
கலைப்புலி எஸ்.தாணு
`கூலிக்காரன்' என்னைக் கலைஞரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தான். கலைஞரை வைத்து நூறாவது நாள் விழாவை நடத்தவேண்டும் என்கிற பேரார்வம் எனக்குள் முட்டிமோத, அவரை எப்படிச் சந்திப்பது எனத் தெரியாமல் தவித்தேன். அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த ஒரு சினிமாப் பத்திரிகையின் நிருபர்களிடம் என் விருப்பத்தைச் சொன்னபோது அவர்கள்தாம் `முரசொலி' செல்வத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள். அவர் அடுத்த நாளே தலைவர் கலைஞரைச் சந்திக்க நேரம் வாங்கிவிட்டார். கலைஞர் என்னை உடனடியாக சந்திக்க நேரம் கொடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
நல்ல நட்போடு `கூலிக்காரன்' படத்தைத் தொடங்கிய எனக்கும், டி.ராஜேந்தருக்கும் இடையில் உரசல்கள் வர ஆரம்பித்தது. இருவருக்கும் இருந்த தவறான புரிதல்களே அதற்குக் காரணம். `கூலிக்காரன்' படம் ரிலீஸாவதற்கு முன்பாக டி.ராஜேந்தர் தன்னுடைய `ஒரு தாயின் சபதம்' படத்தை வெளியிட்டார். ``அடுக்கு மொழிக்காகச் சிலர் எழுதலாம் துடுக்கு மொழி. அவையெல்லாம் ஆகிடுமோ ராஜேந்தரின் அடுக்குமொழி. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது'' எனப் பிரபல நாளிதழில் கால் பக்கத்துக்கு டி.ராஜேந்தர் ஒரு விளம்பரம் கொடுத்தார். இந்த விளம்பரம் எனக்காகத்தான் கொடுக்கப்பட்டது என அவருக்கு நெருக்கமாக இருந்தவர் என்னிடம் சொல்ல, நான் அதே நாளிதழில், அப்படிப்பட்ட ஒரு விளம்பரம் மூலமாகவே ராஜேந்தருக்கு பதில் கொடுக்கவேண்டும் என முடிவெடுத்தேன்.
``அடுக்கு மொழிக்குச் சொந்தக்காரர் அறிஞர், கலைஞர். இருவரும் பெற்றது டாக்டர் எனும் பட்டம். மற்றவர் அடுக்கு மொழிக்காக அடித்துக்கொள்கிறார் வீண் தம்பட்டம். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்ந்தவன் ஆவான். தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் ........ ஆவான்.''
நான் கொடுத்த இந்த விளம்பரத்தைப் பார்த்த கலைஞர் டி.ஆர்.பாலுவிடம் ``யார் இந்த தாணு?'' என விசாரித்திருக்கிறார். இதனால் முரசொலி செல்வம் போய் ``தாணு உங்களைப் பட வெற்றிவிழாவுக்காக அழைக்க நேரம் கேட்கிறார்'' எனச் சொன்னதும், இந்த நாளிதழ் விளம்பரத்தையும் மனதில் வைத்துக்கொண்டு எனக்கு அடுத்தநாளே நேரம் கொடுத்தார்.
