மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 5

கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாநிதி ( படம் உதவி: ஜெயபாபு )

- கலைப்புலி எஸ்.தாணு

1988-ம் ஆண்டு ஆகஸ்ட். என் வண்ணாரப்பேட்டை வீடு, மீரான் சாகிப் தெருவில் இருந்த என் டிஸ்ட்ரிபியூஷன் அலுவலகம், தி.நகரில் இருந்த சினிமாத் தயாரிப்பு அலுவலகம் என எல்லா இடங்களிலும் வருமானவரித் துறை சோதனை திடீரென நடந்தது. அப்போது என் சினிமாத் தயாரிப்பு அலுவலகத்தின் வாடகை 700 ரூபாய், வீட்டு வாடகை 750 ரூபாய், டிஸ்ட்ரிபியூஷன் அலுவலக வாடகை 200 ரூபாய். முதல்முறையாக வருமானவரித் துறை ரெய்டை சந்திப்பதால் கொஞ்சம் பயந்து தலைமறைவாகிவிட்டேன். வீட்டிலும் அலுவலகங்களிலும் சாமி படங்கள், எலுமிச்சம்பழம், திருநீறு தவிர வேறு எதுவும் இல்லை.

சில நாள்கள் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், நம்பகமான ஆடிட்டர்களைப் போய்ப் பார்த்தேன். ``நான் வரவு செலவுக் கணக்கையெல்லாம் ஒழுங்கா எழுதி வைக்கிறதில்லை. வர்றதை அப்படியே அடுத்த படத்துல போட்டுடுவேன்’’ எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தேன். அவர்கள் என்னை வருமானவரித் துறை அலுவலகத்துக்கு அழைத்துப்போனார்கள்.

ஏழெட்டு அதிகாரிகள் என்னைத் தோண்டித் தோண்டி கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ராபர்ட் ராஜா; ஹர்ஷத் மேத்தா ஊழலை வெளியே கொண்டுவந்ததில் முக்கியமானவர்.

‘`ஏன்யா... இவ்ளோ பிரமாண்டமா படம் பண்ற... வீட்லயும் ஒண்ணும் இல்லை, ஆபீஸ்லயும் ஒண்ணும் இல்ல. அப்ப நீ கலைஞர் பினாமியா?’’ எனக் கேட்டார். ‘`கலைஞர் பினாமின்னா, அவர் என் படங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருக்கணும். அப்படி எதுவும் இல்லையே. அவர்மேல எனக்குப் பிரியம் அதிகம். அவர் என்னோட தலைவர். அவ்வளவுதான்’’ எனச் சொன்னேன். அடுத்து அவர், ‘`அப்ப விஜயகாந்த் பினாமியா?’’ எனக் கேட்டார். ‘`அப்படின்னா புரட்சிக்கலைஞரின் ‘கூலிக்காரன்’, புரட்சிக்கலைஞரின் ‘நல்லவன்’னுதானே நான் படம் எடுத்திருக்கணும். நான் கலைப்புலி தாணுவின் ‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’னுதானே படம் எடுக்குறேன்’’ என்றேன்.

‘`அப்புறம் எங்கிருந்துய்யா உனக்கு இவ்ளோ பணம் வருது’’ எனக் கேட்டார். ‘`என்கூட இப்பவே வாங்க. ரோட்ல இருக்க யாரை வேணா கூப்பிடுங்க, பிச்சைக்காரராகூட இருக்கட்டும். அவருக்கு நல்லா ஷேவ் பண்ணி, கதர் வேட்டி, சட்டை போட்டு சிவாலயா பில்டிங் கூட்டுட்டுப் போறேன். அங்க எந்த ப்ளோர்ல லிப்ட் நிக்குதோ, அங்க இருக்கிற கம்பெனிக்குள்ள போய் ‘இவர் கையில 10 லட்ச ரூபாய் கொடுங்க’ன்னு நான் சொன்னதும், ஏன், எதுக்குன்னு கேட்காம கொடுக்குறாங்களா இல்லையான்னு மட்டும் பாருங்க. யாரோ ஒருவருக்கு 10 லட்ச ரூபாய் வாங்கிக் கொடுக்க முடியும்னா, எனக்கு நான் எவ்ளோ வேணா வாங்குவேன் இல்லையா? எல்லாமே பைனான்ஸ்தான் சார்’’ என்றேன். ‘`இல்ல... இல்ல... நீ சினிமாக்காரன். அதான் ஒரே டயலாக்கா பேசுறே’’ என்றார் அவர். ‘`இல்ல சார், நான் உண்மையைப் பேசுறேன்’’ எனச் சொன்னேன். ஒரு கட்டத்தில் என்னுடைய பதில்களைக் கேட்டு திருப்தியானவர்கள், ‘`கணக்கு வழக்கெல்லாம் சரியா வெச்சுக்கணும். பைன் கட்டிடுங்க’’ எனச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்.

