சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“சொன்னதைச் செய்வார் அஜித்!”

ஷாம்லி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாம்லி

சின்ன வயசிலிருந்து சினிமாவுல கலைத் திறமையைக் காண்பிச்சாச்சு. ஆனா, ஆர்ட் ரொம்பப் புதுசா இருக்கேன்னு கத்துக்கிட்ட விஷயம். எங்க குடும்பத்துல யாருமே ஓவியர் கிடையாது. நான்தான் முதல் ஓவியர்.

‘பேபி’ ஷாம்லி, நடிகை ஷாம்லி ஆனதைவிட இப்போது ஓவியர் ஷாம்லியாக செம பிஸி. பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என பெண்களின் வலிமையை, துணிவை வெளிப்படுத்தும் ஓவியங்களை வரைந்து, துபாய் சர்வதேச ஓவியக் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். ஓவியத்தின் மீதான காதல், அக்கா ஷாலினி, மாமா அஜித், சினிமா, திருமணம் எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்த போது, அதே பேபியின் புன்சிரிப்புடன் பேசினார்...

“சிங்கப்பூர்ல பிலிம் புரொடக்‌ஷன் மாஸ்டர் டிகிரி படிச்சிட்டு சென்னை வந்தேன். அப்போதான் ஓவியத்தின் மீதான ஆர்வம் வந்தது. ஏ.வி.இளங்கோ சார்கிட்ட ஓவியக் கலையைக் கத்துக்கிட்டேன். நான் சின்சியரா இருந்ததைப் பார்த்துட்டு தொடர்ந்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சார். அந்த ஈடுபாடுதான் இன்னைக்கு சர்வதேச அளவிலான ஓவியக் காட்சிகளை நடத்துற அளவுக்குக் கொண்டு வந்திருக்கு. சென்னையில் வரும் ஜூன் மாதம் தனியாக ஓவியக் காட்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கேன். இதுக்காக இரண்டு வருடங்களா ஓவியங்களை வரைஞ்சு உழைச்சுக்கிட்டிருக்கேன்...” ஓவியங்களின் மீதான அதிதீவிர ரசனையை அப்படியே நமக்கும் கடத்துகிறார் ஷாம்லி.

ஷாம்லி
ஷாம்லி
ஷாம்லி
ஷாம்லி

‘‘நடிகை ஷாம்லியை ஓவியர் ஷாம்லியாக அடையாளப்படுத்துவது எப்படி இருக்கு?’’

“சின்ன வயசிலிருந்து சினிமாவுல கலைத் திறமையைக் காண்பிச்சாச்சு. ஆனா, ஆர்ட் ரொம்பப் புதுசா இருக்கேன்னு கத்துக்கிட்ட விஷயம். எங்க குடும்பத்துல யாருமே ஓவியர் கிடையாது. நான்தான் முதல் ஓவியர். எல்லோருக்கும் இது புதுசுங்கிறதால எனக்கு சப்போர்ட் ஜாஸ்தி. நம்ம மனசுக்குள்ள ஏதோ ஒரு வகையில ஆர்ட் புதைஞ்சிருந்திருக்கு. இப்போதான் அது வெளிப்பட ஆரம்பிச்சிருக்கு. ஒன்றரை வயசிலிருந்து 60 படங்களுக்குமேல நடிச்சுட்டேன். அதனால, இப்போ ஓவியர் ஷாம்லின்னு கூப்பிடுறதுதான் ரொம்பப் பிடிச்சிருக்கு; பெருமையாவும் இருக்கு.”

‘‘உங்கள் ஓவியங்கள் பெண்ணுரிமையை மையப்படுத்தியே இருக்க என்ன காரணம்?’’

“பெண்கள் சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிறவ நான். பெண்களோட சக்தி, வலி, எமோஷன்ஸ், அவங்களைச் சுற்றி நடக்குற அவலங்கள் எல்லாத்தையுமே ஒரு பெண்ணா இருக்கிறதால கூடுதலா உணரமுடியும். அதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஒரு கோபம் வருமில்லையா? அதையெல்லாம் வெளிப்படுத்தாம விலங்குகளையோ இயற்கையையோ ஓவியங்களா வரையுறதுல இப்போதைக்கு எனக்கு விருப்பமில்ல.”

அஜித்துடன் ஷாம்லி
அஜித்துடன் ஷாம்லி
ஷாலினியுடன் ஷாம்லி
ஷாலினியுடன் ஷாம்லி

‘‘உங்க ஓவியங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?’’

“தொடர்ந்து வரவேற்பு இருக்கவேதான், பெங்களூரில் ஆரம்பித்து சென்னை, துபாய்னு ஓவியக் காட்சிகளில் கலந்துக்கிட்டிருக்கேன். துபாயில் நடந்த ஓவியக்காட்சி பெரிய சக்சஸ். நிறைய பேரு பாராட்டி ஓவியங்களை வாங்கிட்டுப் போனாங்க. அவங்களோட வாழ்வியலை வரையச் சொல்லிக் கேட்டிருக்காங்க. மகிழ்ச்சி.’’

