மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 6

உண்மைகள் சொல்வேன்
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்

- கலைப்புலி எஸ்.தாணு

படம் உதவி: ஞானம்

சினிமா மீதிருந்த அதீத ஆர்வம் என்னைப் பல்வேறு தளங் களுக்குக் கொண்டுசென்றது. திரைப்பட விநியோகஸ்தனாக சினிமாவுக்குள் நுழைந்து, பின்னர் தயாரிப்பாளரானாலும் என்னுடைய கனவெல்லாம் சினிமா இயக்குவதன் மீதுதான் இருந்தது. கதை விவாதத்தில் பங்கேற்பது, திரைக்கதைகள் படிப்பது, இசையமைப்புப் பணிகளில் கலந்துகொள்வது, பாடல்கள் எழுதும்போது கூடவே இருந்து கவனிப்பது என ஒரு சினிமா உருவாகும்போது அது சம்பந்தப்பட்ட அத்தனை வேலைகளிலும் என்னை முழுமனதோடு ஈடுபடுத்திக்கொள்வேன். அந்த ஆர்வமும் ஈடுபாடும் என்னை இயக்குநர் ஆக்கியது. இயக்குநராக்கி அழகுபார்த்தவர் விஜயகாந்த்.

உண்மைகள் சொல்வேன்! - 6

‘கூலிக்காரன்’ முடிந்ததுமே ‘நல்லவன்’ படத்துக்கு தேதிகள் கொடுத்தார் விஜயகாந்த். அப்போது ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’ என விஜயகாந்த்தை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த அரவிந்த்ராஜ்தான் ‘நல்லவன்’ படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது. கதை எழுதுவதற்காக அவருக்கு பாம்குரோவ் ஹோட்டலில் ரூம் போட்டுக்கொடுத்திருந்தேன். அவர் ‘தாய்நாடு’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். ராணுவப் பின்னணி கொண்ட இத்தகைய கதைகள் அப்போது பெரிதாக எடுபடாத நேரம் என்பதால் அவரிடம் நான் வேறு கதை சொல்லுமாறு கேட்டேன். ஆனால், கதை சொல்லத் தாமதமாகிக்கொண்டே வந்தது. விஜயகாந்த் எனக்குக் கொடுத்த தேதியும் நெருங்கிவிட்டது. அந்தநேரத்தில் விஜயகாந்த் ராவுத்தரிடம், ‘` ‘கூலிக்காரன்’ ஷூட்டிங் நடக்கும்போது, பிரேக்ல தாணு சார் நிறைய சீன் சொல்லுவார். அவர்கிட்ட ஏதும் கதையிருக்கான்னு கேட்டுப்பாரு’’ எனச் சொல்லியிருக்கிறார். ராவுத்தர் என்னிடம் ‘`அண்ணே, விஜிகிட்ட நீங்களே நிறைய கதை சொல்லுவீங்களாமே. உங்ககிட்டயே கதை கேட்க சொல்லுச்சுண்ணே. டைம் வேற ஆகிடுச்சு. நீங்களே பண்ணிடுங்க’’ என்றார். உடனே அடுத்தநாள் காலையில் விஜயகாந்த்தைப் போய்ப் பார்த்து ‘காடுவெட்டி’ என ஒரு கதை சொன்னேன். ‘`கதை நல்லா கமர்ஷியலா இருக்கு’’ என்றார். ஆனால், அரவிந்த் ராஜோ ‘`நான் ஏற்கெனவே எடுத்த ‘உழவன் மகன்’ கதைபோல இருக்கிறது. மக்கள் அந்தப்படத்தையும் இதையும் ஒப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்’’ என்றார். அடுத்தநாள் ராவுத்தரைச் சந்தித்து ‘தெருப்பாடகன்’ கதையைச் சொன்னேன். ராவுத்தருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘`சூப்பர்ணே, உடனே பண்ணிடலாம்’’ என்றவர், விஜயகாந்த்துக்கு போன் அடித்து ‘`தாணு சார் சொன்ன கதையையே பண்ணிடலாம் விஜி’’ என்றார். மீண்டும் அரவிந்த்ராஜிடம் கதையைச் சொல்லச்சொன்னார்கள். ‘`கதை ரொம்ப நல்லாருக்கு சார். ஆனால், என்னுடைய குரு ஆபாவாணன் ‘இரவுப்பாடகன்’ என ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் நான் ‘தெருப்பாடகன்’ எனப் படமெடுத்தால் அது குரு துரோகம்போல ஆகிவிடும். அதனால், நான் பண்ணல சார்’’ என்றார். உடனே ராவுத்தரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘`அண்ணே, இந்தக் கதையை வேற எங்கயும் கொடுத்துடாதீங்க. ‘தெருப்பாடகன்’ கதையை நிச்சயமா நாம பண்ணலாம்’’ என்றார். இதற்கடுத்த நாள் ‘நல்லவன்’ படத்தின் கதையை விஜயகாந்த்திடம் போய்ச் சொல்ல, ‘`நிச்சயமா ஹிட்டுண்ணே’’ என்றவர் ‘`இந்தக் கதையை அரவிந்த்ராஜ் கிட்ட சொல்லுங்க. அவர் சரிவரலைன்னா வேற இயக்குநர்கிட்ட போய்டலாம்’’ என்றார். அரவிந்த்ராஜுக்கு அந்தக் கதை பிடித்துப்போனதால் படம் இயக்கச் சம்மதித்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 6

