மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 19

சூர்யா - ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா - ஜோதிகா

கலைப்புலி எஸ்.தாணு

‘ஆளவந்தான்’ பட ஷூட்டிங் நேரம்... ம.தி.மு.க-வின் முக்கியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.கண்ணப்பன் ஒருநாள் என்னைத் தன் பேரனோடு வந்து சந்தித்தார். ‘`இவர் என் மகளுடைய மகன் கோவிந்த். இவருக்கு சினிமா ஆசை நிறைய இருக்கு. பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து சினிமா கத்துக்கணும்னு ஆசைப்படுறார்’’ என்றார். அவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர உதவிகள் செய்தேன்.

உண்மைகள் சொல்வேன்! - 19

பெரிய நடிகர் ஆவதற்கான தோற்றமும் திறமையும் கோவிந்திடம் இருந்தது. அவரை மனதார வாழ்த்தி, படிக்க அனுப்பினேன். சில காலம் கழித்து பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடைபெற்ற விருது விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக நான் சென்றிருந்தேன். அப்போது தங்க மெடல் வென்றவர்களுக்குப் பதக்கங்களை அணிவித்தேன். அதில் ஒருவராக சிறப்பாகப் படித்து, குறும்படங்களில் திறமையாக நடித்து, தங்க மெடல் வென்றிருந்தார் கோவிந்த். அந்த மேடையிலேயே ‘`இன்று தங்க மெடல் வென்றவர்களுக்கெல்லாம் நான் நிச்சயம் என்னுடைய படங்களில் வாய்ப்பளிப்பேன்’’ என்று சொன்னேன்.

சில மாதங்கள் கழித்து கோவிந்தின் பெற்றோர் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். பொள்ளாச்சியில் மிகச் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர் அவரின் அப்பா. ‘`என் பையன் நடிக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கான். நீங்கதான் உதவி பண்ணணும்’’ என்றார்கள் இருவரும். ‘`நிச்சயமா நான் நடிக்க வைக்கிறேன்’’ எனச் சொல்லி அவர்களை வழியனுப்பினேன். அன்று இரவு அவர்கள் கோயம்புத்தூருக்கு ரயிலில் புறப்பட்டுப்போனார்கள். அங்கே போய் இறங்கியதும் கோவிந்தின் அப்பாவுக்குத் திடீரென உடல்நிலை சரியில்லாமல்போனது. சில நாள்களில் அவர் இறந்துவிட்டார். நான் உடனடியாகப் புறப்பட்டு, பொள்ளாச்சிக்குப் போனேன்.

இறுதி ஊர்வலத்தின்போது கோவிந்தின் அம்மா, ‘`அண்ணா... அவரோட கடைசி ஆசையை எப்படியாவது நிறைவேத்துங்க... புள்ளைய படத்துல நடிக்க வைங்க’’ என அன்று அவர்கள் அழுது வடித்த கண்ணீரும், எழுப்பிய ஓலமும் என்னை உருக்கிவிட்டது.

உண்மைகள் சொல்வேன்! - 19

சென்னைக்குத் திரும்பியதும் உடனடியாக ‘கிழக்குச் சீமையிலே’ பட வசனகர்த்தா ரத்னகுமாரைக் கூப்பிட்டேன். ‘இப்படி ஒரு பையன் இருக்கான். அவனை ஹீரோவா வெச்சு ஒரு படம் பண்ணணும். கதை ரெடி பண்ணுங்க’ என்றேன். அவரும் ஒரு நல்ல கதை சொல்ல, உடனே ‘என்ன சொல்லப் போகிறாய்’ என டைட்டில் வைத்து, போஸ்டர்கள் அடித்து கோவிந்தை, ஹீரோ நந்தாவாக மாற்றிப் படத்தைத் தொடங்கிவிட்டோம். காயத்ரி ரகுராம் ஹீரோயின். வடிவேலு, கருணாஸ் எனப் பல முக்கிய நடிகர்கள் படத்தில் இருந்தார்கள். ‘ஆளவந்தான்’ ஷூட்டிங் நேரம் என்பதால், கமல்ஹாசன் சார்தான் இந்தப் படத்தைத் தொடக்கிவைத்தார்.

