அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ஷாஜஹான் #VikatanReview

ஷாஜஹான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாஜஹான்

மார்க் பாத்துட்டு 'இந்தப் படத்துக்கா இவ்ளோ மார்க்'குனு ஷாக் ஆகாதீங்க...!

‘உண்மையான காதல்னா சொல்லு என் உயிரைக்கூடத்தர்றேன்’ என்று ஊரார் காதலை ஊட்டி வளர்க்கும் விஜய், தன் காதலை கோட்டைவிடும் சோகக்கதையே ஷாஜகான்! தன்னை நாடிவரும் காதலர்களுக்கு எந்தத் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து அவர்களுக்குப் பதிவுத் திருமணம் செய்துவைப்பதே விஜய்க்குக் கிட்டத்தட்ட முழுநேரத் தொழில்! உச்சகட்டமாக ஒரு நண்பனின் காதலுக்கு உதவப்போக... தன் மனதுக்குள் குடியிருக்கும் ரிச்சாவைத்தான் அவனுக்குத் திருமணம் செய்துவைக்கப் போகிறோம் என்பது கடைசிவரையில் விஜய்க்குத் தெரியாது என்பது முக்கியமான விஷயம்! ‘சொல்லாமலே’ டைப் காதல்களில் இன்னொன்றைக் கண்டிருக்கிறது தமிழ் சினிமா! இந்தக் காதல் சேவைக்கான ஃப்ளாஷ்பேக்கே விஜய் ஒரு நண்பனுக்காக ஆர்வ மிகுதியால் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று கல்யாணம் பேசுவதும், அதுவே அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாக அமைவதும், அதைத் தொடர்ந்து நண்பன் மனநிலை பாதிக்கப்படுவதும்தான்! 

ஷாஜஹான் #VikatanReview
ஷாஜஹான் #VikatanReview

சின்னத்திரை விளம்பரங்களில் சிரித்துக் கொண்டிருந்த ரிச்சா, இங்கேயும் சிரிக்கிறார் - இம்மியும் மாறாமல்! சின்னப்பெண் தோற்றம்தான் பரிதாபமாக இருக்கிறது. தோழிகளோடு நடந்துவருவது, அவ்வப்போது விஜய்யோடு டூயட் ஆடுவது தவிர, உருப்படியாக எதுவும் செய்யவில்லை அவர்! ஒரேயொரு பாடலுக்கு வந்து டப்பாங்குத்து போட்டுவிட்டுப் போகும் மீனா, ஒரு தீபாவளி போனஸ்! 

ஷாஜஹான் #VikatanReview
ஷாஜஹான் #VikatanReview

விஜய்யின் நண்பர்கள் பட்டாளத்தில் ஒருவராக விவேக்... கோவை சரளாவிடம் (பிச்சைக்காரி) தப்புப் பண்ணுவதால் உடம்பு முழுக்க அரிப்பு ஏற்பட, படம் முழுக்கச் சொறியோ சொறி என்று சொறிகிறார். நமக்கு குமட்டோ குமட்டென்று குமட்டுகிறது!மணிசர்மாவின் இசையில் பாடல்கள் இனிமைதான்! அதற்காக? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் அல்லவோ! கொஞ்சம் அசந்தால் ஒரு பாட்டு வந்துவிடுவதால் சலிப்புத் தட்டுகிறது! பொது இடங்களில் புகைபிடிக்கப் போடப்பட்டிருக்கும் தடைதான் புகைப்பிரியர்கள் பலரைத் திரையரங்குக்குள் முடக்கி வைக்கிறது! சலிக்கச் சலிக்கச் சண்டை போடுகிறார்... சரமாரியாக வந்து விழும் பாடல்களுக்கு டான்ஸ் ஆடுகிறார் என்றாலும், ‘இவருக்கு என்ன ஆச்சு...?" என்று கேட்கும்படியான ஒட்டுதல் இல்லாத ஒரு நடிப்புதான் விஜய்யிடமும்! அடுத்தடுத்து யூகிக்க முடிகிற காட்சிகள், வலுவில்லாத சம்பவங்கள் என்று இந்த ஷாஜகானை வைத்து ஒரு பொம்மை தாஜ்மகாலைத்தான் எழுப்பியிருக்கிறார்கள்!

- விகடன் விமரிசனக் குழு 

(25.11.2001 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)