Published:Updated:

```சேது'வுக்குப் பிறகு`சிட்டிசன்' வாய்ப்பை மிஸ் பண்ணேன்; வெள்ளத்தால் `நட்பே துணை' வாய்ப்பை இழந்தேன்!'' - அபிதா

பாலாவின் `சேது’ படத்தில் ‘அபித குஜலாம்பாள்’ கேரக்டர் மூலம் தனது பாந்தமான நடிப்பை வழங்கி கவனம் ஈர்த்த அபிதாவுடன் பேசியதிலிருந்து...

Published:Updated:

```சேது'வுக்குப் பிறகு`சிட்டிசன்' வாய்ப்பை மிஸ் பண்ணேன்; வெள்ளத்தால் `நட்பே துணை' வாய்ப்பை இழந்தேன்!'' - அபிதா

பாலாவின் `சேது’ படத்தில் ‘அபித குஜலாம்பாள்’ கேரக்டர் மூலம் தனது பாந்தமான நடிப்பை வழங்கி கவனம் ஈர்த்த அபிதாவுடன் பேசியதிலிருந்து...

``நடிகை ஆனது எப்படி?"

``நான் பிறந்து, வளர்ந்தது சென்னை திருவொற்றியூர். ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருந்தப்போ எங்க வீட்டுக்குப் பக்கத்துல ‘நான்சி’னு ஒரு சீரியல் ஷூட்டிங் நடந்துகிட்டிருந்தது. அதை நான் ஆர்வமா வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ எங்கிட்ட இருந்த துறுதுறுப்பையும் ஆர்வத்தையும் கவனிச்ச அந்த சீரியல் டைரக்டர் என்னை அவங்களோட அடுத்த சீரியலான ‘கிரிமினல்ஸ்’ல தங்கை கேரக்டர்ல நடிக்கக் கேட்டார், நானும் நடிச்சேன். அதுக்கப்புறம் ‘பிறந்த நாள்’ போன்ற சில படங்கள்ல தங்கை ரோல், செகண்ட் ஹீரோயின் ரோல்ல நடிச்சேன்."

Abitha
Abitha

`` `சேது’ வாய்ப்பு எப்படி வந்தது?"

``இப்படிச் சின்னச் சின்ன ரோல்ல நடிச்சுக்கிட்டிருந்தப்போ, எங்கேயோ யதார்த்தமா என் போட்டோவைப் பார்த்த பாலா சார், என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். சில சீன்களைச் சொல்லி நடிக்கச் சொன்னாங்க, நானும் நடிச்சுக் காட்டினேன். கூடவே ‘சேது’வுல வர்ற ‘சரணம் பவா’ பாட்டையும் போட்டு நடிச்சுக்காட்டச் சொன்னாங்க. டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. ஆனா, ‘ஸாரி' சொல்லி அனுப்பி வெச்சுட்டார், பாலா சார். ‘சரி, இந்த வாய்ப்பு நமக்கில்ல'னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

இந்தப் படத்துல முதல்ல கீர்த்தி ரெட்டிங்கிற நடிகை நடிக்கிறதா இருந்தாங்க. பிறகு, சிந்துஜா மேனன்ங்கிற மலையாள நடிகை கமிட் ஆனாங்க. ஆனா, பாலா சார் என்ன நினைச்சாரோ தெரியல. திரும்ப என்னைக் கூப்பிட்டு 'நீயே நடி'னு சொன்னாங்க. பாலா சார், ‘நீதான்மா இந்தக் கேரக்டருக்கு சரியா இருப்ப'னு சொன்னது, இப்போவரைக்கும் நல்லா ஞாபகத்துல இருக்கு. யார் யாருக்கோ கை மாறி, கடைசியில எனக்கே அந்த வாய்ப்பு வந்தது, மறக்க முடியாதது."

``உங்களை வெச்சு முதல்ல எந்தக் காட்சியைப் படமாக்குனாங்க?"

