
- கலைப்புலி எஸ்.தாணு
‘புன்னகை பூவே’ படம் எனக்குப் பெரிய நஷ்டம் தருகிறது. அப்போது நந்தாவின் தாத்தாவும், ம.தி.மு.க-வின் முக்கியத் தலைவருமான கண்ணப்பன் மத்திய மந்திரியாக இருக்கிறார். கூட்டணி ஆட்சியில் ம.தி.மு.க-வில் யார் யாருக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்ற விவாதம் வந்தபோது நான் கண்ணப்பனுக்கு ஆதரவாக நின்று வைகோவோடு சண்டை போட்டவன். கண்ணப்பனை எனக்கு மிகவும் பிடிக்கும். மிசா காலத்தில் கலைஞருக்கு கார் ஓட்ட யாருமே முன்வராதபோது, செல்வந்தரான கண்ணப்பன் காரோட்டியாக வந்து நின்றார்.
‘புன்னகை பூவே’ படம் தொடர்பாக ஒருநாள் கண்ணப்பன் என்னிடம் பேசினார். ‘‘உங்களுக்குப் பெரிய நஷ்டம்னு கேள்விப்பட்டதுல இருந்து மனசு சங்கடமா இருக்கு. நாம சில விஷயங்கள் பேசணும். நீங்க டெல்லிக்கு வாங்க’’ என்கிறார். நானும் போனேன்.
அப்போது கண்ணப்பன் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சராக இருந்தார். ‘‘2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கற யூனிட் அமைக்க உங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கிறேன். ஆந்திரா பக்கம் இடம் பாருங்க’’’ என்கிறார். ‘‘இல்ல சார்... அதுல எல்லாம் ஆர்வம் இல்ல’’ என்கிறேன். ‘‘அப்படிச் சொல்லாதீங்க. இதுல வாழ்நாளுக்கும் நல்ல லாபம் வரும். ரெண்டு பையன்ங்க இருக்காங்க. அவங்க எதிர்காலத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்’’ என்று வற்புறுத்துகிறார். நானும் சித்தூரில் 15 ஏக்கர் இடம் பார்த்து முன்பணமும் கொடுத்துவிட்டேன்.
ஆனால், எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன அந்த ஆர்டரை, ஏதோ ஒரு சந்தர்ப்பச் சூழலில் ஹைதராபாத்காரருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் கண்ணப்பன். அட்வான்ஸ் கொடுத்த பணம், இடம் என எல்லாமே என் கைவிட்டுப் போய்விட்டன. அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளை நம்பிவிடவே கூடாது என்பதற்கு நான் வாழ்வில் கற்ற பாடங்களில் இதுவும் ஒன்று.

‘புன்னகை பூவே’ படத்தின் நஷ்டம் 2.87 கோடி. ‘காக்க காக்க’ படத்துக்கான பட்ஜெட் 2.5 கோடி. முதல் கட்டமாக கெளதம் மேனனிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து ஷூட்டிங் ஆரம்பிக்கச் சொன்னேன். ஆனால், அந்தத் தொகை சரியாக ஷூட்டிங்கிற்குப் போய்ச் சேரவில்லை. கெளதம் ஷூட்டிங்கிற்குச் செலவழிக்காமல் அதைத் தனிப்பட்ட முறையில் செலவு செய்துவிட்டார் என்பது பின்னர் தெரிந்தது.
‘இப்படியே போனால் ஷூட்டிங் பாதிக்கும்’ என்பதால், நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே கெளதம் மேனனுக்கு ஒரு அக்கவுன்ட்டை ஆரம்பித்து, ஷூட்டிங்கிற்குத் தேவையான பணத்தை அவ்வப்போது க்ளியர் செய்து கொடுத்துக்கொண்டே வந்தேன்.