கோபாலபுரம் வீட்டுக்குள் நுழையும்போது மனதில் அவ்வளவு மகிழ்ச்சி. ஒரு பெருங்கனவு நிறைவேறிய உற்சாகம். கலைஞரின் காலைத்தொட்டு வணங்கிவிட்டு, ``இது முதல்முறையல்ல'' என்றேன். ``என்னய்யா சொல்ற?'' என்றார். ``வண்ணாரப் பேட்டையில் கவிஞர் கா.வேழவேந்தன் கல்யாணத்துக்கு அண்ணா, நீங்கள், நாவலர், பேராசிரியர் என எல்லோரும் வந்திருந்தீர்கள். அந்தத் திருமண மேடையில் நீங்கள் பேசும்போது உங்கள் காலுக்கு அடியில் நின்றுகொண்டு உங்கள் கால்களைத் தொட்டுப்பார்த்தேன். உங்கள் வேட்டியில் இருந்த நூல்களைக்கூட எடுத்துவிட்டேன்'' என்று சொன்னேன். ``அப்டியாய்யா... அப்டியாய்யா'' என மகிழ்ந்தவர், எங்கே, எப்போது நிகழ்ச்சி என எல்லா விவரங்களையும் கேட்டுக்கொண்டு, விழாவுக்கு வருவதற்கும் ஒப்புதல் தந்துவிட்டார்.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் சில எதிர்பாராத சிக்கல்கள். படப்பிடிப்பின்போது எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த ராதாரவியோ, பட ரிலீஸுக்குப் பிறகு விளம்பரங்களில் தனக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்பட்டவில்லை என என்னிடம் கோபித்துக்கொண்டார். இதனால் ராதாரவி, இயக்குநர் ராஜசேகர், இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மூவரும் `கூலிக்காரன்' விழாவுக்குப் போகக்கூடாது என கலைஞரை நேரில் சந்தித்து நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால், கலைஞர் சொன்ன சொல் மாறாதவர் என்பதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரையும் அழைத்துக் கொண்டு விழா நடந்த வாகிணி ஸ்டூடியோவுக்கு சரியான நேரத்துக்கு வந்துவிட்டார்.
விழா நடப்பது சென்னையில். ஆனால், நான் தமிழகம் முழுக்க கலைஞரை வரவேற்று கட் அவுட், போஸ்டர்கள் எல்லாம் வைத்தேன். `கூலிக்காரன்' படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோதே நான் விஜயகாந்த்தை வைத்து அடுத்த படமான `நல்லவன்' படத்தை ஆரம்பித்துவிட்டேன். இந்தப்படத்தின் கதாநாயகி ராதிகா. அதனால் அவரையும் `கூலிக்காரன்' விழாவுக்கு அழைத்திருந்தேன்.
விழா மேடையில் கலைஞர். அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மேடைக்கு எதிரே முதல் வரிசையில் நடிகர் விஜயகுமார் உட்பட பல அ.தி.மு.க முகங்கள் உட்கார்ந்திருப்பதைக் கலைஞர் பார்க்கிறார். அவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டே கலைஞர் பேச ஆரம்பித்தார்.

``குளிர்ந்த காற்று வீசுவது மழை வருவதற்குத்தானே!'' என கலைஞர் ஆரம்பித்ததும் கைத்தட்டல் சத்தமும், விசில் சத்தமும் விண்ணைப் பிளக்கிறது. ``நான் ஆட்சி மாற்றத்தைச் சொல்லவில்லை. காணாத முகங்களை எல்லாம் இங்கே காண்கிறேன். குளிர்ந்த காற்று வீசுவது மழை வருவதற்காகத்தானோ'' என மீண்டும் சொன்னதும் மீண்டும் பெரிய ஆரவாரம். படத்தில் பங்காற்றிய அத்தனை பேருக்கும் கேடயங்கள் கொடுத்துச் சிறப்பித்தார் கலைஞர். பெரிய வெள்ளிக் கேடயத்தை கலைஞருக்கு நினைவுப்பரிசாகக் கொடுத்தேன். அந்தக் கேடயம் இப்போதும் கலைஞர் கருவூலத்தில் இருக்கிறது.
ராதிகாவின் கன்னிப்பேச்சு இந்த மேடையில்தான் அரங்கேறியது. இந்த மேடையில் ராதிகா பேசிய பேச்சைக் கேட்ட கலைஞர், அவரை 1989 தேர்தலில் தமிழகம் முழுக்க தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த விழாவினை அடுத்து கலைஞரைத் தொடர்ச்சியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் எதுவும் சொல்லாமலேயே 89 தேர்தலில் தி.மு.க.வுக்காக நானே ஆறு பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒரு பாடலையும் நானே பாடி தேர்தல் பிரசாரத்துக்காக வீடியோ, ஆடியோ கேசட் தயாரித்தேன். அப்போதே `கம்ப்யூட்டர் பீப்பிள்' எனும் கம்பெனியிடம் கொடுத்து உதயசூரியன் சின்னத்துக்குள் இருந்து கலைஞர் வருவதுபோல் கிராபிக்ஸ் எல்லாம் செய்து அந்த வீடியோ கேசட்டைத் தயாரித்திருந்தேன். இந்தப் பிரசார கேசட்டை கலைஞர் வெளியிட முரசொலி மாறன் பெற்றுக்கொண்டார். அப்போது விழாவில் பேசிய கலைஞர், ``சிலரிடம் தேர்தல் பிரசார விளம்பரப் படங்களுக்காகப் பணமெல்லாம் கொடுத்தேன். அவர்கள் செய்கிறேன் என, செய்யாமலேயே விட்டுவிட்டார்கள். ஆனால், தம்பி தாணு அவரின் சொந்தப் பணத்தில், அவரே எழுதி, இசையமைத்து இப்படி ஒரு முயற்சி எடுத்திருக்கிறார். அவரைப் பாராட்டுவது என்னையே பாராட்டுவது போல் ஆகிவிடும்'' எனப் பேசினார்.