``படத்தைக் ‘கான கருங்குயிலே’ பாட்டுல இருந்துதான் ஷூட் பண்ணாங்க. அந்த ஒரு வாரமும் எனக்கு எந்த வேலையும் இல்லை. தினமும் ஸ்பாட்டுக்குப் போய் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டிருப்பேன். அதுக்கப்புறம்தான் ‘மயிலிறகு’ காட்சியைப் படமாக்குனாங்க. தொடர்ந்து வரிசையா காதல் காட்சிகளையெல்லாம் ஷூட் பண்ணாங்க. என்னைக் கடத்திட்டுப் போய் விக்ரம் காதலைச் சொல்ற காட்சியை மட்டும் நாலு நாள் எடுத்தாங்க.

பொதுவா ஒவ்வொரு காட்சியை எடுத்து முடிச்சதும், பாலா சார் போட்டுப் பார்ப்பார். அப்போ அவர்கிட்ட, 'எப்படி நடிச்சிருக்கேன் சார்'னு கேட்டுக்கிட்டே இருப்பேன்; அவர் 'ம்ம்.. நல்லாயிருக்குமா'னு சொல்லிட்டுப் போயிடுவார். ஆனா, இந்தக் காட்சியைப் பார்த்துட்டு, 'சாவித்திரியே தோத்துட்டாங்க போ'னு சொன்னார். சந்தோஷத்துல எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. ஏன்னா, பாலா சார் வாயில இருந்து அப்படி ஒரு வார்த்தை வர்றது அபூர்வம்."

Abitha
Abitha

"எந்த சீன்ல நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டீங்க?"

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எல்லாமே ஈஸியாதான் இருந்தது. ஆனா, ஒரே ஒரு சீன்தான் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. க்ளைமாக்ஸ்ல நான் செத்துக்கெடக்கிற சீனை முந்தைய நாள் சாயுங்காலத்துல இருந்து மறுநாள் விடியற்காலை வரைக்கும் எடுத்தாங்க. எனக்கு மாலைபோட்டு, முகத்துல ஈ உட்கார்ற மாதிரி செட் பண்ணிப் படுக்க வெச்சுட்டாங்க. என்னைச் சுத்தி எல்லோரும் அழுது புரண்டு நடிச்சுக்கிட்டிருக்காங்க. எனக்கோ, ரொம்ப டயர்டா இருந்தது. என்னை அறியாமலேயே நான் தூங்கிட்டேன். விடியற்காலையில ஷூட் முடிஞ்சதுனு சொல்லி எழுப்புனப்போதான், நான் தூங்கிட்டதையே உணர்ந்தேன்."

எங்க அம்மாகிட்ட, 'இந்தப் படமே வேணாம்; போலாம்’னு சொல்லிட்டேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்துன பிறகு, பாலா சார்கிட்ட நானே போய் மன்னிப்பு கேட்டேன்.
அபிதா

``பொதுவா, இயக்குநர் பாலா நடிகர்களைத் திட்டுவார், அடிப்பார்னு சொல்வாங்க. உங்களுக்கு அந்த மாதிரி ஏதும் அனுபவம் இருக்கா?"

``ஒரேயொரு முறை அப்படி நடந்தது. படத்துல நான் அறிமுகமாகுற `சரணம் பவா’ பாட்டுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்க மாஸ்டர் அங்கே இல்லை. எனக்கு முறைமாமனா நடிச்ச மோகன் வைத்யாதான் அப்போ டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். சினிமாவுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் எதையும் செஞ்சுக்காமதானே ஷூட்டிங் வந்தேன்... அதனால, அவர் கத்துக்கொடுக்கிற மூவ்மென்ட்ஸை நான் உடனே ஆட முடியல. பாலா சார் செம கோபமாகி திட்டிட்டார். எனக்குக் கஷ்டமா போச்சு. உடனே எங்க அம்மாகிட்ட, 'இந்தப் படமே வேணாம்; போலாம்’னு சொல்லிட்டேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்துன பிறகு, பாலா சார்கிட்ட நானே போய் மன்னிப்பு கேட்டேன். அதுக்கப்புறம் நான் சுதாரிச்சுக்கிட்டேன். எதுவா இருந்தாலும் முன்கூட்டியே அவர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, அதுக்குத் தயாரா இருக்கக் கத்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, பாலா சார் என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணார்."

