மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 22

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

கலைப்புலி எஸ்.தாணு

‘காக்க காக்க’, ‘மாயாவி’, ‘சில்லுனு ஒரு காதல்’ என அடுத்தடுத்து மூன்று படங்கள் தம்பி சூர்யாவோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த கிருஷ்ணாவை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் என்னிடம் அறிமுகப்படுத்தி, கதை சொல்ல வைக்கிறார். நல்ல ஸ்கிரிப்ட். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஜோதிகாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார்கள். சூர்யாவிடமும் கதை சொல்லச் சொல்கிறேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். இருவரையும் வைத்து போட்டோஷூட்டையும் முடித்துவிட்டோம்.

உண்மைகள் சொல்வேன்! - 22

ஒருநாள் அலுவலகத்தில் இயக்குநர் கிருஷ்ணாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘‘இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் சார்’’ என்கிறார். ‘‘ரஹ்மான் போனை எடுக்கமாட்டார். இருந்தாலும் உன் எதிரில் ட்ரை பண்றேன். எடுத்துட்டார்னா நிச்சயமா அவரை மியூசிக் பண்ண வெச்சிடுறேன்’’ என்று சொன்னபடியே ரஹ்மானுக்கு போன் அடித்தேன். ஆச்சர்யமாக ரஹ்மான் போனை எடுத்துவிட்டார். ‘‘உன்னைப் பார்க்கணும்பா’’ என்றேன். ‘‘வாங்களேன்... ஸ்டூடியோலதான் இருக்கேன்’’ என்றார். உடனடியாக கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டு அங்கே போனேன்.

ரஹ்மான் ஸ்டூடியோவில் ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். டிவி நேரடி ஒளிபரப்பு வேன்கள் எல்லாம் நிற்கின்றன. கும்பகோணம் தீ விபத்து நடந்து சில நாள்கள் ஆகியிருந்த நேரம். அந்தத் துயரம் குறித்து ரஹ்மானிடம் பேட்டி எடுப்பதற்காக எல்லோரும் வந்திருக்கிறார்கள்.

எங்களைப் பார்த்ததும் ‘‘என்ன சார் விஷயம்’’ என்றார் ரஹ்மான். கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தி, ‘‘பிரமாதமான கதை வெச்சிருக்கார்ப்பா. நீ கேட்கணும்’’ என்றேன். ‘‘ஒரு வாரத்துல கேட்டுடட்டுமா?’’ என்கிறார். ‘‘இல்லப்பா... இன்னைக்குக் கேட்குறதா இருந்தா கேளு’’ என்கிறேன். ரஹ்மானை நேரில் பார்த்துப் பேசுவது என்பது அரிதிலும் அரிது. இன்று விட்டால் இன்னொரு நாள் அவரைப் பிடிக்கமுடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவரிடம் உரிமையோடு பேசுகிறேன். ‘‘அப்படின்னா இருங்க சார். பேட்டி மட்டும் கொடுத்துட்டு வந்துடுறேன்’’ என்று சொல்லிவிட்டுப் போனவர், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்தார்.

‘‘அரை மணி நேரம் போதுமா?’’ என்றார் கதை கேட்க. ‘‘அதுபோதும் தம்பி’’ என்றேன். பக்கத்தில் இருந்த இயக்குநர் கிருஷ்ணா என்னிடம் மெல்லிய குரலில், ‘‘எப்படி சார் அரை மணி நேரத்துல கதை சொல்லமுடியும்’’ என்கிறார். ‘‘நீ கதை சொல்லுப்பா... கதை போற வேகத்துல நேரம்லாம் பார்க்கமாட்டார். அவருக்குப் பிடிச்சிருந்தா முழுக்கதையையும் கேட்பார்’’ என்று சொல்லி, கிருஷ்ணாவை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்து அந்த அறைக்கதவை மூடிவிட்டேன். ரஹ்மானின் உதவியாளரைக் கூப்பிட்டு, ‘‘எந்த போன் வந்தாலும் உள்ளே கொண்டுபோய்க் கொடுக்காதே’’ என்று சொல்லி அவரையும் என் அருகில் உட்கார வைத்துவிட்டேன். ஒன்றே முக்கால் மணி நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தார்கள். ரஹ்மான் என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘உங்களுக்கு முதல் படம் (கிழக்குச் சீமையிலே) எப்படி செஞ்சேனோ, அதேபோல செய்றேன் சார்’’ என்று சொன்னார். நடந்ததையெல்லாம் நினைத்து எனக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘திடீரென ஒரு போன்காலில் ரஹ்மானைப் பிடித்து, அன்றே அவரைக் கதையும் கேட்கவைத்து, அப்ரூவலும் வாங்கிவிட்டோமே’ என எனக்கு மகிழ்ச்சி.

