குத்துச்சண்டையில் 7 பேரை ஜெயித்து வாங்கிய பதக்கம். ரத்தினம் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிர செயற்பாட்டாளர். வேலை செய்த மில்லில் தொழிற்சங்கம் கட்டி, கூலி உயர்வு கேட்டுப் போராடி பணி நீக்கப்பட்டதோடு 6 மாதம் சிறைக்கும் சென்றிருக்கிறார்.

“மில்லுல வேலை செய்யும்போதே எனக்கும் பத்மாவுக்கும் கல்யாணமாயிடுச்சு. மூணு பெண் பிள்ளைகள். திடீர்னு பத்மாவுக்கு நரம்புச்சுத்து நோய், ஆஸ்துமா வந்திடுச்சு. பிள்ளைகளை வளர்த்தெடுக்க ரொம்பச் சிரமப்பட்டுப்போனேன். கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கவங்க ரெண்டாவது திருமணம் செஞ்சுக்கிறதை கட்சி அனுமதிக்காது. ஆனா எனக்காகத் தோழர்கள் தீர்மானம் போட்டு, என் அக்கா மகள் கோவிந்தம்மாளை ரெண்டாவது திருமணம் செஞ்சு வச்சாங்க. அவளும் கம்யூனிஸ்ட்தான். சிறையில இருந்தவ. எங்களுக்கு அஞ்சு பிள்ளைங்க.

ரெண்டு மனைவிங்க... 8 பிள்ளைங்க... நிலையா ஒரு தொழில் இல்லை... கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ கோதண்டராமனும் தலைவர் முகவை ராஜமாணிக்கமும் முக்தா சீனிவாசன் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி ‘நிறைய கலைகள் கத்து வச்சிருக்கார்... ஏதாவது வாய்ப்பு குடுங்க’ன்னு கேட்டாங்க. அப்படித்தான் ‘தாமரைக்குளம்’ படத்துல சின்ன வேஷத்துல நடிகனா நுழைஞ்சேன்.

சண்டைக் கலையில் ஒரு சகாப்தம்!

அதுக்குப்பிறகு நிறைய படங்கள்ல டூப் போட்டேன். குறிப்பா, விட்டலாச்சார்யா படங்கள்ல பல பேய்களுக்கு டூப் போட்டிருக்கேன். மாடர்ன் தியேட்டர் சுந்தரம் ‘கொஞ்சும் குமரி’ படத்துல மனோரமாவுக்குத் தம்பியா நடிக்க வாய்ப்பு கொடுத்ததோட ஸ்டன்ட் டைரக்டராவும் நியமிச்சார். அவருக்குப் பிறகு மாடர்ன் தியேட்டர் சின்ன முதலாளி ராமசுந்தரம் ‘இரு வல்லவர்கள்’ படத்தில் மறுவாய்ப்பு தந்து என்னை சென்னையிலயே நிலைக்க வச்சார். அடுத்து ‘வல்லவனுக்கு வல்லவன்’னு ஒரு படம். இந்த ரெண்டு படமும் ஸ்டன்ட் டைரக்டரா நல்ல பெயர் தந்துச்சு. அதுக்கப்புறம் நம்ம வண்டி நிக்காம ஓட ஆரம்பிச்சிருச்சு.

ஜெய்சங்கருக்கு ஜேம்ஸ்பாண்டுன்னு அடையாளம் கிடைச்சதுக்கு நானும் ஒரு காரணம். சிவாஜி நடிப்புல கெட்டிக்காரர். ஆனா சண்டையில கொஞ்சம் டேக் வாங்குவார். ‘திருப்பம்’ படத்துல அவருக்கு பைட் பண்ணினேன். ‘ரஜினிக்கு, ஜெய்சங்கருக்கு வைக்கிறமாதிரியெல்லாம் எனக்கு வைக்காதே மாஸ்டர்... என் உடம்புக்குத் தகுந்தமாதிரி பண்ணு’ன்னு சொன்னார். படம் முடிஞ்சதும் கட்டிப்பிடிச்சு ‘அசத்திட்டே மாஸ்டர்’ன்னார். பிரபுவைக் கையில புடிச்சுக்கொடுத்து ‘புள்ளைய பத்திரமாப் பாத்துக்கோ மாஸ்டர்’ன்னும் சொன்னார்.

சண்டைக் கலையில் ஒரு சகாப்தம்!

என் அனுபவத்துல, சண்டைன்னா ரெண்டு ஹீரோதான். ஒருத்தர் அர்ஜுன், இன்னொருத்தர் விஜயகாந்த். அர்ஜுன் எந்த அளவுக்கும் போய் ரிஸ்க் எடுப்பார். விஜயகாந்தும் ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்துச் செய்வார். ரஜினி ஸ்பீடு மேன்... ஒரே தடவையில எவ்வளவு கஷ்டமான ஆக்‌ஷன்னாலும் கத்துக்கிட்டுச் சிறப்பா செய்வார். கோவிந்தம்மா வைக்கிற போட்டி குழம்பும் கருவாட்டுக் குழம்பும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னையில ஷூட்டிங் நடந்தா அவரே போன் பண்ணி ‘சாப்பாடு கொடுத்து விடுங்கம்மா’ன்னு சொல்லிருவாரு. ‘பாயும் புலி’யில நானும் அவருமே பைட் பண்ணியிருக்கோம்.

