சிம்பு நடிக்கும் `மாநாடு' படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை டைரக்டர் வெங்கட் பிரபு பக்காவாக தயார் செய்துவிட்டார். முதல்கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு வந்தனர். இடையில் ஶ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் `மகா' படத்தில் கெஸ்ட் ரோலில் கோவாவில் நடித்தார் சிம்பு. அடுத்து ஜூன் மாதம் 24-ம்தேதி மலேசியாவில் `மாநாடு' படத்தின் ஷூட்டிங்கை நடத்துவதற்கு முடிவுசெய்து, அங்கு படப்பிடிப்பு நடத்துவதற்காக அனுமதி கேட்டு வந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகிவரும் மஃப்டி கன்னடப் படத்தின் ரீ-மேக்கில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த கெஸ்ட் கேரக்டரில் நடிக்க சிம்புவைக் கேட்டனர். விரலைச் சுழற்றி சிம்பு பெரிய சம்பளம் கேட்க, ஆடிப்போன ஞானவேல் பின்பு ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு கேட்ட சம்பளத்தை தருவதாக ஒப்புக்கொண்டார்.
தற்போது கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தன்னுடைய மேக்கப் வுமன்கள் 2 பேர் மற்றும் நண்பர்கள் 8 பேரையும் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்துக்கொண்டு அதகளப்படுத்தி வருகிறார் சிம்பு. தினசரி அயல்நாட்டு மதுவகை, காஸ்ட்லி உணவு வகைகள் என்று சிம்பு சகாக்கள் தயாரிப்பாளரை அலறவைத்துக்கொண்டு இருக்கிறார்களாம்.

டைரக்டர் பகல் பொழுதில் படப்பிடிப்பு வைத்தால் கறாராக `நோ' சொல்லிவிடும் சிம்பு `நைட்ல ஷூட்டிங் வெச்சாத்தான் வருவேன்' என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். ரேகை தேயும் அளவுக்கு கைகளை பிசைந்துகொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம், இயக்குநர் நர்த்தன்.