ரத்னகுமார் கொஞ்சம் பிடிவாதக்காரர். ஷூட்டிங் ஸ்பாட்டில் உருட்டி, மிரட்டி நந்தாவை வேலை வாங்குகிறார். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துத் தங்க மெடல் வாங்கியவர் என்கிற எந்த மரியாதையும் இல்லாமல், ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோர் முன்னிலையிலும் நந்தாவைத் திட்டுகிறார் என எனக்குத் தொடர்ந்து யூனிட்டிலிருந்து செய்திகள் வந்தன. ரத்னகுமாரை இரண்டு, மூன்று முறை கூப்பிட்டு ‘`கொஞ்சம் பக்குவமா நடத்துங்க’’ என்று சொல்லி அனுப்பினேன். ஆனால், ரத்னகுமாரின் மனதுக்குள் ‘நந்தாவை வைத்துப் படம் எடுக்கக்கூடாது’ என்கிற எண்ணம் இருந்ததால், என் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து நந்தாவைத் தரக்குறைவாக நடத்துகிறார். செல்வாக்கான, மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்த நந்தாவால் ரத்னகுமாரின் இழிச்சொல்லைத் தாங்கமுடியவில்லை.

உண்மைகள் சொல்வேன்! - 19

ஷூட்டிங் 25 நாள்கள் நடந்தன. ரஷ் காட்டச் சொன்னேன். பார்த்தபோது எனக்குப் படம் திருப்திகரமாக இல்லை. இளவரசுதான் படத்துக்கு கேமராமேன். அவரைக் கூப்பிட்டு ‘`என்னப்பா இது... ஒரு புது ஹீரோவை அறிமுகப்படுத்துறோம். சினிமாவின் இலக்கணம் எதுவும் இல்லாம படம் இருக்கே! நீ கேமரா பண்றியே... டைரக்டர் கிட்ட எதுவும் சொல்லலையா?’’ என்று கேட்டேன். ‘`நான் என்னண்ணே சொல்றது... உங்களுக்கு எல்லாம் தெரியுமே’’ என்று அமைதியாக இருந்தார்.

ரத்னகுமாரிடம் என் அதிருப்தியை வெளிப்படுத்தினேன். அப்போது ‘`நந்தாவை வெச்சுப் படம் பண்ண முடியாது’’ என்றார் ரத்னகுமார். ‘`நான் நந்தாவுக்காகத்தான் இந்தப் படமே பண்றேன். அவர் தாய் தகப்பனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். நீ அவரை ஹீரோவா வெச்சுதான் படம் பண்ணணும்’’ என்றேன்.

இந்தச் சூழலில் ஒருநாள் நந்தா என் அலுவலகத்துக்கு வந்து என்னிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, ‘`நான் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட இழப்பை நான் உங்களுக்குப் பிற்காலத்தில் சரிசெய்து கொடுத்துவிடுவேன்’’ என்று சொல்லிவிட்டு அழுதபடியே வெளியேறுகிறார். கடிதத்தில் ‘`நான் தங்க மெடல் வாங்கியவன். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நான் நடித்த குறும்படம்கூட இருக்கிறது. அதில் என் நடிப்பைப் பாருங்கள். ஆனால், இயக்குநர் என்னை மிகவும் மோசமாக நடத்துகிறார். எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய அவமானமாக இருக்கிறது’’ எனச் சில சம்பவங்களைக் குறிப்பிட்டு மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 19

