
நான் எதையும் பேட்டர்னா வெச்சுக்கிறதில்லை. கதை பிடிச்சா மட்டும்தான் பண்ணுவேன்.
“பயோபிக் ஒண்ணு பண்ணணும்னு ஆசை இருக்குங்க. இத்தனை வருஷத்துல நான் பண்ணின படங்கள் பார்த்து, சிபிராஜ்னா இதுதான்னு ஒரு இமேஜ் இருக்கும். அதுல அப்பாவுடைய இமேஜும் சேர்ந்தே இருக்கும். பயோபிக் பண்ணும்போது இந்த இமேஜ் உடைஞ்சு வேறொரு முகம் கிடைக்க வாய்ப்பிருக்கு. யாருடைய பயோபிக் எனக்கு செட்டாகுமோ அது என்னைத் தேடி வரும்ங்கிற நம்பிக்கையும் இருக்கு. தவிர, ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்லயும் நடிக்கணும்’’ என உற்சாகமாகப் பேசத் தொடங்கும் சிபியின்வசம் நான்கு படங்கள் இருக்கின்றன. தவிர, டோலிவுட்டிலிருந்தும் வாய்ப்புகள் வருகின்றனவாம்.
“காதல் படம், ஃபேமிலி படம், ஸ்போர்ட்ஸ் படம், அனிமல் படம், காமெடி படம், த்ரில்லர் படம், போலீஸ் படம்னு கிட்டத்தட்ட எல்லா ஜானர் படங்களிலும் நடிச்சுட்டீங்க. இந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கா?” என்ற கேள்விக்குத்தான் முதல் பத்தி பதிலைச் சொன்னார்.

``சினிமாவுக்கு அறிமுகமான சமயத்துல அப்பாவுடைய இன்புட்ஸ் நிறையவே இருந்திருக்கும். அப்போ என்னெல்லாம் சொன்னார்? உங்களுக்குக் கதைகள் தேர்ந்தெடுக்கிறதுல எப்போ புரிதல் கிடைச்சது?’’
‘‘நான் முதல் படம் பண்ணும்போது சினிமா மாற ஆரம்பிச்ச காலம். நான் ஒரு ஸ்டாருடைய மகனா இருந்தாலும் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வர்றவங்களுடைய மனநிலையிலதான் இருந்தேன். அப்பாவும் என்கிட்ட, ‘சினிமாவும் இப்போ நிறைய மாறிக்கிட்டிருக்கு. என்னால அட்வைஸ் எல்லாம் சொல்ல முடியாது. டைரக்டர் சொல்றதைக் கேட்டு நடந்துக்கோ’ன்னு சொல்லிட்டார். ஆரம்பக் காலத்துல நான் கதை கேட்கும்போது கூட உட்கார்ந்திருப்பார். ‘உனக்குப் பிடிச்சா பண்ணு. என்னுடைய கருத்தைக் கேட்காதே’ன்னு சொல்லிடுவார். இருந்தாலும் ‘லீ’ வரைக்கும் எனக்கு அவருடைய கருத்து தேவைப்பட்டது. ‘லீ’ படத்துக்கு விமர்சன வரவேற்பு கிடைச்சது. ஆனா, பாக்ஸ் ஆபீஸ்ல பெரிய வரவேற்பில்லை. இப்போ வந்திருந்தால் நல்ல ஹிட்டாகியிருக்கும்னு நினைக்கிறேன். ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ன்னு நிறைய புது முயற்சிகளை எடுத்துப் பண்ணினேன். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்கு வர்த்தக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்போதான், இது நம்ம ரூட்டுன்னு தெளிவு கிடைச்சது.’’

``நீங்க நடிச்சு அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகுது. திடீர்னு ஒரு பிரேக் எடுத்துக்கிறீங்க. அப்புறம் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்பு வருது. இது என்ன பேட்டர்ன்?’’
‘‘நான் எதையும் பேட்டர்னா வெச்சுக்கிறதில்லை. கதை பிடிச்சா மட்டும்தான் பண்ணுவேன். அப்படி நான் பண்ணின சில படங்கள் சரியா போகாமலும் இருந்திருக்கு. வருஷத்துக்கு இத்தனை படம் பண்ணணும்னு நான் யோசிக்கமாட்டேன். முதல்ல எனக்குப் பிடிக்கணும், அப்புறம் மக்களுக்குப் பிடிக்கணும். இந்த ரெண்டு பாக்ஸும் டிக் ஆகிடுச்சுனாலே, தயாரிப்பாளருக்கு லாபம் வந்திடும்.’’