ஏ.ஆர்.ரஹ்மான் என்னிடம் சம்பளம் பேசியதேயில்லை. என்ன கொடுக்கிறோமோ அதை வாங்கிக்கொள்வார். உடனே ரஹ்மானுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். மும்பையில் ‘அன்பே வா முன்பே வா’ பாடல் கம்போஸிங் நடக்கிறது. தோட்டாதரணியை செட் போடச் சொல்லி, ரஹ்மானுக்கும் விதவிதமான காஸ்ட்யூம்களில் ஒரு ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தினோம். எல்லா போட்டோக்களையும் பிரின்ட் எடுத்துக்கொண்டுபோய் ரஹ்மான் ஸ்டூடியோவில் அடுக்கிவிட்டேன். அவர் அம்மா அந்தப் படங்களை மிகவும் ரசித்து, மகிழ்ந்து பார்த்தார்.

இதற்கிடையே மோகன் நடராஜன் என்பவருக்குப் படம் செய்வதற்கு சூர்யா தம்பி ஏற்கெனவே உறுதியளித்திருக்கிறார். இதனால், சூர்யாவின் மேலாளர் தங்கதுரை என்னிடம் வந்து சூழலைச் சொல்லி, ‘‘அண்ணே, ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படைல படத்தை நீங்க வாங்கிடுங்க. மோகன் நடராஜன் தயாரிப்பைப் பார்த்துக்கட்டும். அப்படின்னா ரெண்டு பேரும் இந்தப் படம் பண்ணுனமாதிரி ஆகிடும்’’ என்றார். ‘‘எனக்கு ஆட்சேபனை இல்லப்பா. தாராளமா பண்ணிக்கலாம்’’ என்று சொல்லிவிட்டேன்.

பூமிகா கதாபாத்திரத்துக்கு நான் கரீனா கபூரை ஒப்பந்தம் செய்யலாம் என இயக்குநர் கிருஷ்ணாவிடம் சொல்லி வைத்திருந்தேன். இதற்கிடையே கிருஷ்ணா என்னிடம் வந்து, ‘‘சார், நீங்க கரீனா கபூர்னு சொல்றீங்க. ஆனா, அவங்க மீனா, சௌந்தர்யான்னு சொல்றாங்க. எல்லாத்துலயும் பட்ஜெட் பார்க்குறாங்க. நான் உங்களுக்கே படம் பண்றேன்’’ என்கிறார்.

இந்த விஷயம் சூர்யா தம்பியின் காதுக்குப் போகிறது. அவர் கே.இ.ஞானவேல்ராஜாவை என்னிடம் அனுப்புகிறார். ‘‘அண்ணே, இயக்குநர் பிரச்னையைச் சொன்னார். ஒருத்தரை விட்டுட்டு இன்னொருத்தருக்குப் படம் பண்ணுனா தப்பாகிடும் சார். அதனால இந்த புராஜெக்டை நாங்க எடுத்துக்குறோம். சூர்யா சார் கால்ஷீட்டை ஏப்ரல்ல இருந்து நீங்க எடுத்துக்கோங்க’’ என்கிறார். ‘‘தாராளமா பண்ணிக்கலாம் தம்பி’’ என்கிறேன். இடையில் நாங்கள் வேறு படங்களுக்குப் போக, சூர்யா தம்பியும் வேறு படங்களில் பிஸியாக, எங்களுடைய படம் தள்ளிப் போகிறது.

இந்தச் சூழலில் ஒருநாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் சரவணன் சாரைப் பார்ப்பதற்காகப் போய்க்கொண்டிருக்கிறேன். எதிரில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் வருகிறார். ‘‘என்ன சார்... உங்களுக்கு எங்களை இன்னும் கண்ணுக்குத் தெரியலையா’’ என ஜாலியாகக் கேட்கிறார். ‘‘என்ன சார் இப்படிக் கேட்குறீங்க, 2000த்திலேயே ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்‘ படத்துக்கு தம்பியைக் கேட்டோமே சார். அப்ப தம்பிக்கு நேரம் இல்லாம பண்ணமுடியாமப் போயிடுச்சு. இப்ப சொல்லுங்க சார், நாளைக்கே வந்து உங்களைப் பார்க்குறேன்’’ என்கிறேன். ‘‘இல்ல இல்ல... நான் வந்து உங்களைப் பார்க்குறேன். டைம் சொல்லுங்க’’ என்கிறார். ‘‘வேண்டாம் சார்... நான் வருகிறேன்’’ என்கிறேன்.