‘காக்க காக்க’ படத்துக்கு மிகப்பெரிய பலம் நடிகர் சூர்யாதான். சம்பளம் பற்றி யெல்லாம் கவலையேபடாமல், படத்துக் காகவே சூர்யா தன்னை அர்ப்பணித்திருந்தார். இது ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் செய்த படம் என்பதால், எனக்கும் சூர்யாவுக்குமான சந்திப்புகள் மிகவும் குறைவு. ஆனால், சூர்யா முதன்முதலில் சினிமாவுக்குள் வரும்போது, ‘தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு புதுவரவு. உன் வரவு நல் வரவாகுக’ எனப் பூங்கொத்தோடு சூர்யாவை வரவேற்று நாளிதழில் விளம்பரம் கொடுத்தேன். அதை இன்னமும் சொல்லி மகிழ்வார் சூர்யா.
அப்போது எப்படிப் பார்த்தேனோ, இப்போதும் அதே சூர்யாவைத்தான் பார்க்கிறேன். கொஞ்சமும் மாறவில்லை. இப்போது மீண்டும் அவரோடு ‘வாடிவாசல்’ படத்தில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி.

‘காக்க காக்க’ படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்க்கிறேன். நாலே கால் மணி நேரம் படம் ஓடுகிறது. இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்தில்தான் எடிட்டிங். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். ‘‘படத்தை நீங்கள் குறைத்துக்கொடுக்கவேண்டும்’’ என்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் படத்தைக் குறைத்துக்கொடுத்தார் கெளதம். இறுதியில் 2 மணிநேரம் 40 நிமிடப் படமாக வந்தது.
இந்த நேரத்தில் சினிமா எடிட்டர் சங்கத்தில் இருந்து ஒரு புகார் வருகிறது. ‘‘எடிட்டர் சங்கத்தில் இல்லாதவரை வைத்து நீங்கள் படம் எடிட் செய்கிறீர்கள். இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்போகிறோம்’’ என்கிறார்கள். என் முதல் படமான ‘யார்’ படத்தில் எடிட்டராக இருந்த வி.டி.விஜயன்தான் எடிட்டர் சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். ‘‘புதுசா ஒரு திறமையான பையன் வந்திருக்கான். அவனை வரவேற்கலைன்னா எப்படி? பிரச்னையை வளர்க்காதீங்க’’ என்கிறேன். ஆன்டனி வந்து, ‘‘சார், என் பேரை டைட்டில்ல போடக்கூடாதுன்னு சொல்றாங்க. பேர் போடலைன்னா என் வாழ்க்கையே போயிடும்’’ எனக் கலங்குகிறார். உடனே எடிட்டர் சங்கத்துக்கு நானே பணம் கட்டி, ஆண்டனியை அதில் உறுப்பின ராக்கினேன். இன்று ஆண்டனி மிக முக்கியமான, மிகவும் பிஸியான எடிட்டராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
‘காக்க காக்க’ படத்தின் பட்ஜெட் கொஞ்சம் தாண்டிப் போகிறது. சொன்னதற்கும் மேல் கூடுதலாக 20 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனாலும் பட்ஜெட் எகிறியது. மீண்டும் என்னிடம் பணம் கேட்காமல் கெளதம் மேனன் வெளியே 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் படத்தை முடித்தார்.
‘காக்க காக்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக ராஜாஜி ஹாலில் நடத்தினோம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட். ட்ரெய்லருக்கும் பெரிய ரெஸ்பான்ஸ். இதனால் படத்துக்கான ரிசர்வேஷன் ஆரம்பித்ததுமே டிக்கெட் வாங்க கூட்டம் எக்கச்சக்கமாகக் கூடிவிட்டது. தேவி தியேட்டர் முன் கூடிய கூட்டத்தையும் அப்படியே போட்டோ எடுத்து எல்லா பேப்பர்களிலும் விளம்பரம் கொடுத்து, பப்ளிசிட்டியை இன்னும் கூட்டினேன்.
படம் மிகப்பெரிய ஹிட். ‘புன்னகை பூவே’ படத்தில் நான் இழந்த பணத்தையும் பெயரையும் மீட்டுக்கொடுத்தது ‘காக்க காக்க.’
