சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

‘உணவு அரசியலை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கோம்!”

சேத்துமான் படம்
பிரீமியம் ஸ்டோரி
News
சேத்துமான் படம்

இது எல்லோருக்குமான படம். பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’யும், கேசவன்ரெட்டியின் ‘அவன் காட்டை வென்றான்’ நாவலும் என்னை ரொம்ப பாதிச்சது

கேரளா மற்றும் புனே சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்ததோடு, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இந்தியத் திரைப்பட விழாவிலும் பங்கேற்று கிரான்ட் ஜூரி விருதையும் அள்ளியிருக்கிறது, அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய ‘சேத்துமான்.’ விருதை வென்ற மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசினேன்.

இது விருதுகளுக்கான படமா..?

“இல்லீங்க. இது எல்லோருக்குமான படம். பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’யும், கேசவன்ரெட்டியின் ‘அவன் காட்டை வென்றான்’ நாவலும் என்னை ரொம்ப பாதிச்சது. நான் ஈரோட்டைச் சேர்ந்தவன். பெருமாள் முருகன் கொங்கு மண்டலக்காரர். அதனால ‘வறுகறி’யைப் படமாக்க விரும்பினேன். அவரையே வசனமும் எழுத வைக்க விரும்பினேன். இதுக்கு முன்னாடி செலவே இல்லாமல் குறும்படங்கள் இயக்கிய தைரியத்தில் இதை ஒரு சுயாதீனப் படமாகத்தான் தயாரிக்க ஆரம்பிச்சேன். நண்பர்கள், தெரிஞ்சவங்கன்னு எல்லார்கிட்டேயும் கடன்வாங்கி, படம் பண்ணலாம்னு இறங்கினா, பட்ஜெட் அதிகமாகிடுச்சு. அந்த நேரத்துலதான் பா.இரஞ்சித் சாரைச் சந்திச்சு, கதையைச் சொன்னேன். பன்றிக்கறி அரசியலைப் பேசும் கதை என்பதாலே நான் சொன்ன ஒன்லைன் அவருக்குப் பிடிச்சுப்போச்சு. தயாரிக்க முன்வந்தார்.

‘உணவு அரசியலை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கோம்!”

உணவு அரசியலைக் கையிலெடுக்க என்ன காரணம்?

“உலகத் திரைப்படங்கள் பார்க்கும் போதெல்லாம் ஒரு விஷயம் தோணும். அந்தந்த நாட்டு அரசியலைப் பேசும் படங்கள் அவை. இதுல நான் சமகால ஆரம்பக் கல்வியையும், உணவு அரசியலையும் பேசியிருக்கேன். கொங்கு பகுதியில் கல்விக்கூடங்கள் அதிகம். அதைப் போல பிராய்லர் கோழிப் பண்ணைகளும் அதிகம். கோழிப்பண்ணையில கோழியை எப்படி ஓரிடத்துல அடைச்சு வச்சு வளர்க்கறாங்களோ, அப்படி மாணவர்களின் நிலையும் பரிதாபப்பட வைக்குது. அரசு ஆரம்பப் பள்ளியின் கல்விச் சூழலையும் இதுல ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கு. எதையுமே மெசேஜா சொல்லாம, உணர்வுபூர்வமான கதையா கொண்டு போயிருக்கேன். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ன்னு சித்தர்கள் சொல்லியிருக்காங்க. நாம சாப்பிடுற நல் உணவுகள்தான் மருந்தாகுது. இந்தச் சமூகத்தில் ஆட்டு இறைச்சி, பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுறவங்களை மேலாகவும், மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சியைச் சாப்பிடுறவங்களைக் கீழாகவும் பார்க்கற அரசியலைச் சொல்லியிருக்கேன். கருத்து சொல்லல, தீர்வும் சொல்லல. ஆனா, கதை உங்க உணர்வுகளைத் தொடும். இந்தக் கதை மாந்தர்கள் யாரும் பன்றியைப் பன்றின்னு சொல்ல மாட்டாங்க. குறிசொல் வச்சு சொல்வாங்க. நண்பர் ஒருவரிடம் பேசும்போது ‘சேத்துமான்’ தலைப்பு கிடைச்சது. அதையே டைட்டிலா வச்சிட்டோம்.’’

