சினிமா
தொடர்கள்
Published:Updated:

சேத்துமான் - சினிமா விமர்சனம்

சேத்துமான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சேத்துமான் - சினிமா விமர்சனம்

பூச்சியாக நடித்திருக்கும் மாணிக்கம் அச்சு அசல் எளிய கிராமத்து மனிதராய் நம் முன் தோன்றி நடிப்பில் தேர்ந்த கலைஞராய் கண்களை நிறைக்கிறார்.

`அசைவம்' என்பதோடு நியாயமாய் முடிந்துவிட வேண்டிய உரையாடல், `அசைவத்துல என்ன?' என்பதாய் வளர்ந்து, பாகுபாடு காட்டும் அரசியலை உரக்கப் பேசியிருக்கிறது இந்த `சேத்துமான்.'

மாட்டுக்கறியினால் நிகழும் கலவரத்தில் ஆதிக்க சாதியினருக்கு தன் மகனையும் மருமகளையும் பறிகொடுக்கிறார் பூச்சி. பேரன் குமரேசனின் பாதுகாப்பு கருதி அவனைத் தூக்கிக்கொண்டு வேறு ஊருக்கு வந்து ஒதுக்குப்புறமாகக் குடிசை போட்டு, கூடை பின்னியும் கூடவே பண்ணையார் வெள்ளையனின் வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்வதுமாய் வாழ்க்கை நடத்துகிறார்! வெள்ளையனுக்குப் பன்றிக்கறி சாப்பிடவேண்டும் என ஆசை வருகிறது. கூட்டுக்கு ஆள் சேர்க்க ஊரில் ஒவ்வொருவரிடமாகப் பேசிக் கூட்டம் தேற்றுகிறார். பன்றியை வாங்கி வந்து சமைக்கும் பொறுப்பு பூச்சி தலையில் விழுகிறது. அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள்தான் மீதிக்கதை.

சேத்துமான் - சினிமா விமர்சனம்

பூச்சியாக நடித்திருக்கும் மாணிக்கம் அச்சு அசல் எளிய கிராமத்து மனிதராய் நம் முன் தோன்றி நடிப்பில் தேர்ந்த கலைஞராய் கண்களை நிறைக்கிறார். பல்லாண்டுகளாய் ஒடுக்கப்பட்டு உடலிலேயே தேங்கிப் போய்விட்ட கூனலும் அதனாலேயே ஆங்காங்கே வெளிப்படும் ரோஷமுமாய்... கச்சிதம். வெள்ளந்தித்தனத்திற்கும் வாஞ்சைக்குமான அர்த்தமாய் சிறுவன் அஸ்வின் சிவா.

வேண்டிய மட்டும் சேர்த்துக்கொண்டு மற்ற விஷயங்களில் விலக்கி வைக்கும் ஆதிக்கச் சாதியின் எடுத்தாளும் குணத்தை மிகச்சரியாகத் தன் நடிப்பினால் நிறுவுகிறார் பிரசன்னா பாலசந்திரன். ரங்கனாய் வரும் அருள்குமார் பேசும் அரசியல் வசனங்கள் கூர்மை. துடுக்கும் திமிரும் கலந்த கிராமத்து அம்மாளாய் கதைக்குப் பங்களித்து கவனிக்க வைக்கிறார் செ. சாவித்திரி.

கொங்கு நிலப்பரப்பின் பசுமையைத் தாண்டி கதையில் நிலவும் வெறுமையை வலியோடு பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா. ஒன்றிரண்டு இடங்களில் பிந்து மாலினியின் இசை பாரமேற்றுகிறது.

பெருமாள் முருகனின் இரண்டு கதைகளை சினிமாவுக்கேற்ற மொழியில் மாற்றி அதே சமயம் கதையினூடே ஓடும் சமூகப் பகடி, உணவு அரசியல் ஆகியவற்றின் சாரமும் குறைந்துவிடாமல் கவனமாய்க் கையாண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ்.

சேத்துமான் - சினிமா விமர்சனம்

மானம், மரியாதை என்றெல்லாம் பேசி அடித்துக்கொண்டு ஒரு கூறு கறிக்காக ஒன்றுசேரும் பங்காளிகள், மாட்டுக்கறி உண்பவர்களைப் பழித்துக்கொண்டே பன்றிக்கறிக்காக ஊர் ஊராய்த் திரியும் நிலக்கிழார்கள் என நாம் நிஜத்தில் பார்த்துவிடமுடிகிற மனிதர்கள் படத்திற்குள்ளும் இருப்பதுதான் பெரும்பலம். காலங்காலமாய் ஆள்பவர்கள், அதிகாரத்திலிருப்பவர்கள் ஆகியோரின் வீம்புக்கு எளியவர்கள் பலியாகும் நிஜத்தையும் சமரசமில்லாமல் பேசுகிறார் இயக்குநர்.

கதையும் அது நிகழும் காலமும் ஒட்டாமல் இருக்கும் அந்நியத்தன்மை, நீளத்திற்காகச் சேர்க்கப்பட்ட காட்சிகள் போன்ற குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் `சேத்துமான்', இறைச்சி அரசியலைப் பேச முனையும் ஒரு நன்முயற்சி.