இந்த ரெய்டு, விசாரணைகளைக் கேள்விப்பட்ட கலைஞர் உடனே ஆற்காடு வீராசாமியைக் கூப்பிட்டு ‘`தாணுக்கு என்னன்னு பாருங்க. நமக்குத் தெரிஞ்சவங்கிட்ட சொல்லி, அவருக்கு என்ன உதவி வேணுமோ பண்ணுங்கய்யா’’ என்றிருக்கிறார். ஆற்காடு வீராசாமி சில அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார். ‘தாணு மேல் எந்தத் தவறும் இல்லை’ என்று அதிகாரிகள் சொன்னதும், அதைக் கலைஞரிடம் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் கலைஞர் ஆறுதல் அடைந்திருக்கிறார்.

கலைஞர் வெற்றிபெற்றதும், தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் பாராட்டு விழா ஏற்பாடாகிறது. ஆனால், எனக்கு அழைப்பு இல்லை என்பதால் நான் போகவில்லை. விழா மேடையில் பேராசிரியர், ‘தாணு’ என்று என் பெயரைப் படிக்க, கலைஞர் சால்வையோடு காத்திருந்திருக்கிறார். ஆனால், நான் போகாததால் ‘`தாணு வரல, தாணு வரல’’ எனச் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

விழா முடிந்த சில மணி நேரத்தில் கலைஞரின் ஆலிவர் ரோடு வீட்டிலிருந்து போனில் என்னை ஆற்காட்டார் அழைத்தார். உடனே அங்கு போனேன். ‘`ஏன்யா, அவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு விழா நடத்துறோம். பேராசிரியர் பேர் படிக்கிறார். ஆனா, நீ வரலையேய்யா’’ எனக் கேட்டார் கலைஞர். ‘`எனக்கு அழைப்பிதழ் இல்லாம நான் எப்படி வர்றது தலைவரே’’ என நான் சொன்னதும், உடனே கலைஞர் திரும்பி ஆற்காட்டாரைப் பார்க்கிறார். ஆற்காட்டார் அறிவாலயத்துக்கு போன் அடித்து, ‘`ஜெயக்குமார், இன்விடேஷன் தாணுவுக்கு அனுப்பினீங்களா’’ எனக் கேட்கிறார். ‘`இல்ல, பேர் போட்டு எழுதி வெச்சிருந்தோம். நான் கொடுத்துக்குறேன்னு மாவட்டச் செயலாளர் வாங்கிட்டுப் போயிட்டார்’’ என அறிவாலயம் மேனேஜர் ஜெயக்குமார் சொல்கிறார். போனைக் காதில் வைத்தபடியே, ‘`அண்ணே! மாவட்டம் வாங்கிட்டுப் போனாராம்’’ என கலைஞரிடம் ஆற்காட்டார் சொன்னார். சின்ன யோசனையுடன் கலைஞர் தலையை ஆட்டும்போதே, இதற்குப் பின்னால் ஏதோ அரசியல் இருப்பதை இருவரும் உணர்கிறார்கள். உடனே ஆற்காட்டார் போனில், ‘`இனிமே எந்த விழா நடந்தாலும் ஆற்காடு வீராசாமின்னு பேர் எழுதும்போதே, இன்னொரு இன்விடேஷன்ல கலைப்புலி தாணுன்னு பேர் எழுதி என்கிட்டயே கொடுத்துடு. நான் அவருக்கு அனுப்பிடுறேன்’’ எனச் சொல்லிவிட்டு போனை வைத்தார். ஆற்காட்டார் மறுநாள் என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். அங்கே சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி செயலாளர்கள்,வட்டச் செயலாளர்கள் 200 பேருக்கு மேல் குழுமியிருக்கிறார்கள்.