ரத்னகுமாரை அழைத்தேன். மீண்டும் ‘`நந்தாவை வெச்சு என்னால பண்ண முடியாது. வேற ஹீரோவை வெச்சுப் பண்ணலாம்’’ என்றார். ‘`நந்தா நடிக்கிறதுக்காகத்தான் உன்கிட்ட கதைகேட்டு, நீயே டைரக்ட் பண்ணுன்னு படம் கொடுத்தேன். அவரை மாத்தி வேற ஒரு நடிகரை என்னால நடிக்கவைக்க முடியாது. ‘கிழக்குச் சீமையிலே’ படத்தின்போது நான் பார்த்த மனிதனாக நீயில்லை. உன்னுடைய தோரணைகள், பேச்சு எல்லாம் மாறிவிட்டது’’ என்று சொல்லி 7,000 அடி வளர்ந்த படத்தின் நெகட்டிவை எல்லாம் எடுத்து அப்படியே என் அலுவலகத்தில் சாமி படத்துக்கு முன்னால் வைத்துவிட்டேன். ‘என்ன சொல்லப்போகிறாய்’ எதுவும் சொல்லாமலேயே முடிந்துபோனது.

அடுத்து நந்தாவுக்காக வேறு புதிய கதைகள் கேட்க ஆரம்பித்தேன். அப்போது ஒருநாள் ஆர்என்ஆர் மனோகர் என்பவர் வந்து ‘புன்னகை பூவே’ கதையைச் சொன்னார். பிரமாதமான கதை. எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதை நன்றாக எடுக்கவேண்டுமே என ‘விஐபி’ படத்தை எனக்கு எடுத்துக்கொடுத்த சபா கைலாஷைக் கூப்பிட்டேன். அவருக்கும் கதை பிடித்து, படம் இயக்க ஒப்புக்கொண்டார். அவர்தான் படத்துக்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவை அழைத்துக்கொண்டுவந்தார். ரேகா, காவேரி என இரண்டு கதாநாயகிகள், வடிவேலு காமெடி என, படத்தைத் தொடங்கினோம்.

இதே நேரத்தில் ‘காக்க காக்க’ படத்தையும் தொடங்கிவிட்டோம். கெளதம் மேனன் பற்றி கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர் என்னிடம் சொன்னார். கெளதமின் கதையை ஏவிஎம் சரவணன், ஜிவி எனப் பல தயாரிப்பாளர்களும் கேட்டதாகவும், பட்ஜெட் பிரச்னையால் அவர்கள் தயங்குவதாகவும் சொன்னார். ஆனால், ‘`பிரமாதமான கதை. நீங்கள் கேட்டால் நன்றாக இருக்கும்’’ என்று ராஜசேகர் சொல்ல, கெளதமை விடியற்காலையில் என் வீட்டுக்கு வரச்சொன்னேன்.

உண்மைகள் சொல்வேன்! - 19

லேப்டாப்போடு வந்த கெளதம் மேனன் கிட்டத்தட்ட மூன்றே கால் மணி நேரம் கதை சொன்னார். எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், நீளம் அதிகமாக இருந்தது. கெளதமிடம் ‘`கதையையே நீங்கள் மூன்றே கால் மணி நேரம் சொல்கிறீர்கள். இன்னும் சேஸிங், பில்டப் சீன்கள், பாடல்கள் எல்லாம் இருக்கின்றன. அதனால் கதையை ரீரைட் செய்து, இரண்டு மணி நேரத்துக்குக் குறையுங்கள்’’ என்றேன். திரும்ப எழுதிக் கொண்டுவந்து கதை சொன்னார். ஓகே சொல்லி பட்ஜெட் பேசினோம். கெளதம்தான் சூர்யா, ஜோதிகா என நடிகர்கள் எல்லோரையும் ஃபிக்ஸ் செய்தார். இரண்டரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் பண்ணித் தருவதாகச் சொன்னார் கெளதம். ‘`சூர்யா, ஜோதிகா என நடிகர்கள் சம்பளம், வெளிநாட்டு ஷூட்டிங் எனப் பல விஷயங்கள் இருக்கிறதே... இரண்டரைக் கோடியில் முடியுமா?’’ என மீண்டும் ஒருமுறை கேட்டேன். ‘`அந்த பட்ஜெட்டுக்குள்ள நிச்சயம் பண்ணிடுவேன் சார்’’ என வாக்கு கொடுத்து ஷூட்டிங்கைத் தொடங்கினார்.