``அடுத்தடுத்து த்ரில்லர் படங்களா பண்றதனால ‘த்ரில்லர்’ சிபிராஜ்னு அடைமொழி வெச்சுக்கலாம்னு இருக்கேன்னு ஒரு பேட்டியில் சொல்லிருந்தீங்களே?’’
‘‘நான் ஏன் நிறைய த்ரில்லர் படங்களா பண்றேன்னா, அதுக்கு ரெண்டு காரணம்தான். அந்த ஜானர் எனக்கு நல்லா வொர்க் அவுட்டாகியிருக்கு. இன்னொன்னு, பொதுவாவே, இப்போ த்ரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நம்மகிட்ட ஆடியன்ஸ் என்ன விரும்புறாங்களோ அதை வெச்சுதான் இயக்குநர்களும் நமக்குக் கதைகள் எழுதுறாங்க. அது ஒண்ணும் தப்பில்லை.’’

``இடையில் ‘நாணயம்’, ‘போக்கிரி ராஜா’ன்னு ரெண்டு படங்கள் வில்லனா நடிச்சிருந்தீங்க. அந்த முடிவை எடுக்கிறதுக்கு முன்னாடி நிறைய யோசிச்சிருப்பீங்கதானே!’’
‘‘நான் ‘நாணயம்’ல வில்லனா பண்ணுனதுக்கு முக்கிய காரணம், பிரசன்னா. என் நெருங்கிய நண்பன். இன்னொரு ஹீரோ கூட பண்ணும்போது ஈகோ வந்திடக் கூடாது. எங்களுக்குள்ள அந்தப் பிரச்னை இல்லை. தவிர, ‘அஞ்சாதே’ படத்துல பிரசன்னா வில்லனா பண்ணியிருப்பார். ஒரு ஹீரோ இப்படியும் முயற்சி பண்ணலாம்னு தோணுச்சு. இப்போ விஜய் சேதுபதி ஒரு பக்கம் ஹீரோ, இன்னொரு பக்கம் வில்லன்னு சூப்பரா பண்ணிட்டிருக்கார். அப்பா வில்லனா இருந்து ஹீரோவானார். நான் நேரா ஹீரோவாகிட்டேன். அதனால, வில்லனா எப்படியிருக்கோம்னு பார்க்கலாம்னுதான் நடிச்சேன். சக்தி செளந்தர்ராஜன் சொன்ன கதையும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுல ஹீரோகிட்ட அடிவாங்குற வில்லன் இல்லை. ஹீரோவை மிரட்டுற வில்லன் நான். இதுக்குப் பிறகும், ஹீரோ, வில்லன்னு இல்லாமல் ஆன்டி ஹீரோவா பண்ணணும்னு ஐடியா இருக்கு. அப்படி யாராவது கதை வெச்சிருந்தா சொல்லுங்கப்பா!’’
``இப்போ எல்லா ஊர்ப் படங்களையும் நம்ம மக்கள் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்படியான சூழல்ல ஒரு கதையை சரியா தேர்ந்தெடுக்கிறது ஒரு ஹீரோவுக்கு எவ்வளவு பெரிய டாஸ்க்?’’
‘‘இப்போனு இல்ல, எந்தக் காலகட்டமா இருந்தாலும் கதை தேர்ந்தெடுக்கிறது ரொம்பப் பெரிய டாஸ்க்தான். சினிமா ட்ரெண்ட் மாறுதேன்னு பதற்றமோ, கவலையோ படாமல் சவாலா எடுத்துக்கிட்டா போதும். ஓடிடி எல்லாம் வந்த பிறகு, அந்தக் கதைசொல்லல்தான் மாறுதே தவிர, கதையுடைய அடிப்படை மாறாது. வெப் சீரிஸ் நிறைய பார்க்கிறேன். ஆனா, இன்னும் வெப் சீரிஸ் பண்றதுக்காகக் கதை கேட்டதில்லை. அப்படிக் கேட்கும்போதுதான் அது எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். என்னதான் படம் சூப்பர் ஹிட்டானாலும் பெரிய ஹீரோக்களுடைய கலெக்ஷனைத் தொடவே முடியாது. ஓடிடி தளத்துல அந்த இடைவெளி குறையும்னு நினைக்கிறேன்.’’