``அக்கா ஷாலினி, மாமா அஜித் எப்படி சப்போர்ட்டிவா இருப்பாங்க?’’

“எல்லாருமே ரொம்ப சப்போர்ட்டிவ். ஆனா, பாராட்டு மட்டும்தான் வரும்னு சொல்லமுடியாது. ஓவியம்ங்குறது ஒவ்வொருத்தருக்கு ஒரு உணர்வைக் கொடுக்கும். ஒவ்வொருத்தரோட இதயத்திலும் ஒரு கேள்வியை எழுப்பும். அதனால, தனித்தனி ஃபீட்பேக் கொடுப்பாங்க. மாமா அஜித் எப்பவும் என்னோட ஓவியத்துக்கு பாசிட்டிவ் கமென்ட் கொடுத்து ஊக்கப்படுத்துறவர். எனக்கு 20 வருடங்களுக்கு மேல அவரைத் தெரியும். எதுக்குமே அவர் நெகட்டிவ் கமென்ட் கொடுக்கமாட்டார். நம்மகிட்ட திறமை இருக்குன்னா, அதை அதிகப்படுத்த ரொம்ப என்கரேஜ் செய்வார். இதைப் பண்ணுங்க, அதைப் பண்ணுங்கன்னு அட்வைஸ்லாம் பண்ணமாட்டார். என்னோட துபாய் கண்காட்சிக்குக்கூட தனியா போறதாதான் இருந்துச்சு. ஆனா, அண்ணன் ரிச்சர்ட், அக்கா ஷாலினி, மாமா அஜித், அப்புறம் பசங்க எல்லாருமே பேமிலியா துபாய்க்கு என்கூட வந்தாங்க. இதுக்குமேல எந்த அளவுக்கு சப்போர்ட்டுன்னு சொல்லவா வேணும்?”

ஷாருக் கானுடன் ஷாம்லி
ஷாருக் கானுடன் ஷாம்லி
ஷாம்லி
ஷாம்லி

‘‘தந்தை இறப்புக்குப் பிறகு அஜித் எப்படி இருக்கிறார்?”

“அது ரொம்ப கஷ்டமான விஷயம். தந்தை இறப்பு என்பது எந்த வயசுல நடந்தாலும் அது வலியாத்தான் இருக்கும். வயது முதுமை காரணமா அங்கிள் கொஞ்சம் முடியாம இருந்தாங்க. மாமாவுக்கு மட்டுமல்ல, எங்க எல்லோருக்குமே அது பெரிய இழப்பு. மாமா கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்துக்கிட்டிருக்காரு.”

‘‘எல்லோருக்கும் அஜித்தை ஒரு நடிகரா தெரியும். மாமாவாக உங்களுக்கு அவர் எப்படி?”

“ஹையோ... அவர் ரொம்ப ரொம்ப ஸ்வீட். எங்க எல்லோர் மேலேயும் ரொம்பப் பாசமா இருப்பாரு. நான் ஹேப்பியா இருக்கேன். நிறைய இடங்கள்ல திருமணம் ஆனதும் அக்காங்க லைஃப் தனியாகிடும். ஆனா, அப்படி எங்களை ஃபீல் பண்ண வச்சதே இல்ல மாமா. அதனால, அக்கா வீட்டுல அதிகமா டைம் செலவு பண்ணுவோம். குறிப்பா, ஃபேமிலி ஒண்ணா இருக்கணும்னு நினைப்பார். ட்ராவல் போனா எங்க எல்லோரையும் ஒண்ணாத்தான் கூட்டிக்கிட்டுப்போவார். இதுல ரொம்ப ஸ்பெஷல்னா, எங்களுக்கு செமயா சமைச்சுக் கொடுத்து அசத்திடுவார்.

எனக்கு மாமா ஆகுறதுக்கு முன்னாடியே ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்துல அவர்கூட நடிச்சிருக்கேன். அப்பவே ரொம்ப மரியாதையா நடத்துவார். அப்போ எப்படி இருந்தாரோ, இப்போ அதைவிட அதிக மரியாதையா பேசுறார். ஒரு நல்ல ஹ்யூமன் பீயிங். எல்லார்கிட்டேயும் அப்படித்தான் நடந்துக்குவார். அந்த விஷயம்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வீட்டுல இருந்தா வீட்டை க்ளீன் பண்ணுவார். அவர் அதைச் செய்யும்போது நாமும் அப்படிச் செய்யணும்னு தோணும்.”

ஷாம்லியின் ஓவியம்
ஷாம்லியின் ஓவியம்

‘‘ஓவியங்கள் என்றாலே பணக்காரர்கள்தான் வாங்குவார்கள் என்கிற தோற்றம் இருக்கிறதே?”