உண்மைகள் சொல்வேன்! - 22

ஆனால், அடுத்த நாள் காலை 11 மணிக்கு என் அலுவலகத்துக்கு எஸ்.ஏ.சி சார் வந்துவிட்டார். நான் பதறிவிட்டேன். ‘‘என்ன சார், நான் வரேன்னு சொன்னேன். நீங்க வந்துட்டீங்களே’’ என்கிறேன். ‘‘இல்ல சார். நான் வர்றதுதான் சரியா இருக்கும். இப்ப ஜி.வி (இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன்) படத்துக்கு அடுத்து தம்பிக்கு நீங்கதான் சார் படம் பண்றீங்க. நாளைக்குத் தம்பியைப் பார்த்துடுங்க’’ என்கிறார்.

முதன்முதலாக விஜய் தம்பியைப் போய்ப் பார்க்கிறேன். பயங்கர உற்சாகமாக இருந்தார். எடுத்ததுமே, ‘‘வாங்க சார்... ‘குஷி’ மாதிரி ஜாலியான ஒரு படம் பண்ணணும் சார்’’ என்கிறார். ‘‘சரி தம்பி... நிச்சயமா பண்ணிடலாம். நீங்களும் கதை கேளுங்க... நானும் கதை கேட்குறேன்’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அப்போதுதான் அஜித்தை வைத்து ‘முகவரி’ படத்தை இயக்கியிருந்த வி.இசட்.துரையை என்னிடம் ஆர்.டி.ராஜசேகர் அறிமுகப்படுத்து கிறார். அவர் சொன்ன கதை பிடித்துப்போக விஜய்யிடம் ‘‘ஒரு கதை கேட்டேன். எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. நீங்க கேளுங்க தம்பி’’ என ‘தொட்டி ஜெயா’ இயக்குநர் துரையை அனுப்பினேன். அவர் சொன்ன கதை விஜய் தம்பிக்குப் பிடித்திருந்தது. ஆனால், படத்தின் செகண்ட் ஹாஃப் அவருக்குத் திருப்தியாக இல்லை. விஜய் தம்பி ஜாலியாக ஒரு படம் பண்ணவேண்டும் என்றுதான் என்னிடம் முதலிலேயே சொல்லியிருந்தார். அதனால் அந்தக் கதையை விட்டுவிட்டோம்.

அடுத்து இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் என்னிடம் வந்து ஒரு கதை சொன்னார். கலகலவெனப் போகும் கதை. எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விஜய் தம்பிக்கு மீண்டும் போன் அடித்து விஷயத்தைச் சொன்னேன்.

அடுத்த நாள் ஜானை விஜய் தம்பியிடம் அறிமுகப்படுத்தி கதை சொல்லவைத்துவிட்டு, நான் என் அலுவலகம் வந்துவிட்டேன். மதியம் விஜய் தம்பி போன் அடித்தார். ‘‘ஃபன்னா, ஜாலியா, நல்லாருக்கு சார். நாம பண்ணலாம் சார்’’ என்கிறார். உடனே ஜான் மகேந்திரனை அழைத்து, அவருக்கு ஒரு கார் வாங்கிக்கொடுத்து பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜீவாவை விஜய் தம்பிதான் பரிந்துரைத்தார். அவருக்கும் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டேன். அப்போது ‘பாய்ஸ்’ படம் வெளியாகி ஹிட் அடித்திருந்தது. அதனால் ஜெனிலியாவையும், பிபாஷா பாசுவையும் ஹீரோயின்களாக இயக்குநர் ஒப்பந்தம் செய்தார். படத்துக்கு தேவி பிரசாத் இசை.

இந்த இடத்தில் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். கதையைத் தேர்ந்தெடுப்பதிலும் சரி, பாடல்களைப் பிடிப்பதிலும் சரி, படத்துக்கான டிசைன் மற்றும் விளம்பரங்களை ஓகே செய்வதிலும் சரி, எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்தான். ஏனென்றால், எம்ஜிஆர் இந்த எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவார். அவரின் அனுமதியின்றி அவர் படத்தைப் பற்றிய எந்த விஷயமும் வெளியே போகாது. அதுபோல விஜய் தம்பி தான் நடிக்கும் படம் மிகச்சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எல்லா விஷயங்களிலும் அவ்வளவு ஈடுபாடு காட்டுவார்.