‘புன்னகை பூவே’, ‘காக்க காக்க’ என இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஷூட்டிங் நடந்ததால், இரண்டு இயக்குநர்களும் என்னைப் பார்க்க வருவார்கள். இரண்டு படங்களும் பெரிய ஹிட் ஆகும், ஆனால் அதில் ‘புன்னகை பூவே’ மிகப்பெரிய சென்சேஷனல் ஹிட் ஆகும் என்பது என் கணிப்பு. காரணம் ‘புன்னகை பூவே’ படத்தின் கதை எனக்குக் கொடுத்த நம்பிக்கை. அதனால் முதலில் ‘புன்னகை பூவே’ இயக்குநரைக் கூப்பிட்டுப் பேசி அவரது தேவைகளை, பிரச்னைகளை முடித்துவைப்பேன். அடுத்துதான் கெளதம் மேனனை அழைத்துப் பேசுவேன்.

‘புன்னகை பூவே’ ஷூட்டிங் முழுவதுமாக முடிந்து, எடிட்டிங்கும் முடிந்து படத்தைப் பார்க்கிறேன். இயக்குநர் சபா கதைப்படி க்ளைமாக்ஸை எடுக்காமல் மாற்றி எடுத்திருக்கிறார். ‘விஐபி’ படத்தின் க்ளைமாக்ஸை எப்படி கடைசி நேரத்தில் மாற்றியிருந்தாரோ, அதேபோல மாற்றிவிட்டார். நான் இயக்குநரிடம் ‘`என்னப்பா, க்ளைமாக்ஸை மாத்தி எடுத்திருக்க. ரிலீஸ் தேதியை அறிவிச்சிட்டோம். இந்த நேரத்துல இப்படிப் பண்ணிட்டியே. எனக்கே க்ளைமாக்ஸ் புரியலையே... மக்களுக்கு எப்படிப் புரியும்?’’ என்றேன்.

‘`நான் வேற மாதிரி யோசிச்சு எடுத்திருக்கேன். இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் யாரும் பண்ணாத க்ளைமாக்ஸைப் பண்ணியிருக்கேன். படத்தை அப்படியே ரிலீஸ் பண்ணுங்க சார். பெரிய வரவேற்பு கிடைக்கும்’’ என என்னென்னவோ சொல்கிறார். அப்போது இயக்குநரோடு இருந்த சிலர் ‘`க்ளைமாக்ஸ் ஓகேதான்... ரிலீஸ் நேரம் வேற வந்துடுச்சே சார்’’ என்றார்கள். ‘`க்ளைமாக்ஸ் புரியாம நல்ல படம் வீணாப் போகப்போகுது’’ எனச் சொல்லியே படத்தை ரிலீஸ் செய்தேன். படத்தின் செலவு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய். எனக்கு நஷ்டம் மட்டும் 2.87 கோடி.

உண்மைகள் சொல்வேன்! - 19

நான் அதிகம் எதிர்பார்த்த ‘புன்னகை பூவே’ இப்படியாகிவிட்டதே என எனக்கு மிகப்பெரிய வருத்தம். ஆனால், அந்த வருத்தத்தை ‘காக்க காக்க’ முழுமையாகச் சரிசெய்தது. ‘புன்னகை பூவே’ படத்தில் சரிகா நடித்தது, ‘காக்க காக்க’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சில சிக்கல்கள், சூர்யாவின் கடுமையான உழைப்பு, ஒத்துழைப்பு, படத்தின் வெற்றி, தெலுங்கு ரீமேக்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்