“ஓவியங்கள் எல்லாமே வாங்கப்படுவதற்காக வரையப்படுப்படுவதல்ல. சில ஓவியங்கள் ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்டாலே அது பெரிய விஷயம். கலை மக்களுக்கானது. எல்லோருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. எல்லா விதமான மக்களுமே கண்காட்சிகளுக்கு வந்து ரசிப்பாங்க; ரசிக்கிறாங்க. விருப்பம் இருக்கிறவங்க வாங்குவாங்க. ஓவியங்கள் பணம் சார்ந்த விஷயமல்ல, ரசனை சார்ந்த விஷயம். தென்னிந்தியாவைவிட வட இந்திய ஓவியர்கள் அங்கீகாரத்தோடு இருக்கிறார்கள்னு சொல்லலாம். இப்போ அமெரிக்கா போனா பாலிவுட்காரங்கதான் ரெகக்னைஸ் ஆகுறாங்க. அவங்ககிட்ட டோலிவுட், கோலிவுட் எல்லாம் இருக்கிறதை எடுத்துச் சொல்லணும், அப்படித்தான் இதுவும். இங்கேயும் திறமையான ஓவியர்கள் இருக்காங்க.”

‘‘குழந்தை நட்சத்திரமா நடிச்ச அளவுக்கு நடிகையாக நீங்கள் ஏன் அதிக படங்களில் நடிக்கல?’’

“மூணு மாசத்துக்கு முன்புகூட வாய்ப்பு வந்தது, தவிர்த்துட்டேன். ஓவியத்துல மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். நம்ம லைஃப்ல எது ஸ்ட்ராங்கா கனெக்ட் ஆகுதோ, எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ, அதுலதான் கவனம் செலுத்தணும். அப்பதான் மனைநிறைவா சந்தோஷமா இருக்கமுடியும்”.

ஷாம்லியின் ஓவியம்
ஷாம்லியின் ஓவியம்

‘‘உண்மையைச் சொல்லுங்க, நீங்க யாரோட ஃபேன். விஜய் படங்கள் பார்ப்பீங்களா?’’

“நீங்க எப்படிக் கேட்டாலும் ஒரே பதில்தான். எட்டு வயசுலேர்ந்து நான் ஷாருக் கான் ஃபேன் தான். அக்காவை மாமா லவ் பண்ணும்போது, ‘உனக்கு என்ன வேணும்னாலும் கேளு, செய்வேன்’னு சொன்னார். ‘நான் ஷாருக்கானோட ஃபேன். அவரைப் பார்க்கணும்’னு சொன்னேன். மேரேஜ் ஆன அதே வருடத்துலேயே ஷாருக் கானைப் பார்க்க வெச்சுட்டார் மாமா. அவர் சொன்னதைச் செய்வார். என்னை மாதிரியே அக்கா ஷாலினி சின்ன வயசுலேர்ந்து இப்போவரை மைக்கேல் ஜாக்சன் ஃபேன் தான். எல்லாருடைய படங்களையும் பார்ப்போம். கடைசியா பார்த்த படம் ‘துணிவு’.’’

``அனோஷ்கா, ஆத்விக் எப்படி இருக்காங்க?’’

“அனோஷ்காதான் என் ஓவியங்களுக்கு முதல் விமர்சகர். ‘இது நல்லா இருக்கு, அது நல்லா இல்லை’ன்னு அவங்களோட ஏஜ் பாயின்ட் ஆஃப் வியூவிலிருந்து ரிவ்யூ கொடுப்பாங்க. எப்பவுமே சித்திக்கும் அக்கா பொண்ணுக்கும் ஒரு பாண்ட் இருக்கும். ஆனா, அனோஷ்கா என்னை ஓல்டர் சிஸ்டர் மாதிரி பார்ப்பாங்க. நானும் அவங்களும் ரொம்ப க்ளோஸ். அனோஷ்காவுக்கு இப்போ 15 வயசு. வெஸ்டர்ன் நல்லா பாடுவாங்க. அதுக்கான பயிற்சியும் எடுத்திருக்காங்க. ஆத்விக்கிற்கு 8 வயசு ஆகுது. புட்பாலில் ரொம்ப இன்ட்ரஸ்ட். துபாய் போனப்பகூட ஒரு ஸ்கூலில் மேட்ச் எல்லாம் விளையாடிட்டு வந்தார். அவருக்கு ஏரோப்ளேன் ரொம்பப் பிடிக்கும்.”

ஷாம்லியின் ஓவியம்
ஷாம்லியின் ஓவியம்

‘‘உங்க திருமணம் எப்போ?”

“இன்னும் அதுபற்றி எதுவும் ப்ளான் பண்ணல. திருமணம் ரொம்ப பர்சலானது. திருமணம் பண்ணிக்கறதுக்கு சரியான காரணம் இருக்கணும். எல்லோரும் பண்ணுறாங்கன்னு நாமளும் பண்ணக்கூடாது. இது என் கருத்து. சரியான காரணத்துக்காக, சரியான மனிதரைத் திருமணம் செய்துகொள்வது முக்கியம். ஆறு மாசத்துல பண்ணிடுவேன், ஒரு வருஷத்துலன்னு டார்கெட் எல்லாம் கிடையாது. இது நான் ரொம்ப நம்புற விஷயம். எனக்குத் தோணும்போது கல்யாணம் பண்ணிக்குவேன்.’’