சற்குணபாண்டியன் விஷயத்தை கலைஞர் என்னிடம் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அவர் ஆர்.கே.நகரில் நின்று வெல்வதற்கு நானும் ஒரு சிறு பங்களிப்பு செய்திருக்கிறேன்.
1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க 150 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சரானார். அறிவாலயத்தில் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்க பெருங்கூட்டம் கூடிவிட்டது. விஜயகாந்த் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அறிவாலயம் போகிறார். ஆனால், அவருக்கு உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை. காரணம், அப்போது ராதிகாவுக்கும் விஜயகாந்த்துக்கும் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு. 89 தேர்தலில் ராதிகா முழுமூச்சாகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் கட்சியில் அவருக்கு அபிமானம் ஏற்பட்டிருந்தது. மேலும், விஜயகாந்தின் நண்பரான இப்ராகிம் ராவுத்தரோ அதே தேர்தலில் மூப்பனாருக்காக காங்கிரஸுக்குப் பிரசாரம் செய்திருந்தார். இவையெல்லாம் விஜயகாந்த் தடுக்கப்பட காரணம். உடனடியாக விஜயகாந்த் என்னைத் தொடர்புகொண்டு கலைஞரைச் சந்திக்கும் விருப்பத்தைத் தெரிவித்தார்.
நான் அவரை அழைத்துக்கொண்டு அறிவாலயம் சென்றேன். அங்கேயிருந்த வர்கள் எல்லோரும் வழிவிட கலைஞரைப் போய் சந்தித்தோம். விஜயகாந்த் கலைஞருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து சொன்னார். விலகியிருந்த என்னைக் கையைப்பிடித்து அருகில் இழுத்து மூன்று முத்தங்கள் கொடுத்தார் கலைஞர். வாழ்க்கையின் இறுதிவரை மறக்கமுடியாத நிகழ்வு இது. அப்போது அந்த இடத்தில் ஒரு சலசலப்பு. டி.ராஜேந்தர் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்திருந்ததால் அவருக்கு எதிராக சிலர் குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் என்னிடம் ``அவன் நமக்காக உழைச்சவன்யா. நம்ம கட்சிக்காக நிறைய கஷ்டப்பட்டவன். அவனை அப்படியெல்லாம் பேசக்கூடாது'' எனச் சொல்லிவிட்டு, காவல்துறை அதிகாரியை அழைத்து ராஜேந்தர் வீட்டிற்கு உடனடியாகப் பாதுகாப்பு போடச்சொன்னார். விலகிப்போனவர்களையும் நேசிக்கும், மன்னிக்கும், மீண்டும் அரவணைக்கும் தாய்மனம் அவரிடம் இருந்ததை அப்போது நான் நேரில் கண்கூடாகப் பார்த்தேன்.