``அவ்னி, T23-னு புலிகள் பிடிபட்ட சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த சூழல்ல, ‘ரேஞ்சர்’னு ஒரு படத்துல நடிச்சிருக்கீங்க. இதுல என்ன சொல்லியிருக்கீங்க?’’
‘‘இது அவ்னியுடைய பயோபிக் இல்லை. அதுல இருந்து இன்ஸ்பயராகி எழுதி இயக்கியிருக்கார், தரணிதரன். இப்போ சமீபமா நடந்த T23 புலி பிடிபட்ட சம்பவத்துடன் கொஞ்சம் யதார்த்தமா பொருந்திப்போச்சு. இதுல நான் ரேஞ்சரா நடிச்சிருக்கேன். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்காக நாய் கூட பழகி அப்புறம் ஷூட்டிங் போனோம். இதுல புலிகூடப் பழகமுடியாது. எல்லாமே கிராபிக்ஸ்தான். பாங்காக் போய் புலியை வெச்சு சில மாண்டேஜ் எடுக்க வேண்டியது இருக்கு.’’

`` ‘மாயோன்’, ‘ரங்கா’, ‘வட்டம்’னு அடுத்தடுத்து படங்கள் வெச்சிருக்கீங்க. அவையெல்லாம் என்ன மாதிரியான படங்கள்?’’
‘‘ ‘மாயோன்’ மிஸ்ட்ரி த்ரில்லர் படம். நான் அதுல தொல்பொருள் ஆராய்ச்சியாளரா நடிச்சிருக்கேன். கொஞ்சம் ஃபேன்டஸி இருக்கும். ‘ரங்கா’ ஆக்ஷன் படம். திருமணமான ஜோடி ஊருக்குப் போவாங்க. அந்தச் சமயத்துல ஹீரோவுக்கு ஒரு பிரச்னை வரும். அந்தப் பிரச்னையோடவே போன ஹீரோவுக்கு அங்க ஒரு பிரச்னை வருது. ஏற்கெனவே இருந்த பிரச்னைதான் அவரைப் புதுப் பிரச்னையில இருந்து காப்பாத்தி வெளியே கொண்டு வருது. இதுதான் கதை. ‘வட்டம்’ ஒரு யதார்த்தமான படம். டார்க் காமெடி ஜானர்ல ஒரு மெசேஜும் இருக்கும். ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கியிருக்கார்.’’
``உங்களைப் பத்திப் பேசும்போது, அப்பா பத்தின விஷயங்கள் வந்திடும். அப்பாவோடு ஒப்பிட்டுப் பேச்சுகள் வரும். அதெல்லாம் உங்களுக்கு ப்ரஷரா இல்லையா?’’
‘‘ப்ரஷர்தான். அதை உடைக்கணும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, நமக்குன்னு வர்ற விஷயங்களை விட்டுடுவோம். உதாரணத்துக்கு, பிரியாணிதான் வேணும்னு யோசிச்சுட்டு இருக்கும்போது யாராவது சூப்பரா ஒரு தோசை கொண்டு வந்து கொடுப்பாங்க. பிரியாணியை யோசிச்சு நமக்குக் கிடைக்கிற நல்ல தோசையை மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு நினைக்கிறேன். அப்பாவைத் தாண்டிப் பண்ணணும்னு நினைச்சா, அவரையே பாத்துக்கிட்டு இருப்பேன். நமக்குன்னு கதைகள் வரும். அதைச் சரியா பயன்படுத்திக்கிட்டாலே போதும். இது டைரக்டர்ஸ் மீடியம். அவங்க உருவாக்கி வெச்சிருக்கிற விஷயத்தை ஹீரோ மெருகேத்தலாமே தவிர, தனியா ஒன்னை க்ரியேட் பண்ண முடியாது.’’
``தீரன், சமரன்... உங்க ரெண்டு பசங்களும் எப்படி இருக்காங்க?’’
‘‘சூப்பரா இருக்காங்க. தீரனுக்கு எட்டு வயசு. மூணாவது படிக்கிறான். சமரன் எல்.கே.ஜி படிக்கிறான். எல்லாமே ஓ.டி.டிதான். சாரி... ஆன்லைன் க்ளாஸ்தான். லாக்டெளன்ல படங்களா பார்த்துப் பார்த்து ஓ.டி.டினே வருது. சரி விடுங்க... எல்லாம் டெக்னாலஜிதானே!’’