ஆனால், அடுத்தநாள் அதே அரவிந்த்ராஜ், ‘`என் சொந்தக் கதையை சத்யராஜை வெச்சு ‘தாய்நாடு’ன்னு படமா பண்றேன். அதனால, இந்தப்படம் என்னால் பண்ண முடியாது’’ என விலகிவிட்டார். இதன்பிறகுதான் எஸ்.பி.முத்துராமனைச் சந்தித்து ‘காடுவெட்டி’ கதையும், ‘நல்லவன்’ கதையும் சொன்னேன். ‘` ‘காடுவெட்டி’ கிராமத்துக்கதையா இருக்கு. ‘நல்லவன்’ ஜாலியா, பேமிலி கதையா இருக்கு’’ என எஸ்.பி.எம் சொன்னார். இந்தப்படத்துக்காக இரண்டு பாடல்களை நானே எழுதி கம்போஸ் செய்துவைத்திருந்தேன். அதை அவரைக் கேட்கச் சொன்னேன். கேட்டவர் ‘`நல்லா இருக்கு... ஆனா, எனக்கு சென்ட்டிமென்ட்டா எப்பவும் சந்திரபோஸ்தான் பண்ணிட்டு வர்றார். அதனால், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மட்டும் நீங்க பண்ணுங்க’’ என எனக்குப் படத்தில் பல உரிமைகள் கொடுத்தார்.

உண்மைகள் சொல்வேன்! - 6

‘நல்லவன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை விஜயகாந்துக்கு ஒரு சினிமாப் பத்திரிகை கொடுத்தது. அதைக் கொண்டாடுவதற்காக அன்று இரவு நான் அடையாறு பார்க் ஓட்டலில் ஒரு விருந்து வைத்தேன். இதன்பிறகு விஜயகாந்த் ‘`அடுத்த படமா ‘தெருப்பாடகன்’ ஆரம்பிச்சிடலாம்ணே... நீங்களே டைரக்ட் பண்ணிடுங்க’’ என்றார். அப்படித்தான் ‘தெருப்பாடகன்’ படத்தின் இயக்குநர் ஆனேன். ஹீரோயின் அமலா. படத்துக்கு நான்தான் இசையமைப்பாளர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது விஜயகாந்துக்குத் திருமணப்பேச்சுக்கள் முடிந்து பிரேமலதா மணப்பெண் என்று முடிவாகி விட்டது. முதலமைச்சர் கலைஞர் தலைமையில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென விஜயகாந்த் விரும்ப, கலைஞரைப்போய் ஆலிவர் சாலை இல்லத்தில் சந்தித்து விஷயத்தைச் சொன்னேன்.