இதற்கு அடுத்து நான் முரசொலியில் தி.மு.க-வின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் விளம்பரம் கொடுப்பதற்காக விளம்பரத்தை எடுத்துக்கொண்டு முரசொலி அலுவலகம் போனேன். அங்கே கலைஞர் வந்திருந்தார். ``தலைவர் மிகவும் கோபத்தோடு இருக்கிறார். யாரையும் பார்க்கமாட்டார்'' என்கிறார்கள் அங்கிருந்தவர்கள். ஆனால், நான் ``தாணு வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். பார்க்கவிரும்பவில்லை என்று அவர் சொல்லிவிட்டால் நான் போய்விடுகிறேன்'' எனச் சொன்னேன். கலைஞர் என்னை உள்ளே வரச்சொன்னார். அமைச்சரவைப் பட்டியலை என் கையில் கொடுத்து ``இதைப் பாருய்யா'' என்றார். அதில் கே.என்.நேரு, பொன்முடி, நாஞ்சிலார், கோ.சி.மணி, சுப்புலட்சுமி ஜெகதீசன் எனப் பலரின் பெயர்கள் இருந்தன. அப்போது நான் ``ஒரு முதலமைச்சர் இப்படி எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அலுவலகம் வரலாமா, கோபமாக இருப்பதாகவும் சொன்னார்களே'' என்றேன்.
``எஸ்.பி.சற்குண பாண்டியன் ரொம்பக் குடைச்சல் கொடுத்துட்டாங்கய்யா'' என்றார். ``மந்திரி பதவி வேணும்னு கேக்குறாங்கய்யா. கோபாலபுரம் போனா அங்க வராங்க, ஆலிவர் ரோட்டுக்குப் போனா அங்க வராங்க, மாறன் வீட்டுக்குப் போனா அங்க வராங்க. அதான்யா யாருக்கும் சொல்லாம இங்க வந்துட்டேன். ஏற்கெனவே வாக்கு கொடுத்தவங்களுக்கு மந்திரி பதவி கொடுத்திருக்கேன். இது முதல் பட்டியல்தான். இன்னும் நேரம் இருக்குன்னா ஏத்துக்கமாட்றாங்கய்யா'’ என்றார்.

சற்குண பாண்டியன் விஷயத்தை கலைஞர் என்னிடம் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால், அவர் ஆர்.கே.நகரில் நின்று வெல்வதற்கு நானும் ஒரு சிறு பங்களிப்பு செய்திருக்கிறேன். ஆர்.கே.நகர் எங்களுடைய தொகுதி. அங்கே முதலில் ஒரு வேட்பாளர் பெயரை டி.ஆர்.பாலு சொல்லி, கலைஞர் அவர்கள் ஓகே செய்துவைத்திருந்தார். ஆனால், ``அந்த வேட்பாளர்மீது சில குற்றச்சாட்டுகள் இருக்கிறது, அவர் அங்கே நின்றால் தி.மு.க தோற்றுவிடும்'' என என் அண்ணன் சொல்ல, அதை நான் நேரடியாகக் கலைஞரிடம் போய்ச் சொன்னேன். உடனடியாக ``அப்ப ராயபுரத்துல இருக்கிற சற்குணத்தை ஆர்.கே.நகர்ல போடுறேன். ஜெயிச்சுக் கொடுத்துடுவியா'' என்றார் கலைஞர். ``நிச்சயமா தலைவரே... அந்த அம்மா ஜெயிக்க எல்லா வேலையும் பார்ப்போம்'' என உறுதி கொடுத்து போஸ்டர், சுவர் விளம்பரங்கள் எல்லாம் தொகுதி முழுக்க செய்து அவரை வெற்றிபெற வைத்தோம்.
கலைஞரிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு, ``விஜயகாந்த் நடித்த `நல்லவன்' படத்தின் நூறாவது நாள் விழா இருக்கிறது. முதலமைச்சராக நீங்கள் கலந்துகொள்ளும் முதல் விழாவாக என்னுடைய விழாதான் இருக்கவேண்டும்'' என்று சொன்னேன். எந்த யோசனையும் இல்லாமல் ``பண்ணிடலாம்யா'' என்று கலைஞர் சொல்லிவிட்டார். ஆனால், இதற்குள் பல்வேறு விஷயங்கள் நடந்துவிட்டன.
தேர்தல் வெற்றிக்கு முன்பாகவே என் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. நான் ஓடி ஒளிந்தேன். கலைஞரின் பினாமி என என்னிடம் தொடர் விசாரணைகள் நடந்தது. நான் ஏன் ஓடி ஒளிந்தேன், என்னை விசாரித்த அதிகாரி யார், ஏன் விசாரித்தார்கள், உண்மையிலேயே நான் கலைஞரின் பினாமியா... அடுத்த வாரம் சொல்கிறேன்.
- வெளியிடுவோம்...