தெலுங்கில் இந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் வெங்கடேஷ் சென்னை வருகிறார். அவர் சென்னை வந்தபோது ‘காக்க காக்க’ ரிலீஸாகி 30-வது நாள். அன்றும் ஹவுஸ்ஃபுல்லாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்க் ஹோட்டலில் சந்திக்கிறோம். தெலுங்கில் ‘காக்க காக்க’ படத்தைத் தயாரிப்பது என்று முடிவாகிவிட்டது.
வெங்கடேஷின் அண்ணன் சுரேஷ் பாபுதான் அவரது தேதிகள், சம்பளம் அனைத்தையும் நிர்வகிப்பவர். அதனால் அவரைப் பார்க்க ஹைதராபாத் போகிறேன். நான் சுரேஷ் பாபுவின் அறைக்குள் நுழையும்போது, ஏவிஎம் குகன் வெளியே வருகிறார்.
இந்த நேரத்தில் குகனோடு ஏற்பட்ட சிறு நெருடலைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘காக்க காக்க’ ரிலீஸின்போது ஒரு வக்கீல் நோட்டீஸ் வருகிறது. ‘‘ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு ‘ஆளவந்தான்’ ஷூட்டிங்கின்போது தாணு ஒரு லட்சம் ரூபாய் பாக்கிவைத்திருக்கிறார். அதனால் ‘காக்க காக்க’ ரிலீஸுக்குத் தடைவிதிக்கவேண்டும்’’ என்கிறார்கள். இந்தப் பட ரிலீஸுக்கு முன்வாரம்தான் ஏவிஎம்-ன் ‘பிரியமான தோழி’ படம் ரிலீஸ். ‘காக்க காக்க’ ட்ரெய்லர், பாடல்கள் வெளியானதுமே பெரிய எதிர்பார்ப்பு கூடிவிட்டது. இந்த நிலையில்தான் படத்துக்குத் தடை கேட்கிறார்கள்.

‘‘நான் ‘ஆளவந்தான்’ ஷூட்டிங்கிற்காக எத்தனையோ லட்சங்கள் கொடுத்தேன். அதில் நீங்கள் டிஸ்கவுன்ட் கொடுத்த தொகைதானே ஒரு லட்சம். ‘ஆளவந்தான்’ படத்துக்குப் பிறகு நான் படங்கள் ரிலீஸ் செய்தேனே. அப்போதெல்லாம் பிரச்னை செய்யாதவர்கள், இப்போது உங்கள் படம் வருகிறது என்றதும் இப்படிச் செய்கிறீர்களே’’ என்று அவர்களிடம் வருத்தப்பட்டேன். கோர்ட்டில் பணம் கட்டி படத்தை ரிலீஸ் செய்தேன்.
ஒரு தயாரிப்பாளர் இன்னொரு தயாரிப்பாளர் படம் ரிலீஸாவதற்குத் துணையாகத்தான் இருக்கவேண்டும். நான் இப்படித் துணை நின்று அதனால் பல லட்சங்களை இழந்திருக்கிறேன். பிரபுதேவாவின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, விக்ரமின் ‘பீமா’ படங்கள் ரிலீஸாக நான் செய்த பொருளாதார உதவிகள் எனக்கு இன்னும் திரும்ப வரவில்லை.
ஏவிஎம் நிறுவனத்தின் சகோதரர்கள் சொத்து பிரித்துத் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தபோது, எல்லா சகோதரர்களுடனுமே நான் நல்ல நட்பில்தான் இருந்தேன். ஏவிஎம் பாலசுப்ரமணியன், அவரின் மகன் குருநாத் மெய்யப்பன் விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தைத் தயாரிப்பதற்கு நானும் சிறு உதவி செய்தவன். ‘சச்சின்’ பட ஷூட்டிங்கின் போதுதான் ‘வேட்டைக்காரன்’ படத்துக்கான விதை போடப்பட்டது. ஏவிஎம் குடும்பத்தினர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், சரவணன் சாரின் மகன் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இப்படிச் செய்தது வருத்தமாகிப்போனது.