படம் உதவி: ஜெயபாபு
படம் உதவி: ஜெயபாபு

அங்கே ஆளுயர மாலையை எனக்குப் போட்ட ஆற்காட்டார் என்னைப் பாராட்டிப் பேசினார். போட்டோக்கள் எடுத்து முடித்ததும் தனியாக அவருடைய அறைக்கு என்னை அழைத்துப் போய் ‘`நீ ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சா சொல்லு, கலைஞர் உடனடியா செய்து தருவார்’’ என்றார். ‘`எப்பவும் போல சினிமா இண்டஸ்ட்ரிக்கு நல்லது பண்ணுனா, எல்லோருக்குமே உதவியா இருக்கும்’’ எனச் சொல்லிவிட்டு வந்தேன்.

‘நல்லவன்’ நூறாவது நாள் விழாவுக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன். முதலமைச்சர் கலைஞரை வைத்து விழா நடத்த எல்லோரும் போட்டிப்போடுகிறார்கள். ஆனால் கலைஞரோ என்னை அழைத்து ‘`சொன்னபடி உனக்குத்தான்யா முதல் விழா... என்ன தேதி வேண்டும்’’ என்று கேட்கிறார். ‘`செகண்ட் சண்டே 12-ம் தேதி வருதுங்கய்யா... அந்த தேதியைக் கொடுத்துடுங்க’’ எனச் சொல்கிறேன். அதன்பின் ‘பெப்ஸிக்கு ஒரு விழா எடுக்க வேண்டும்’ என கேயார் டீம் ராதிகாவின் துணையோடு கலைஞரைப் போய்ப் பார்க்கிறார்கள். ‘`முதல் விழா தாணுவுக்குத்தான் என ஒப்புக்கொண்டிருக்கிறேன். அவர் விழாவை அடுத்து உங்களுக்குத் தேதி தருகிறேன்’’ என கலைஞர், அவர்களிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்கள் விடாமல் ‘`ஞாயிற்றுக்கிழமை அவருக்கு. அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள்’’ எனக் கேட்டிருக்கிறார்கள்.

கலைஞர் என்னை மீண்டும் வீட்டுக்கு அழைத்து, நிலைமையை எடுத்துச் சொல்லி, “உனக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கா, இல்லை, அவங்களுக்குத் தள்ளி டேட் கொடுக்கவா?’’ என்று கேட்டார். ‘`அவங்க விழா 11-ம் தேதி, நம்ம விழா 12-ம் தேதின்னே வெச்சிக்கலாம்’’ எனச் சொன்னேன். இப்படியெல்லாம் கலைஞர் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் கேட்டார். அதுதான் அவரின் பெருந்தன்மை.

‘நல்லவன்’ 100-வது நாள் விழா அழைப்பிதழை கலைஞரிடம் கொடுக்கிறேன். ‘`என்னய்யா, ராதிகா பேரே இல்லாம இன்விடேஷன் அடிச்சிருக்க. அவங்க பேர் இல்லாமலேயே போஸ்டர், பேப்பர் விளம்பரம்லாம் கொடுக்குற. அவங்க ரொம்ப ஃபீல் பண்றாங்கய்யா. இதெல்லாம் சரியா?’’ எனக் கேட்டார். ‘`தலைவரே... படம் 25-வது நாளைத் தாண்டி நல்லா ஓடிட்டிருந்த நேரத்துல விஜயகாந்தை எதிர்த்து தப்பா ஒரு பேட்டி கொடுத்தாங்க. அதனால படத்துக்கு லேடீஸ் கூட்டம் குறைஞ்சிடுச்சு. அதனாலதான் செகண்ட் ஹீரோயினை முன்னிலைப்படுத்தி போஸ்டர்லாம் அடிச்சேன்’’ எனச் சொன்னேன். `‘அவங்க போட்டோ போட்டு விளம்பரம் பண்ணுய்யா... எனக்காகப் பண்ணு. இப்ப இன்விடேஷன்ல அவங்க பேரைச் சேர்க்க முடியாதுன்னாலும், அவங்களை நேர்ல பார்த்து ஒரு இன்விடேஷன் கொடுத்துடு’’ எனச் சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.