‘`யோவ் என்னய்யா சொல்ற... வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கறதா கேள்விப்பட்டனே... ’’ என்றார்.

உண்மைகள் சொல்வேன்! - 6

‘`ஐயா, விஜயகாந்த் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர். எனக்கு மூணு படம் கொடுத்திருக்கார். என்னை டைரக்டர் ஆக்கியிருக்கார். எனக்காக நீங்க இதைப் பண்ணணும்’’ என்றேன். ‘`சரி ரெண்டு நாள் டைம் கொடுய்யா’’ எனச் சொல்லிவிட்டு என்னை அனுப்பிவைத்தார். கலைஞர் சொன்னதை விஜயகாந்த்திடம் போய்ச் சொன்னேன். ‘`அண்ணே, கலைஞர் சொல்றதெல்லாம் உண்மைதான். ஆனா, அதுக்கு அப்புறம் சில சம்பவம் நடந்துபோச்சு. கலைஞர்கிட்ட சொல்லுங்க’’ என்று சொன்ன விஜயகாந்த் என்னிடம் இரண்டு சம்பவங்களையும் சொல்லி அனுப்பினார். கலைஞரிடம் போய்ச் சொன்னேன்.

‘`சரிய்யா... நாளைக்குக் காலைல 8 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுய்யா’’ என்றார். அடுத்தநாள் காலை விஜயகாந்த்தையும், ராவுத்தரையும் அழைத்துக்கொண்டு கலைஞர் வீட்டுக்குப்போனேன். திருமணத்தை மதுரையில் நடத்தவிருப்பதாகச் சொல்லி நான்கு தேதிகள் சொன்னார்கள். ‘‘இந்த நான்கு தேதில உங்களுக்கு என்ன தேதியா வேணும்’’ எனக் கலைஞர் கேட்டார். அவர்கள் சொன்ன தேதியையே ஓகே சொல்லி ‘`வெச்சிடுங்கய்யா... வரேன்’’ என்றார் கலைஞர்.

பேசிவிட்டு கீழே இறங்குகிறோம். ராவுத்தர் என்னிடம் ‘`மூப்பனாரைக் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா நல்லாருக்குமே. கலைஞர்கிட்ட ஒரு வார்த்தை கேளுங்களேன்’’ என்கிறார். திரும்பவும் மேலே ஓடினேன். ‘`இப்ப என்னய்யா?’’ என்றார். ‘`இல்லையா... மூப்பனார் பேரை பத்திரிகைல போட்டுக்கலாமான்னு கேட்குறாங்க’’ என்றேன். ‘`நான் விரும்புற தலைவர்யா... போட்டுக்கச்சொல்லுயா’’ என்றார். விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் மதுரையில் கலைஞர் தலைமையில் பிரமாண்டமாக நடந்தது.

உண்மைகள் சொல்வேன்! - 6

திருமணம் முடிந்த சில மாதங்களில் ‘தெருப்பாடகன்’ ஷூட்டிங்கை எல்லாம் முடித்து இசைவெளியீட்டு விழா நடத்தத் தயாரானேன். நானே இயக்குநர், இசையமைப்பாளர் என்பதால் விழாவை வெகுவிமரிசையாக நடத்தவேண்டும் என முடிவெடுத்தேன். பிரமாண்ட விழா எனும்போது கலைஞர்தானே தலைமை தாங்கவேண்டும்?! கலைஞரைப் போய்ப் பார்த்தேன்.

‘`யோவ்... ஒரு முதலமைச்சரை வெற்றிவிழாவுக்குக் கூப்பிட்டா ஓகே. நீ என்னய்யா ஆடியோ ரிலீஸுக்குலாம் கூப்பிடுறே’’ என்று சிரித்தார். ‘`நீங்க ஆடியோ ரிலீஸுக்கு வந்தாதான்யா எனக்குப் பெருமை. ஒரு முதலமைச்சரையே வரவெச்ச பேர் எனக்குக் கிடைக்குமில்லையா’’ என்றேன். சம்மதித்துப் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தார். வள்ளுவர் கோட்டத்தில் விழா. விஜயகாந்த் படப் பாடல்களை கலைஞர் வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொள்கிறார் என்பதுதான் விழாவின் மையம்.