‘உணவு அரசியலை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கோம்!”

படத்தில் எல்லாருமே புதுமுகங்கள்தானா?

``அவங்கதான் இந்தக் கதைக்கு ஆத்மார்த்தமா பொருந்தி நிற்பாங்க. ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவுப் பின்னணியில் கதை இருக்கும். ‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் அப்பா மாணிக்கம், இதுல பூச்சி கதாபாத்திரத்துல நடிக்கறார். கொங்கு வட்டார வழக்குப் பேச்சு அவருக்கு நல்லா வரும். பேரனாக நடிக்கும் சிறுவன் அஸ்வின், நொச்சிக்குப்பம் பகுதியைச் சார்ந்தவன். ஒரு டயலாக் கொடுத்துப் பேசச் சொன்னதும், அப்படியே உள்வாங்கிப் பேசினான். ‘உறியடி’ சுருளி, நக்கலைட்ஸ் பிரசன்னா, தெருக்கூத்துக் கலைஞர் குமார்னு கதைக்கான ஆட்கள் நடிச்சிருக்காங்க. நாமக்கல்லில் உள்ள எருமப்பட்டி, பவுத்திரம்னு உள்ளார்ந்த கிராமங்கள்ல 18 நாள்கள்ல படத்தை முடிச்சிட்டோம். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவாளரா அறிமுகமாகிறார். ‘கபாலி’ கேமராமேன் முரளியின் உதவியாளர் இவர். ‘அருவி’க்கு இசையமைத்த பிந்து மாலினி இசையமைச்சிருக்கார். ‘குற்றம் கடிதல்’ பிரேம்குமார் எடிட்டிங்கை கவனிச்சிருக்கார். பெருமாள்முருகன் வசனத்தில் எனக்குத் தேவையானதை எடுத்திருக்கேன். பன்றியைப் பத்தி ஒரு பாடலையும் எழுதியிருக்கார். ஸ்டன்னர் சாம் ஸ்டண்ட் பத்தியும் சொல்லணும். யதார்த்தமான ஃபைட் அமைச்சிருக்கார்.’’

தமிழ் - ரஞ்சித்
தமிழ் - ரஞ்சித்

உங்களைப் பத்திச் சொல்லுங்க..?

“சொந்த ஊர் ஈரோடு. 2002-லேயே சினிமா ஆர்வம் வந்திடுச்சு. வீட்டுக்குத் தெரியாம மூணு தடவ சென்னைக்கு ஓடிவந்திருக்கேன். ஒவ்வொரு முறையும் கனவு நனவாகாத சோகத்துல ஊர் திரும்புவேன். ‘பட்டாளம்’ இயக்குநர் ரோஹன் கிருஷ்ணாவிடம் உதவியாளரானேன். அதன்பின் ராஜுமுருகனின் நட்பு கிடைச்சது. அவரோடு ஒன்றரை வருஷம் பயணிச்சேன். இடையே ‘ஜூன்12’ன்னு ஒரு குறும்படம் இயக்கினேன். விகடனில் ‘ஒன் மெசேஜ் ரிசீவ்டு’ன்னு ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குறும்படமாகவும் எடுத்தேன். அதன்பிறகு வெங்கட்பிரபு சாரிடம் ‘பிரியாணி’யில் உதவி இயக்குநரா சேர்ந்தேன். அங்கே சுரேஷ் மாரியின் நட்பு கிடைச்சது. பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநரான அவர் மூலம் இரஞ்சித் சாரைச் சந்திச்சேன். இந்தப் படம் உருவாச்சு.”