அடுத்த நாள் காலையிலேயே இன்விடேஷன் எடுத்துக்கொண்டு ராதிகா வீட்டுக்குப் போனேன். ‘‘நூறாவது நாள் விழா நடக்குது. உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்கச் சொல்லி கலைஞர் சொன்னாரு. அதான்மா வந்தேன்’’ எனச் சொன்னேன். ‘`இந்தப் படத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு என்னைக் கூப்பிடுறீங்க?’’ என ராதிகா கேட்க, ‘`நீங்கதான் ஹீரோயினா நடிச்சீங்க. இப்ப கலைஞரும் உங்களைக் கூப்பிடச் சொல்லி சொன்னார். அவர் தலைமையிலதான் விழா நடக்குது’’ எனச் சொன்னேன். உடனே “கலைஞர் எப்படி வர்றார்னு நான் பார்க்குறேன்’’ என்று சவால் விடும் தொனியில் ராதிகா சொன்னார். ‘`நீ என்ன வேணா சொல்லும்மா... ஆனா, விழா நிச்சயமா நடக்கும்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டேன். கலைஞருக்கு உடனே போன் அடித்து நடந்ததைச் சொன்னேன். “அதையெல்லாம் கண்டுக்காதய்யா... அவங்களுக்கு வருத்தம் இருக்கும்யா’’ எனச் சொன்னார்.

ஆனால், விழா நடக்கும் நாள் அன்று, கலைஞர் குடும்பத்தில் இருக்கும் ஆட்களை எல்லாம் துணைக்கு வைத்துக்கொண்டு ‘நல்லவன்’ விழாவுக்கு கலைஞர் போகக்கூடாது என முட்டுக்கட்டை போடுகிறார் ராதிகா. ‘காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடச் சொன்ன ராவுத்தருக்கு நெருக்கமான விஜயகாந்த்தின் பட விழாவுக்கு நீங்கள் ஏன் போகவேண்டும்?’ என்பதுதான் அவர்களின் கேள்வியாக இருந்தது. கலைஞரோ, ‘`நீங்கள் சொல்பவர்களுக்காக எல்லாம் நான் போகவில்லை. நான் தாணுவுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். கட்டாயம் விழாவில் கலந்துகொள்வேன்’’ என்று சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார்.

உண்மைகள் சொல்வேன்! - 5

12 அமைச்சர்கள் புடைசூழ கலைஞர் விழாவுக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தார். விழாவில் முதலில் பேசிய முரசொலி மாறன் ‘`நேற்று அடித்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல தாணு. கலைஞர் வெற்றிபெற்றதால் இந்த விழாவை அவர் கலைஞரை வைத்து நடத்துகிறார் என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கலைஞர் தோற்றிருந்தாலும் கலைஞரை வைத்துத்தான் தாணு விழா நடத்தியிருப்பார். வெற்றிபெற்றால் நாயக்கர் குதிரையென்றும், தோல்வியடைந்தால் ராவுத்தர் குதிரையென்றும் சொல்பவர் அல்லர். இன்று நேற்றல்ல, 25 ஆண்டுகளாக கலைஞர் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர் தாணு’’ என்று ராவுத்தரையும், விஜயகாந்த்தையும் வார்த்தை விளையாட்டால் ஒரு தட்டு தட்டிவிட்டுப் போனார்.

இறுதியாகக் கலைஞர் பேசினார். ‘`தாணு என்றால் என்ன? இந்த மேடையில் சிறிது நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன். தாய்மார்கள் சோறு பரிமாறும்போது குழம்பு ஊற்றுவார்கள். அப்போது வெறும் குழம்பாக இருந்தால் ‘ஏன் தாணு இல்லையா?’ என்று கேட்பார்கள். தாணு என்றால் கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கீரை வகைகள் என அர்த்தம். ஒரு குழம்பில் தாணு இல்லையென்றால் அந்தக் குழம்பு எப்படி சுவைக்காதோ, மணக்காதோ, அப்படி இந்தக் கலையுலகிலே என் தம்பி தாணு இல்லையென்றால் கலையுலகம் செழிக்காது, மணக்காது’’ என்று பேசினார். 89-ல் கலைஞர் சொன்னதை மெய்ப்பிப்பதுபோல் என்னுடைய பயணம் இவ்வளவு வருடங்களாக இந்தத் திரையிலகில் நீடித்து நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. அவருடைய வாழ்த்தெல்லாம் சாதாரணமானதாக இருக்காது என்பதற்கு இது ஒரு சான்று.

தயாரிப்பாளரான நான் அடுத்து இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என எல்லாமுமாக மாறினேன். என் இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்க ‘தெருப்பாடகன்’ படம். ‘தெருப்பாடகன்’ எப்படி ‘புதுப்பாடகன்’ ஆனது, விஜயகாந்த்துக்கும் எனக்கும் இருந்த நட்பு, கலைஞரோடு இவ்வளவு நெருக்கமாக இருந்த நான் எப்படி வைகோவோடு போய்ச் சேர்ந்தேன்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...