உண்மைகள் சொல்வேன்! - 22

‘சச்சின்’ படத்தில் முதலில் சந்தானம்தான் முதன்மை நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால், திடீரென அவரைத் தவிர்க்கவேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதனால் வடிவேலுவைக் கொண்டுவந்தோம்.

ஊட்டியில் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. விஜய் தம்பி, வடிவேலு எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். திடீரென தமிழகக் கரை முழுக்க சுனாமி பேரலைத் தாக்குதல் எனச் செய்திவருகிறது. ஏராளமான மரணங்கள். உடனடியாக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு எல்லோரும் பிரார்த்தனைகள் செய்கிறோம். எல்லோரின் மனமுமே துயரத்தில் ஆழ்ந்துவிட்டது.

அடுத்தநாள் ஷூட்டிங் ஆரம்பிக்கவேண்டும். திடீரென வடிவேலு, ‘‘எனக்கு மனசு சரியில்லை... நான் சென்னைக்குப் போகிறேன். இன்னொரு நாள் இங்கே வருகிறேன்’’ என்கிறார். விஜய் தம்பி எதுவும் சொல்லாமல் எல்லாவற்றையும் கேட்டபடியே அமைதியாக இருந்திருக்கிறார். என்னிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். நான் வடிவேலுவிடம் சில விஷயங்களைச் சொல்லச் சொல்லி அனுப்பினேன்.

வடிவேலு ‘சச்சின்’ படத்தில் மீண்டும் நடித்தது எப்படி, விஜய் தம்பியுடனான அனுபவங்கள், ‘சச்சின்’ ரிலீஸில் வந்த பிரச்னைகள், ரஜினியின் ‘சந்திரமுகி’யும், விஜய்யின் ‘சச்சின்’ படமும் ஒன்றாக ரிலீஸான அந்தப் பரபர நாள்கள்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்!

- வெளியிடுவோம்

தாணு சொல்வதில் உண்மையில்லை!

`ஆனந்த விகடன்' 31.03.2021 இதழில் கலைப்புலி தாணு எழுதியுள்ள `உண்மைகள் சொல்வேன்' தொடரில், என்னைப் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

1999-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் எனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு பெற்றுத் தருவதற்கு வைகோவிடம் அவர் சண்டை போட்டதாகக் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் தவறானது. உண்மை என்னவெனில், அப்போது பிரதமர் வாஜ்பாய், தனது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக வைகோ பொறுப்பேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஆனால், வைகோ அதை மறுத்து என்னையும், செஞ்சி ராமச்சந்திரனையும் துணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்கச் செய்தார். வைகோ தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே நானும், செஞ்சி ராமச்சந்திரனும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றோம். தாணுவிற்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை.

மரபு சாரா எரிசக்தித் துறையில் மின் உற்பத்தித் திட்டம் ஒன்றைத் தனக்குத் தருவதாக நான் வாக்குறுதி கொடுத்து, அதனை ஏதோவொரு சந்தர்ப்பச் சூழ்நிலையில் ஹைதராபாத்காரருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டதாக தாணு தெரிவித்துள்ளார்.சென்னைக் கோயம்பேட்டில் காய்கறிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை எனது துறை உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மிகப்பெரிய காய்கறிச் சந்தையில் வீணாகும் கழிவுகளைக் கொண்டு 2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தை தாணு செய்வதாக இருந்தால், டெல்லி வந்து துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தலாம் என அவரிடம் தெரிவித்தேன். அவரும் வந்து அதிகாரிகளுடன் பேசினார். ஆனால், தொடர்ந்து அதை அவர் செய்யவில்லை. இதுகுறித்து தாணுவுக்கு நான் எந்த வாக்குறுதியும் தரவில்லை. வேறு யாருக்கும் அந்தத் திட்டம் மாற்றித் தரப்படவும் இல்லை. நான் அமைச்சர் பொறுப்பில் இருந்தவரை, அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கும் வரவில்லை.அறுபது ஆண்டுகளுக்கும் மேலான பொது வாழ்வில் யாராலும் குறைசொல்ல முடியாத, கறைபடியாத கரங்களோடு பொறுப்புகளை நான் ஆற்றிவருவதை அனைவரும் அறிவர்.- மு.கண்ணப்பன்