‘முரட்டுக்காளை’ படத்துல ஒரு ரயில் பைட். தென்காசியில எடுத்தோம். ரயில் ஒரு குகைக்குள்ள நுழைஞ்சு அரை கிலோ மீட்டர்ல வெளியில வரும். ரஜினியும் என் மகன் ஜூடோ ராமுவும் ரயில் மேல நின்னுக்கிட்டு பைட் பண்ணணும். ரஜினி அடிச்சவுடனே ராமு கீழே விழணும். ரஜினிக்கு டூப் போடலாம்னு யோசிச்சோம். ‘இல்லே... நானே பண்றேன்’னு சொல்லிட்டார். ஸ்டார்ட் சொன்னவுடனே ரஜினி அடிச்சார். ராமு ‘ஐயோ... அம்மா’ன்னு கத்திக்கிட்டே ரயில் பெட்டிக்குள்ள விழுந்துட்டார். என்ன நடந்ததுன்னே தெரியலே... குகையை விட்டு ரயில் வெளியே வர்ற அந்த அஞ்சு நிமிஷத்துக்குள்ள என் புள்ளைக்கு என்ன ஆயிருக்குமோன்னு உயிரே போயிடுச்சு. ரஜினியும் துடிச்சுப் போயிட்டார். கடவுள் புண்ணியத்துல காயங்களோடு தப்பிச்சுட்டான்...’’ கலங்கும் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் ரத்தினம்.

சண்டைக் கலையில் ஒரு சகாப்தம்!

‘சகலகலா வல்லவன்’ படத்தின் நூறாவது நாள் கேடயத்தை எடுத்து, அதில் ஒட்டியிருக்கும் தூசிகளைத் துடைக்கிறார் ரத்தினம்.

“பொதுவா ஹீரோக்களை ரிஸ்க்கான சீன்கள்ல நடிக்க விட மாட்டோம். லேசா அடிபட்டுட்டாக்கூட ஷூட்டிங் நின்னுபோகும். பல நூறு தொழிலாளர்களோட வயிறு காஞ்சுபோகும். அதனால பெரும்பாலும் டூப் போட்டுதான் எடுப்போம். ‘சகலகலா வல்லவன்’ல ‘இளமை இதோ இதோ’ பாட்டு முடிஞ்சவுடனே கமல் கண்ணாடிய உடைச்சுக்கிட்டு புல்லட்ல வெளியில வரணும். ‘டூப் போட்றலாம்’ன்னு சொன்னேன். ‘இல்லே, நானே நடிக்கிறேன்’னு நடிச்சார். கண்ணாடி குத்தி பயங்கர காயம்... இருந்தாலும் ஷூட்டிங் நிக்காமப் பாத்துக்கிட்டார். நடிகைகள்ல விஜயசாந்தி, ரோஜா ரெண்டு பேரும் தைரியமா பைட் பண்ணுவாங்க. ஆனா எனக்குத் தனிப்பட்ட மரியாதை ஜெயமாலினி மேல. ‘கராத்தே கமலா’ன்னு ஒரு படம். பிரமாதமா பைட் பண்ணியிருக்கு. அம்பிகா, ராதாவுக்கும் நிறைய பைட் கத்துக்கொடுத்திருக்கேன்” ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார் ரத்தினம்.

இத்தனை காலத்தில் எம்.ஜி.ஆருடன் வேலை செய்யவில்லை என்பது ரத்தினத்தின் தீராக்குறை.

“எம்.ஜி.ஆரும் நானும் இணையாததுக்குக் காரணம், அவர் அ.தி.மு.க. நான் கம்யூனிஸ்ட். ‘இரு வல்லவர்கள்’ படத்தைப் பாத்துட்டு எம்.ஜி.ஆர் ஒரு படத்துக்குக் கராத்தே பைட் அமைக்கக் கூப்பிட்டார். அப்போ அவருக்கு ஸ்யாம் சுந்தர்தான் ஸ்டன்ட் டைரக்டர். நான், ‘என் பெயரை ஸ்யாம் சுந்தருக்கு மேலே சிறப்பு ஸ்டன்ட் டைரக்டர்னு போடணும்’னு கேட்டேன். அதுக்கு எம்.ஜி.ஆர் ஒத்துக்கலே... அதுக்கப்புறம் நாங்க இணைஞ்சு வேலை செய்யலே.

மந்திரதந்திரக் கதை, ராஜா ராணி கதை, ஃபேமிலி கதை, சி.ஐ.டி கதைன்னு சினிமாவுல நடந்த எல்லா மாற்றங்களையும் பாத்திருக்கேன். இன்னைக்கு அதிகம் சினிமா பாக்குறதில்லை. இங்கே நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவங்ககூடவே இருந்துட்டு இந்த மண்ணுலயே விதையா மாறிடணும்... அது போதும்..!’’

கைகூப்பி விடைகொடுத்து, கதவைத் தாழிட்டுக்கொள்கிறார், இந்திய சினிமாவின் 50 ஆண்டுக்கால வரலாற்றாவணமாக இருக்கிற ஜூடோ ரத்தினம். அவருக்குப் பிடித்த தனிமை அவரை ஆட்கொள்கிறது!