வள்ளுவர் கோட்டம் முன்பு கலைஞருக்கு 50 அடி, ரஜினிகாந்த், விஜயகாந்துக்கு 45 அடியில் கட் அவுட் வைத்தேன். ரஜினி ரசிகர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் ஒருபக்கம் என்றால், தி.மு.க தொண்டர்கள் மறுபக்கம் குவிந்துவிட்டார்கள். ‘தெருப்பாடகன்’ படப்பாடல்களை கலைஞர் வெளியிடுகிறார், ரஜினிகாந்த் வாங்குகிறார். கலைஞர், ரஜினிகாந்த், விஜயகாந்த் என மூன்று பேரும் மேடையில் இருந்த இந்த விழாவை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. விழாவில் கலைஞர், ரஜினி இருவருமே மிகச்சிறப்பாகப் பேசினார்கள்.

விழா நடந்த அடுத்தநாள் கலைஞர் வி.பி.சிங்கிற்காகத் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டார். நான் வள்ளுவர் கோட்டத்தில் வைத்த கட் அவுட் பெருமழை காரணமாக அங்கேயிருந்த அண்ணாவின் சிலைமீது விழுந்து உடைந்துவிட்டது. ‘`என்னய்யா, கலைஞர் இல்லாத நேரத்துல இப்படி ஆகிப்போச்சு. கட் அவுட் விழுந்து உடைஞ்சது கலைஞருக்குத்தானே கெட்ட பெயர்’’ என டி.ஆர்.பாலு சொல்ல, சிலையைச் சரிசெய்து கட்டினேன். இன்றுவரை சிலை உறுதியாக இருக்கிறது.

பாடல் வெளியீடு முடிந்ததும் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் ஒருவர் விஜயகாந்த்தையும், ராவுத்தரையும் நேரில் அழைத்து, ‘`டி.ஆர்.மகாலிங்கம் ‘தெருப்பாடகன்’ற படத்துல நடிச்சுத்தான் தெருவுக்கு வந்தார். அதனால விஜி, தாணுகிட்ட சொல்லி ‘தெருப்பாடகன்’ற பேரை மாத்திடு’’ எனச் சொல்லியனுப்பியிருக்கிறார். ராவுத்தர் என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். ‘`எனக்கு நட்புதான் முக்கியம். விஜயகாந்த் எப்பவும் நல்லாருக்கணும்னு நினைக்கிறவன் நான். அதனால நாம டைட்டிலை மாத்திடலாம். நீங்களே ஒரு டைட்டில் சொல்லுங்க’’ என்றேன். அப்போது ராவுத்தர் சொன்னதுதான் ‘புதுப்பாடகன்.’

விஜயகாந்த், ராவுத்தர் எல்லோரும் வந்து படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்தார்கள். அந்த இசையமைப்பாளர் சொன்னதில் இருந்து படத்தில் சென்ட்டிமென்ட் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், தெருவுக்கு வரும்படியான ஓப்பனிங் காட்சி, க்ளைமாக்ஸ் காட்சி எனச் சிலவற்றையெல்லாம் மாற்றச்சொன்னார்கள். மாற்றி ரிலீஸ் செய்தேன். படம் 100 நாள் ஓடியது. ஆனால், வியாபார ரீதியாக எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.

‘புதுப்பாடகன்’ பட இழப்பில் இருந்து எப்படி மீண்டேன், ஏன் மீண்டும் விஜயகாந்த்துடன் இணையவில்லை, வைகோவுடன் இணைந்தது எப்படி... வரும் வாரங்களில் சொல்கிறேன்.

- வெளியிடுவோம்...