இந்தநிலையில்தான் ஹைதராபாத்தில் குகனை சுரேஷ் பாபுவின் அறைக்கு வெளியே பார்க்கிறேன். மாடிப்படி ஏறும்போது வெங்கட்ராஜ், சிவராஜ் என இரண்டு தயாரிப்பாளர்கள் நின்றுகொண்டிருந்தனர். ‘‘வெங்கடேஷை வைத்து இவர்கள் ஒரு படம் தயாரிக்கிறார்கள். படம் 25 சதவிகிதம் முடிந்துவிட்டது. ஆனால், திருப்தியில்லை. படத்தை டிராப் செய்துவிட்டு வேறு படம் எடுக்கப்போகிறார்கள்’’ என்று அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னார்கள்.
நான் சுரேஷ் பாபுவின் அறைக்குள் சென்றேன். பேச்சுவார்த்தைகள் முடிந்தது. சம்பளத்தில் பாதியாக 2 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கிறேன் என்கிறேன். ஆனால், ‘‘10 லட்சம் கொடுத்தால் போதும் சார். மீதியைப் படம் முடிந்ததும் வாங்கிக்கொள்கிறோம்’’ என்கிறார் அவர். சட்டென தெலுங்கு சினிமா உலகம் மீது மிகப்பெரிய மரியாதை வந்தது. அப்போது, ‘‘கீழே இரண்டு தயாரிப்பாளர்களைப் பார்த்தேன். அவர்களுக்கு நீங்கள் இன்னொரு படம் தரப்போவதாகச் சொன்னார்கள். இந்தப் படத்திலேயே அவர்கள் சேர்ந்துகொள்ளட்டும். 50 சதவிகிதம் ஷேர் தருகிறேன்’’ என்றேன். உடனே சுரேஷ் பாபு என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘‘தமிழ்ல படம் பெரிய ஹிட்டாகி தெலுங்குல பண்ண வந்திருக்கீங்க. ஒரு ஹிட் படத்துல ஷேர் கொடுக்குறேன்னு சொல்ல பெரிய மனசு வேண்டும். ஆர்.பி.செளத்ரி மாதிரி (அப்போது தமிழில் இருந்து போய் தெலுங்கில் பல படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார் செளத்ரி) வருவீங்க’’ என வாழ்த்தினார். அந்தத் தெலுங்குத் தயாரிப்பாளர் களால் நான் பல பிரச்னை களைப் பிறகு சந்தித்தேன். அதைப் பின்னர் சொல்கிறேன்.

தெலுங்கிலும் கெளதம் மேனனே இயக்குநர். படம் ஆரம்பிக்கும்போது கெளதம் பொருளாதார ரீதியில் கொஞ்சம் பிரச்னையில்தான் இருந்தார். தெலுங்குக் கதையுரிமையை 80 லட்சம் ரூபாய்க்குப் பேசினோம். அதில் அட்வான்ஸாக வந்த 40 லட்சம் ரூபாயில் என் பங்கை எடுக்காமல், அப்படியே கெளதம் மேனன் கையில் கொடுத்தேன். தெலுங்குப் படத்துக்கு அட்வான்ஸாக 10 லட்சம் ரூபாயும் கொடுத்தேன். சந்தோஷத்தில் திக்குமுக்காடினார் கெளதம். உடனடியாக ஹைதராபாத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கினார்.
தெலுங்கில் ‘கர்ஷனா’ என்ற பெயரில் ‘காக்க காக்க’ படத்தைத் தொடங்கினோம். தமிழில் மீண்டும் சூர்யா, ஜோதிகா நடிக்க ‘மாயாவி’ படத்தைத் தொடங்கினோம். இதற்கு அடுத்து விஜய்யுடன் என்னுடைய முதல் படமான ‘சச்சின்.’ மூன்று படங்களைப் பற்றியும் சொல்ல சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைய உள்ளன. அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்