அபிதா குடும்பத்துடன்...
அபிதா குடும்பத்துடன்...

"விக்ரம்கூட நடிச்ச அனுபவம்?"

``அவரோட நடிப்பைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நடிப்புன்னு இல்ல, மேக்கப் தொடங்கி வசனங்கள் வரை... அந்த கேரக்டருக்கான எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்வார். கூட நடிக்கிறவங்களோட கேரக்டர் மேலேயும் அக்கறை எடுத்துப்பார். திடீர்னு எல்லோருக்கும் சாப்பாடு பரிமாற ஆரம்பிச்சிடுவார். திடீர்னு கேமரா டீம்ல இருக்கிறவங்களுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டிருப்பார். படத்துக்காக இப்படி நிறைய மெனக்கெட்டார்."

`படம் நல்லாயிருக்கு; க்ளைமாக்ஸ் சரியில்லை. படம் ஓடாது'னு என் காதுபடவே சிலர் சொன்னாங்க.
அபிதா

`` `சேது’ இவ்வளவு பெரிய ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா?"

``நான் கமிட் ஆகுறப்போ, என் கேரக்டர் ஒரு பிராமணப் பொண்ணு அப்டீங்கிற விஷயத்தைத் தாண்டி வேற எதையும் சொல்லல. அதனால, எனக்கு கதை பற்றியும், க்ளைமாக்ஸ் பற்றியும் அப்போ தெரியாது. ஆனா, பாலா சார் மனசுல எட்டு வருடமா இருந்த கதை இதுனு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். அவர் மனசுல இருந்த அந்தக் கதையை அவர் பார்த்துப் பார்த்து எடுத்தப்போதான் எனக்குக் கதையே புரிய ஆரம்பிச்சது. யாருக்குமே அவங்க நடிக்கிற ஒரு படம் நல்லா ஓடணும்னுதான் ஆசை இருக்கும். நான் ஹீரோயினா நடிக்கிற முதல் படம் இது. அதனால, அந்த நினைப்பு எனக்குக் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. ஆனா, ‘படம் நல்லாயிருக்கு; க்ளைமாக்ஸ் சரியில்லை. படம் ஓடாது'னு என் காதுபடவே சிலர் சொன்னாங்க. அதே மாதிரி, படமும் பிசினஸ் ஆகாம கொஞ்சம் லேட் ஆகிட்டிருந்தது. அப்போல்லாம் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்.

ஆனா, பாலா சார் 'சேது' மேல ரொம்ப நம்பிக்கையா இருந்தாரு. ஒரு வழியா, ரொம்பக் கம்மியான தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆச்சு. சென்னை தி.நகர்ல இருக்கிற கிருஷ்ணவேணி தியேட்டர்ல இந்தப் படம் வந்தது. முதல் வாரம் ரெஸ்பான்ஸ் இல்லை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்தப் படத்தைப் பற்றிய டாக் வந்தது. கூடவே, அந்த வார ஆனந்த விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகள்ல படத்தைப் பற்றி ரொம்ப பாசிட்டிவா விமர்சனங்கள் வந்தது. அதுக்குப் பிறகுதான் படம் நல்லா பிக்கப் ஆச்சு. அதுக்கப்புறம் என்ன நடந்ததுனு எல்லோருக்கும் தெரியும். எனக்கு இளையராஜா சாரோட இசைன்னா உயிர். அவர் மியூசிக் பண்ண படத்துல நான் நடிச்சதே பெரிய பாக்கியம்னு நினைச்சுக்கிட்டேன். தவிர, படத்தை அவர் பாராட்டுனதும் மறக்க முடியாத விஷயம்."

திருமதி.செல்வம்
திருமதி.செல்வம்

`` `சேது’ மூலமா கிடைச்ச புகழை விக்ரமும் பாலாவும் தக்கவெச்சுக்கிட்ட மாதிரி, உங்களால ஏன் முடியல?"

``நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்துல பிறந்து வளர்ந்த பொண்ணு. தவிர, அந்தச் சமயத்துல எனக்கு வயசும் ரொம்பக் கம்மி. என்னை வழிநடத்த சரியான ஆள் அப்போ இல்லை. ஒரு நல்ல மேனேஜர், பி.ஆர்.ஓ அமையல. ‘சேது’ படத்துக்குப் பிறகு எனக்குத் தொடர்ந்து நிறைய பல வாய்ப்பு வந்தது. ஆனா, எதைத் தேர்ந்தெடுக்கணும்; எதைத் தவிர்க்கணும்னு தெரியல. தொடர்ந்து சில மோசமான படங்கள்ல நடிச்சுட்டேன். 'சிட்டிசன்’ல ஃபிளாஷ்பேக்ல வர்ற அஜித் கேரக்டருக்கு ஜோடியா நடிக்க என்னைத்தான் முதல்ல அப்ரோச் பண்ணாங்க. அதைத் தவிர்த்துட்டேன். இப்படிப் பல வாய்ப்புகளை மிஸ் பண்ணிட்டேன்."

"விக்ரம், பாலாகூட தொடர்புல இருக்கீங்களா?"

" ‘சேது’ ரிலீஸுக்குப் பிறகு, அவங்ககூட டச்ல இல்லை. விக்ரம் சார், பாலா சார் ரெண்டுபேரையும் சந்திச்சே பல வருடம் ஆகிடுச்சு."

சேது படம்
சேது படம்

" ‘சேது’வுக்குப் பிறகு உங்களோட இன்னோர் அடையாளமா இருந்தது ‘திருமதி.செல்வம்’ சீரியல். அதைப் பற்றி?"

``அப்போ எனக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருந்த சமயம். நானும் சினிமாவுல இருந்து ஒதுங்கி செட்டில் ஆகிடலாம்னு மைண்ட் செட்டுக்கு வந்துட்டேன். அந்த நேரத்துல வந்த வாய்ப்பு இது. டைரக்டர் குமரன் என்னை நேர்ல பார்க்க வந்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நான், ‘இந்த சீரியல்ல நடிக்கக் கூடாது; நம்மளைப் பார்த்ததுமே அவங்க ரிஜெக்ட் பண்ணிடணும்’னு முடிவு பண்ணி, தலை நிறைய எண்ணெய் தடவி, சாதாரண ஒரு டிரெஸ்ல எண்ணெய் வழியிற முகமா அவங்க முன்னாடி நின்னேன். ஆனா, இயக்குநருக்கு அந்த லுக் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கதையைச் சொன்னாங்க, எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, நடிக்க ஒப்புக்கிட்டேன். 'திருமதி.செல்வம்’ சீரியலும் எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. எங்கே போனாலும் எல்லோரும் என்னை ‘அர்ச்சனா அர்ச்சனா’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க."

சேது - பாலா, அபிதா
சேது - பாலா, அபிதா

"திரும்ப எப்போ உங்களை வெள்ளித்திரை அல்லது சின்னத்திரையில பார்க்கலாம்?"

"கல்யாணத்துக்குப் பிறகு கேரளாவுல செட்டில் ஆகிட்டேன். கணவர் சுனில் பிசினஸ்மேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள். ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கிறாங்க. என் கணவரும் சரி, அவங்க அம்மாவும் சரி... எனக்கு எப்போவுமே ஆதரவா இருக்காங்க. நல்ல வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருக்கேன். சமீபத்துலகூட 'நட்பே துணை’ படத்துல 'ஹிப் ஹாப்' ஆதிக்கு அம்மாவா நடிக்கக் கேட்டாங்க. ஷூட்டிங் ஆரம்பிக்கப்போற நேரத்துல கேரளாவுல பெரிய வெள்ளம். கேரளாவே ஸ்தம்பிச்சுப் போச்சு. டிரெயின், பஸ், ஃபிளைட் எதுவும் இல்லை. அதனால, என்னால அந்தப் படத்துல நடிக்க முடியல. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படல நான். எனக்குன்னு இருக்கிறது எனக்கு வந்து சேரும். இப்போவும் சினிமா, சிரீயல்ல எந்த நல்ல வாய்ப்பா இருந்தாலும், நடிக்க நான் ரெடியாதான் இருக்கேன். கண்டிப்பா இந்த ரவுண்ட் மிஸ் ஆகாதுனு தோணுது."